search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் தனித்தனி தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
    X
    சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் தனித்தனி தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு 22-ந்தேதி பட்டாபிஷேகம்

    மதுரை சித்திரை திருவிழாவில் வருகிற 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான்.

    மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூடி, நாட்டை ஆண்டு, தேவதேவா்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.

    அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. திருக்கல்யாணம் மட்டும் நடந்தது.

    இந்தாண்டும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. இருந்தாலும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று உள்திருவிழாவாக மதுரை சித்திரை திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பட்டர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    சித்திரை திருவிழா என்றால் சுவாமி-அம்மன் தினமும் வெவ்வேறு வாகனத்தில் மாசி வீதியில் உலா வருவது முக்கிய சிறப்பாகும். ஆனால் கொரோனாவால் திருவிழா கோவிலுக்குள் நடைபெறுவதால் காலை, இரவு நேரங்களில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் கோவிலில் உள்ள ஆடி வீதியில் பக்தர்கள் யாருமின்றி வலம் வருகின்றனர்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா, வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கப்படு்ம். அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசிய இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது.

    மேலும் திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை வழிபாடு செய்யலாம். ஆனால் பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தை காண முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே திருக்கல்யாண கோலத்தை காண அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    25-ந் தேதி திருத்தேர் வீதி உலா காலை 6.30 மணிக்கு ஆடி வீதியில் நடைபெறுகிறது. இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.
    Next Story
    ×