search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    18 சித்தர்
    X
    18 சித்தர்

    18 சித்தர்களும்.. ஜீவ சமாதியும்..

    வாழ்ந்து மறைந்த, பல அறிய செயல்களைச் செய்த 18 சித்தர்கள் பெருமளவில் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அந்த 18 சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பார்க்கலாம்.
    இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பெரும் சித்துக்களையும் பெற்றவர்களை ‘சித்தர்கள்’ என்று அழைத்தார்கள். இந்த பூமியில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இன்றும் பலரும் அறியாத வகையில் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்து மறைந்த, பல அறிய செயல்களைச் செய்த 18 சித்தர்கள் பெருமளவில் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அந்த 18 சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பார்க்கலாம்.

    பதஞ்சலி சித்தர்:- இவர் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பின் மறு பிறப்பாக கருதப்படுபவர். இவர் இந்த பூமியில் 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இவரது ஜீவ சமாதி ராமேஸ்வரத்தில் இருக்கிறது.

    அகத்தியர்:- புராணங்களில் ‘குறுமுனி’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானிடம் இருந்து தமிழைக் கற்றிந்து, அந்த தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் இவர். அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதி, பல இலக்கண நூல்களுக்கு வழிகாட்டியவர். இவர் 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இவருக்கான ஜீவ சமாதி பாபநாசத்தில் இருக்கிறது.

    கமலமுனி:- நான்முகனான பிரம்மதேவரே, கமலமுனியாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது. போகரிடம் சீடராக இருந்தவர் என்று இவர் அறியப்படுகிறார். கமலமுனி முந்நூறு, ரேகை சாஸ்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் 4,000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். இவருக்கு திருவாரூரில் ஜீவ சமாதி உள்ளது.

    திருமூலர்:- ‘திருமந்திரம்’ என்னும் சிறப்புமிக்க பாடல்களை இயற்றியவர். தவிர சேக்கிழார் தொகுத்து வழங்கிய 63 நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்குபவர். இவர் 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். இவருக்கு சிதம்பரத்தில் ஜீவ சமாதி உள்ளது.

    குதம்பை சித்தர்:- பெண்கள் தங்களுடைய காதுகளில் அணியும் வளையத்தை ‘குதம்பை’ என்பார்கள். குதம்பை அணிந்த பெண்களை, ‘குதம்பாய்’ என்று வர்ணிப்பதுண்டு. தனனுடைய பாடல்களில் ‘குதம் பாய்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் இவர் ‘குதம்பை’ சித்தர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் குழப்பும் (சொதப்பும்) மனதையே இந்த சித்தர் ‘குதம்பாய்’ என்று பாடியதாகவும் சொல்கிறார்கள். இவர் 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் இவருக்கு ஜீவ சமாதி உள்ளது.

    கோரக்கர்:- இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. இவர், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாத சைவத்தை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இவர் 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் இவர் சமாதியானார்.

    தன்வந்திரி:- இவர் மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் முதல் சித்தரான நந்தீசரிடம் சீடராக இருந்து கலைகளைக் கற்றவர். இவர் தன்வந்திரி பகவான் என்று வழிபடப்படுகிறார். இவர் 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். இவருக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி உள்ளது.

    சுந்தரானந்தர்:- அழகான தோற்றம் கொண்டதால் இந்த பெயர் பெற்றார். இவருக்கு வல்லப சித்தர் என்ற பெயரும் உண்டு. இவர் சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு அவருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சித்தர் இவர். 800 வருடம் 28 நாள் வாழ்ந்த இவர், மதுரையில் ஜீவ சமாதி அடைந்தார்.

    கொங்கணர்:- போக ரிடம் சீடராக இருந்தவர். இவர் அம்பாளின் தீவிர பக்தராக இருந்திருக்கிறார். இவர் 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் இவருக்கு ஜீவ சமாதி இருக்கிறது.

    சட்டை முனி:- இவ ரும் போகரின் சீடராகவே அறியப்படுகிறார். பல நூல்களை இயற்றியிருக்கிறார். போகர் காலத்தில் வாழ்ந்த கொங்கணர், கருவூரார் ஆகியோருடன் தொடர்பு கொண்டவர். இவர் 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் இவருக்கு ஜீவ சமாதி உள்ளது.

    வான்மீகர்:- போக முனிவர், இவரைப் பற்றியும் பாடியிருப்பதால், இவர் 18 சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ராமாயணத்தை எழுதியவரே இவர் என்றும் சிலர் சொல்கிறார்கள். 700 வருடம் 32 நாள் வாழ்ந்த இவர், எட்டுக்குடியில் ஜீவ சமாதி ஆனார்.

    ராமதேவர்:- புலத்தியரிடம் சீடராக இருந்த இவர், 700 வருடம் 6 நாள் வாழ்ந்தார். இவருக்கு அழகர்மலையில் ஜீவ சமாதி இருக்கிறது.

    நந்தீஸ்வரர்:- இவர் கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் ஈசனின் பெரும் அருளைப் பெற்றவர். இவரே முதன்மை சித்தராக அறியப்படுகிறார். இவர் 700 வருடம் 3 நாள் வாழ்ந்தார். இவருக்கு காசியில் ஜீவ சமாதி உள்ளது.

    இடைக்காடர்:- இவர் கொங்கணரின் சீடர் என்று கருதப்படுகிறது. இவர் இடையர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இடைக்காடு என்ற இடத்தில் பிறந்ததாலும் ‘இடைக்காடு சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். இவர் 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணாமலையில் இவருக்கு ஜீவசமாதி இருக்கிறது.

    மச்சமுனி:- இவர் காகபுசுண்டரின் சீடர். சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற பார்வதி, கண் அயர்ந்து விட்டார். அப்போது அதைக் கேட்ட மீன் ஒன்று பூமியில் ஞானத்தோடு பிறந்ததாகவும், அவரே மச்சமுனி என்றும் சொல்லப்படுகிறது. இவர் 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

    கருவூரார்:- கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். இவர் போகரின் சம காலத்தவர். இவர் கருவூரார் பூசாவிதி என்ற நூலை இயற்றியுள்ளார். 300 வருடம் 42 நாள் வாழ்ந்த இவர், கரூரில் ஜீவசமாதி ஆனார்.

    போகர்: சித்துக்களில் சிறந்தவராக இருந்தவர். பழனி மலை முருகப்பெருமானின் சிலையை, நவபாஷாணம் கொண்டு செய்தவர் இவர். இவர் 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

    பாம்பாட்டி சித்தர்:- பாம்புகளைக் கையாளுவதில் சிறந்தவர். யோக நெறியில் ‘குண்டலினி’ என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவர். குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் சிலர் சொல்வார்கள். இவர் 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். இவருக்கு சங்கரன்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.
    Next Story
    ×