என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோவில் உள் பிரகாரத்தில் நடந்து வருகிறது.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திரு விழாவில் கள்ளழகர் மதுரை வருகை தந்து வைகை ஆற்றில் எழுந்தருளி பின் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த பின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்று மதுரை மக்களிடம் இருந்து விடைபெற்று அழகர்கோவில் செல்வதற்கு முன்பாக தமுக்கம் மைதா னம் அருகே உள்ள கருப்பணசாமி கோவில் முன்பு இந்த பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டு களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரைத் திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று 8-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் அனுமதியின்றி இன்று கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 5.30 மணிமுதல் 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    பிற்பகல் 2.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு கருடமண்டபம் வந்தடைகிறார். பின்னர் சந்தனு மண்டபம் சென்று, அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு யாகசாலையை சென்றடைந்து நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    விழாவின் இரண்டாம் நாளான நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 3-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 4-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    வருகிற 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
    ஔவையார் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.
    மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

    ஓம் விக்ன விநாயகா போற்றி!
    கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு, அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
    கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு, அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறைக்கு திரண்டு வந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

    இதன்மூலம் இறந்து போன தங்களது முன்னோருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுதவிர, பேரூர் படித்துறையில் பக்தர்கள் வாரம் முழுக்க தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் பேரூர் படித்துறையில் திதி கொடுத்து, தர்ப்பண வழிபாடு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் தடை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறையை அறிந்து கொள்ளலாம்.
    ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. இது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாகத் திகழ்கிறது.

    நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜன், பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் வழங்கிய பாயசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார்.

    இதையடுத்து முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.

    இதன் அடிப்படையில், குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலை முன்பாக ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். விநாயகரை சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
    விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில், சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை விலகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (வளர்பிறை சதுர்த்தி) சதுர்த்தி ஆகும். புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல், ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்.

    பொதுவாகவே, புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் எந்த விரதம் இருந்தாலும், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். விநாயகர் என்பவர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.அதனால் தான் சங்கடஹர சதுர்த்தி என்கிறார்கள்.
    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து செல்கின்றனர்.
    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பூட்டப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து செல்கின்றனர்.

    அதேநேரத்தில் முடிகாணிக்கை மண்டபமும் மூடப்பட்டுள்ள நிலையில் அனுபவம் இல்லாத சிலர் ரூ.150 முதல் ரூ.300 வரை வாங்கி கொண்டு பக்தர்களுக்கு மொட்டையடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக நோய்தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
    நம்முடைய அன்றாட வாழ்விலும் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உடல் மற்றும் உள்ள மனமாற்றம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கின்றது.
    மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் என்பதுஉடைகளையும் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றுவது அல்ல ; மாறாக, நம் உள்ளத்தை மாற்றுவது. கல்லான இதயத்தை கனி உள்ள இதயமாக மாற்றுவது . தீமை நிறைந்த வாழ்வைத் தூய்மை நிறைந்த வாழ்வாக மாற்றுவது . சுயநல வாழ்வை பொதுநல வாழ்வாக மாற்றுவது . இவ்வாறு தவக்காலத்தில் மனமாற்றம் என்பது முக்கியமான ஒன்றாகக் வலியுறுத்தப்படுகின்றது.

    இன்றைய முதல் வாசகத்தில் நினிவே மக்கள் மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். நினிவே மக்கள் கடவுளுக்கு எதிராக பாவங்கள் பல செய்தனர். கடவுள் அவர்களை அழிக்க முதலில் துணியாமல் யோனா இறைவாக்கினர் வழியாக மனமாற ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். அந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திய நினிவே மக்கள் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் உள்ளார்ந்த மனமாற்ற வாழ்வாகும்.

    இன்றையநற்செய்தியில்அடையாளம் கேட்ட மக்கள் கூட்டத்தினருக்கு இயேசு சவுக்கடி கொடுக்கும் விதமாக பதிலளித்தார். "இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது" என்று இயேசு கூறினார்.இயேசுவிடம் யூத மக்கள் அடையாளம் கேட்டது இயேசுவை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல ; மாறாக,அவரிடம் எதையாவது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவே . இதை அறிந்து கொண்ட இயேசு அவர்களைத் தீய தலைமுறையினர் என அழைத்தார். இயேசுவின் பற்பல போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும், அவரை நம்ப மனமில்லாமல் அடையாளம் கேட்டனர். யூதர்கள் மெசியாவின் வருகைக்காக அடையாளம் ஒன்றை எதிர்பார்த்தனர். எனவேதான் இயேசுவிடம் யூதர்கள் அடையாளம் கேட்டனர் என்று விவாதம் வைத்தாலும் இயேசு தன்னைப் பலவழிகளில் மெசியாவாக அடையாளப்படுத்தினார். ஆனால் இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் மீது கொண்ட பொறாமை உணர்வு.

    பெரும்பாலான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து அவர் கற்பிப்பதை கேட்டு அவரின் பின்னால் சென்றதால், யூதத் தலைவர்கள் இயேசுவின்போதனைகளை ஏற்றுக் கொள்ளச் சற்று தயங்கினார். அதற்கு முக்கியக் காரணம் தங்களுக்கு மரியாதை மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற பொறாமை உணர்வாகும்.எனவேதான் இயேசு ''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30) என்று கூறினார். இயேசு தன்னையே அடையாளமாகக் கொடுத்தார். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்ளாமலும் மனமாற்றத்தை முழுமையாகச் சுவைக்காமலும் மக்கள் இருந்ததை கண்டு இயேசு கடுமையாகச் சாடினார்.

    நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளை நம்புவதற்கும் கடவுளின் வழியில் பயணிப்பதற்கு கடவுள் பல்வேறு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார். குறிப்பாக இந்த தவக்காலம் நாம் மனம்மாறி நற்செய்தியை நம்புவதற்கு கொடுக்கப்பட்ட உன்னதமான காலம். இந்த காலங்களில் சிலுவைப்பாதை, திருப்பலி, செபமாலை, திருப்புகழ்மாலை, இறை இரக்க செபமாலை, உண்ணா நோன்பு, மனிதநேய பிறரன்பு செயல்பாடுகள் போன்றவற்றின் வழியாக மனமாற்ற வாழ்வு பெறமுயற்சி செய்வோம். உலகம் சார்ந்த பாவங்களை விட்டு விட்டு முழுமையாக மனம்மாறும் பொழுது,நம் வாழ்வில் நிறைவான அருளையும் இரக்கத்தையும் வழிநடத்துதலையும் பெறமுடியும். மனமாற்ற வாழ்வுதான் நமக்கு நிறைவைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் கடவுளின் திருவுள்ளத்தின் படி பயணிக்க வழிகாட்டும்.

    திருஅவை வரலாற்றில் மனமாற்ற வாழ்வில் நிலைத்து இருந்தவர்கள்தான் மிகப்பெரிய செயல்பாடுகளை செய்துள்ளனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அகுஸ்தினார். தன்னுடைய இளமைக் காலங்களில் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் பாவம் செய்தார். தன்னுடைய தாய் புனித மோனிக்கா தன்னுடைய மகன் அகுஸ்தினாரின்மனமாற்ற வாழ்வுக்குச் செபித்தார் . கடவுளின் அருளால்புனித அகுஸ்தீனார் மனமாற்றம் பெற்று,மிகச்சிறந்த இறைப்பணி செய்ததை நாம் அறிவோம். அவர் மனம் மாறிய பிறகு முன்வைத்த காலை பின் வைக்காமல், புனித வாழ்வில் நிலைத்திருந்தது திருஅவைக்கு மிகச்சிறந்த ஒரு கருவியாகப் பயன்பட்டார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உடல் மற்றும் உள்ள மனமாற்றம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கின்றது.மனமாறுபவர்கள் மட்டுமேகடவுள் தரும் மீட்பை முழுமையாகச் சுவைக்க முடியும்.இதற்கு மிகச்சிறந்த மற்றொரு உதாரணம் சக்கேயு.

    எனவேஇந்தத் தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று நற்செய்தியை முழுமையாக நம்பிட தேவையான அருளை வேண்டுவோம். யூத மக்கள் சிலர் இயேசுவிடம் அடையாளமும் அறிகுறிகளும் கேட்டு தங்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்த நினைத்ததைப் போல் இல்லாமல்,அடையாளங்களையும் அறிகுறிகளையும்தாண்டி இயேசுவை முழுமையாக ஏற்று அருள், இரக்கம், மீட்பு போன்ற வாழ்வுக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.

    இறைவேண்டல் :

    வல்லமையுள்ள இயேசுவே!இந்த தவக்காலத்திலும்எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மிடம் அடையாளங்களையும் அறிகுறிகளையும் வல்லச்செயல்களைமட்டும் எதிர்பார்க்காமல்,உம்மை முழுமையாக நம்பவும், மனமாற்ற வாழ்வில் நிலைத்திருக்கவும் அருளைத் தாரும்.ஆமென்.
    ‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)
    மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் மக்பிரத்’ - ‘இறைவனின் மன்னிப்பு கிடைக்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ‘இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்’ என்று திருக்குர்ஆன் (3:133) வலியுறுத்துகிறது.

    புனித ரமலானில் ஒரு இறைவிசுவாசி நோன்பு நோற்பதன் மூலமாகவும், இரவில் நின்று வணங்குவதன் வாயிலாகவும், உபகாரம் புரிவதின் வழியாகவும், இறைவனை நினைவு கூர்வதின் உதவியாலும், சாதாரண தொழுகைகளின் செயலாலும் அவரின் பாவங் களுக்கு மன்னிப்பு கிடைத்து விடுகிறது.

    ‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமையில் இருந்து மறுவெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு இடையில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)

    ‘பாவத்தினால் முகத்தில் கறுமையும், மண்ணறையில் இருளும், உடலில் சோர்வும், உணவில் குறையும், மற்றவர்களின் மனங்களில் குரோதமும் ஏற்படுகிறது’ என இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்.

    இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் சென்று, கல்வி கற்க அமர்ந்த போது, ‘இறைவன் உனது உள்ளத்தில் ஜோதியை போட்டுள்ளான். எனவே, அதை பாவத்தின் இருளைக் கொண்டு அணைத்துவிடாதே’ என இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்.

    ‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் யாவும் உரியது, அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்’ என்று ஒருநாளில் நூறுமுறை கூறியவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாக நற்பலன் தரும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரை சைத்தானிடமிருந்து அது அவருக்கு அரணாக இருக்கும். அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்யமுடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் செய்தால், புரிந்தாலே தவிர என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை கூறுவாரோ, அவரின் தவறுகள் கடல் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் அழிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நிச்சயமாக நற்செயல்கள் தீயசெயல்களை போக்கிவிடும்’ என்பது திருக்குர்ஆன் (11:114) நமக்கு அளிக்கும் உறுதிமொழியாகும்.

    ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து மன்னிப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அதற்காக நோன்பாளிகள் விரைந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    மதுரை அழகர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆகம விதிப்படி விழா நிகழ்ச்சிகள் ேகாவில் வளாகத்திலேயே நடந்து வருகின்றன.

    7-ம் நாள் விழாவான நேற்று காலையில் கோவில் ஆடி வீதியின் வடக்கு பகுதியில் ஏற்கனவே மாதிரியாக அமைக்கப்பட்ட வைகை ஆறு பகுதியில் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அப்போது, மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் தீபாராதனை, புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அங்கு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கடலூர் மாவட்டத்தில், கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயர புதிய மண்டூக முனிவர் சிலை அங்கிருந்து அழகர்கோவில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்து, விழாவில் வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி நடந்த போது பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். 8-ம் நாள் விழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.
    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    ஆலய வரலாறு :

    முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.

    இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது.

    அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து 27.1.2002-ல் 3 நிலை ராஜகோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    ஆலய தரிசனம் :

    திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர்.

    அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம். சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.

    மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.

    கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

    சாப விமோசனம் பெற்ற ரம்பை :

    முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.

    இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.

    திருவிழாக்கள் :

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.

    சிந்தையை தெளியவைக்கும் பத்மதீர்த்தம் :

    சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.

    ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.

    அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.

    அமைவிடம் :

    கோவை காந்திபுரத்தில் இருந்து பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூருக்கு அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் இருக்கிறது. அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா, மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த தருணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்புக்குரிய தகவல்களை சிறுசிறு தொகுப்புகளாகப் பார்க்கலாம்.
    கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, விழாவை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தருணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்புக்குரிய தகவல்களை சிறுசிறு தொகுப்புகளாகப் பார்க்கலாம்.

    இந்திரன் அமைத்த விமானம்

    மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம், இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கும் பொருட்டு, பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அதன் ஒரு பகுதியாக சிவபெருமானின் திரு விளையாடல்கள் பலவும் நடைபெற்றதாக அறியப்படும் கடம்பவனமான மதுரைக்கு வந்தான். அங்கு சுயம்பு லிங்கமாக இருந்த ஈசனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றான். தன் தோஷத்தைப் போக்கிய காரணத்தால், இத்தல இறைவனுக்கு விமானத்துடன் கூடிய பெருங்கோவிலை கட்டியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த விமானத்திற்கு ‘இந்திர விமானம்’ என்று பெயர்.

    மரகத மீனாட்சி

    இத்தல இறைவியின் பெயர் ‘மீனாட்சி.’ தமிழில் ‘அங்கையற்கண்ணி.’ ‘மீன் போன்ற கண்களை கொண்டவள்’ என்று இதற்கு பொருள். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை, மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இதற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர். இத்தல அம்மன், நின்ற கோலத்தில், இடை நெளித்து, கையில் கிளியை ஏந்தியபடி விற்றிருக்கிறாள். இங்கு அன்னைக்கே முதல் மரியாதை. அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகுதான், மூலவரான சுந்தரேஸ்வரருக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    பொற்றாமரைக் குளம்

    நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுதல்படி, சிவபெருமான் தன்னுடைய சூலாயுதம் கொண்டு உருவாக்கியதே, இந்தக் குளம். இதற்கு ‘சிவகங்கை’ என்று பெயர். இந்திரன், இத்தல இறைவனை வழிபட்டுதான், தோஷம் நீங்கப் பெற்றான். அப்படி வழிபாடு செய்வதற்காக இந்த குளத்தில் இருந்து பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற காரணத்தால், இது ‘பொற்றாமரைக் குளம்’ என்றானது. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய இடம் இது. ஒரு நாரைக்கு, சிவபெருமான் அருளிய வரத்தின்படி, இந்தக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இன்றளவும் இல்லாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.

    165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்ட இந்தக் குளத்தைச் சுற்றிலும், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தில் அமாவாசை, கிரகண நாட்கள், மாதப் பிறப்பு மற்றும் புண்ணிய நாட்களில் நீராடி, இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

    வெளி ஆவரணம்.. உள் ஆவரணம்

    மதுரை திருத்தலத்திற்கு வெளியே நான்கு திசைகளிலும் உள்ள ஆலயங்கள், ‘வெளி ஆவரணம்’ என்றும், மதுரை மீனாட்சி கோவிலுக்கு வெளியே நான்கு திசைகளிலும் அமைந்த ஆலயங்கள் ‘உள் ஆவரணம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அதன்படி வெளி ஆவரணங்களாக மதுரைக்கு தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம்’ ஆகிய தலங்கள் உள்ளன. உள் ஆவரணங்களாக மதுரை கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட ‘பழைய சொக்கநாதர் கோவில்’, மேற்கு திசையில் சிவபெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த ‘இம்மையில் நன்மை தருவார் கோவில்’, கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ‘ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோவில்’, தெற்கு திசையில் எமன் வழிபட்ட ‘தென்திருவாலவாய் கோவில்’ ஆகியவை உள்ளன.
    ×