என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    சென்னை :

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 24-ந்தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

    அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

    சிறுபான்மையின மக்கள் மீது தி.மு.க.விற்கு மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புனிதம் நிறைந்த ரமலான் மாதம் விடைபெற்றது. இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
    புனிதம் நிறைந்த ரமலான் மாதம் விடைபெற்றது. இந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு வைத்து, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், இறையச்சம் கொண்ட நல்லடியார்கள் ஆர்வத்துடன் இருந்தனர். தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், மனக்கட்டுப்பாடு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற எண்ணற்ற நற்காரியங்களை இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்து வந்தோம். ரமலான் மாதத்தோடு இந்த நற்செயல்கள் முடிந்துவிடக்கூடாது. இதன்பிறகும் இவை தொடர வேண்டும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் விதித்துள்ள கட்டளை என்ன என்பதை பின்வரும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:

    “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (திருக்குர்ஆன் 98:5).

    மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் என்ன?

    இறைவன் காட்டிய வழியில் இறையச்சத்துடன் வாழ வேண்டும். நற்செயல்கள் புரிந்து நன்மைகளை தேடிக்கொள்ள வேண்டும். இறைக்கட்டளைகளை ஏற்று நடந்து இனிய வாழ்க்கை வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும். இதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் மெய்ப்பிக்கின்றது:

    ‘எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்கள் ‘பிர்தவ்ஸ்’ என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள்’ (திருக்குர்ஆன் 18:107).

    “வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்பது நபிமொழியாகும். (நூல்: முஸ்லிம்)

    ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

    மனிதன் இந்த உலக வாழ்க்கையின் மீது அதிக ஆசை கொள்கின்றான். உலகத்தில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கின்றான். ஆசைகளை வளர்த்துக்கொண்டு, மனக்கோட்டைகளை கட்டிக்கொண்டு செல்வத்தையும், செல்வாக்கையும் தேடி ஓடி அலைகின்றான். படைத்தவனையும், அவன் காட்டிய நல்ல வழிகளையும் விட்டுவிட்டு வழிகேட்டில் ஈடுபடுகின்றான்.

    இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப நிச்சயம் கூலி உண்டு. நற்செயல்கள் செய்தால் மறுமையில் அதற்கு பரிசாக சொர்க்கம் பெறலாம். தீய பாவங்களை செய்தால் அதற்கு தண்டனையாக மறுமையில் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும், ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்” (திருக்குர்ஆன் 6:120).

    பாவங்களில் இருந்து விடுபட நமக்கு வழிகாட்டுவது தான் ரமலான் நோன்பும், அந்த நோன்புகாலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளும், தான தர்மங்களும். நோன்பாளிகள் செல்வதற்கு என்று ‘ரய்யான்’ எனப்பெயரிடப்பட்டுள்ள சொர்க்கம் உள்ளதாக இறைவன் கூறுகின்றான்.

    இதை எல்லாம் கருத்தில் கொண்டு ரமலான் மாதம் முடிந்த பின்னரும் நமது வணக்க வழிபாடுகள், நற்செயல்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும், இறையச்சம் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்காது என்று திருக்குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகிறது:

    ‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்’ (திருக்குர்ஆன் 2:45).

    இறைவன் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்’. ‘அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக்குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்’. (திருக்குர்ஆன் 98:7,8)

    எனவே இந்த புனித ரமலானில் நாம் பின்பற்றிய நற்செயல்களை தொடர்ந்து செய்து, இறையச்சத்துடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, சொர்க்கத்தை பரிசாக பெறுவோம், ஆமீன்.

    பேராசிரியர், முனைவர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.
    கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஷவ்வால் மாத பிறை நேற்று முன்தினம் தமிழகத்தில் தென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கேரளாவில் பிறை தெரிந்ததால், கேரளாவிலும், அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    நாகர்கோவில், இடலாக்குடி, குளச்சல், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு உள்பட பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து, ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
    அழகு என்பது நிரந்தரம் இல்லை. எனவே நிலையற்ற எந்த ஒரு பொருளின் மீதும் தற்பெருமை கொள்வது வீணானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும் பெரும் குறையாக இருந்து வந்தது.

    இதை அவ்வப்போது புத்தரும் கவனித்து வந்தார். ஒரு நாள், புத்தர் தன்னுடைய சக்தியின் மூலமாக ஒரு இளம்பெண்ணை உருவாக்கினார். அந்த மாயப்பெண், புத்தரிடம் சீடராக இருந்த பெண்ணைக் காட்டிலும் பன்மடங்கு அழகு கொண்டவளாக இருந்தாள். அதைக் கண்டு சீடப்பெண்ணுக்கு பொறாமையாகக் கூட இருந்தது.

    ‘இப்படி ஒரு அழகானப் பெண் இருக்கிறாளா.. இவர் நம்மை விடவும் பல மடங்கு பதுமை போல காணப்படுகிறாளே..’ என்று நினைத்தாள். அப்போது கூட அவளுக்கு அழகின் மீதான பற்று குறையவில்லை.

    அந்த மாயப்பெண்ணை பொறாமை கண் கொண்டு சீடப் பெண் பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில், மாயப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக வயோதிகத்தை அடைந்தாள். அவளது தேகம் முழுவதும் தோல் சுருங்கியது. தலைமுடி நரைத்தது, கூன் விழுந்தது. உடலில் பல நோய்கள் உண்டாகி பார்க்கவே அவலட்சணமாக மாறிவிட்டாள்.

    அதிர்ச்சி அடைந்த புத்தரின் சீடப் பெண், ‘எப்படிப்பட்ட பேரழகியாக இருந்தவள், சிறிது நேரத்தில் இப்படி ஒரு அவலட்சணமாக மாறிவிட்டாளே’ என்று நினைத்தவளுக்கு, அழகு என்பது நிரந்தரமானது இல்லை என்ற எண்ணம் தெளிவுபடத் தொடங்கியது.

    அப்போது அங்கு வந்த புத்தர், “உன் மனதில் இப்போது நீ நினைப்பதுதான் நூறு சதவீதம் உண்மையானது. அழகு என்பது நிரந்தரம் இல்லை. அவ்வளவு ஏன்.. இந்த உலகமும், அதில் ஒருவருக்கு கிடைக்கும் செல்வமும், சுற்றமும் கூட நிலையானவை கிடையாது. எனவே நிலையற்ற எந்த ஒரு பொருளின் மீதும் தற்பெருமை கொள்வது வீணானது” என்றார்.

    அந்த சீடப் பெண்ணும், தனது அறியாமையைப் போக்கிய புத்தரை பணிந்து வணங்கினாள்.
    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது.
    அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.

    இத்தலத்தில் இறைவன் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்மை அலங்காரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் உச்சிக்கால (காலை 11 முதல் 12.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார்.

    அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. இத்தல இறைவனை வழிபட நவகிரக தோசங்கள் நீங்கும். கடன் தொல்லை ஒழியும்.
    தஞ்சை ஜோதி நகரில் அமைந்து உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
    தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.

    கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும்.

    இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.

    இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
    கும்பகோணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் வீதி உலாவாக எழுந்தருளுவது வழக்கம்.
    சுவாமிமலை :

    கும்பகோணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தெருவில் அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலாவாக புறப்பட்டு எழுந்தருளுவது வழக்கம்.

    இதற்காக பெரிய தெருவில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு ஒவ்வொரு கோவில் பெருமாளும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் காட்சியளிப்பர். இந்த பெருமாள் சுவாமிகளுக்கு எதிரே ஆஞ்சநேயரும் எழுந்தருளுவது வழக்கம்.

    கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெறும் இந்த 12 கருட சேவை நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், அங்குள்ள நகை கடைகளில் பொன், பொருளை வாங்கிச் செல்வதும் வாடிக்கை.

    இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அட்சய திருதியான நாளை (14-ம் தேதி) நடைபெறவிருந்த 12 கருட சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஒரு சிலருக்கு ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேஇருக்கும். அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு சிலருக்கு ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேஇருக்கும். நாக தரிசனம் தந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் ராகு திசை, கேது திசை அல்லது ராகு புத்தி, கேது புத்தி நடைபெறும் நேரமாக இருந்தால் கனவில் பாம்பு வந்து காட்சியளிக்கும். சில சமயம் வசிக்கும் இடங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

    ராகு-கேதுக்களுக்குரிய பரிகாரங்களை முறையாகவும், முழுமையாகவும், உடனடியாகவும் செய்வது நல்லது. பாம்பு கனவில் வந்து கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகி விட்டதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னிப்பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.
    இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தாம் வளர்ந்த ஊராகிய ‘நாசரேத்’துக்கு வந்தார். தமது வழக்கப்படி, ஓய்வு நாளன்று தொழுகைக்கூடம் சென்றார். வாசிப்பதற்காக எழுந்தார். இறைவாக்கை அருளிய ‘எசயாவின்’ சுருள் ஏடு, அவரிடம் தரப்பட்டது. அவர் அதைப் பிரித்தார். அவர் பிரித்த பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

    “ஆண்டவரின் ஆவியானது, என் மேல் உள்ளது. ஏனென்றால், அவர் எனக்கு அருள்பொழிவைச் செய்துள்ளார். ஏழை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்கள் விடுதலை பெறுவர், பார்வையற்றவர்கள் பார்வை பெறுவர் என்று முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர், அருளைத்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

    பிறகு அந்த ஏட்டைச் சுருட்டி, ஏவலரிடம் கொடுத்து விட்டு, அங்கே அவர் அமர்ந்தார்.

    அக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் எல்லாம், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவருடைய வாயில் இருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர்.

    ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று கூறி, எல்லோரும் அவரைப் பாராட்டினர்.

    அவர், அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே! உம்மையே நீர் குணமாக்கிக் கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில், நீர் செய்ததாக, நாங்கள் கேள்விப்பட்டவற்றையெல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் என்று கண்டிப்பாய் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

    ‘இறைவாக்கினர் யாரும் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எலியாவின் காலத்தில், சில ஆண்டுகளாக வானம் பொய்த்துப் போனது. நாட்டிலே, பெரிய பஞ்சம் உண்டானது. அந்தக் காலத்தில், இஸ்ரவேலரிடையே, கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும், ‘எலியா’ அனுப்பப்படவில்லை.

    ‘சீதோனைச்’ சேர்ந்த ‘சரிபாத்தில்’ வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினரான ‘எலியாவின்’ காலத்தில் இஸ்ரேவலர்களிடையே ‘தொழுநோயாளர்கள்’ பல பேர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த ‘நாமான்’ என்பவருக்கே நோய் நீங்கியது” என்றார்.

    தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கோபம் கொண்டனர். அனைவரும் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.

    இயேசு பெருமானாருக்கும், இந்த மக்களுக்கும் இடையே காணப்பட்ட பகைமைக்குக் காரணம் என்ன? மறைநூல் வாக்கை, அவர்கள் புரிந்து கொண்டதில் ஏற்பட்ட வேறுபாடுதான்.

    இயேசு பெருமானின் ஊர் மக்கள், ‘யூதர்களாகிய நம்மோடு மட்டும் கடவுள் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, நம்மை மட்டும், அவர் தம் எதிரிகளிடம் இருந்து மீட்பார்’ என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இயேசு பெருமான் இவற்றில் இருந்து மாறுபடுகிறார். அதனால்தான், அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கோபம் அடைகின்றனர்.

    ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’

    இக்கருத்தை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம்! சாதாரண மனித வாழ்க்கையில்கூட, தம் சொந்த ஊரில், மதிப்பில்லாமல் போவதை நாம் அறிய முடிகிறது. காரணம், அவர் யார் என்பதை நாம் நேரிலே பார்த்த காரணத்தால், இப்படி எண்ண முடிகிறது. சாதாரண மனிதருக்கே இப்படியென்றால், இறைவாக்கை அருள்வதற்கு வந்தவருக்கு என்ன மதிப்பு இருக்கும். இதைத்தான் இயேசு பெருமான், இப்படிக் கூறுகிறார்.

    அவர் வாயிலில் இருந்து வந்த அருள்மொழியைக் கேட்டவர்கள், ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று பாராட்டினார்கள்.

    ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில் செய்ததைச் செய்யும் என்று கேட்பீர்கள் என்று சொல்லி விட்டு, அக்காலத்தில் நடந்ததைக் கூறுகிறபொழுது, அவர்கள் இவரை வெறுக்கின்றனர்.

    காரணம், ‘எந்த வித்தியாசமும் பார்க்காமல், எல்லா ஏழை மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பார்’ என்ற கருத்தை ஏற்க மறுத்ததுதான்.

    இறைவனின் மீட்பு என்பது, சகலருக்குமானது என்ற இயேசு பெருமானின் புரிதலை ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு மனமில்லை என்பதுதான்.

    இயேசு பெருமானின் போதனை, குறிப்பிட்ட இனத்தவர்களுக்கல்ல. எல்லோருக்குமானது என்பதை உணர்வோம். நற்செய்தியைப் பின்பற்றி உயர்வடைவோம். ஆழ்ந்து நற்செய்தியைப் பயில்வோம்.
    நாமக்கல், பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    சித்திரை மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், மஞ்சள், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்வதை பார்க்க முடிந்தது.

    பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரிவடபழனியாண்டவர் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவில்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.
    ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது.
    மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரணமானவன். ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. உலக
    வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும்.

    ஓம் அம்புலியே போற்றி!
    ஓம் அமுத கலையனே போற்றி!
    ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி!
    ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி!
    ஓம் அபய கரத்தனே போற்றி!
    ஓம் அமைதி உருவனே போற்றி!
    ஓம் அன்பனே போற்றி!
    ஓம் அஸ்த நாதனே போற்றி!

    ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி!
    ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி!
    ஓம் ஆரமுதே போற்றி!
    ஓம் ஆத்திரேய குலனே போற்றி!
    ஓம் இனிப்புப் பிரியனே போற்றி!
    ஓம் இரண்டாம் கிரகனே போற்றி!
    ஓம் இனியவனே போற்றி!
    ஓம் இணையிலானே போற்றி!
    ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி!
    ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி!
    ஓம் இரு கரனே போற்றி!
    ஓம் இரவு நாயகனே போற்றி!
    ஓம் ஈய உலோகனே போற்றி!
    ஓம் ஈரெண் கலையனே போற்றி!
    ஓம் ஈர்ப்பவனே போற்றி!

    ஓம் ஈசன் அணியே போற்றி!
    ஓம் உவகிப்பவனே போற்றி!
    ஓம் உலகாள்பவனே போற்றி!
    ஓம் எழில்முகனே போற்றி!
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
    ஓம் ஒணத்ததிபதியே போற்றி!
    ஓம் ஒளடதீசனே போற்றி!
    ஓம் கடகராசி அதிபதியே போற்றி!
    ஓம் கதாயுதனே போற்றி!
    ஓம் கலா நிதியே போற்றி!
    ஓம் காதற் தேவனே போற்றி!
    ஓம் குறு வடிவனே போற்றி!

    ஓம் குமுதப் பிரியனே போற்றி!
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி!
    ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி!
    ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி!
    ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி!
    ஓம் சந்திரனே போற்றி!
    ஓம் சஞ்சீவியே போற்றி!
    ஓம் சதுரப் பீடனே போற்றி!
    ஓம் சதுரக் கோலனே போற்றி!
    ஓம் சமீப கிரகனே போற்றி!
    ஓம் சமுத்திர நாயகனே போற்றி!
    ஓம் சாமப் பிரியனே போற்றி!
    ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி!
    ஓம் சிவபக்தனே போற்றி!

    ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி!
    ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
    ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி!
    ஓம் தண்ணிலவே போற்றி!
    ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி!
    ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி!
    ஓம் தண்டாயுதனே போற்றி!
    ஓம் தட்சன் மருகனே போற்றி!
    ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி!
    ஓம் தாரைப் பிரியனே போற்றி!
    ஓம் திருமகள் சோதரனே போற்றி!
    ஓம் திங்களூர்த் தேவனே போற்றி!
    ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி!
    ஓம் திங்களே போற்றி!
    ஓம் திருஉருவனே போற்றி!
    ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி!
    ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி!
    ஓம் தென்கீழ் திசையனே போற்றி!
    ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி!
    ஓம் தூவெண்மையனே போற்றி!
    ஓம் தொழும் பிறையே போற்றி!

    ஓம் நரி வாகனனே போற்றி!
    ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி!
    ஓம் நெல் தானியனே போற்றி!
    ஓம் நீர் அதிதேவதையனே போற்றி!
    ஓம் பயறு விரும்பியே போற்றி!
    ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி!
    ஓம் பத்துபரித் தேரனே போற்றி!
    ஓம் பரிவாரத் தேவனே போற்றி!
    ஓம் பல்பெயரனே போற்றி!
    ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி!
    ஓம் பாண்டவர் தலைவனே போற்றி!
    ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி!
    ஓம் புதன் தந்தையே போற்றி!
    ஓம் போற்றாரிலானே போற்றி!
    ஓம் பெண் கிரகமே போற்றி!
    ஓம் பெருமையனே போற்றி!
    ஓம் மதியே போற்றி!
    ஓம் மனமே போற்றி!

    ஓம் மன்மதன் குடையே போற்றி!
    ஓம் மகிழ்விப்பவனே போற்றி!
    ஓம் மாத்ரு காரகனே போற்றி!
    ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி!
    ஓம் முத்துப் பிரியனே போற்றி!
    ஓம் முருக்கு சமித்தனே போற்றி!
    ஓம் முத்து விமானனே போற்றி!
    ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி!
    ஓம் மூலிகை நாதனே போற்றி!
    ஓம் மேற்கு நோக்கனே போற்றி!
    ஓம் ரோகிணித் தலைவனே போற்றி!
    ஓம் ரோகமழிப்பவனே போற்றி!
    ஓம் வைசியனே போற்றி!
    ஓம் வில்லேந்தியவனே போற்றி!
    ஓம் விண்ணோர் திலகமே போற்றி!
    ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி!
    ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி!
    ஓம் வெண்குடையனே போற்றி
    ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
    ஓம் வெண் திங்களே போற்றி
    அட்சய திரிதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம். .
    அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும்.

    மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும். 
    ×