என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். எந்தக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக் கூடாது.
    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும்.

    தேங்காய் உள்ளே பூ இருந்தால், குழந்தைப்பேறு உண்டாகும். தேங்காய் குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள்.

    எந்தக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக் கூடாது.

    சிதறுகாய் உடைக்கும் பொழுது, நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால்தான், நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.
    சித்திரை மாதத்தில் (ஏப்ரல் - மே) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    29.4.2021 வியாழன் திருதியை அனுஷம் சித்த யோகம் காலை 10.30-11.30

    9.5.2021 ஞாயிறு திரயோதசி ரேவதி அமிர்த யோகம் காலை 11-12

    14.5.2021 வெள்ளி திருதியை மிருகசீர்ஷம் சித்த யோகம் காலை 6-7
    பாலமலை அரங்கநாதர் கோவிலில் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் பச்சை ஆடை அணிந்து குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெற்றன.
    பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை உள்ளது. இந்த மலையின் மீது அரங்கநாதர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவையொட்டி 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த கோவில் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்குள்ள ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனம் என ஒவ்வொரு நாளும் பெருமாள் எழுந்தருளினார்.

    தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தில் செங்கோதை, பூங்கோதை தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு 10 பேர் மட்டுமே பங்கேற்ற தேர் வடம் கோவிலை சுற்றி வந்தது. இறுதியாக பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் பச்சை ஆடை அணிந்து குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெற்றன.
    பகவான் விஷ்ணுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்; லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும்.
    இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இதோ அந்த அற்புதமான விஷ்ணு காயத்ரி மந்திரம்.

    விஷ்ணு காயத்ரி மந்திரம்:

    ஓம் நிரஞ்சனாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
    மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.
    திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!

    வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

    இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.

    வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான். அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டுகளாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது.

    முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார். அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டு அகத்தியர் திடுக்கிட்டார். முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை.

    அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளிதெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார். அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோயிலாக கருதப்படுகிறது. பிற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம்.

    கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார். முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சி தந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகம முறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சி கொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    அதேபோல வள்ளியின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம். இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

    வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரச முறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார்.

    இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள்.இப்படி சிறப்பு பெற்ற வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் இன்று சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி மாலையில் தொடங்கியது. இதைதொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் 4-ம் திருநாளில் எதிர்சேவையும், கள்ளழகர் திருக்கோலமும், 5-ம் திருநாளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகருக்கு ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது. நேற்று 6-ம் திருநாளில் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நந்தவன ஆடி வீதி வழியாக புறப்பாடாகி வலம் வந்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இன்று(வியாழக்கிழமை) காலையில் 10 மணிக்கு கருடவாகனத்தில் அழகர் புறப்பாடும், புராணம் வாசித்தல், மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளை பூப்பல்லக்கு விழாவும், மே 1-ந் தேதி அர்த்தமண்டப சேவையும், 2-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியும், திருமஞ்சனமும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    சில விரதங்கள் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றன. “லட்சுமி பஞ்சமி”, திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டுத் தினமாகும்.
    சித்திரை மாதத்தில் பல்வேறு விழாக்கள், விரதங்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கவை. ஒவ்வொரு காரணத்தோடு இருப்பவை. அதில் ஒன்றுதான் ஸ்ரீ லட்சுமி பஞ்சமி. இது திருமகளுக்கான விழா. பொதுவாக சில விரதங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. சில விரதங்கள் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றன. “லட்சுமி பஞ்சமி”, திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டுத்தினமாகும்.
    இது திருமகளுக்கு உரிய வழிபாடு என்பதால் இதனை “ஸ்ரீபஞ்சமி” என்றும் “ஸ்ரீவிரதம்” என்றும் சொல்கிறார்கள். சித்திரை மாதத்திலே வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும் இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன. ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவனுக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும்.

    அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவன் இருளில் தள்ளப்படுவான். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளி
    வில்லாமல் இருப்பான். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே, திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம் லட்சுமி  எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள். நிலை வாசலில்மஞ்சள் குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம். இந்த லட்சுமி பூஜை செய்வதற்கு வேறுசில தினங்களும் இருக்கின்றன. (நவராத்திரி, தீபாவளி, வெள்ளிக்கிழமை - திருமகள் பூஜைக்கு என்றே  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.) பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனை வரும் நீராடிவிட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாஹனம் பண்ண வேண்டும். அந்தக் கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    “ஓம் ஸ்ரீமகாலட்சுமி ச வித்மஹே விஷ்ணுபத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்” என்ற காயத்திரி மந்திரத்தை தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மஹாலஷ்மி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய  பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்தக் கலசத்திற்கு வஸ்திரம், மாலை, ஆபரணங்கள் முதலியவற்றை அணிவிக்க வேண்டும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நமஹ” என்கிற லஷ்மி குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். ஒருபொழுது விரதமிருந்து, மாலையில் பல்வேறு கனிகளோடு நிவேதனம் படைத்து முறையாக வழிபாடு நடத்தி தீபாராதனை காண்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்று விசேஷமாக திருமகளுக்கு உரிய ஸ்ரீசூக்த பாராயணம், (இது மட்டும் வேத பண்டிதரைக்  கொண்டு செய்யவும்), விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்ரம், லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம்,லட்சுமி அஷ்டோத்திர மந்திரங்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த திருமகளுக்குரிய தெய்வீகப் பாடல்களைப் பாடி, பூஜையை முடித்து கொள்ளலாம்.

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று நம்முடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணராக பாவிப்பது போல, இந்த லட்சுமி பஞ்சமியில், நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு, நல்ல ஆடை அணிகலன்களை அணிவித்து, திருமகளாகவே பாவித்து பூஜையை அவர்களோடு இணைந்து நடத்த வேண்டும். காலையில் விரதமிருந்து மாலையில் இந்த பூஜையைச்  செய்ய வேண்டும்.

    இதனால் கடன் தொல்லைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறவர்கள் இந்தப் பூஜையைச் செய்வதோடு, தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில், லட்சுமி மந்திரத்தைச் சொல்லி, குபேர தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால், பொருளாதார சிக்கல்கள் தீரும். மிக முக்கியமாக அன்றைய பூஜை நிவேதனங்களில் இரண்டு மூன்று இனிப்புப் பதார்த்தங்களைச் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் சிறப்பு.
    நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.
    தவக்காலம் என்பது உடையை கிழிக்க அல்ல, உள்ளத்தை கிழிக்க. உடலை வருத்த அல்ல, உள்ளத்தை திருத்த. இது தள்ளுபடியின் காலம். இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம். பாவியை அல்ல.

    பாவத்தை வெறுத்து, அந்த பாவியை அரவணைக்கும் அருளின் காலம். எனவே தவத்துக்கு இது ஏற்ற காலம். நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.

    தரையில் தூங்குபவன் தவறி விழுவதில்லை. நாம், நம் வாழ்க்கையில் ஒரே சமநிலையில் வாழ்ந்தால் தவறி விழமாட்டோம். நம் வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. எனவே தான் நாம் தவறுகிறோம். தவறுதான் மனித இயல்பு. ஆனால் அந்த தவறு என்னவென்பதே அறியாமல் இருப்பதும், அறிந்தாலும் அதை ஏற்காமல் இருப்பதும், வருந்தி திருந்தாமல் இருப்பதும், இறைவனிடமிருந்து நம்மை வெகுதூரமாய் தள்ளி வைத்துவிடும். வருந்துவதும், திருந்துவதும் நம் வாழ்வின் வழிமுறையாக மாற வேண்டும்.

    நம் வாழ்வில் நாம் யூதாசுகளாக வாழ்கிறோமா? அல்லது பேதுருவாக வாழ்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகிறோம். யூதாசு தான் செய்த தவறு குறித்து வருந்தினான். ஆனால் திருந்தி இயேசுவிடம் வரவில்லை. புதிய வாழ்வை பெறவில்லை. பேதுருவோ வருந்தினார். திருந்தினார். இயேசுவிடம் வந்தார். மனம் திரும்பினார். இன்று அவர் புதிய வாழ்வைப் பெற்று புனிதராக வாழ்கிறார்.

    எனவே, கடவுள் நம் பாவங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை அவர் விரும்பவில்லை. பாவிகள் சாக வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல. கடவுள், தாம் செய்ய நினைத்த தீங்கு குறித்து மனம் மாறுகிறவர். கடவுள் நமக்கு தண்டனை வழங்க அல்ல. மாறாக, வாழ்வை வழங்கவே தன் ஒரே மகனை அனுப்பினார். எனவே வருந்துவோம். நம் வாழ்வெல்லாம் வசந்தமாகட்டும்.
    அரசின் உத்தரவை தொடர்ந்து தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷாணத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கோவில் அடைக்கப்பட்டு உள்ளது.
    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டது. அரசின் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் நான்கு திசைகளிலும் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் கடலுக்குள் அமைந்துள்ள ராமபிரான் பூஜை செய்து வழிபாடு நடத்திய நவபாஷாணம் பகுதிக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அங்கு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நவ பாஷாணதிற்குள் செல்ல பக்தர்கள் விதிக்கப்பட்ட தடை காரணமாக தேவிபட்டினம் நவபாஷாணம் அமைந்துள்ள கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் செல்ல தடை காரணமாக தேவிபட்டினம் கடலில் அமைந்துள்ள நவபாஷாண கோவிலுக்கு செல்ல முடியாததால் பூஜை செய்ய வரும் பக்தர்களும் நவபாஷாண பகுதிக்குள் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் தினமும் கோவில் திறக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் எந்த ஒரு தடையும் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    =----------------------
    ‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)
    புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் மர்சூக்’ - ‘வாழ்வாதாரம் வழங்கப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    வாழ்வாதாரம் என்பது, உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, பொருட்செல்வம், குழந்தை செல்வம் ஆகியவை ஆகும். இத்தகைய வாழ்வாதாரம் வழங்கப்படும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து அத்தகைய வாழ்வாதாரத்தை இறைவனிடம் கேட்டுப்பெற முன்வரவேண்டும்.

    ‘அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது, அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்’ என்பது திருக்குர்ஆன் (44: 4,5) வசனமாகும்.

    மேலும், விசாலமான வாழ்வாதாரம் கிடைத்திட காரணங்களாக அமைந்திருக்கும் சில அம்சங்களையும் புனித ரமலானில் நிறைவேற்றிட வேண்டும். அவை வருமாறு:

    1) வாழ்வாதாரம் கிடைத்திட இறையச்சம் அவசியம். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘எவர் இறைவனை அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் ஒரு வழியை உண்டாக்குவான்; அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து அவன் வாழ்வாதாரங் (வசதி)களை அளிக்கிறான்’.(திருக்குர்ஆன் 65: 2,3)

    2) தவறாமல் மழை பொழிந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயம் அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்று கூறினேன், (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்”. (திருக்குர்ஆன் 71: 10, 11)

    ‘அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட் செல்வங்களையும், குழந்தை செல்வங்களையும் கொண்டு உதவி செய்வான்; மேலும் உங்களுக்காகத் தோட்டங்களையும், ஆறுகளையும் உண்டாக்குவான்’. (திருக்குர்ஆன் 71: 12)

    3) நலிந்தவர்களிடம் நலமாக நடப்பதின் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் என்பது பற்றிய நபி மொழி வருமாறு: ‘என்னை நலிந்தவர்களுடன் தேடிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்படுவதும், உதவி செய்யப்படுவதும் உங்களிலுள்ள நலிந்தவர்களால் தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)

    4) பெற்றோரிடம் நலமாக நடப்பது, 5) உறவுகளுடன் ஒட்டி வாழ்வது ஆகியவற்றாலும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படும். இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘எவர் தமக்கு நீடித்த ஆயுளும், விசாலமான வாழ்வாதாரமும் வழங்கப்பட வேண்டுமென மகிழ்கிறாரோ, அவர் தம் பெற்றோருக்கு நன்மை செய்யட்டும்; மேலும் தம் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)

    மேற்கூறப்பட்ட அம்சங்கள் நமது வாழ்வாதாரம் கிடைப்பதற்குரிய செயல்பாடாகும். அவற்றை புனித ரமலான் மாதத்தில் செயல்படுத்தி வளமாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக, ஆமின்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி

    மதுரை அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி கோவிலுக்குள் ஆடி வீதியை வலம் வந்தார்.
    மதுரை மாவட்டம், அழகர் கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    10 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி (திங்கள்கிழமை) மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி புறப் பாடுடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ளழகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந் தருளும் வைபவம் கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கோவில் உள் பிரகாரத்தில் ஆகம விதிப்படி ஆடி வீதி எனும் நந்தவனத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் நேற்று காலை கள்ளழகர் எழுந்தருளினார்.

    தொடர்ந்து 6-வது திருவிழாவான இன்று (28-ந் தேதி) காலை 8 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தில் சைத்திய உபசார சேவை பக்தி உலாத்தல் நடந்தது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து 7-ம் நாள் திருவிழாவாக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடாகி புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷி முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ம் நாள் திருவிழாவாக வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும்.

    தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவாக மே 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அர்த்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

    10-ம் நாள் திருவிழாவாக மே 2-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக் கப்பட் டுள்ளது.

    முன்னதாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பாக சூடம் ஏற்றி வழிபட்டு திரும்பி செல்கின்றனர்.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
    சீர்காழி

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி கடந்த 25-ந் தேதி 8 கால யாகசாலை பூஜைகளுக்காக 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் 108 மூலிகை பொருட்கள் இட்டு நடந்து வந்தது.

    நேற்று காலை பரிவார யாக பூஜைகள் தொடங்கி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்விக்கப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிவாச்சாரியார்களால் புறப்பாடு ஆகி, மேள, தாளங்கள் முழங்கிட கோவிலை வலம் வந்து ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழி வினாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 8ம் கால யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் யாரும் கோவில் உள்ளேயும் வெளிவட்ட சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பார்கவி ஆகியோர் மட்டும் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனால் எளிமையான முறையில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    ×