search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    பெற்றோரை கண்ணியப்படுத்துவோம்

    ‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)
    புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் மர்சூக்’ - ‘வாழ்வாதாரம் வழங்கப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    வாழ்வாதாரம் என்பது, உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, பொருட்செல்வம், குழந்தை செல்வம் ஆகியவை ஆகும். இத்தகைய வாழ்வாதாரம் வழங்கப்படும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து அத்தகைய வாழ்வாதாரத்தை இறைவனிடம் கேட்டுப்பெற முன்வரவேண்டும்.

    ‘அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது, அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்’ என்பது திருக்குர்ஆன் (44: 4,5) வசனமாகும்.

    மேலும், விசாலமான வாழ்வாதாரம் கிடைத்திட காரணங்களாக அமைந்திருக்கும் சில அம்சங்களையும் புனித ரமலானில் நிறைவேற்றிட வேண்டும். அவை வருமாறு:

    1) வாழ்வாதாரம் கிடைத்திட இறையச்சம் அவசியம். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘எவர் இறைவனை அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் ஒரு வழியை உண்டாக்குவான்; அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து அவன் வாழ்வாதாரங் (வசதி)களை அளிக்கிறான்’.(திருக்குர்ஆன் 65: 2,3)

    2) தவறாமல் மழை பொழிந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயம் அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்று கூறினேன், (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்”. (திருக்குர்ஆன் 71: 10, 11)

    ‘அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட் செல்வங்களையும், குழந்தை செல்வங்களையும் கொண்டு உதவி செய்வான்; மேலும் உங்களுக்காகத் தோட்டங்களையும், ஆறுகளையும் உண்டாக்குவான்’. (திருக்குர்ஆன் 71: 12)

    3) நலிந்தவர்களிடம் நலமாக நடப்பதின் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் என்பது பற்றிய நபி மொழி வருமாறு: ‘என்னை நலிந்தவர்களுடன் தேடிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்படுவதும், உதவி செய்யப்படுவதும் உங்களிலுள்ள நலிந்தவர்களால் தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)

    4) பெற்றோரிடம் நலமாக நடப்பது, 5) உறவுகளுடன் ஒட்டி வாழ்வது ஆகியவற்றாலும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படும். இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘எவர் தமக்கு நீடித்த ஆயுளும், விசாலமான வாழ்வாதாரமும் வழங்கப்பட வேண்டுமென மகிழ்கிறாரோ, அவர் தம் பெற்றோருக்கு நன்மை செய்யட்டும்; மேலும் தம் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை இறைவன் அதிகரிப்பான் என நற்செய்தி அவருக்கு உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: ஹாகிம்)

    மேற்கூறப்பட்ட அம்சங்கள் நமது வாழ்வாதாரம் கிடைப்பதற்குரிய செயல்பாடாகும். அவற்றை புனித ரமலான் மாதத்தில் செயல்படுத்தி வளமாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக, ஆமின்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி

    Next Story
    ×