search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசுவின் போதனை எல்லோருக்குமானது

    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.
    இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தாம் வளர்ந்த ஊராகிய ‘நாசரேத்’துக்கு வந்தார். தமது வழக்கப்படி, ஓய்வு நாளன்று தொழுகைக்கூடம் சென்றார். வாசிப்பதற்காக எழுந்தார். இறைவாக்கை அருளிய ‘எசயாவின்’ சுருள் ஏடு, அவரிடம் தரப்பட்டது. அவர் அதைப் பிரித்தார். அவர் பிரித்த பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

    “ஆண்டவரின் ஆவியானது, என் மேல் உள்ளது. ஏனென்றால், அவர் எனக்கு அருள்பொழிவைச் செய்துள்ளார். ஏழை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்கள் விடுதலை பெறுவர், பார்வையற்றவர்கள் பார்வை பெறுவர் என்று முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர், அருளைத்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

    பிறகு அந்த ஏட்டைச் சுருட்டி, ஏவலரிடம் கொடுத்து விட்டு, அங்கே அவர் அமர்ந்தார்.

    அக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் எல்லாம், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவருடைய வாயில் இருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர்.

    ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று கூறி, எல்லோரும் அவரைப் பாராட்டினர்.

    அவர், அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே! உம்மையே நீர் குணமாக்கிக் கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில், நீர் செய்ததாக, நாங்கள் கேள்விப்பட்டவற்றையெல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் என்று கண்டிப்பாய் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

    ‘இறைவாக்கினர் யாரும் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எலியாவின் காலத்தில், சில ஆண்டுகளாக வானம் பொய்த்துப் போனது. நாட்டிலே, பெரிய பஞ்சம் உண்டானது. அந்தக் காலத்தில், இஸ்ரவேலரிடையே, கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும், ‘எலியா’ அனுப்பப்படவில்லை.

    ‘சீதோனைச்’ சேர்ந்த ‘சரிபாத்தில்’ வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினரான ‘எலியாவின்’ காலத்தில் இஸ்ரேவலர்களிடையே ‘தொழுநோயாளர்கள்’ பல பேர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த ‘நாமான்’ என்பவருக்கே நோய் நீங்கியது” என்றார்.

    தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கோபம் கொண்டனர். அனைவரும் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.

    இயேசு பெருமானாருக்கும், இந்த மக்களுக்கும் இடையே காணப்பட்ட பகைமைக்குக் காரணம் என்ன? மறைநூல் வாக்கை, அவர்கள் புரிந்து கொண்டதில் ஏற்பட்ட வேறுபாடுதான்.

    இயேசு பெருமானின் ஊர் மக்கள், ‘யூதர்களாகிய நம்மோடு மட்டும் கடவுள் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, நம்மை மட்டும், அவர் தம் எதிரிகளிடம் இருந்து மீட்பார்’ என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இயேசு பெருமான் இவற்றில் இருந்து மாறுபடுகிறார். அதனால்தான், அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கோபம் அடைகின்றனர்.

    ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’

    இக்கருத்தை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம்! சாதாரண மனித வாழ்க்கையில்கூட, தம் சொந்த ஊரில், மதிப்பில்லாமல் போவதை நாம் அறிய முடிகிறது. காரணம், அவர் யார் என்பதை நாம் நேரிலே பார்த்த காரணத்தால், இப்படி எண்ண முடிகிறது. சாதாரண மனிதருக்கே இப்படியென்றால், இறைவாக்கை அருள்வதற்கு வந்தவருக்கு என்ன மதிப்பு இருக்கும். இதைத்தான் இயேசு பெருமான், இப்படிக் கூறுகிறார்.

    அவர் வாயிலில் இருந்து வந்த அருள்மொழியைக் கேட்டவர்கள், ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று பாராட்டினார்கள்.

    ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில் செய்ததைச் செய்யும் என்று கேட்பீர்கள் என்று சொல்லி விட்டு, அக்காலத்தில் நடந்ததைக் கூறுகிறபொழுது, அவர்கள் இவரை வெறுக்கின்றனர்.

    காரணம், ‘எந்த வித்தியாசமும் பார்க்காமல், எல்லா ஏழை மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பார்’ என்ற கருத்தை ஏற்க மறுத்ததுதான்.

    இறைவனின் மீட்பு என்பது, சகலருக்குமானது என்ற இயேசு பெருமானின் புரிதலை ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு மனமில்லை என்பதுதான்.

    இயேசு பெருமானின் போதனை, குறிப்பிட்ட இனத்தவர்களுக்கல்ல. எல்லோருக்குமானது என்பதை உணர்வோம். நற்செய்தியைப் பின்பற்றி உயர்வடைவோம். ஆழ்ந்து நற்செய்தியைப் பயில்வோம்.
    Next Story
    ×