என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.
    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளில் குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
    திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளில் கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது

    பின்னர் கோவிந்தராஜசாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், தேன், இழநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

     8-ம் நாளான நேற்று இரவு குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோவில். இந்த கோவிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.
    ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

    பாறைகளின் சிறப்புகள்

    ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோவில் பஞ்சநத நடராஜர் கோவில் என அழைக்கப்படுகிறது.

    அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை....

    இந்த கோவிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

    பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு...

    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).

    ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்....

    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    நோய் நீக்கும் நடராஜர்....

    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்..........

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    மாற்று திசையில் நந்தி தேவர்....

    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
    கடந்த ஆண்டும் கொரோனா முழு ஊரடங்கால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாததுடன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 26-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன்படி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த ஒரு மாதமாகவே பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமான பக்தர்கள் பல விதமான காவடிகள் எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வைகாசி விசாகம் நாளான நேற்று முழுஊரடங்கு அமலில் உள்ளதாலும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையாலும் ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் கோவில் நேற்று திறக்கப்படவில்லை. நேற்று உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் மேலவாசல் முருகன் சன்னதி வாசல் முன்பு நின்று முருகனை தரிசனம் செய்தும், சூடன் ஏற்றியும் வழிபாடு நடத்தி விட்டு சென்றனர். முருகன் கோவில் முன்பு பக்தர்கள் கூடுவதை தடுப்பதற்காக அங்கு போலீசார் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தரிசனம் செய்த பக்தர்கள் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.

    கடந்த ஆண்டும் கொரோனா முழு ஊரடங்கால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாததுடன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஆண்டாக வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் போனதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
    திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் உள்பட திருச்சி நகரில் உள்ள பல முருகன் கோவில்களும் மூடப்பட்டு இருந்ததால் வைகாசி விழா கொண்டாட்டத்திற்கான அறிகுறி இன்றி கோவில்கள் களை இழந்து காணப்பட்டன.
    வைகாசி விசாகம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும். முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், செல்வம், புகழ் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

    இந்த ஆண்டு வைகாசி விசாகம் நேற்று நடந்தது. விசாக திருநாளில் முருகனை வழிபடுவது சிறந்தது. திருச்சி அருகே உள்ள குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா அன்று, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். ஆனால், தற்போது கொரோனா முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. பக்தர்கள், பொதுமக்கள் என யாரும் வெளியில் செல்லவும் கூடாது என்ற கட்டுப்பாடு வேறு. கோவில்களில் விழா கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், வயலூர் கோவிலில் நேற்று வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிக்கும் பக்தர்கள் சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வெளியில் நின்றும், அருகில் உள்ள கருப்பு கோவிலில் கற்பூரம் ஏற்றியும் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

    திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் உள்பட திருச்சி நகரில் உள்ள பல முருகன் கோவில்களும் மூடப்பட்டு இருந்ததால் நேற்று வைகாசி விழா கொண்டாட்டத்திற்கான அறிகுறி இன்றி கோவில்கள் களை இழந்து காணப்பட்டன.
    பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். நடராஜரின் அருளை பெற இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபட்டு வரலாம்.
    அருள் தரும் ஸ்ரீ நடராஜர் போற்றி
    ஓம் நடராஜனே போற்றி
    ஓம் நடனகாந்தனே போற்றி
    ஓம் அழகனே போற்றி
    ஓம் அபயகரனே போற்றி
    ஓம் அகத்தாடுபவனே போற்றி

    ஓம் அஜபா நடனனே போற்றி
    ஓம் அம்பல வாணனே போற்றி
    ஓம் அம்ச பாத நடனனே போற்றி
    ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
    ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி

    ஓம் அருள் தாண்டவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் ஆடலரசனே போற்றி
    ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி
    ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

    ஓம் ஆடியடக்குபவனே போற்றி
    ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
    ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி
    ஓம் இசையரசனே போற்றி
    ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி

    ஓம் ஈரெண் கரனே போற்றி
    ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
    ஓம் உடுக்கையனே போற்றி
    ஓம் உன்மத்த நடனனே போற்றி
    ஓம் உண்மைப் பொருளே போற்றி

    ஓம் உமாதாண்டவனே போற்றி
    ஓம் ஊழித் தாண்டவனே போற்றி
    ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி
    ஓம் கலையரசனே போற்றி
    ஓம் கங்காதரனே போற்றி

    ஓம் கமல நடனனே போற்றி
    ஓம் கனக சபையனே போற்றி
    ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    ஓம் கங்கை அணிந்தவா போற்றி
    ஓம் கால்மாறியாடியவனே போற்றி

    ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி
    ஓம் கிங்கிணி பாதனே போற்றி
    ஓம் குக்குட நடனனே போற்றி
    ஓம் கூத்தனே போற்றி
    ஓம் கூழ் ஏற்றவனே போற்றி

    ஓம் கவுரி தாண்டவனே போற்றி
    ஓம் கவுமாரப் பிரியனே போற்றி
    ஓம் சடை முடியனே போற்றி
    ஓம் சத்ரு நாசகனே போற்றி
    ஓம் சமர்த்தனே போற்றி

    ஓம் சதுர தாண்டவனே போற்றி
    ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
    ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
    ஓம் சித் சபையனே போற்றி
    ஓம் சிவசக்தி ரூபனே போற்றி

    ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தர தாண்டவனே போற்றி
    ஓம் சூலதாரியே போற்றி
    ஓம் சூழ்ஒளியனே போற்றி
    ஓம் ஞான தாயகனே போற்றி

    ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
    ஓம் திரிபுராந்தகனே போற்றி
    ஓம் திரிபுர தாண்டவனே போற்றி
    ஓம் திருக்கூத்தனே போற்றி
    ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி

    ஓம் திருவடிவனே போற்றி
    ஓம் தில்லை வாணனே போற்றி
    ஓம் துர்தூரப்ரியனே போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தேவசபையனே போற்றி

    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் நாத ரூபனே போற்றி
    ஓம் நாகராஜனே போற்றி
    ஓம் நாகாபரணனே போற்றி
    ஓம் நாதாந்த நடனனே போற்றி

    ஓம் நிலவணியனே போற்றி
    ஓம் நீறணிந்தவனே போற்றி
    ஓம் நிருத்த சபையனே போற்றி
    ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
    ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி

    ஓம் பரம தாண்டவனே போற்றி
    ஓம் பஞ்ச சபையனே போற்றி
    ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
    ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி
    ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி

    ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
    ஒம் பிருங்கி நடனனே போற்றி
    ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
    ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
    ஓம் புலித்தோலனே போற்றி

    ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
    ஓம் பிரச்னரூபனே போற்றி
    ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
    ஓம் மண்சுமந்தவனே போற்றி
    ஓம் மணியணியனே போற்றி

    ஓம் மான்கரனே போற்றி
    ஓம் மழுவேந்தியவனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் முனிதாண்டவனே போற்றி
    ஓம் மும்மலமறுப்பவனே போற்றி

    ஓம் முயலக சம்காரனே போற்றி
    ஒம் முக்தியருள்பவனே போற்றி
    ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
    ஓம் ராஜசபையனே போற்றி
    ஓம் ரட்சக தாண்டவனே போற்றி

    ஓம் ருத்ர தாண்டவனே போற்றி
    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    ஓம் ருண விமோசனனே போற்றி
    ஓம் லயிக்க வைப்பவனே போற்றி
    ஓம் லலிதா நாயகனே போற்றி

    ஓம் விரிசடையனே போற்றி
    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி போற்றி!

    இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.
    உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்ட நாளாகும்.

    இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

    தனது இறுதி ஆண்டுகளில் பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் இந்நாள் பௌத்த நெறியாளர்களுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    இந்தியத் துணைக்கண்டத்தில் சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம், கலிம்பாங், டார்ஜீலிங் முதலான பகுதிகளில் இந்த நாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்டமாக அமைகிறது.

    இன்றைய நேபாளத்தில் இமயமலை அடிவாரத்திலுள்ள ‘கபிலவஸ்து’வில் அமைந்திருந்த ஒரு பழங்குடிக் குடியிருப்பில் கி.மு.563ஆம் ஆண்டு புத்தர் பிறந்தார். அவர் சார்ந்த பழங்குடிக்கு சாக்கியர்கள் எனப் பெயர். மகாவஸ்து, புத்த சரிதம், லலித விஸ்தாரம் மற்றும் பௌத்த நிதானங்கள், ஜாதகக் கதைகள் ஆகியவற்றில் புத்தரின் பிறப்பு கூறப்படுகிறது.

    புத்தர் அரச பரம்பரையில் பிறந்தவர் என்பது பிற்காலத்தில் அவர் கடவுளாக வரிக்கப்பட்டபோது உருவான நம்பிக்கை. அரசு உருவாக்கத்திற்கு முந்தைய பழங்குடிகள் அவை. சுழற்சி முறையில் அங்கு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். புத்தர் பிறந்தபோது அவரது தந்தை சுத்தோதனர் அப்பழங்குடியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். பின்னாளில் புத்தர் ஒருமுறை அங்கு வந்தபோது அவரது சிறிய தந்தை தலைமைப் பொறுப்பில் இருந்தார் என்கிற பதிவும் உண்டு.

    அதேபோல ’ரத கஜ துரக பதாதி’ எனப்படும் பெரும் அரண்மனை ஆடம்பரங்களுடன் அந்தத் தலைவர்கள் வாழவும் இல்லை. புத்தரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பிணி, மூப்பு, சாக்காடு முதலான நான்கு தரிசனங்களை அவர் காண நேர்ந்தது கூட அவரது தந்தை வயலில் உழும்போது சிறுவனான சித்தார்த்தன் கரையில் அமர்ந்திருந்தபோதுதான் என்பர். குடித் தலைவராக இருக்கும்போது கூட இவ்வாறு அடிப்படைப் பணிகளைச் செய்யும் ஒரு பழங்குடிச் சமூகம் அது.

    ‘கரவரும் பெருமைக் கயிலம்பதி’ என மணிமேகலைக் காப்பியத்தில் புகழப்படும் கபிலவஸ்துவில் சுத்தோதனரின் மூத்த மனைவி மகாமாயாவின் வயிற்றில் கருக்கொண்டார் புத்தர். நிறைமாத சூலியான அன்னை மாயா தனது பிறந்தகத்திற்குச் செல்லும் வழியில் லும்பினி எனும் வனத்தில் கரு உயிர்த்தார் கோதமர். சால மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு நின்ற கோலத்தில் அன்னை மாயா அவரை கரு உயிர்த்தார் என நம்புவது பௌத்த மரபு.

    புத்தர்கள் அல்லது போதிசத்துவர்கள் என்போர் மீட்பர்களல்லர். இறையம்சம் ஒன்றின் மூலமாக மக்கள் மீட்கப்படுவது என்பது பௌத்தத்தில் இல்லை. தனது சொந்த முயற்சியிலேயே ஒருவர் விடுதலை அடைய வேண்டும். போதிசத்துவர்கள் அறிவும் கருணையும் மிக்கவர்கள் மட்டுமல்ல. எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒதுக்கல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். அதனால்தான் இந்தியாவின் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதி, வருண ஏற்றத் தாழ்வுகளை வென்ற மதமாக பௌத்தம் உருக்கொண்டது.
    வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகம் வெறிச்சோடியது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலையை கொரோனா தொற்று உருவாக்கி விட்டதாக பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 9-வது நாளான விசாகத்தன்று ஆண்டிற்கு ஒருமுறை சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டபத்தையொட்டி உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகப்பெருமான் எழுந்தருளுவதும், அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவதும் தனிச்சிறப்பு.

    மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என்று விதவிதமான காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதனால் மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் விழாக்கோலம் பூண்டிருக்கும். திரும்பிய திசை எல்லாம் பக்தர்களின் தலையும், அரோகரா கோஷமும் எதிரொலிக்கும்.

    ஆனால் கடந்த ஆண்டில்(2020) கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் விசாக விழா விசேஷமாக நடைபெறவில்லை. அதே சமயம் பக்தர்கள் இன்றி சண்முகர் சன்னிதியிலேயே சில மணிநேரம் சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

    இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா வழக்கம் போல கோலாகலமாக நடைபெறும். அதில் நேர்த்திக்கடனை செலுத்தலாம் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதற்கிடையில் கொரோனா 2-வது அலை பரவலால் கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து வைகாசி விசாக திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டில் சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது போல விசாக திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால் பக்தர்கள் எதிர்பார்த்தபடி வைகாசி வசந்த உற்சவ விழா நடைபெறவில்லை.

    இதேசமயம் சண்முகர் சன்னதியில் ஆகமவிதிப்படி சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் உற்சவர் சன்னதி, கருவறையில் வழக்கமான பூஜைகள் நடந்தது. வைகாசி விசாக திருவிழா ரத்து என்பதால் பக்தர்கள் வரவில்லை ஆகவே கோவில் வளாகம், சன்னதி தெரு வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் பால்குடம் கொண்டுவந்து கோவில் வாசல் கதவில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை தடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர். காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்த முடியவில்லை என்று கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
    ‘கடவுளை நம்பினால் முடியாதது இல்லை’ என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள்.
    இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில், தாவீதின் மூத்த அண்ணன்கள் மூவர் போர் வீரர்களாக இருந்தனர். அவர்களுக்கு வீட்டின் உணவைக் கொடுத்துவர, போர்க்களம் சென்றான் தாவீது. போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்திருந்த நிலையில் பெலிஸ்தியர்களின் முகாமை நோக்கி முன்னேறிச் செல்ல எந்த இஸ்ரவேலிய வீரனுக்கும் துணிவு இல்லை. அதற்குக் காரணம் கோலியாத் என்னும் மாவீரன்.

    காத் என்ற நகரத்தைச் சேர்ந்தவன் கோலியாத். அவனுடைய உயரம் 9 அடி, 6 அங்குலம். செம்பால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும், செதில் செதிலாக வடிவமைக்கப்பட்ட உடல் கவசத்தையும் அவன் அணிந்திருந்தான். கால்களிலும் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான். அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அவன் உருவத்துக்கென்று விசேஷமாகச் செய்யப்பட்ட ஈட்டி அது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட உருவம் கொண்ட பலசாலி, பொலிஸ் தியர்களின் படையில் இருந்தான். அவனைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் பயந்து நடுங்கிக் கிடந்தார்கள்.

    மலைகளால் சூழ்ந்த ஏலா என்ற பள்ளத்தாக்கில் இருந்தது, அந்தப் போர்க்களம். ஒரு பக்கத்திலுள்ள மலையில் கோலியாத்துடன் பெலிஸ்தியர்கள் நின்றார்கள். இன்னொரு பக்கத்திலுள்ள மலையில் இஸ்ரவேலர்கள் நின்றார்கள். ஏலா போர்க்களத்துக்கு இருதரப்பு வீரர்களும் வந்து அணிவகுப்பை முடித்து 40 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், போரைத் தொடங்க துணிவற்று இஸ்ரவேலர்கள் பயந்திருந்தனர். ஏனெனில் தினசரி மலையில் இருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் நடுவில் நின்று கர்ஜித்தான் கோலியாத். அவன் இஸ்ரவேல் படையைப் பார்த்து, “எதற்காகப் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் ஒரு பெலிஸ்திய வீரன். என்னோடு மோதுவதற்கு உங்களில் சரியான ஒரு ஆளை அனுப்புங்கள். அவன் என்னோடு சண்டைபோட்டு என்னைக் கொன்றுவிட்டால், பெலிஸ்தியப் படை முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருக்கும். ஆனால், நான் அவனைக் கொன்றுவிட்டால், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைகளாக இருப்பீர்கள்” என்று கத்தி னான். அப்படியும் இஸ்ரவேல் தரப்பில் ஈயாடவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளும் சவுல் அரசனையும், இஸ்ரவேலர்களையும் ஏளனத்துடன் எள்ளி நகையாடி வந்தான் கோலியாத்.

    போர்க்களத்தில் இருந்த அண் ணன்களுக்காக தாவீது உணவு கொண்டுவந்திருந்த தினத்தில் கொஞ்சம் அதிகமாகவே கத்தினான், கோலியாத். அவனது ஆணவம் தாவீதை உசுப்பியது. ‘40 நாட்களாக பெலிஸ்தியர்களில் ஒருவன் மட்டும் வந்து இப்படிச் சவால் விடுகிறான். அதை ஏற்று அவனுடன் மோதுவதற்கு ஒரு இஸ்ரவேலன்கூட இல்லையா?’ என நினைத்துக்கொண்டான்.

    ‘கடவுளை நம்பினால் முடியாதது இல்லை’ என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள். ஆனால், தாவீது உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள், அரசன் சவுலிடம் சென்று தாவீது பற்றிச் சொன்னார்கள். சவுலுக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. இருப்பினும் அவனை வாழ்த்தி அனுப்பினார்.

    அரசனின் அனுமதி கிடைத்ததும் அருகிலிருந்த ஓடையை நோக்கி ஓடோடிச் சென்றான் தாவீது. அங்கே தண்ணீரில் உருண்டு உருண்டு திடமாகிக் கிடந்த கூழாங்கற்களில் இருந்து சிறந்த ஐந்தைத் தேர்வுசெய்து எடுத்தவன், அவற்றைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்பு தன் கச்சை வாரில் இருந்து கவணைக் கையில் எடுத்துக்கொண்டு ஏலா பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் மலைபோல் நின்றுகொண்டிருந்த கோலியாத்தை நோக்கி நடந்து சென்றான்.

    ஒரு சிற்றெறும்பைப் போல் துணிவுடன் கோலியாத்தை நேருக்கு நேராக தாவீது நெருங்கிச் செல்வதை இஸ்ரவேலர்களாலும், பெலிஸ்தியர்களாலும் நம்ப முடியவில்லை. தன்னை நோக்கி உருவத்தில் சிறுத்த இளவட்டப் பையன் கையில் கவணுடன் வருவதைக் கண்டபோது கோலியாத்தாலும் நம்ப முடியவில்லை. கோலியாத், 50 அடி தூரத்தில் தன் அருகில் வந்து தாவீது நின்றதும் அவனைப் பார்த்து கொக்கரித்தான்.

    ஏளன வார்த்தைகளுக்கு தாவீது சிறிதும் சினம் கொள்ளாமல், “நீ உனது வாளுடனும், ஈட்டியுடனும், கேடயத்துடனும் என்னிடம் போரிட வருகிறாய். நானோ பரலோகத் தந்தையாகிய கடவுளின் பெயரால் உன்னிடம் சண்டையிட வந்தேன். இன்று கடவுள் உன்னை என் கையில் ஒப்படைத்து விடுவார், நான் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று கூறினான். இப்படி கூறிக்கொண்டே கோலியாத்தை நோக்கி ஓடினான். தனக்கும் கோலியாத்துக்கும் மத்தியில் தாக்குவதற்கு இணக்கமான இடைவெளி என அனுமானித்ததும் சட்டென்று தன் பையிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்த தாவீது, அதைத் தன் கவணில் வைத்தான். கண் இமைப்பதற்குள் முழு பலத்துடன் அதைச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசினான்.

    அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டுபோய் கோலியாத்தின் நெற்றிப்பொட்டை தாக்கிப் பதம் பார்த்தது. அந்த ஒரு கல் தாக்கியவுடனே மூளை கலங்கி உயிரைவிட்டபடியே, மலை சரிவதுபோல் கீழே சரிந்தான் கோலியாத்.

    பல போர்களில் வெற்றிகளைத் தேடித் தந்தவன், மலைபோல் நம்பியிருந்த தங்களின் மாவீரன் விழுந்துவிட்டதை பெலிஸ்திய வீரர்கள் கண்டபோது, அதை நம்ப முடியாமல் அவர்களுக்குத் தொண்டை அடைத்தது. கீழே விழுந்து மாண்ட கோலியாத்தை நெருங்கிய தாவீது, சிதறிக்கிடந்த அவனது வாளை எடுத்து அதன் மூலமே அவனது தலையைத் தனியே கொய்தான். இதைக் கண்டு பெலிஸ்தியர் அனைவரும் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவர்களைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் துரத்தியடித்த இஸ்ரவேலர்கள் போரில் வெற்றியடைந்தார்கள். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது.
    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாககம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.

    கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மருதமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது

    இந்த நிலையில் வைகாசி விசாகமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சி அளித்தார். மகாதீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை. விழா மிக எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.இதேபோல மலைப்பாதையில் உள்ள இடும்பன் கோவிலில் இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த இடும்பன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் பெருமானுக்கு மஞ்சள் நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதன்பின் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    நாம் கர்வம் கொண்டு, மனதில் பெருமை கொண்டு வாழ முற்படும் போதுதான் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்பதை இந்த இறைமறை வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.
    மனிதன் சந்திக்கின்ற அத்தனை சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் முக்கிய காரணம் உள்ளது. அது- மனிதன் தன் கரங்களால் செய்கின்ற பாவங்களும், மனதால் ஏற்கின்ற கெட்ட எண்ணங்களும் தான்.

    இதுகுறித்து, அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

    “யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 4:173)

    நாம் கர்வம் கொண்டு, மனதில் பெருமை கொண்டு வாழ முற்படும் போதுதான் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம் என்பதை இந்த இறைமறை வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.

    அல்லாஹ்வின் அரசவையில் கண்ணியமிக்க அறிவுஜீவியாக இருந்த ‘இப்லீஸ்’ , தான் கொண்ட கர்வத்தின் காரணமாகவே அழிவைத் தேடிக்கொண்டான். இப்ராஹீம் நபி காலத்தில் வாழ்ந்த ‘நம்ரூத்’ என்ற மன்னனும் கர்வம் கொண்டு அழிந்து போனான். மூசா நபி காலத்தில் வாழ்ந்த ‘பிர் அவ்ன்’ என்ற கொடுங்கோல் அரசன் ‘நான் தான் இறைவன்’ என அகம்பாவம் கொண்டு திரிந்தான். பின்னர், அவனும் கடலில் மூழ்கி அழிந்து போனான். காரூன் என்ற பெரும் பணக்காரன் தான் சம்பாதித்த அத்தனை செல்வங்களும் தன் திறமையால் பெற்றுக்கொண்டது என்பதை கர்வத்தோடு சொல்லி, அதனால் பூமியில் புதைந்த வரலாறும் இறைமறையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கர்வம் கொண்ட யாரும் எந்த காலத்திலும் நிலைத்து வாழ்ந்ததில்லை. அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறை சொல்லும் செய்தியை அறிந்தும் ஏனோ தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையே அல்லாஹ் இவ்வாறு கண்டித்து கூறுகின்றான்:

    “பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமை அடித்துக் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 31:18)

    ‘கர்வம்’, ‘தலைக்கனம்’, ‘அகம்பாவம்’, ‘ஆணவம்’ ஆகிய தன்மையைக் கொண்ட குணாதிசயத்தை மனிதன் தன்னிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியையும் அல்லாஹ் தன் அருள் மறையிலே இவ்வாறு பதிவு செய்கின்றான்:

    “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள். அவ்வாறு உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களோடு இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 4:36)

    நாம் அல்லாஹ்வை பயபக்தியுடன் வணங்கி அடிபணியும் போது, அந்த ஏக இறைவன் முன்பு பெருமை பாராட்டுவதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்கின்ற உண்மை புரியவரும். இறைவன் முன்பு தலை குனியும் போது, தலைக்கனம் அங்கிருந்து அகன்றுவிடும்.

    அடுத்ததாக சொல்லுவது- உங்களது பெற்றோர்களுக்கும் அடிபணியுங்கள். பெற்றோர்கள் தான் நமது வளர்ச்சிக்காக பாடுபடும் தியாக சீலர்கள். அவர்கள் எப்பொழுதுமே நம்மை விட மேலானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.

    அடுத்ததாக ஏழைகளைப் பற்றி சொல்கிறான். அவர்களிடம், பணிவு, அன்பு, பிறரை மதிக்கும் குணாதிசயங்கள் காணப்படும். அப்படிப்பட்ட ஒரு நற்பண்பு நம்மிடம் இல்லை என்றால், அவர்களை விட நாம் மிக சாதாரணமானவர்கள் என்று எண்ணத் தோன்றும்.

    அடுத்து நண்பர்கள். அவர்கள் ஒரு கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மிடம் இருக்கின்ற குறை நிறைகளை எடுத்துச்சொல்லி நமக்கு வழி காட்டக் கூடியவர்கள். நமது துன்பத்திலும், துக்கத்திலும் கைகொடுத்து உதவக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்கின்ற எண்ணம் நம்மை சற்று சிந்திக்க வைக்கும்.

    பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி சொல்லும்போது, அவர்கள் நமக்காக எத்தனை விஷயங்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்தால், நம்மிடம் உள்ள கர்வம் நம்மைவிட்டு அகன்று போகும்.

    உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும் நன்றி செய்யுங்கள், என்று அல்லாஹ் சொல்லும் போது, மனித வாழ்வு என்பது தனிப்பட்ட வாழ்வு அல்ல, அது ஒன்றுபட்டு வாழ்கின்ற ஒரு வாழ்வியல் தத்துவம் என்கின்றான். நம்மை சுற்றி இருக்கின்ற அத்தனை பேர்களுடன் நாம் இணைந்து வாழும்போது, அவர்களின் தேவைகளை நாமும், நமது தேவைகளை அவர்களும் பூர்த்தி செய்வதை உணரலாம்.

    இதன்மூலம், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கின்றோம் என்பதும், ஒட்டுமொத்தமாக நாம் எல்லோருமே அல்லாஹ்வைச் சார்ந்து இருக்கிறோம் என்பதும் புலப்படும்.

    இந்த அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கும்போது சுபிட்சம் மிளிரத்தொடங்கும். நாமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    ×