என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
    னித ரமலானுக்கு ‘ஷஹ்ருத் துஹூர்’- தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இஸ்லாம் ஐந்து பெரும் கடமைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை: 1) கலிமா, 2) தொழுகை, 3) நோன்பு, 4) ஜகாத், 5) ஹஜ். இவை ஒவ்வொன்றுமே அதில் ஈடுபடக்கூடியவரை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கும், அதன் மூலம் அவர் வாழ்வில் நன்மைகளும், மேன்மைகளும் பெறுவார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அதுபற்றி காண்போம்.

    கலிமா: ஒருவர் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினால், அவரின் முந்தைய அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு அவர் பரிசுத்தம் அடைகிறார்.

    ‘என் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையின்படி நான் இஸ்லாத்தை ஏற்றபோது, அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் முந்தைய பாவங்களை அழித்துவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    தொழுகை: ஒருவர் ஐந்துவேளைத் தொழும் போதும் அவரும் பாவ அழுக்கில் இருந்து விடுபட்டு தூய்மை அடைகிறார்.

    ‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக்கூறுங்கள்?’ என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐந்து வேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

    (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ஜகாத்: இதன் பொருள் ‘வளர்தல், தூய்மைப்படுத்துதல்’ என்பதாகும். ஒருவர் தமது நிதியில் இருந்து ஜகாத்தை ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் அவர் உலோபித்தனத்தில் இருந்தும், பாவத்திலிருந்தும் தூய்மை பெறுகிறார். தானம் செய்ததால் அவரின் செல்வமும் வளர்ச்சி அடைகிறது.

    ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து (கடமையான) தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
    தூய்மையாக்குவீராக!’ (திருக்குர்ஆன் 9:103)

    ஹஜ்: ‘ஹஜ்ஜூம் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ருபின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    நோன்பு: ‘நோன்பு (பாவ அழுக்கிலிருந்து) காக்கும் ஒரு கேடயம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி).

    தண்ணீர் எவ்வாறு உடலின் அழுக்கையும், உடையின் அழுக்கையும் நீக்கி சுத்தப்படுத்துகிறதோ, அவ்வாறே நோன்பும் உள்ளத்தின் அழுக்கையும், புறஉறுப்புகளின் அழுக்கையும் நீக்கி நோன்பாளியை தூய்மையாக்கி மேன்மை யான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால்தான் ரமலானுக்கு
    தூய்மைப்படுத்தும் மாதம் எனும் தத்துவப்பெயரும் ஏற்படக் காரணமாகி விட்டது.

    உடல் சுத்தமும், உள்ள சுத்தமும் ஏற்படுவதினால் உடல் ரீதியான ஆரோக்கியமும், மனவலிமையும், நீண்ட ஆயுளும் கிடைத்து விடுகிறது.

    நோன்பினால் சுத்தம் பெறுவோம், சுத்தம் அடைவதால் ஆரோக்கியம் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ரமலான் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

    ஷவ்வால் மாத பிறை நேற்று (புதன்கிழமை) தென்படவில்லை. எனவே ரமலான் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 31-ந் தேதி முதல் மே 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சித்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றுப்பரவல் 3 ஆயிரத்தை கடந்து வருகிறது. திருப்பதியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மட்டுமே பஸ் மற்றும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.

    திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத சூழல் நிலவி வருகிறது.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

    பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 2,141 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1,005 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.17 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, மன்னார்குடி. இங்கு ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள். 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார்.

    இந்த ஆலய மூலவரின் திருநாமம், ‘வாமதேவப் பெருமாள்.’ உற்சவரின் திருநாமம்தான் ‘ராஜகோபால சுவாமி.’ தாயாரின் திருநாமம் ‘செங்கமலத் தாயார்’ என்பதாகும். மேலும் செண்பகலட்சுமி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டா பத்தினி, ஹேமாம்புஜ நாயகி போன்ற பெயர்களிலும் தாயாரை அழைக்கிறார்கள். ஆலய உற்சவரின் பெயரில்தான் இந்த ஆலயம் விளங்குகிறது.

    தல வரலாறு

    கிருஷ்ண அவதாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்ற இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்கள் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் இரு முனிவர்களையும் சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர்.

    அவர்களை ஆறுதல்படுத்திய நாரதர், இருவரையும் கிருஷ்ணனை நினைத்து தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார்.

    பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. இந்தக் கோவில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது. இத்தல உற்சவர் சிலை, வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது.

    இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் நுழைவு வாசலில் மழை நீர் சேகரிப்பதற் காக பெரிய தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன.

    இத்தல மூலவர் 12 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்திருக்கிறார்.

    இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

    இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ‘ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ‘சென்பகாரண்யா ஷேத்திரம்’ எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் ‘ராஜமன்னார்குடி’ என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் ‘மன்னார்கோவில்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது

    இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடையாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார்.

    அமைவிடம்

    திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
    கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதற்கு சில சாஸ்திர காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    “ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம்
    கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.”

    - என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள்.

    பூஜை நடக்கும் இடத்திலிருந்து அசுரத்தனமான தீய சக்திகள் விலகிச் செல்லவும், பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை ஆவாஹனம் செய்வதற்குத் துணையாக சுபத்தினைத் தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதற்காக இந்த மணியினை அடிக்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

    மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச் செல்கின்றன.மணியோசை ஒலிக்கும்போது அங்கே இறை சாந்நித்யம் வந்து சேர்ந்துவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
    ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் உள்ள வடிவங்களே மிக அதிக அளவில் கொண்டாடப்படுபவையாகவும், வணங்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அதிலும் கிருஷ்ண அவதாரத்தில் வரும் சில கோலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை.
    சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் மகா விஷ்ணு, உலக உயிர்களைக் காக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். இதற்காக அவர் பல அவதாரங்களை எடுத்திருப்பதை, புராணங்களின் வாயிலாக நாம் அறிய முடியும். அவற்றுள் ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் உள்ள வடிவங்களே மிக அதிக அளவில் கொண்டாடப்படுபவையாகவும், வணங்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அதிலும் கிருஷ்ண அவதாரத்தில் வரும் சில கோலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    கிருஷ்ணரை சிறுவயதில் இருந்து வளர்த்தவர் யசோதா. கிருஷ்ணரை ஈன்றவள் தேவகியாக இருந்தபோதிலும், அவரை வளர்க்கும் பாக்கியமும், அவரது குழந்தைப் பருவத்தை ரசிக்கும் பாக்கியமும் யசோதைக்குத்தான் கிடைத்தது. அப்படிப்பட்ட யசோதையின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் கோலம் மிகவும் சிறப்புக்குரியது. இந்த கோலத்தில் உள்ள கிருஷ்ணரை, ‘சந்தான கோபால கிருஷ்ணன்’ என்பார்கள்.

    சிறு குழந்தையானது தாயின் கையணைப்பில் இருந்து, தவழும் பருவத்தை எட்டியதும் அதன் சுட்டித்தனம் அதிகரிக்கும். அதுபோலத்தான் கிருஷ்ணரும். தவழும் பருவத்தில் கீழே இருக்கும் வெண்ணெய் பானையில் இருந்து வெண்ணெயை எடுத்து சாப்பிடுவார். மண்ணை அள்ளி உண்பார். அவரது சுட்டித்தனம் தாங்காமல், ஒரு முறை யசோதை, கயிறு கொண்டு உரல் ஒன்றில் கிருஷ்ணனை கட்டிப் போட்டாள். அந்த உரலை இழுத்துச் செல்வார் கிருஷ்ணன். அது அருகருகே இருக்கும் இரண்டு மரங்களின் இடையில் சிக்கிக்கொள்ளும். அவர் இழுக்கும் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மரங்கள் இரண்டும் சரிந்து விழும். அதில் இருந்து குபேரனின் பிள்ளைகள் இருவரும் சாப விமோசனம் பெற்று செல்வார்கள். அப்படிப்பட்ட கிருஷ்ணனின் தவழும் கோலமும் சிறப்புக்குரியதுதான். இந்த கோலத்தை ‘பாலகிருஷ்ணன்’ என்பார்கள்.

    சிறு பிள்ளையாக இருந்த கிருஷ்ணன், யமுனா நதிக்கரையில் புரிந்த லீலைகள் ஏராளம். அந்த நதியில் காளிங்கன் என்ற கொடிய விஷம் கொண்ட ஐந்து தலை நாகம் வாழ்ந்து வந்தது. அதன் காரணமாக, அந்த நதி பாழ்பட்டு போனதோடு, அதன் கரையில் இருந்த மரங்களும் பட்டுப்போயின. அங்கு எந்த ஜீவராசிகளும் நீர் அருந்துவதில்லை. இதை அறிந்த கிருஷ்ணன், நீருக்குள் குதித்து காளிங்கனை அடக்கி, அவனை கடலில் சென்று வசிக்கும்படி கூறுவார். காளிங்கனை அடக்குவதற்காக அவனது தலைகளின் மேல் நடனமாடும் கிருஷ்ணரின் வடிவம் பெருமைக்குரியது. இந்த கிருஷ்ணனை, ‘காளிங்க நர்த்தன கிருஷ்ணன்’ என்று அழைப்பார்கள்.

    ஒரு முறை இந்திரன் கோகுல மக்களை வதைப்பதற்காக பெரும் மழையைப் பெய்யச் செய்து, வெள்ளப்பெருக்கை உண்டாக்கினான். அதில் இருந்து அந்த மக்களையும், அவர்களின் கால்நடைகளையும் காப்பாற்ற நினைத்தார் கிருஷ்ணர். இதையடுத்து அங்கிருந்த கோவர்த்தனகிரி என்ற மலையை தனது சுண்டு விரலில் தூக்கி, குடையாகப் பிடித்தார். அதன் கீழ் மக்களும், கால்நடைகளை தஞ்சம் புகுந்து மழை வெள்ளத்தில் இருந்து தப்பினர். இந்த வடித்தில் உள்ள கிருஷ்ணரை, ‘கோவர்த்தனதாரி’ என்று சொல்வார்கள்.

    அதே போல் வலது காலை சிறிது மடித்து, இடது காலின் முன்பு வைத்து, தன் அருகில் ராதை நின்றிருக்க குழல் ஊதும் கண்ணனை, ‘ராதாகிருஷ்ணன்’ அல்லது ‘வேணுகோபாலன்’ என்பார்கள். மேலும் ருக்மணி- சத்யபாமா ஆகியோருடன் நின்றிருக்கும் திருக்கோலமும் பிரசித்தமானது. இதனை ‘முரளீதரன்’ வடிவம் என்பார்கள். அஷ்ட புஜங்களுடன் குழலூதும் கண்ணனுக்கு ‘மதனகோபாலன்’ என்று பெயர்.

    மகாபாரத யுத்தம் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்தது. அந்தப் போரில் பாண்டவர்களின் பக்கம் நின்ற கிருஷ்ணன், அர்ச்சுனனின் தேருக்கு சாரதியாக இருந்தார். தன் உறவுகளைக் கொல்ல வேண்டுமே என்பதற்காக யுத்தம் செய்ய மறுத்த அர்ச்சுனனுக்கு, இந்த கோலத்தில்தான் கிருஷ்ணன், கீதையை உபதேசம் செய்தார். அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டும் வடிவத்தில் காட்சி தரும் கிருஷ்ணரை, ‘பார்த்தசாரதி’ என்பார்கள். அர்ச்சுனனுக்கு ‘பார்த்தன்’ என்ற பெயரும் உண்டு. அதனால் அவனது தேருக்கு சாரதியாக இருந்த கிருஷ்ணருக்கு இந்தப் பெயர் வந்தது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை தேர்த்திருவிழா நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் நேற்று நிறைவு பெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும்.

    ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளினார்.

    பின்னர் அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு மையங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு மையங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை நாளில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

    இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆறு, இருமத்தூர் தென்பெண்ணை ஆறு ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஊரடங்கு காரணமாக அமாவாசை நாளான நேற்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை.

    இதனால் அந்த கோவில் வளாகங்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் ஒகேனக்கல், இருமத்தூர் பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நேற்று குறிப்பிடத்தக்க அளவில் கூடவில்லை.
    நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.
    திருப்பலி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் அக்குடும்பத்தினர்.மூத்த பையன்கள் இருவரும் நடக்கின்றனர்..இளைய பையனுக்கு ஒன்றரை வயது.அவனை அப்பா தூக்கி வைத்து இருக்கிறார். அண்ணன்மார்களுடன் எட்டிவைத்து நடக்கவே இந்த இளைய மகனுக்கு ஆசை.அதற்காக அவன் அப்பாவின் இடுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க பார்க்கிறான். சாலைகள் பரப்பப்பட்டு இருந்ததால் அவனை அப்பா நடக்க விட வில்லை.

    இருப்பினும் அவன் அப்பாவின் கைகளை நெட்டி தள்ளி இறங்கத்தான் எத்தனிக்கிறான்.இறுதியில் அவனை அப்பா கீழே விடுகிறார்.அவனும் தனது அண்ணன் மார்களுடன் குடுகுடுவென ஓடினான்.ஆனால் சிறிது நேரத்தில் அவன் கால் இடறி கீழே விழுந்து ஓவென அழுதான்.உடம்பில் காயம் ஏதும் இல்லை ஆனாலும் அலறினான்.அண்ணன்மார்கள் அணைத்தார்கள் ஆயினும் அழுகையை நிறுத்தவில்லை.இறுதியில் அப்பா கைகளை நீட்ட அவன் ஓடி வந்து அப்பாவின் தோளில் ஏறிக் கொண்டான்.அப்பாவின் தோளை அடைந்த போதுதான் அவன் ஆறுதல் அடைந்தான்.

    நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.அத்தகைய அன்பின் தந்தை நமக்கு இருக்க நாம் ஏன் பாவக்குழிகளை விட்டு விட்டு அவரிடம் செல்லக்கூடாது?அவரது வலிய கரங்களை அணுகிச் செல்ல ஏன் இன்னும் தாமதம்?

    "ஆண்டவர் கூறுவது இதுவே :நீ திருப்பி வந்தால் நான் உன்னை முன்னய நிலைக்கு உயர்த்துவேன் "
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
    திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. விழாவில் மேள தாளம் முழங்க அஸ்திரதேவர் 3 குளங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கலந்துகொண்டு தீர்த்தவாரி செய்து வைத்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேல் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

    உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

    பெரியநாயகி உடனாய வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் கோவிலின் கர்ப்பக்கிரக விமானத்தைப் பார்த்துதான், பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
    கடலூர் மாவட்டத்தில் உள்ளது, திருவதிகை என்ற ஊர். இங்கு பெரியநாயகி உடனாய வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் கர்ப்பக்கிரக விமானத்தைப் பார்த்துதான், பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் சன்னிதி முன்பாகத்தான், வடலூர் வள்ளலார் பெருமான் தியானம் இருந்து அருள் பெற்றதாக சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசரை இந்த உலகுக்கு அளித்த ஈசன் அருளும் ஆலயம் இது. அட்ட வீரட்டத் தலங்களுள் ஈசன் திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது

    திருநாவுக்கரசர் தமது உழவாரத் திருப்பணியை தொடங்கிய முதல் ஆலயமாக இந்த திருவதிகை திருத்தலம் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். வர்க்க சாப தோசம், முன்னோர் செய்த பாவங்கள் நீங்க இந்த ஆலயத்தில் வழிபடலாம். தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல திருநீறை பூசிக்கொண்டால், வியாதிகள் மறையும் என்கிறார்கள். திருஞானசம்பந்தருக்கு ஈசன் திருநடனம் காட்டிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ என்ற நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலமும் இதுவே. சுந்தரர், ஈசனின் திருவடி தீட்சை பெற்ற திருத்தலமாகவும் திருவதிகை விளங்குகிறது.

    அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் அக்காள் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது. மருள்நீக்கியார் என்ற இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், சமண சமயத்தைத் தழுவினார். ஒரு முறை அவருக்கு சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டது. அதனை எவராலும் நீக்க முடியவில்லை. இறுதியாக அவர், தன்னுடைய அக்காள் இருக்கும், திருவதிகை திருத்தலத்திற்கு வந்தார். அங்கு திலகவதியாரை சந்தித்து தனது நோயை தீர்க்குமாறு வேண்டினார். திலகவதியாரும், திருவதிகை ஈசனின் திருநீறை சாப்பிடுவதற்காக கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அவரது நோய் மறைந்தது. இதையடுத்து தனது முதலாவது தேவாரப் பதிகத்தை இந்த ஆலய இறைவனை நோக்கிப் பாடினார். ஈசனால் ‘திருநாவுக்கரசர்’ என்று அழைக்கப்பட்டார்.

    தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக, இந்த கோட்டைகளுக்கு சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் மூன்று அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். தங்களை காத்தருளும்படி தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டினர்.

    இதையடுத்து அவர், பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய -சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும், வானவர்களையும் போர்க் கருவிகளாகவும், உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து, தேர் தட்டில் கால் வைக்க அதன் அச்சு முறிந்தது. அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாகின. இச்சம்பவம் நடந்த திருத்தலம் தான் திருவதிகை.

    இத்தல வெளிப்பிரகாரத்தில் உள்ள வராகி அம்மன் சிறப்புக்குரியவர். பஞ்சமி நாட்களில் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகம் வராகி அம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு பவுர்ணமி நன்னாளில் கிரிவலம் நடக்கிறது. திருநாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் இங்கு உள்ளன. இங்கு திருநாவுக்கரசர் உட்கார்ந்த நிலையில் உள்ளது சிறப்பு. இங்கு ஈசனை சுவாதி நட்சத்திர நாளில் வழிபடுவதால் அனைத்து நலன்களும், வளங்களும் பெறலாம் என்கிறார்கள்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது..
    ×