search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    நற்செயல்களால் நன்மைகளை பெறுவோம்

    ‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)
    மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் மக்பிரத்’ - ‘இறைவனின் மன்னிப்பு கிடைக்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ‘இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்’ என்று திருக்குர்ஆன் (3:133) வலியுறுத்துகிறது.

    புனித ரமலானில் ஒரு இறைவிசுவாசி நோன்பு நோற்பதன் மூலமாகவும், இரவில் நின்று வணங்குவதன் வாயிலாகவும், உபகாரம் புரிவதின் வழியாகவும், இறைவனை நினைவு கூர்வதின் உதவியாலும், சாதாரண தொழுகைகளின் செயலாலும் அவரின் பாவங் களுக்கு மன்னிப்பு கிடைத்து விடுகிறது.

    ‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமையில் இருந்து மறுவெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு இடையில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது’. (திருக்குர்ஆன் 50:37)

    ‘பாவத்தினால் முகத்தில் கறுமையும், மண்ணறையில் இருளும், உடலில் சோர்வும், உணவில் குறையும், மற்றவர்களின் மனங்களில் குரோதமும் ஏற்படுகிறது’ என இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்.

    இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் சென்று, கல்வி கற்க அமர்ந்த போது, ‘இறைவன் உனது உள்ளத்தில் ஜோதியை போட்டுள்ளான். எனவே, அதை பாவத்தின் இருளைக் கொண்டு அணைத்துவிடாதே’ என இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்.

    ‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் யாவும் உரியது, அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்’ என்று ஒருநாளில் நூறுமுறை கூறியவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாக நற்பலன் தரும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரை சைத்தானிடமிருந்து அது அவருக்கு அரணாக இருக்கும். அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்யமுடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் செய்தால், புரிந்தாலே தவிர என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை கூறுவாரோ, அவரின் தவறுகள் கடல் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் அழிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நிச்சயமாக நற்செயல்கள் தீயசெயல்களை போக்கிவிடும்’ என்பது திருக்குர்ஆன் (11:114) நமக்கு அளிக்கும் உறுதிமொழியாகும்.

    ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து மன்னிப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அதற்காக நோன்பாளிகள் விரைந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    Next Story
    ×