search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணர்
    X
    கிருஷ்ணர்

    கிருஷ்ணரின் பிரசித்தி பெற்ற சில கோலங்கள்

    ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் உள்ள வடிவங்களே மிக அதிக அளவில் கொண்டாடப்படுபவையாகவும், வணங்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அதிலும் கிருஷ்ண அவதாரத்தில் வரும் சில கோலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை.
    சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் மகா விஷ்ணு, உலக உயிர்களைக் காக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். இதற்காக அவர் பல அவதாரங்களை எடுத்திருப்பதை, புராணங்களின் வாயிலாக நாம் அறிய முடியும். அவற்றுள் ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் உள்ள வடிவங்களே மிக அதிக அளவில் கொண்டாடப்படுபவையாகவும், வணங்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அதிலும் கிருஷ்ண அவதாரத்தில் வரும் சில கோலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    கிருஷ்ணரை சிறுவயதில் இருந்து வளர்த்தவர் யசோதா. கிருஷ்ணரை ஈன்றவள் தேவகியாக இருந்தபோதிலும், அவரை வளர்க்கும் பாக்கியமும், அவரது குழந்தைப் பருவத்தை ரசிக்கும் பாக்கியமும் யசோதைக்குத்தான் கிடைத்தது. அப்படிப்பட்ட யசோதையின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் கோலம் மிகவும் சிறப்புக்குரியது. இந்த கோலத்தில் உள்ள கிருஷ்ணரை, ‘சந்தான கோபால கிருஷ்ணன்’ என்பார்கள்.

    சிறு குழந்தையானது தாயின் கையணைப்பில் இருந்து, தவழும் பருவத்தை எட்டியதும் அதன் சுட்டித்தனம் அதிகரிக்கும். அதுபோலத்தான் கிருஷ்ணரும். தவழும் பருவத்தில் கீழே இருக்கும் வெண்ணெய் பானையில் இருந்து வெண்ணெயை எடுத்து சாப்பிடுவார். மண்ணை அள்ளி உண்பார். அவரது சுட்டித்தனம் தாங்காமல், ஒரு முறை யசோதை, கயிறு கொண்டு உரல் ஒன்றில் கிருஷ்ணனை கட்டிப் போட்டாள். அந்த உரலை இழுத்துச் செல்வார் கிருஷ்ணன். அது அருகருகே இருக்கும் இரண்டு மரங்களின் இடையில் சிக்கிக்கொள்ளும். அவர் இழுக்கும் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மரங்கள் இரண்டும் சரிந்து விழும். அதில் இருந்து குபேரனின் பிள்ளைகள் இருவரும் சாப விமோசனம் பெற்று செல்வார்கள். அப்படிப்பட்ட கிருஷ்ணனின் தவழும் கோலமும் சிறப்புக்குரியதுதான். இந்த கோலத்தை ‘பாலகிருஷ்ணன்’ என்பார்கள்.

    சிறு பிள்ளையாக இருந்த கிருஷ்ணன், யமுனா நதிக்கரையில் புரிந்த லீலைகள் ஏராளம். அந்த நதியில் காளிங்கன் என்ற கொடிய விஷம் கொண்ட ஐந்து தலை நாகம் வாழ்ந்து வந்தது. அதன் காரணமாக, அந்த நதி பாழ்பட்டு போனதோடு, அதன் கரையில் இருந்த மரங்களும் பட்டுப்போயின. அங்கு எந்த ஜீவராசிகளும் நீர் அருந்துவதில்லை. இதை அறிந்த கிருஷ்ணன், நீருக்குள் குதித்து காளிங்கனை அடக்கி, அவனை கடலில் சென்று வசிக்கும்படி கூறுவார். காளிங்கனை அடக்குவதற்காக அவனது தலைகளின் மேல் நடனமாடும் கிருஷ்ணரின் வடிவம் பெருமைக்குரியது. இந்த கிருஷ்ணனை, ‘காளிங்க நர்த்தன கிருஷ்ணன்’ என்று அழைப்பார்கள்.

    ஒரு முறை இந்திரன் கோகுல மக்களை வதைப்பதற்காக பெரும் மழையைப் பெய்யச் செய்து, வெள்ளப்பெருக்கை உண்டாக்கினான். அதில் இருந்து அந்த மக்களையும், அவர்களின் கால்நடைகளையும் காப்பாற்ற நினைத்தார் கிருஷ்ணர். இதையடுத்து அங்கிருந்த கோவர்த்தனகிரி என்ற மலையை தனது சுண்டு விரலில் தூக்கி, குடையாகப் பிடித்தார். அதன் கீழ் மக்களும், கால்நடைகளை தஞ்சம் புகுந்து மழை வெள்ளத்தில் இருந்து தப்பினர். இந்த வடித்தில் உள்ள கிருஷ்ணரை, ‘கோவர்த்தனதாரி’ என்று சொல்வார்கள்.

    அதே போல் வலது காலை சிறிது மடித்து, இடது காலின் முன்பு வைத்து, தன் அருகில் ராதை நின்றிருக்க குழல் ஊதும் கண்ணனை, ‘ராதாகிருஷ்ணன்’ அல்லது ‘வேணுகோபாலன்’ என்பார்கள். மேலும் ருக்மணி- சத்யபாமா ஆகியோருடன் நின்றிருக்கும் திருக்கோலமும் பிரசித்தமானது. இதனை ‘முரளீதரன்’ வடிவம் என்பார்கள். அஷ்ட புஜங்களுடன் குழலூதும் கண்ணனுக்கு ‘மதனகோபாலன்’ என்று பெயர்.

    மகாபாரத யுத்தம் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்தது. அந்தப் போரில் பாண்டவர்களின் பக்கம் நின்ற கிருஷ்ணன், அர்ச்சுனனின் தேருக்கு சாரதியாக இருந்தார். தன் உறவுகளைக் கொல்ல வேண்டுமே என்பதற்காக யுத்தம் செய்ய மறுத்த அர்ச்சுனனுக்கு, இந்த கோலத்தில்தான் கிருஷ்ணன், கீதையை உபதேசம் செய்தார். அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டும் வடிவத்தில் காட்சி தரும் கிருஷ்ணரை, ‘பார்த்தசாரதி’ என்பார்கள். அர்ச்சுனனுக்கு ‘பார்த்தன்’ என்ற பெயரும் உண்டு. அதனால் அவனது தேருக்கு சாரதியாக இருந்த கிருஷ்ணருக்கு இந்தப் பெயர் வந்தது.
    Next Story
    ×