என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளதால் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவை நடத்த உத்தரவிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.
    மதுரை :

    மதுரையை சேர்ந்த அருண் போத்திராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் இந்த விழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான கள்ளழகர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த திருவிழா இந்த ஆண்டு நடந்து விடாதா? என அத்தனை பக்தர்கள் மனமும் ஏங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவை போதிய பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில் இது எவ்வாறு சாத்தியம்? வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை. வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன” என்றனர்.

    பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “பக்தர்களே கலந்து கொள்ளாமல் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை நடத்தி, அதை ஊடகங்களில் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” என கோரினார்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. கொரோனா பரவல் மிகத்தீவிரமாக இருந்து வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம்” என கருத்து தெரிவித்தனர். முடிவில், “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாைவ நடத்துமாறு உத்தரவிட இயலாது” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருஸ் ஸப்ர்’ - ‘பொறுமையின் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)

    ஒருவருக்கு பசி ஏற்பட்டால், அவர் தன்னை கட்டுப்படுத்துவது சிரமம். பசியும், தாகமும் மனிதனை பாடாய்படுத்திவிடும். பசித்தவன் பொறுமையுடன் இருப்பது முடியாத காரியம். இந்த நிலையிலும் ஒரு நோன்பாளி அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

    ஒரு நோன்பாளிக்கு சண்டை ஏற்படும் சூழ்நிலை வந்தாலும், அதில் அவர் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும் என நபி (ஸல்) பின்வருமாறு உபதேசிக்கிறார்கள்:

    “யாரேனும் நோன்பாளியுடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால், ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    சகிப்புத்தன்மை புனிதமானது; தெய்வீகமானது. அவசர நிலை; மனித இயல்பு. ரமலான் மாதம் தெய்வீகத்தன்மையை மனிதனுக்கு பழக்கப்படுத்தி, அவனை பக்குவப்படுத்துகிறது.

    இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் வருமாறு:-

    ‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)

    பொறுமை மூன்று வகை: 1) பாவங்களையும், தடுக்கப்பட்டவைகளையும் செய்வதிலிருந்து சகித்து இருப்பது, 2) தொடர்ந்து நன்மைகள் செய்வதற்கு பொறுமையாக இருப்பது, 3) சோதனைகள் மீது பொறுமையை கடைப்பிடிப்பது. இந்த மூன்று நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கடைப்பிடிப்பது தான் உண்மையான பொறுமை.

    இந்த பொறுமையை ரமலான் மாத நோன்பின் வழியாக மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால், ரமலான் மாதம் பொறுமைக்குரிய மாதம். சோதனை காலத்தில் பொறுமையை வலியுறுத்தும் பக்குவம் நோன்புக்கு மட்டுமே உண்டு.

    ‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஆயிஷா (ரலி) கூறினார்: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்கள் மீது இறைவன் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான். மேலும், கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் பொறுமையாளராகவும், இறை வெகுமதியை விரும்பியவராகவும், இறைவன் நமக்கு எழுதியுள்ள விதிப்படியே தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது எனும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)

    எனவே, நோய்கள் வடிவில் எத்தனை சோதனை வந்தாலும், அதை நாம் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அந்தப் பொறுமையே நமக்கு நற்பலனை பெற்றுத்தரும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
    திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரங்களை நாளை (புதன்கிழமை) திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.
    திருமலை :

    திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததாக ராமநவமியான நாளை (புதன்கிழமை) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட உள்ளது. எனினும், ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. அவர், பிறந்த இடம் பற்றி பல்வேறு தரப்பினர் பலவகையான தகவல்கள், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிரவை சேர்ந்த வேதப் பண்டிதர் அன்னதானம் சிதம்பர சாஸ்திரி என்பவர் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார், எனச் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து வந்தார். ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தவம் இருந்து பெற்றெடுத்ததாகக் கூறி உள்ளார்.

    அவர், கடந்த 1972ம் ஆண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆஞ்சநேயர் குறித்த ஆதாரங்களை திரட்டினார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து ஆந்திர பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆஞ்சநேயர் வரலாறு கிரந்தம் என சமஸ்கிருதத்தில் உள்ளது. சிதம்பர சாஸ்திரி சமஸ்கிருதத்தில் இருந்த கால பத்திர கிரந்தத்தை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

    அதில் ஆஞ்சநேயர் பிறந்த இடம், வரலாறு எனப் பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அம்பியில் உள்ள ஆஞ்சநேயர் சிலை உண்மையான சிலை இல்லை, எனச் சிதம்பர சாஸ்திரி வாதம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் அதன் முழு விவரங்களை சிதம்பர சாஸ்திரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதை ஏற்றுக் கொள்ளாததால் அவரே புத்தமாக அச்சிட்டு வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

    ஆஞ்சநேயர்

    அதேபோல் ராஜு வெங்கட்ரமணாராவ் என்பவர் ஆஞ்சநேயர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அம்பியில் பிறந்தார், எனக் கூறி உள்ளார். சுரவரம் பிரதாப்ரெட்டி எழுதிய ராமாயண விசேஷ கிராந்தம் என்னும் புத்தகத்தில் அஞ்சனாத்ரியில் ஆஞ்சநேயரின் வாரிசுகள் இல்லை, தட்சணாபதம் மலையில் வாழும் மலைவாழ் மக்கள் தான் ஆஞ்சநேயரின் வாரிசுகள், எனக் கூறி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார், எனத் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதேபோல், ஆஞ்சநேயர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார், எனச் சுவாமி கோபாலனந்தபாபா வாதம் செய்து வருகிறார்.

    1986-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்ட சப்தகிரி இதழில் மலைவாழ் மக்கள் ஆஞ்சநேயர் இனத்தைச் சேர்ந்தவர்கள், என எழுதி உள்ளது. திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், எனப் புராணம் கூறுகிறது.

    இதுதொடர்பாக தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனியாக ஒரு கமிட்டி அமைத்து ஆலோசனை, ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதுபற்றி நாளை (புதன்கிழமை) ராம நவமி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

    அதன் பிறகாவது ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து தெளிவான நிலை ஏற்படுமா எனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது.
    ஏப்ரல் மாதம் 20-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 26ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    20-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வளர்பிறை அஷ்டமி
    * சந்திராஷ்டமம் - பூராடம்

    21-ம் தேதி புதன் கிழமை :
     
    * ஸ்ரீராம நவமி
    * சந்திராஷ்டமம் - உத்திராடம்
     
    22-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்த நாள்
    * சந்திராஷ்டமம்- திருவோணம்

    23-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சர்வ ஏகாதசி
    * வாஸ்து நாள் (பகல் 8.54 மணியில் இருந்து 9.30 மணி வரை வாஸ்து செய்ய நன்று)
    * சந்திராஷ்டமம் - அவிட்டம்

    24-ம் தேதி சனிக்கிழமை :

    * பிரதோஷம்
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
    * சந்திராஷ்டமம் - சதயம்

    25-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சுபமுகூர்த்த நாள்
    * மஹாவீர் ஜெயந்தி
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

    26-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * பௌர்ணமி
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திராடம்
    தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.

    முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சியும், 26-ந்தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டு நடைமுறையின்படி பக்தர்கள் அனுமதியின்றியும், விழா நாட்களில் யதாஸ்தானத்திலேயே சாமி அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
    கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. யூடியூப் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வடலூர் சத்திய ஞானசபையில் மாதந்ததோறும் பூசநட்சத்திரத்தில் மாத பூச ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய அதிகார பூர்வ யூடியூப் சேனலான https://www.youtube.com/channel/UCEiJoz GGHgOZFISkQAOB93A-ல் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.
    உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.
    இறைவர் திருப்பெயர்:     பிராணவரதேஸ்வரர்.
    இறைவியார் திருப்பெயர்:  மங்கள நாயகி.
    தல மரம்:  வெள்ளெருக்கு, கோங்கிலவு, கோங்கு
    தீர்த்தம் :  சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் , மங்கல தீர்த்தம்,காவிரி.

    தல வரலாறு

    முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளாள் அவன் உயிர் பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக் காப்பு தந்தருளி ஆட்கொண்டாள். அது முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக அம்பிகை அருளினாள் என்பது வரலாறு.

    சிறப்புகள்

    இத்தலம் மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று புகழப்படும் சிறப்புடையது.

    தல வரலாறு தொடர்பால் - திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். மேலும், இவ்வரலாற்றையொட்டி "பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை" என்னும் மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகிறது.

    நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்; அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேஸ்வரரேயாவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

    உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

    உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு. இன்றும் அவ்வாறு பலர் குணமடைந்து வருகிறார்கள்.

    இக்கோயிலில் சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.

    அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் சென்று இவ்வூரை அடையலாம். தொடர்பு : 0435 - 2470480
    தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவல் வேகமெடுப்பதால் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்காலிகமாக பாலாபிஷேகம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் அர்ச்சனை தடைசெய்யப்பட்டுள்ளது.
    உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையாக பரவி வருகிறது. ஆகவே சில கட்டுப்பாடுகளுடன் ஆலயங்களில் வழிபாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதான அபிஷேகமாக செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு மகா பாலாபிஷேகம் நடைபெறும்.

    பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களில் பால் கொண்டு வந்து முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபடுவார்கள். இதனையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவல் வேகமெடுப்பதால் தற்காலிகமாக பாலாபிஷேகம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் அர்ச்சனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் முக்கிய நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
    1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.

    2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.

    3. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    4. சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

    5. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.

    6. சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும்.

    7. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    8. சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.

    9. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.

    10. மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.

    11. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.

    12. சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    13. சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    14. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.

    15. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.

    16. சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    17. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    18. சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    19. சித்திரை குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    20. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

    21. சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    22. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    23. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்த தாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது.

    24. எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    25. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 
    நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அபிஷேக ஆராதனையை பக்தர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய 3-லும் சிறப்புடைய இந்த ேகாவிலில் திருமண கோலத்தில் சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் சிவலிங்கத்துக்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்து காட்சியளிக்கிறார்கள்.

    சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதம் ் நடைபெறும் சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை சாத்தப்பட்ட சந்தனம் களையப்பட்டு பல்வேறு திரவியங்களாலும், பால், இளநீர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தைலத்தால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக இந்த அபிஷேகத்தையும் சிறப்பு தீபாராதனையும் பக்தர்கள் காண அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு தீபாராதனை முடிந்த பிறகு பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று(திங்கட்கிழமை) அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருமணக்காட்சி முடிந்த பிறகு தான் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகும். 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பட்ட இந்த தலத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.

    இங்கு தை முதல் நாள், சித்திரை பவுர்ணமியில் தேரோட்டம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். திருவாரூர் தியாகராஜசாமி கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரிய தேரோட்டம் நடைபெறும் தலமாக இக்கோவில் உள்ளது.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று நிகழ்ச்சியில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கருட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி கோமளவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளினார்.

    விழாவில் வருகிற 28-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    சீர்காழி சட்டைநாதர் கோவில் வரலாற்றை நினைவு கூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தேவார பாடல்களின் ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகவும், புராதன காலத்தில் பிரம்மபுரம், வேணுபுரம், தோணிபுரம், சிரபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    நான்கு புறமும் கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும்.

    இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒருமுறை திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பார்வதி தேவியான திருநிலைநாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாற்றை நினைவு கூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சட்டைநாதர் கோவிலில் நேற்று திருமுலைப்பால் விழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் ஞானசம்பந்தர் புறப்பாடு நடந்தது. அப்போது மலைக்கோவிலில் இருந்து உமா மகேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருளினார்.

    இதனையடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பால் கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவபெருமான்- உமாமகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சி அளித்தனர்.

    அப்போது சாமி-அம்மன் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் கணக்கர் செந்தில் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவப்பிரியா தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×