என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள்.
    முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய பெரு மக்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

    இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.

    தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

    மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக குறைந்த பக்தர்களுடன் சில அடி தூரம் மட்டுமே தேர் இழுக்கப்பட்டது.
    பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி நாளன்று தேர்த்திருவிழாவும், வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோவில் திருவிழாக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவரை தேரில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சில அடி தூரம் வடம் பிடித்து இழுத்து பின்னர் மீண்டும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதில் குறைந்த அளவு பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். அவர்கள் தேர் மீது உப்பு, மிளகாய் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேர் நிலை பகுதியை சுற்றி தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் தூரத்தில் நின்று சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    நேற்று ரம்ஜான் கொண்டாடிய வேளையில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தேர் திருவிழாவின் போது பயபக்தியுடன் தரிசனம் செய்தார். இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா நேற்று வெறிச்சோடியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    நாகூர்

    இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த ஆண்டு(2020) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவால் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்துவார்கள்

    வெறிச்சோடிய நாகூர் தர்கா

    கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நாகூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

    நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர சிலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கவுரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
    ‘சரணம் ஐயப்பா’ எனும் சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுகிறான். சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் ஸ்லோகங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்:

    சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:
    ஓம்! க்ரும் நம; பராய
    கோப்த்ரே நம;

    மகா கணபதி தியான ஸ்லோகம்:
    மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
    சாமர கர்ண விலம்பித ஸுத்ர
    வாமந ரூப மஹேச்வர புத்ர
    விக்ந விநாயக பாத நமஸ்தே🙏

    ஐயப்பன் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
    வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
    சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
    சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
    குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
    சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
    சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம;

    கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

    ஓம் தத் புருஷாய வித் மஹே
    பூத நாதாய தீ மஹி
    தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
    ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ
    ஓம் பூதாதி பாய வித் மஹே
    மஹா தேவாய தீ மஹி
    தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்
    ஐயப்பன் மகா மந்திரம்
    பூதநாத ஸதானந்தா
    ஸர்வபூத தயாபரா
    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ;

    ஐயப்பன் ஸுப்ரபாதம்

    1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
    உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
    உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
    உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

    2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
    பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
    ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
    பவது ப்ரஸன்ன மனன சுந்தர
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
    காந்தகிரி குஸுமானி மனோஹரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
    தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
    உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
    த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
    க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
    சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
    நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
    அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
    ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
    ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
    தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
    மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
    திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
    தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
    ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

    12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
    நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
    தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
    அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
    ஆனந்த பூத அனாத நர்த
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
    தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
    தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
    வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.
    Loading...

    15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
    சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
    அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
    ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

    16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
    பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
    தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
    பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
    ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

    சாஸ்த்ர ஸுப்ரபாதம்:

    1. ஸ்ரீ சேச புத்ர யுருஷாத்தம தர்ம மூர்த்தே
    ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
    உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்
    2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
    ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
    உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
    3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
    பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
    பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்
    4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
    ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
    அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
    5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
    வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
    ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
    சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

    வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
    ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

    வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.

    போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். எனவே உருண்டு திரண்ட உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.
    அட்சய திருதியை நாளில் நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்களால் நம்முடைய வளம், செல்வம், ஆரோக்கியம்,புண்ணியம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
    நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல செயலுக்கும் 100 மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் நாள் தான் இந்த அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை இருந்தாலும். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்களால் நம்முடைய வளம், செல்வம், ஆரோக்கியம்,புண்ணியம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இன்று அட்சய திருதியை இந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

    தண்ணீர் பந்தல் :

    சித்திரை மாதத்தில் அதாவது வெயில் காலத்தில் வரக்கூடிய இந்த தினத்தில் பலரும் வெயிலால் தாகத்துடன் செல்வது வழக்கம். அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நாம் நம் வீட்டின் முன் ஒரு பானையில் குடி நீர் வைப்பது நல்லது. நம் வீடு வழியாக செல்வோர் தண்ணீரை அருந்தி திருப்தி அடைந்தால் இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது இந்த கோடை காலம் முழுவதும் செய்வது மிகவும் நல்லது. இந்த தண்ணீர் தானம் செய்வதால் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறையும்.

    அன்ன தானம் செய்தல் :

    தற்போதுள்ள இக்கட்டான நிதி சூழலில், பலரும் தங்களின் வேலை, தொழில் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அக்‌ஷய திருதியை எனும் அற்புத நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வது நல்லது. முடிந்தால் உணவுகளை பொட்டலம் போட்டு ஏழை, எளியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு வழங்கலாம். இந்த நாளில் அன்னதானம் செய்தால் நவக்கிரகங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள், பிரச்னைகள் நீங்கி நன்மை கிடைக்கும். மேலும் தானங்களிலேயே சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.

    ஆடை தானம்

    அட்சய திருதியை நன்னாளில் உங்களால் முடிந்த அளவு புத்தாடைகளை தானம் செய்வது நல்லது. புத்தாடையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். நாம் புத்தாடைகளை தானம் செய்வதால் வாங்குபவருக்கும். தானம் செய்பவருக்கும் ஐஸ்வர்யம் உண்டாகும். இந்த அற்புத நாளில் வீட்டின் பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பதன் மூலம் உங்கள் வீடு ஆண்டு முழுவதும் வளமாக இருக்கும்.

    புத்தகங்களை வழங்குதல்

    ஒருவரின் வாழ்க்கை முன்னேற முக்கியமான தேவை கல்வி. சிந்தனையை தூண்டி, சிறப்பாக யோசிக்க பல புத்தகங்களை படிப்பது அவசியம். அப்படிப் பட்ட புத்தகத்தை நாம் இன்றைய தினத்தில் தானமாக வழங்குவதாலும். நிதி சிக்கலால் கல்வி கற்க முடியாத சூழலில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகங்கள் வாங்கித் தருவதன் மூலம் நம் ஜாதகத்தில் புதனால் ஏற்படக்கூடிய பிரச்னை நீங்கி, வலுப்பெறுவார்.

    குங்குமம் தானம்

    மகாலட்சுமி தேவிக்குரிய அற்புத தினமான இந்த சுபநாளில் குங்குமத்தை சுமங்கலிக்கு தானமாக வழங்குவதும், மங்களப் பொருட்களை பெண்களுக்கு கொடுப்பதால் சுக்கிர பகவானின் ஆசி பெற்றிடலாம். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

    சந்தனத்தை தானமாக வழங்குதல்

    இந்து தர்மத்தின்படி சந்தனம் இறையருள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. சந்தனத்தை தானமாக வழங்குவதாலும். கோயிலுக்கு சந்தனத்தை அளிப்பதால் நம்முடைய ஆரோக்கியம் சிறக்கும். ஜோதிடத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை சந்தனம் ராகு மற்றும் கேது ஆகியோரை குறிப்பதாகும். சந்தனம் தானமாக வழங்குவதால் ராகு - கேதுவால் ஏற்படும் தீங்கு நீக்கும் என்று நம்பப்படுகிறது.

    மூதாதையர்கள் வழிபாடு

    இந்த அற்புத நாளில் மூதாதையர்களை வணங்கி அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து வழிபடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
    கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.
    இயேசு கிறிஸ்து தமது பணி வாழ்வில் பல்வேறு காரியங்கள் குறித்து கற்பித்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசு வழங்கிய போதனைகளை கடவுள் சார்ந்தவை, மனிதர் சார்ந்தவை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

    கடவுள் சார்ந்தவை

    இயேசுவின் போதனைகள் விண்ணரசு அல்லது இறையாட்சியை மையப்படுத்தியதாக இருந்தன. தமது அதிகாரம் குறித்து விளக்கும் இயேசு, தம்மை இறைமகன் என்றும் விண்ணகத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்றும் கூறுகிறார். தந்தையும் மகனும் ஒன்றித்து இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார் என்றும் இயேசு போதித்தார். இவ்வாறு, தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையில் நிலவும் உறவை எடுத்துரைக்கும் இயேசு, கடவுள் ஒருவரே என்றும் போதித்ததால் ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்று நாம் நம்புகிறோம். மேலும், கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.

    "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்."

    மனிதர் சார்ந்தவை

    மனிதர்கள், கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு, அனைவரும் தம்மைப் போல் பிறரை அன்பு செய்யுமாறு வலியுறுத்தினார். பிறரைத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும் அவர் போதித்தார். உடல் இச்சையை விலக்க வேண்டும் என்றும், திருமண உறவை முறிக்கக் கூடாது என்றும் அவர் கற்பித்தார். கடவுளை நம்பி வாழ வேண்டும் என்றும், உலகப் பொருட்கள் மீது பற்று வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகின் முடிவில் இறந்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர் என்றும், அப்போது ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனையையோ பெறுவர் என்றும் இயேசு கூறியிருக்கிறார்.
    இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோ ரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும்.
    ‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ என்று பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள்படும். பதினைந்து திதிகளில், ‘திருதியை’ திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியாக, திருதியை திதி உள்ளது. இந்த திதி சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் பொழுது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று கொண்டாடுகிறோம்.

    அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக செல்வ வளத்தை பெருக்கும் நாளில் அட்சய திருதியைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அது சாத்தியமாகாது. அப்படிப்பட்டவர்கள், அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.

    இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோ ரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். அவர்கள் குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தருவார்கள்.

    விரதம் இருப்பது எப்படி?

    அட்சய திருதியை நாள் அன்று, அதிகாலை எழுந்து நீராட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    மேலும் லட்சுமி நாராயணர், அன்னபூரணி, குபேரன், சிவ-சக்தி ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கான பலன்களைப் பெற்றுத் தரும்.
    தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள்.
    கோவில்கள் நிறைந்த மாவட்டமாக, தஞ்சாவூர் மாவட்டம் திகழ்கிறது. இங்கு தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவராக இருப்பது, சக்கரத்தாழ்வார். சுதர்சனவல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக் கிறார்.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 88 திருக்கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த ஆலயம். பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வார், தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அவருக்கு பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும்.

    ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார், மூலவராக இருக்கும் காரணத்தால், கோவில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடதுபக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும், நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரை பார்த்தபடி இருப்பது ஆலயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இத்தல சக்கரத்தாழ்வாருக்கு, ‘சுதர்சனர்’, ‘சக்கரபாணி’ ஆகிய பெயர்களும் உண்டு.

    இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது சிறப்புக்குரியது. மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரைப் போலவே, உற்சவரான சக்கரத்தாழ்வாரும் கூட, 16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது தவிர அஷ்டபுஜம் எனப்படும் 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தின் உட்புறத்தில் நடத்தப்படும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டுமே இந்த சக்கரத்தாழ்வாரை பயன்படுத்துவது சிறப்புக்குரியதாக இருக்கிறது.

    இந்தக் கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அங்கு மற்றொரு சிறிய கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தையும் கடந்து சென்றால், பலிபீடம், கருடாழ்வார் சன்னிதிகள் காணப்படுகின்றன. கருடாழ்வார், சக்கரத்தாழ்வாரை நோக்கியபடி இருக்கிறார். கருவறையில் எங்கும் இல்லாத வகையில், இரண்டு தாயார்களுடன் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். இது அரிதிலும் அரிதான காட்சி என்று சொல்லப்படுகிறது.

    இங்கு அருளும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால், நவக்கிரக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். மேலும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, இத்தல இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. சக்கரத்தாழ்வார் சன்னிதியின் முன்பாக நின்று, அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகுமாம்.

    நவக்கிரக தோஷம் இருப்பவர்கள், தொடர்ச்சியாக 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றோ அல்லது 9 வியாழக்கிழமைகளோ அல்லது 9 சனிக்கிழமைகளோ வருகை தந்து, 9 அகல் விளக்கு ஏற்றிவைத்து, 9 முறை சக்கரத்தாழ்வாரை வலம் வந்து வழிபட வேண்டும். மேலும் சிவப்பு மலர்களால் ஆன மாலையை, சக்கரத்தாழ்வாருக்கு சூட்டி, அதோடு கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சையை நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், தோஷம் நீங்கும் என்கிறார்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முற்பிறவி, இந்த பிறவியில் உண்டான பாவங்கள் நீங்கும். திருமணத்தடை விலகும். கல்வியில் இருந்த தடை அகன்று, ஞானம் பெருகும். இந்தக் கோவிலின் தல விருட்சமாக ‘அத்தி மரம்’ உள்ளது.

    அமைவிடம்

    தஞ்சாவூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    சிவேந்திரர் கோவில்

    சக்கரத்தாழ்வார் ஆலயத்தின் உள்ளே மேற்கு புறமாக அமைந்துள்ள ஒரு மண்டபத்தில், சிவேந்திரர் கோவில் அமைந்திருக்கிறது. இது மராட்டியர்களின் வழிபாட்டு தெய்வமாக இருந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சிவேந்திரர், தனது தேவியருடன் அருள்புரிகிறார். இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கு பின்னாலும், மிகப்பெரிய அறுங்கோணம் உள்ளது.

    பகுளாமுகி அம்மன்

    ராஜகோபால சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கும், இரண்டாவது கோபுரத்திற்கும் இடையே, ‘பகுளாமுகி அம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த அன்னையை ‘காளியம்மன்’ என்றும் அழைப்பார்கள். இந்த அம்மன், மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த அம்மனை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் மூலவரான பகுளாமுகி அம்மனைத் தவிர, கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன.
    அட்சய திருதியை எதற்காக முக்கியத்துவமும் பெருமையும் அடைகிறது என்பதாக குறிப்பிடும் நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
    அட்சய திருதியை நாள் என்பது, சித்திரை மாத வளர்பிறையில் வருவதாகும். இந்த நாளில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக ‘பவிஷ்ய புராணம்’ தெரிவிக்கிறது. அந்த புராணம், அட்சய திருதியை எதற்காக முக்கியத்துவமும் பெருமையும் அடைகிறது என்பதாக குறிப்பிடும் நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    * நான்கு யுகங்களில் ஒன்றான ‘கிருத யுகம்’, அட்சய திருதியை நாளில்தான் பிறந்தது.

    * பகீரதன் என்ற மன்னனின் கடுமையான தவம் காரணமாக, ஈசன் அருளால் ஆகாயத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வந்த கங்கை, அட்சய திருதியை நாளில்தான் முதன் முதலாக பூமியை வந்தடைந்தது.

    * பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த காலத்தில், அவர்களுக்கு சூரியனிடம் இருந்து அட்சய பாத்திரம் கிடைத்தது. அது கிடைக்கப் பெற்றது, அட்சய திருதியை நாளில்தான்.

    * ஐஸ்வரிய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகியோர் அவதரித்ததும், குபேரன் தன்னிடம் உள்ள நிதிகளை ஈசனிடம் இருந்து பெற்றதும் இந்த நாளில்தான்.

    * ஒரு முறை பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்தார். இதையடுத்து ஏற்பட்ட தோஷத்தால், பிரம்மனின் மண்டை ஓடு, ஈசனின் கையில் ஒட்டிக்கொண்டு பிட்சை பாத்திரமாக மாறியது. யாரால் அந்த பாத்திரம் நிரம்புகிறதோ, அப்போதுதான் அது விடுபடும் என்ற சாபமும் ஈசனுக்கு உண்டானது. பல காலம் அந்த மண்டையோடுடன் பிட்சாடனராக திரிந்த ஈசனுக்கு, அன்னபூரணி அன்னமிட்டதும், அந்த மண்டை ஒடு பாத்திரம் கீழே விழுந்தது. அன்னபூரணி, ஈசனுக்கு பிட்சை இட்ட நாளும் அட்சய திருதியைதான்.

    * மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராம அவதாரம் நிகழ்ந்ததும், விநாயகருக்கு வியாச முனிவர் மகாபாரதத்தை சொல்லியதும் அட்சய திருதியை நாள்தான்.

    * வடமாநிலங்களில், அட்சய திருதியை நாள் அன்று திருமணம் நடத்துவதை பெரும் பேறாக கருதுகிறார்கள்.

    * மூன்றாவது திதியாக வருவது திருதியை. 3 என்ற எண்ணுக்கு அதிபதி குரு. இவர் உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிப்பவர். எனவே குருவுக்கு ‘பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. எனவேதான் அட்சய திருதியை நாளில், பொன் வாங்குவது சிறப்பு என்கிறார்கள்.

    * உடையாமல், முழுமையாக இருக்கும் அரிசிக்கு ‘அட்சதை’ என்று பெயர். அந்த அட்சதையைக் கொண்டு பெருமாளை வணங்குவதால், அந்த திதிக்கு ‘அட்சய திருதியை’ என்று பெயர்.

    * கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள முழைநர் பரசுநாதர் கோவிலில், அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    * ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாதப்பிறப்பையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.

    நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து 19-ந் தேதி வரை 5 நாட்களுக்கு பூஜைகள் நடைபெறும். கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    கோவில் பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தந்திரிகள் மற்றும் மேல் சாந்திகளே நடத்துவார்கள். மேலும் கோவிலில் நடைபெறும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
    நோன்பு பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும்.

    இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் பெருநாள் என்பது பொருளாகும்.

    இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களை பொருத்தவரையில் முக்கிய மாதமாக கருதப்படுகிறது.

    மனிதனின் வழிகாட்டி

    இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குரான் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.

    குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்பு கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மிக பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறை அச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

    பெருநாள்

    ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

    இறைவனின் உதவி கிடைக்கும் காலம்

    பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என நபிகள் நாயகம் கூறி உள்ளார். ‘இறைதூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபி தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று நபி கூறினார்.

    ‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. ஒருவர் தமது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அவருக்கு இறைவனின் உதவி இருந்து கொண்டே இருக்கிறது’ என நபிகள் நாயகம் கூறி உள்ளார்.
    ×