என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்துசெய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    திருச்செந்தூர் :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் முருகப்பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவார்கள்.

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கோவில் வளாகமும், கடற்கரையும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் வைகாசி விசாக தினத்தையொட்டி நேற்று கோவிலில் வழக்கம்போல் ஆகம விதிப்படி சுவாமிக்கு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் வைகாசி விசாக தினத்தன்று பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பழனியில் முருகன் கோவிலில் 2-வது ஆண்டாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
    வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இன்று விரதம் அனுஷ்டித்தால் பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.
    சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது.

    மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.
    முழு ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது என்றும், பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பித்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் ஒருவார காலத்திற்கு தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.02 மணி முதல் நாளை (புதன்கிழமை) மாலை 5.36 வரை மலையை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

    இதனால் பவுர்ணமி கிரிவலத்துக்கு வரவேண்டாம் என பக்தர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும்.
    வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று தான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது.

    சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

    ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

    விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார்.

    தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

    பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
    சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
    நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக்களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்.

    தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

    சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, ‘சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.

    ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு ‘சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.

    பக்தர்களால் பெரியகோயில் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர், ஸ்ரீகோமதி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணர்,  ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசிவிசுவநாதரச்ர் ஸ்ரீ விசாலாட்சி ஆகியோருடன் சனீஸ்வரர், பைரவர், சந்தன நடராஜர், ஆடல்வல்லான், கஜலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.

    சிற்பங்களும், இசைத் தூண்களும்…

    சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.

    கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.

    அற்புதம்…

    தொன்மையான இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத் திருமேனி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன.

    சுரங்கப் பாதை…

    இக்கோயிலில் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. இந்தப் பாதை திருப்புடைமருதூர் கோயிலுக்கும், களக்காடு ‘நினைத்ததை முடித்த விநாயகர்’ கோயிலுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுரங்கப் பாதையில் ரகசிய அறை ஒன்றும் உள்ளது. இந்த அறைக்குக் காற்றும், வெளிச்சமும் நன்றாக வருகிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. பண்டைய கட்டடக் கலையின் உன்னதத்துக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.

    புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு,  மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    தேவர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் உயர்வு பெறும் வகையில், சிவபெருமான் நடத்திய திருவிளையாடலால் முருகப்பெருமான் வந்துதித்த நாள் வைகாசி விசாகம்.
    சிவபெருமானின் வடிவமாகவே அவதரித்தவர், முருகப்பெருமான். சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் அவதிப்பட்டனர். இந்திரலோகத்தைக் கைப்பற்றிய சூரபதுமன், அங்கிருந்த தேவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தான். இந்திரன் மட்டும் தப்பித்து ஒரு மூங்கில் வனத்தில் தாமரை தண்டில் புகுந்து சிவபெருமானை நினைத்து தவம் இயற்றி வந்தான். மற்ற தேவர்களும் சிறையில் துன்பங்களை அனுபவித்தபடியே சிவபெருமானை மனமுருக வேண்டிவந்தனர்.

    இதையடுத்து அவர்களுக்கு நன்மை செய்ய நினைத்த சிவபெருமான், தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அவற்றை அக்னி தேவன், கங்கை நதியில் கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்து அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப்பொய்கை நோக்கி நகர்த்தினார், வாயுதேவன். அப்படி சரவணப் பொய்கையில் சேர்ந்த அந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. இதுவே ஆறுமுகப்பெருமான் அவதரித்த கதையாகும். முருகப்பெருமான் இப்படி அவதரித்த அந்த நன்னாள்தான் வைகாசி விசாகம் ஆகும். சிறப்பு மிக்க அந்த நாளில், உலகம் முழுவதும் இருக்கும் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படும்.

    தேவர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் உயர்வு பெறும் வகையில், சிவபெருமான் நடத்திய திருவிளையாடலால் முருகப்பெருமான் வந்துதித்த நாள் வைகாசி விசாகம். எனவே சைவ வழியில் நின்று வழிபடும் மக்கள் அனைவருக்கும் வைகாசி விசாகத் திருநாள் ஒரு புண்ணிய நாளாகவே இருக்கிறது. வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், இந்த உலகத்தில் வாழும் மக்களுக்கு நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு ஆகும்.

    விரதம் இருப்பது எப்படி?

    அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் நைவேத்தியமாக படைத்து, கந்தசஷ்டி கவசத்தை பாட வேண்டும்.

    இந்த நன்னாளில் முருகப்பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களும் நன்மையானதாகவே நடைபெற இறைவன் அருள்புரிவான். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும்.

    மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும். அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    திருமணமான தம்பதியரை, ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். அந்த 16 வகையான செல்வங்களில் முதன்மையானதாக இருப்பது குழந்தைச் செல்வம்தான். அப்படிப்பட்ட குழந்தைச் செல்வத்தை அருள்வதில், முருகப்பெருமானுக்கு நிகர் எவரும் இல்லை. குழந்தை பாக்கியத்திற்காக இன்றும் கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோன்றவர்கள், வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.
    விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம்
    க்ருத்திகா ஸுதம்
    ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்
    வந்தே சிவாத்மஜம்.

    பொருள்: ‘‘விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,க்ருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.’’
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழிபோல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பிய அழகிய மண்டபத்தின் நடுவே உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளைகளில் எழுந்தருள்வார்.

    விழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றார். அங்கு சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம்.
    தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர, ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர, சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார்.

    முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார்.

    வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்கியங்களும் பெறுவோமாக.
    பெற்றோரை போற்றுவோம். பெற்றோரை இழந்தவர்கள் அவர்கள் செய்து வந்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
    எத்தனையோ விதமான தியாகங்கள் இந்த உலகில் போற்றப்படுகின்றன. ஆனால் நம் பெற்றோர்கள் செய்த தியாகத்திற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. அதனால் தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதர்களை விளித்து “தன்னை வணங்குங்கள் என்று சொல்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் பெற்றோருக்கும் நன்றி செலுத்துங்கள்” என்று சேர்த்து சொல்கின்றான். மேலும், “மனிதன் தன் தாய் தந்தையருக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 46:15) என்றும் வலியுறுத்துகின்றான்.

    பெற்றோர்கள் நம் சொர்க்கத்தின் வாசல்களாக உள்ளனர். நாம் அவர்களுக்கு செய்கின்ற அனைத்து உதவிகளும் சொர்க்கத்தில் நமக்காக பெரும் மாளிகையாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.

    ஒருமுறை ஒரு சஹாபாவின் தாயார் இறந்து விட்டார்கள். அவர் கதறி அழுகிறார். அவரிடம் கேட்டபோது, “என் தாயின் பிரிவு தாங்க முடியாத துக்கத்தை தந்தாலும் இன்றிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களுக்காக பெரும் நன்மைகளை பெற்றுத்தரும் என் சொர்க்க வாசல் அடைபட்டு விட்டதே” என்று ஆதங்கப்பட்டார். எனவே பெற்றோருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் அவர்களுக்கானதல்ல, நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உன்னதமான பாதை.

    பெற்றோர் இறந்து விட்ட பின்னர் சொர்க்கத்திலும் கூட நமக்காக அல்லாஹ்விடம் முறையிடுவார்களாம். “இறைவா, என்னை சொர்க்கவாசி ஆக்கி நன்மை செய்தாய். என் பிள்ளைகளையும் இங்கே என்னோடு இணைத்து விடு” என்று வேண்டுவார்களாம். “அதற்குரிய நன்மை அவனிடம் இல்லையே” என்று அல்லாஹ் சொன்னால், “உன் அளப்பரிய அருள் கிருபை என்று ஒன்று இருக்கிறதே அதன் மூலம் அதனை உண்மை படுத்திவிடு அல்லாஹ்” என்பார்களாம். அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை அருள்மறையில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்.

    “எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் தங்கள் பெற்றோர்களை பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ, அந்த சந்ததியினரின் நன்மை குறைவாக இருந்தாலும், அவர்கள் பெற்றோர்கள் திருப்தி அடையும் பொருட்டு அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் சுவனபதியில் சேர்த்து விடுவோம்”. (திருக்குர்ஆன் 52:21)

    பெற்றோர்கள் உயிருடன் நம்முடன் வாழ்ந்த காலத்தில் நமக்கு சொர்க்க வாசல்களாக உள்ளனர். இறந்தபின், தங்கள் முயற்சியால் நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர வல்லவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உள்வாங்கி எண்ணிப்பார்க்க வேண்டும்.

    அவர்கள் இருந்தாலும், இறந்தாலும் நமக்கு நன்மை மட்டுமே செய்தார்கள். நாம் சொர்க்கம் பெற்றுக்கொள்வதற்கு காரணமாய் இருப்பார்கள். இதனை உணர்ந்து உத்தமராய் வாழ்ந்து, பெற்றோரை போற்றுவோம். பெற்றோரை இழந்தவர்கள் அவர்கள் செய்து வந்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளில் கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது
    திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று காலை கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது

    பின்னர் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன், கோவிந்தராஜசாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், தேன், இழநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
    “கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
    இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டு, அவரது நெறிகளைப் பரப்பியவர் புனித பவுல். இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் அல்ல. ஆனால், தலைசிறந்த அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். திருமறை பரப்பும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுல் எழுதிய திருமடல்கள், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் எபேசிய மக்களுக்கு பவுல் எழுதிய திருமடலில், கணவன்-மனைவி இடையிலான உறவு குறித்து, அவர் குறிப்பிட்டிருக்கும் தீர்க்கமான கருத்துகள் குடும்ப அமைப்பையும், குடும்ப உறவையும் வலுப்படுத்தக்கூடியவை. அவற்றைப் புதிய ஏற்பாட்டில், எபேசியர் புத்தகத்தில் அதிகாரம் 5-ல் 23 முதல் 33 வரையிலான வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

    “கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து இயேசு நம் சபைக்குத் தலையாக இருப்பதுபோல், மனைவிக்குத் தலைவனாக கணவன் இருக்கிறான். கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவுக்கு சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல், மனைவிகளும் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

    கணவர்களே... சபைக்காக கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல, நீங்களும் உங்கள் மனைவி மீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். அவளது வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையை சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக இயேசு அப்படிச் செய்தார். எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.

    குடும்பமும் அதைப் போன்றதே. கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவி மீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பு காட்டுகிறவன் தன் மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம். ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டு தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்ற திருமணச் சட்டத்தின் பரிசுத்த ரகசியம் மகத்தானது” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

    கணவன்-மனைவியின் பரிசுத்தமான உறவே குடும்பம் எனும் அமைப்பை வலுவாக்குகிறது. இந்த உறவும், நம்பிக்கையும் உடையும்போது குடும்ப அமைப்பும் உடைந்துபோகிறது. கணவன்-மனைவி உறவில் சிக்கல் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்ரீதியான பந்தமும், மனரீதியான நம்பிக்கையும் மிக முக்கியமானவை என்பதை (மத்தேயு 5:27-32) இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

    இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து பேசும்போது... “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை பாலியல் இச்சையோடு பார்த்துக்கொண்டே இருப்பவன், அவளோடு ஏற்கனவே தன் உள்ளத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் நரகத்தில் வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.”

    இயேசுவின் வார்த்தைகளில், குற்றங்களின் தொடக்கம் அலைபாயும் கண்கள் வழியே நிகழும் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆணோ-பெண்ணோ பிறரைப் பாலியல் இச்சையுடன் பார்ப்பதை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்கிறார் இயேசு. மீறிப் பார்க்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவே கடவுள் உங்கள் கணக்கில் பாவத்தை சேர்த்துக்கொள்கிறார்.
    ×