என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளில் நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், திங்கட்கிழமைகாலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளினார்.

    6-ம் நாளான நேற்று தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளினார்.

    இன்று 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
    அதிக அளவில் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியாக, புரட்டாசி நவராத்திரி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் வசந்த நவராத்திரி இருக்கிறது.
    மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 10 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகவே கருதப்படும். ஆனால் அம்பாளுக்கு விருப்பமான நவராத்திரியாக 4 நவராத்திரிகள் சொல்லப்படுகின்றன. அவை, ஆடி மாதத்தில் வரும் ‘ஆஷாட நவராத்திரி’, புரட்டாசி மாதத்தில் வரும் ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் வரும் ‘சியாமளா நவராத்திரி’, வசந்த காலமாக கருதப்படும் பங்குனி மாதத்தில் வரும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.

    இதில் அதிக அளவில் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியாக, புரட்டாசி நவராத்திரி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் வசந்த நவராத்திரி இருக்கிறது. இந்த நவராத்திரியை வீடுகளில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது இல்லை என்றாலும், ஆலயங்களில் இந்த நவராத்திரி விழாவின் போது உற்சவங்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மற்ற இரண்டு நவராத்திரிகளும் பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பங்குனியும், புரட்டாசியும் எமதர்மனின் கோரைப்பற்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க்கிருமிகள் பரவும் காலம் என்றும், தெய்வங்களின் அருள் மனிதர்களுக்கு கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அம்பாளை முறையாக வழிபாடு செய்து, 10 நாட்களும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் நன்மைகளைப் பெறலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

    புரட்டாசி மாத நவராத்திரியின் போது அம்பாளை, முப்பெரும் தேவியர்களாக கருதி வழிபடுகிறோம். சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், துர்க்கைக்கு மூன்று நாட்களுமாக 9 நாட்கள் இந்த நவராத்திரி கொண்டாடப்படும். ஆடி மாத நவராத்திரியில் வராகி அம்மனை வழிபடுவார்கள். மாசி மாத நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அந்த வரிசையில் வசந்த நவராத்திரியில், உலகை ஆளும் பராசக்தியை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகை களைக் கொண்டு செய்யக்கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை கொண்டாடுவதற்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அதைப் பார்ப்போம்...

    அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். துருவசிந்து, வேட்டைக்கு சென்ற இடத்தில் சிங்கம் தாக்கி இறந்ததை அடுத்து, அடுத்த மன்னன் யார் என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி முதல் மனைவியான மனோரமாவின் மகன் சுதர்சனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித், தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்துக்கு முடிசூட்ட நினைத்தான்.

    இதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இவருக்குமான போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். மனோரமாவும், சுதர்சனும் உயிருக்கு பயந்து காட்டிற்குள் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினர். அயோத்தியின் அரச பொறுப்பு யுதஜித் வசம் வந்தது. அவன் தன் படையை அனுப்பி, சுதர்சனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். சுதர்சனும், அவனது தாயாரும் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து, அவர்களை கைது செய்ய யுதஜித் முன்வந்தான். ஆனால் அதற்கு பரத்வாஜ முனிவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரையும் கைது செய்ய நினைத்தான், யுதஜித். அப்போது அவனோடு இருந்த அமைச்சர்கள், “முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல” என்று கூறியதை அடுத்து, தன் நடவடிக்கையை கைவிட்டு, மீண்டும் நாட்டிக்குச் சென்றான்.

    ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை, பரத்வாஜ முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சன், ஒரு கட்டத்தில் தவ நிலைக்குச் சென்றான். அந்த தவத்தால், அவன் முன்பாக தோன்றிய அம்பாள், பல சக்தி வாய்ந்ததும், அழிவில்லாததுமான ஆயுதங்களை அவனுக்கு வழங்கினாள்.

    ஒரு முறை பனாரஸ் என்ற நாட்டின் ஒற்றர்கள், பரத்வாஜ முனிவர் ஆசிரமம் வழியாகச் சென்றபோது, சுதர்சன் பலவிதமான ஆயுதங்களை லாவகமாக கையாள்வதைக் கண்டனர். அது பற்றி பனாரஸ் அரசனிடம் சொல்லி, இளவரசியை சுதர்சனுக்கு மணம் முடிக்கலாம் என்று கூறினர். பனாரஸ் மன்னனும், சுதர்சனை முறைப்படி அழைத்துபேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

    இதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது சுதர்சன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை வெற்றிகொண்டான். போருக்குப்பின் சுதர்சன்- சசிகலா திரு மணம் நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர். இதனால் மகிழ்ந்த பராசக்தி, அவர்கள் முன்பாக தோன்றி, “என்னை வருடந்தோறும் வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் அனைத்தும் மறைந்து, நன்மைகள் நடைபெறும்” என்று கூறி மறைந்தாள்.

    திருமணத்திற்குப்பின், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி அயோத்தியின் அரசனாக சுதர்சன் முடிசூட்டிக்கொண்டு, தன் மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கடைப்பிடித்து வந்தான். இப்படி தோன்றியதுதான் வசந்த நவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
    கொரோனா பரவலால் நேரில் வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில்புதிதாக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, அதிகாரி தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீகாளஹஸ்தி :

    ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் வெகு தொலைவில் இருக்கும் பக்தர்கள் ேநரில் வந்து சாமி தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர்.

    நேரில் வர முடியாத பக்தர்களுக்காக கோவில் அதிகாரிகள் நேற்று முதல் புதிதாக இணையதள சேவையை தொடங்கி உள்ளனர். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதில் கோ பூஜை, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு நடக்கும் குங்குமார்ச்சனை, சகஸ்ர நாமார்ச்சனை, நித்ய கல்யாண உற்சவம், அர்ச்சனை, சொர்ண புஷ்ப அர்ச்சனை, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், மஹன்யாச ருத்ராபிஷேகம் உள்பட ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை ஆகியவற்றை இணையதளம் மூலம் பக்தர்கள் காணலாம்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளை இணையதளம் மூலம் காண விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்யலாம், என கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்தேகங்களுக்கு பக்தர்கள் எண்:08578-222240-யை தொடர்பு கொள்ளலாம்.
    திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
    திருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருப்பூந்துருத்தி என்ற திருத்தலம். இந்த ஊரை அடுத்து திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருவையாறில் இருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்தில் இறங்கலாம்.

    திருஞான சம்பந்தர், வைகைக் கரையோரம் சைவ மதத்தை செழிக்கச் செய்ய ஆவல் கொண்டார். மதுரைச் சாக்கியர்கள் செருக்கோடு, ஞானக் குழந்தையான சம்பந்தரிடம் வாதிட, அந்தக் குழந்தையோ பெரிய பண்டிதனைப் போல எதிர்வாதம் செய்தது. வாதத்தின் வெம்மை தாங்காத சமணக் கூட்டம், சிவநெறி செல்வனாகத் திகழ்ந்த சம்பந்தரின் திருப்பாதத்தில் வீழ்ந்து வணங்கியது. சொக்கனின் பேரருள் மக்களின் மனத்தில் மணம் பரப்பியது.

    ஞான சம்பந்தர் சைவம் மேலும் தழைக்க, தஞ்சை நோக்கி நகர்ந்தார். ஞானக் குழந்தை சம்பந்தர் அழகான முத்துச்சிவிகையில் அமர, அவரை சீரடியார்கள் கூட்டம் போட்டியிட்டுக் கொண்டு சுமந்தது. சம்பந்தரைச் சுமந்ததால் அவர்கள் வல்வினைச் சுமைகள் குறைந்தன. அந்த நேரத்தில் திருஞான சம்பந்தருக்கு, திருநாவக்கரசரைப் பார்த்து தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே “சிவிகையை பூந்துருத்திக்கு திருப்புங்கள்” என்றார்.

    திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.

    அப்போது ஒரு அடியவர் ஓடிவந்து, “அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார்” என்று கூறினார். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசரின் உள்ளம் குளிர்ந்தது.

    “ஞானக் குழந்தை வருவதற்குள் நாம் சென்று எதிர் கொள்வோம் வாருங்கள்” என்று தங்கள் அடியவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

    வெகுதொலைவில் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். திருஞானசம்பந்தர் வெள்ளாம்பிரம்பூரில் உள்ள ஈசனை வணங்கிவிட்டு, பூந்துருத்தி விரைந்தார். அந்த ஊரின் எல்லையில் (சம்பந்தர் மேடு) சென்றபோது, அடியார்களில் அடியாராக அப்பர் சுவாமிகளும், சம்பந்தர் அமர்ந்திருந்த சிவிகையை சுமந்தபடி வந்தார்.

    திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. திருவாலம்பொழில் நெருங்கியதும் திருஞானசம்பந்தர், சீலையை விலக்கி வெளியே பார்த்தார். அப்போது அப்பர் சுவாமிகளின் நினைவு மனதில் எழ, “அப்பர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டார்.

    அப்போது சிவிகையை சுமந்து வந்த அப்பர், தன் தலையை உயர்ந்தி, “இறைவனின் அடியவனாகிய நான், உன் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு பெற்று, இங்கிருக்கிறேன்” என்றார்.

    அதைக்கேட்டு திடுக்கிட்ட சம்பந்தர், உடனடியாக சிவிகையில் இருந்து கீழே குதித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு தொண்டு செய்வதையே பணியாகக் கொண்ட அப்பரின் திருவடியை பற்றுவதற்காக ஓடோடிச் சென்றார். ஆனால் திருஞானசம்பந்தர் பணியும் முன்பாகவே, அவரது அடியைத் தொட்டார், அப்பர். அந்தக் காட்சியைக் கண்ட மற்ற அடியவர்கள் அனைவரும் தரையில் விழுந்து இரண்டு பெரும் அடியார்களையும் வணங்கினார்கள். பின்னர் இருவரும் திருவாலம்பொழில் ஈசனைப் பாடி, திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர். இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் இன்றளவும், திருஆலம்பொழில் திருத்தலத்தில் ‘தோள் கொடுத்த பெருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.
    வாழ்ந்து மறைந்த, பல அறிய செயல்களைச் செய்த 18 சித்தர்கள் பெருமளவில் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அந்த 18 சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பார்க்கலாம்.
    இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பெரும் சித்துக்களையும் பெற்றவர்களை ‘சித்தர்கள்’ என்று அழைத்தார்கள். இந்த பூமியில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இன்றும் பலரும் அறியாத வகையில் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்து மறைந்த, பல அறிய செயல்களைச் செய்த 18 சித்தர்கள் பெருமளவில் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அந்த 18 சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பார்க்கலாம்.

    பதஞ்சலி சித்தர்:- இவர் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பின் மறு பிறப்பாக கருதப்படுபவர். இவர் இந்த பூமியில் 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இவரது ஜீவ சமாதி ராமேஸ்வரத்தில் இருக்கிறது.

    அகத்தியர்:- புராணங்களில் ‘குறுமுனி’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானிடம் இருந்து தமிழைக் கற்றிந்து, அந்த தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் இவர். அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதி, பல இலக்கண நூல்களுக்கு வழிகாட்டியவர். இவர் 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இவருக்கான ஜீவ சமாதி பாபநாசத்தில் இருக்கிறது.

    கமலமுனி:- நான்முகனான பிரம்மதேவரே, கமலமுனியாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது. போகரிடம் சீடராக இருந்தவர் என்று இவர் அறியப்படுகிறார். கமலமுனி முந்நூறு, ரேகை சாஸ்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் 4,000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். இவருக்கு திருவாரூரில் ஜீவ சமாதி உள்ளது.

    திருமூலர்:- ‘திருமந்திரம்’ என்னும் சிறப்புமிக்க பாடல்களை இயற்றியவர். தவிர சேக்கிழார் தொகுத்து வழங்கிய 63 நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்குபவர். இவர் 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். இவருக்கு சிதம்பரத்தில் ஜீவ சமாதி உள்ளது.

    குதம்பை சித்தர்:- பெண்கள் தங்களுடைய காதுகளில் அணியும் வளையத்தை ‘குதம்பை’ என்பார்கள். குதம்பை அணிந்த பெண்களை, ‘குதம்பாய்’ என்று வர்ணிப்பதுண்டு. தனனுடைய பாடல்களில் ‘குதம் பாய்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் இவர் ‘குதம்பை’ சித்தர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் குழப்பும் (சொதப்பும்) மனதையே இந்த சித்தர் ‘குதம்பாய்’ என்று பாடியதாகவும் சொல்கிறார்கள். இவர் 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் இவருக்கு ஜீவ சமாதி உள்ளது.

    கோரக்கர்:- இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. இவர், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாத சைவத்தை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இவர் 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் இவர் சமாதியானார்.

    தன்வந்திரி:- இவர் மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் முதல் சித்தரான நந்தீசரிடம் சீடராக இருந்து கலைகளைக் கற்றவர். இவர் தன்வந்திரி பகவான் என்று வழிபடப்படுகிறார். இவர் 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். இவருக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி உள்ளது.

    சுந்தரானந்தர்:- அழகான தோற்றம் கொண்டதால் இந்த பெயர் பெற்றார். இவருக்கு வல்லப சித்தர் என்ற பெயரும் உண்டு. இவர் சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு அவருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சித்தர் இவர். 800 வருடம் 28 நாள் வாழ்ந்த இவர், மதுரையில் ஜீவ சமாதி அடைந்தார்.

    கொங்கணர்:- போக ரிடம் சீடராக இருந்தவர். இவர் அம்பாளின் தீவிர பக்தராக இருந்திருக்கிறார். இவர் 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் இவருக்கு ஜீவ சமாதி இருக்கிறது.

    சட்டை முனி:- இவ ரும் போகரின் சீடராகவே அறியப்படுகிறார். பல நூல்களை இயற்றியிருக்கிறார். போகர் காலத்தில் வாழ்ந்த கொங்கணர், கருவூரார் ஆகியோருடன் தொடர்பு கொண்டவர். இவர் 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் இவருக்கு ஜீவ சமாதி உள்ளது.

    வான்மீகர்:- போக முனிவர், இவரைப் பற்றியும் பாடியிருப்பதால், இவர் 18 சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ராமாயணத்தை எழுதியவரே இவர் என்றும் சிலர் சொல்கிறார்கள். 700 வருடம் 32 நாள் வாழ்ந்த இவர், எட்டுக்குடியில் ஜீவ சமாதி ஆனார்.

    ராமதேவர்:- புலத்தியரிடம் சீடராக இருந்த இவர், 700 வருடம் 6 நாள் வாழ்ந்தார். இவருக்கு அழகர்மலையில் ஜீவ சமாதி இருக்கிறது.

    நந்தீஸ்வரர்:- இவர் கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் ஈசனின் பெரும் அருளைப் பெற்றவர். இவரே முதன்மை சித்தராக அறியப்படுகிறார். இவர் 700 வருடம் 3 நாள் வாழ்ந்தார். இவருக்கு காசியில் ஜீவ சமாதி உள்ளது.

    இடைக்காடர்:- இவர் கொங்கணரின் சீடர் என்று கருதப்படுகிறது. இவர் இடையர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இடைக்காடு என்ற இடத்தில் பிறந்ததாலும் ‘இடைக்காடு சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். இவர் 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணாமலையில் இவருக்கு ஜீவசமாதி இருக்கிறது.

    மச்சமுனி:- இவர் காகபுசுண்டரின் சீடர். சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற பார்வதி, கண் அயர்ந்து விட்டார். அப்போது அதைக் கேட்ட மீன் ஒன்று பூமியில் ஞானத்தோடு பிறந்ததாகவும், அவரே மச்சமுனி என்றும் சொல்லப்படுகிறது. இவர் 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

    கருவூரார்:- கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். இவர் போகரின் சம காலத்தவர். இவர் கருவூரார் பூசாவிதி என்ற நூலை இயற்றியுள்ளார். 300 வருடம் 42 நாள் வாழ்ந்த இவர், கரூரில் ஜீவசமாதி ஆனார்.

    போகர்: சித்துக்களில் சிறந்தவராக இருந்தவர். பழனி மலை முருகப்பெருமானின் சிலையை, நவபாஷாணம் கொண்டு செய்தவர் இவர். இவர் 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

    பாம்பாட்டி சித்தர்:- பாம்புகளைக் கையாளுவதில் சிறந்தவர். யோக நெறியில் ‘குண்டலினி’ என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவர். குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் சிலர் சொல்வார்கள். இவர் 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். இவருக்கு சங்கரன்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.
    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புக்குரியதும், லீலைகள் பலவற்றால் பக்தர்களை கட்டிப்போடும் திறம்கொண்டதுமாக உள்ளது ‘கிருஷ்ணர்’ அவதாரம் ஆகும்.
    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புக்குரியதும், லீலைகள் பலவற்றால் பக்தர்களை கட்டிப்போடும் திறம்கொண்டதுமாக உள்ளது ‘கிருஷ்ணர்’ அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தின் போது, கிருஷ்ண பகவான் மூன்று பேருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். ஒன்று அஸ்தினாபுரத்தில் உள்ள துரியோதனன் சபைக்கு சென்றபோது, கண் பார்வைற்ற திருதிராஷ்டிரனுக்கு ஒரு கணம் கண் பார்வையைக் கொடுத்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை காட்டியருளினார். பின்னர் குருசேத்திர களத்தில் வைத்து, அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்தபோது, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அதன் பிறகு, அம்புகள் தைக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கர்ணனுக்கு, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அருளினார்.

    ஆனால் உண்மையிலேயே இவர்கள் மூவர் கண்டதை விட மிகப்பெரிய விஸ்வரூப தரிசனத்தைப் பெற்றவர், யசோதைதான். அதுபற்றி அர்ச்சுனனிடம், கிருஷ்ணர் கூறியதை இங்கே பார்ப்போம்.

    ஒரு முறை அர்ச்சுனனுக்கு கர்வம் உண்டானது. ‘மகா விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தையே நாம் பார்த்துவிட்டோம். நம்மை விட பேறு பெற்றவர்கள் இந்த பூமியில் எவரும் இல்லை’ என்று நினைத்தான். இதனை அறிந்த கிருஷ்ணர், “அர்ச்சுனா.. நீ என்னுடைய விஸ்வரூபமாக தரிசித்த அளவு, மிகவும் சாதாரணமானதுதான். அதை எண்ணி பெருமைப்பட ஒன்றுமே இல்லை” என்றார்.

    அதைக் கேட்ட அர்ச்சுனன் திகைத்துப் போனான். “என்ன சொல்கிறாய் கிருஷ்ணா. அப்படியானால் இதைவிட பெரிய விஸ்வரூப தரிசனத்தை நீ காட்டியிருக்கிறாயா? அதைக் கண்ட பாக்கியசாலி யார்?” என்று கேட்டான்.

    உடனே கிருஷ்ணர், “என்னை பாசத்தோடு வளர்த்து வந்த யசோதைதான், அந்த பாக்கியசாலி. சிறு குழந்தையாக இருந்தபோது, ஒரு முறை நான் மண்ணைத் தின்றேன். அதுபற்றி என்னுடைய நண்பர்கள், தாயார் யசோதையிடம் கூறிவிட்டனர். கோபத்தோடு என்னிடம் வந்த அவர், என்னுடைய வாயைத் திறந்து காட்டும்படி கூறினார். நான் மறுக்க வேண்டும் என்று நினைத்தாலும், அந்த தாய் என் மீது கொண்ட அன்புக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன் என்பதால், என்னுடைய வாயைத் திறந்து காட்டினேன். அதில் இந்த பூமி, அதில் வசிக்கும் தாவரம், விலங்கு, மனிதர்கள், பூச்சிகள், அதைத் தாண்டி உள்ள அண்டசராசரங்கள், பரந்த வெளி உள்ளிட்ட அனைத்தும் தென்பட்டன. அவர் கண்ட காட்சி விரைவிலேயே அவர் நினைவை விட்டு மறந்துபோகும்படி நான் செய்துவிட்டாலும், அவர் கண்ட அந்த தரிசனத்தை இதுவரை எவரும் கண்டதில்லை.

    நீ, என்னுடைய விஸ்வரூபமாகக் கண்டது, இந்த பூமியில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக அடங்கிப்போன ஒரு சாதாரண உருவத்தைத்தான். ஆனால் யசோதை கண்டதோ, நீ கண்ட சாதாரண உருவத்தையும் உள்ளடக்கிய இந்த பூமியையும், மற்றபிற அண்ட சராசரங்களையும் ஆகும். எனவே அவர் கண்டதே மிகப்பெரிய விஸ்வரூபம்” என்றார்.

    உண்மையும் அதுதான். யசோதயை விடவும் மிகப்பெரிய பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது. ஒரு தாயாக, மகனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைத்தாள் யசோதை. ஒரு மகனாக, அந்த தாய்க்கு கட்டுப்பட்டு நடப்பதாக நடித்தார் கிருஷ்ணர். இது எதுவுமே தெரியாமல் போனாலும் கூட யசோதை என்பவள், மகாபாரதத்தைப் பொறுத்தவரை பாக்கியம் செய்த ஒரு பெண்.
    சுவாமி ஐயப்பனின் கோவிலில் உள்ள இந்த 18 படிகளும் மிகப்பெரிய தத்துவத்தை சுமந்து நிற்பதாக நம்பப்படுகிறது. இந்த பதினெட்டு படிகளும், ஐயப்பனின் 18 படைக் கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    சபரிமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது அங்கு அற்புதமாக வீற்றிருக்கும் ஐயப்பன் தான். இவரைக் காணச் செல்பவர்களில், மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் மட்டுமே, புனிதம்மிக்க 18 படிகளின் வழியாக நடந்து சென்று ஐயப்பனை தரிசிக்க முடியும். மாலை அணிந்து விரதம் இருக்காதவர்கள், வேறு பாதையில் விடப்படுவார்கள். சுவாமி ஐயப்பனின் கோவிலில் உள்ள இந்த 18 படிகளும் மிகப்பெரிய தத்துவத்தை சுமந்து நிற்பதாக நம்பப்படுகிறது.

    இந்த பதினெட்டு படிகளும், ஐயப்பனின் 18 படைக் கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகியவையே அந்த 18 கருவிகள் ஆகும்.

    மேலும் இந்த 18 படிகளையும், ஐந்து இந்திரியங்கள், ஐம் புலன்கள், ஐந்து கோசங்கள், மூன்று குணங்கள் என்று பிரித்திருக்கிறார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, கை-கால்கள் ஆகியவை ‘பஞ்சேந்திரியம்’ எனப்படுகிறது. பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் ஆகிய ஐந்தும் ‘ஐம் புலன்கள்’ என்றும், அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச கோசங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவை மூன்று குணங்களாகும். இந்த பதினெட்டையும் பயன்படுத்தியோ, அல்லது வெற்றிகொண்டோ வாழ்வதற்கு, ஐயப்பனின் 18 படிகளையும் ஏறி அவனை வழிபட வேண்டும்.

    இது தவிர 18 படிகளையும், மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர, ஸத்ய, தாமஸ, ராஜஸ ஆகிய 18 குணங்களோடும் ஒப்பிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்தால்தான் நாம் இறைவனை தரிசிக்க முடியும்.

    அதோடு சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றியுள்ள, 18 மலை தெய்வங்களைக் குறிப்பதுதான் பதினெட்டு படிகள் என்றும் கூறுகிறார்கள். அந்த பதினெட்டு தெய்வங்களையும் இங்கே பார்க்கலாம்.

    ஒன்றாம் திருப்படி : சூரியன்

    இரண்டாம் திருப்படி : சிவன்

    மூன்றாம் திருப்படி : சந்திரன்

    நான்காம் திருப்படி : பராசக்தி

    ஐந்தாம் திருப்படி : அங்காரகன்

    ஆறாம் திருப்படி : முருகன்

    ஏழாம் திருப்படி : புதன்

    எட்டாம் திருப்படி : விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி : வியாழன் என்னும் குரு

    பத்தாம் திருப்படி : பிரம்மா

    பதினொராம் திருப்படி : சுக்ரன்

    பனிரெண்டாம் திருப்படி : லட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி : சனி

    பதிநான்காம் திருப்படி : எமதர்மராஜன்

    பதினைந்தாம் திருப்படி : ராகு

    பதினாறாம் திருப்படி : சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி : கேது

    பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

    இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பது, ஒற்றை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டைப் படையில் தெய்வக் குடும்பங்களும் வாசம் செய்கின்றனர். இதனால்தான், சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் முறையாக செய்யப்பட்டு வருகின்றன.
    பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவராக, காளமேகப் புலவர் கருதப்படுகிறார். இவரை ‘ஆசுகவி’ என்றும் அழைப்பார்கள். ‘ஆசுகவி’ என்பதற்கு, ‘கொடுத்த ஓரிரு வார்த்தையைக் கொண்டு மறுநொடியே கவி இயற்றும் திறன் படைத்தவர்’ என்று பொருள்.
    பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவராக, காளமேகப் புலவர் கருதப்படுகிறார். இவர் பிறந்தது வைணவ மதம் என்றாலும், பருவ வயதில், திருவானைக்கா திருத்தலத்தில் இருந்த ஒரு பெண்ணின் மீது கொண்ட ஈர்ப்பால் சைவ மதத்தைத் தழுவினார். அதன்பிறகு சைவ சமயத்தின் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். சமயம் சார்ந்த பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் சிலேடைப் பாடல்களும், நகைச்சுவை பாடல்களும் பாடுவதில் வல்லவர். இவரை ‘ஆசுகவி’ என்றும் அழைப்பார்கள். ‘ஆசுகவி’ என்பதற்கு, ‘கொடுத்த ஓரிரு வார்த்தையைக் கொண்டு மறுநொடியே கவி இயற்றும் திறன் படைத்தவர்’ என்று பொருள்.

    அப்படிப்பட்ட காளமேகப் புலவரை ஒருவர் சந்தித்தார். அவர் காளமேகப்புலவரிடம் கொஞ்சம் விதண்டாவாதம் செய்வதற்காகவே வந்திருந்தார். காளமேகப் புலவரைப் பார்த்து, “ஐயா.. நீங்கள் பெரிய புலவர் என்று பலரும் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?” என்றார்.

    “நான் ஓரளவு கவி இயற்றுவதைக் கொண்டு சிலர் அப்படி உங்களிடம் சொல்லியிருக்கலாம்.. இருந்தாலும் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்றார், காளமேகப் புலவர்.

    உடனே அந்த நபர், “நீங்கள் பெரிய புலமை பெற்றவர் என்றால், முருகப்பெருமானைப் புகழ்ந்து உங்களால் பாட முடியுமா?” என்றார்.

    காளமேகப் புலவரோ, “முருகனின் அருளால் அது என்னால் முடியும். வேல் என்ற வார்த்தையைக் கொண்டு பாடவா? அல்லது மயில் என்ற வார்த்தையை வைத்துப் பாடவா?” என்று கேட்டார்.

    அதற்கு அந்த நபர், “வேலிலும் தொடங்க வேண்டாம்.. மயிலைக் கொண்டும் தொடங்க வேண்டாம். ‘செருப்பு’ என்ற வார்த்தையில் தொடங்கி, ‘விளக்கமாறு’ என்ற வார்த்தையில் முடியுங்கள் பார்ப்போம்” என்றார்.

    ‘காலில் அணிவது செருப்பு, வீட்டை சுத்தமாக்க பயன்படுவது விளக்கமாறு, இந்த இரண்டையும் வைத்து எப்படிப் பாடுவது?’ என்று காளமேகப் புலவர் தவித்துப் போவார் என, அந்த நபர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறாக இருந்தது.

    ‘செருப்புக்கு வீரர்களை

    சென்றுழக்கும் வேலன்

    பொருப்புக்கு நாயகனை

    புல்ல- மருப்புக்கு

    தண்தேன் பொழிந்த

    திரு தாமரைமேல் வீற்றிருக்கும்

    வண்டே விளக்குமாறே’

    என்று அந்த நபர் கொடுத்த வார்த்தைகளை வைத்தே, தன்னுடைய பாடலை பாடி முடித்தார், காளமேகப் புலவர்.

    ‘செரு’ என்றால் ‘போர்க்களம்’ என்று அர்த்தம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும். அப்படி ‘போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு உன்னைக் கேட்கிறேன்’ என்ற பொருளில் பாடி முடித்தார். ‘விளக்குமாறு’ என்பதற்கு ‘விளக்கம் சொல்லுமாறு’ என்றும் பொருள் கொள்ளலாம்.

    காளமேகப்புலவர் பாடிய பாடலையும், அதற்கான அர்த்தத்தையும் அறிந்து நெகிழ்ந்து போனார், அந்த நபர்.
    பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
    நவக்கிரகங்கள், உலக இயக்கத்திற்கு அடிகோலுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த நவக்கிரகங்களில் தலைமை கிரகமாக இருப்பவர், சூரியன். இவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. சூரியன், ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என்று, 12 மாதங்களும் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்கிறது. அதன்படி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கு முதல் நாளே சித்திரை மாத பிறப்பாக உள்ளது. ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரையை முதன்மை படுத்தியே, தமிழ் வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்கும் முதல் நாளை, ‘சித்திரை விஷூ’ என்றும் அழைப்பார்கள். ‘விஷூ’ என்பதற்கு ‘இரவும் பகலும் சமமானது’ என்று பொருள். சித்திரை மாதத்தில்தான் முக்கனிகளில் ஒன்றான மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதே போல் இறைசக்தி கொண்டதாக கருதப்படும் வேப்ப மரத்திலும் பூக்கள் பூக்கத் தொடங்கும். இப்படி இனிப்பும், கசப்பும் கொண்ட மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் பூப்பது போலவே, மனித வாழ்விலும் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்துதான் வரும். அதை சந்தித்து சமாளிப்பதற்குத்தான் இறைவழிபாடு நமக்கு உதவி செய்கிறது. சித்திரை வருடப்பிறப்பு நாளில், இறைவனை நம் மனதாலும், மெய்யாலும் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் அந்த வருடத்தில் நாம் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களும், தங்கு தடையின்றி நிறைவேறும். அதோடு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பிறவி துன்பம் நீங்கும்.

    சித்திரை மாதம் முதல் நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ‘மருந்து நீர்’ கொண்டு நீராடுவார்கள். பின்னர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மனதார வணங்க வேண்டும். அதோடு ஆதரவற்றவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும், இயலாதவர்களுக்கும் தான தர்மங்களைச் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்வதால், நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது நமக்கு பிரகாசம் நிறைந்த வாழ்வை அருளும்.

    சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.

    பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
    கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி, திருமலை, திருச்சானூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சுப்ர பாதம், காலை 6 மணியில் இருந்து காாலை 8.30 மணிவரை சகஸ்ரமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது.

    காலை 8.30 மணியில் இருந்து பகல் 11 மணிவரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கல்யாண உற்சவம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பிரேக் தரிசனம், மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.45 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    மாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இலவச தரிசனம், மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 7.15 மணிவரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.

    வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 5 மணி வரை சுப்ரபாதம், காலை 5 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சஹஸ்ரநாமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது. காலை 6.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை மூலவருக்கு அபிஷேகம், காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அலங்காரம், காலை 9 மணியில் இருந்து பகல் 11.30 மணிவரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை மூலவருக்கு கல்யாண உற்சவம், காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரேக் தரிசனம். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இலவச தரிசனம், மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம், மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அலங்காரம், மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணியளவில் ஏகாந்த சேவை, கோவில் நடைசாத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க ேவண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
    சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.[தந்தை..... மகன்......] அகிலம் ஆளும் இறைவனின் பேரன்பால், தம் ஒரே மகனையே மனுகுலத்திற்கு கையளித்து ,அந்த ஒரே மகன் நம் பாவங்களால் பாரச்சிலுவை சுமந்து, சிலுவையில் அறையுண்டு, கல்லறையில் அடக்கப்பட்டு, காவல் காக்கப்பட்ட இயேசு, இன்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.

    அவரது பாடுகளில் பங்கேற்று, அவரது துன்பத்தில் துணை நின்ற நாம்,அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகிறோம்.இயேசுவின் உயிர்ப்பு நம்மை புது வாழ்வு வாழ அழைக்கின்றது. புதிய மாற்றத்திற்கு வழிகாட்டுகிறது, புதிதாய் பிறக்கத் தூண்டுகிறது. உலக வரலாற்றில் கல்லறைக்கு காவல் காத்ததும், காலியான கல்லறை எனப் பெயர் பெற்றதும் இயேசுவின் கல்லறை மட்டும் தான்.

    இன்று மகிழ்ச்சியின் நாள், வெற்றியின் நாள்,நம் அனைவருக்கும் புதுமையின் நாள்,தன் மகனின் பாடுகளோடு ஒன்றித்து, வியாகுலத்தின் தாயாக விளங்கிய நம் அன்னை இன்று தம் மகனின் உயிர்ப்பால் வெற்றியின் அரசியாக திகழ்கிறாள் தம் மகனின் உயிர்ப்பில் மகிழ்ந்து அக்களிப்பு கொள்கிறாள். தனக்கு நிகழ்ந்த வியாகுலத்தை, துன்பத்தை, துயரத்தை, துணிந்து ஏற்று, அதை மீட்பின் கருவியாக மாற்றிய நம் அன்னையின் துணிவைப் போற்றுவோம்.

    தம் மகனின் பணியில் மட்டுமல்ல், பாடுகளிலும் இறுதிவரை உடனிருந்து, மனுக்குல மீட்புக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்த அன்னைமரியாள், இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்று, வானக அரசியாகத் திகழ்கிறாள்.இத்தகைய நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி, மங்கள திலகமிட்டு, மலர்தூவி வாழ்த்துவோம். [பாடல் . வானக அரசியே] வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் , நறுமணப்பொருட்களுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

    அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இயேசுவை காணவில்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்த போது வானதூதர் அவர்களிடம் " திகிழுற வேண்டாம். அவர் சொன்னது போல் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். இயேசு தம் சீடருக்கு காட்சி கொடுத்த போதும் சொல்லுகின்ற முதல் வார்த்தை `அஞ்சாதீர்கள்' என்பது தான். வானதூதரும், இயேசுவும் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள் பயத்திலிருந்து விலகி, அஞ்சா நெஞ்சத்தினராய் அகிலமெகும் சென்று, ஆர்வத்துடனும் , ஆற்றலுடனும் இயேசுவைப் பற்றி போதித்தார்கள்.

    இயேசு தம் சீடருக்குச் சொன்ன அதே வார்த்தைகளை , இன்று நமக்கும் சொல்கிறார். நமது வாழ்க்கை நிகழ்வுகளில் அச்சத்தை தவிர்த்து துணிவுடன் வாழ அழைக்கிறார்.தீமைக்கு அஞ்சுவோம், நன்மையை துணிந்து செய்வோம். நன்மைக்கும், தீமைக்கும் ஏற்படுகின்ற போட்டியில் கடைசியில் வெல்வது என்னவோ நன்மைதான். நன்மைதான் வெற்றி பெறும் என்பதை இயேசு தம் உயிர்ப்பால் இந்த உலகிற்கு எடுத்துரைக்கிறார்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.வானதூதர் கல்லறைக்கு வந்த பெண்களிடமும் , சீடர்களிடமும் `சொல்லுங்கள் ` என்று சொல்கிறார். இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்லி ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்குகிறார்கள்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் நாம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாய்ப் பெருவோம். [பாடல்] அரசன் ஒருவன் எல்லா நிலையிலும் , இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும் , சாவிலும் சிரிப்பிலும் , அழுகையிலும், வளமையிலும் , வறுமையிலும் பயன்படும் ஒரு மந்திரத்தை கண்டு பிடிக்க நினைக்கிறார். அவரது கேள்விகளுக்கு பதிலாக புத்தர் கண்டுபிடித்ததுதான் 'இந்த நிலையும் கடந்து போகும்.

    ' இயேசுவுக்குத் தெரிந்தது எல்லாம் கடந்து என்று. ஓசன்னா கடந்து விடும் , குருத்தோலைகள் கடந்து விடும் , கெத்சமணி கடந்து விடும் , பிலாத்தின் அரண்மனை கடந்து விடும் , ஏரோதின் மாளிகை கடந்து விடும் , சிலுவைப்பாடுகள் கடந்து விடும் , எல்லாம் கடந்து விடும் , இறப்பும் கடந்து விடும் என்று. இறப்பைக் கடத்தியது இயேசுவின் உயிர்ப்பு. நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற அத்தனை நிகழ்வுகளும் நம்மைவிட்டு கடந்து விடும் என்பதை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    இயேசு கிறிஸ்து சாவை வென்று உயிர்த்து விட்டார்.தீமையை வென்று இவ்வுலகத்தை நன்மையால் நிரப்பியுள்ளார். இருளிலிருந்து நமமை ஒளிக்கு அழைத்து வந்திருக்கிறார், பாஸ்கா ஒளி நம்மிடத்திலுள்ள இருளை அழித்து, புது வாழ்வைத் தர ,இயேசுவின் ஒளியில் நமது பயணம் தொடர , அருள் வேண்டி நம் கையிலிருக்கும் ஒளியை இறைப்பதம் அர்ப்பணிப்போம். (பரலோகத்தில்)
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
    ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் சிவகாமி அம்மன் மற்றும் நடராஜருக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனையில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    ×