என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்றவை ஜாதகத்தில் இடம்பெற்றால், அந்த நபர் புகழ்பெற்ற உலக செல்வந்தர்களில் ஒருவராக விளங்கலாம்.
    யோகங்களில், எத்தனையோ யோகங்கள் இருக்கின்றன. அவற்றில் மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்றவை ஜாதகத்தில் இடம்பெற்றால், அந்த நபர் புகழ்பெற்ற உலக செல்வந்தர்களில் ஒருவராக விளங்கலாம்.

    இந்த யோகம் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் ஜாதகத்தில் உள்ளது. அவர் மகர லக்னம். கடக ராசி லக்னத்திற்கு பாக்கியாதிபதியாகவும், சந்திரன் ராசிக்கு லாபாதிபதியாகவும் திகழ்கின்றன. சுக்ரன் லக்னத்திற்கு 2-ம் இடமான கும்ப ராசியில் வீற்றிருக்கின்றார். எனவே அவர் புகழ்மிக்கவராகவும், உலக செல்வந்தர்களில் ஒருவராகவும் திகழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவியின் திருநாமம், ‘அகிலாண்டேஸ்வரி’ என்பதாகும். ஆதிசங்கரர் இத்தல அம்மனுக்கு, சிவ சக்கரம், ஸ்ரீசக்கரம் என்னும் இரண்டு தாடங்கங்களை காதில் குண்டலங்களாக பிரதிஷ்டை செய்துள்ளார்.
    திருச்சி மாவட்டத்தில் உள்ளது, திருவானைக்காவல் திருத்தலம். இது திருச்சியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. புகழ்பெற்ற இந்த திருக்கோவில் பஞ்ச பூதத் திருத்தலங்களில், நீருக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயம் அம்பிகை, ஈசனிடம் உபதேசம் பெற்ற இடமாகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளை சிறுசிறு குறிப்புகளாக பார்க்கலாம்.

    * ஜம்பு மாத முனிவர் என்பவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது ‘ஜம்புவனம்’, ‘ஜம்புகேஸ்வரம், ‘ஜம்புவீச்வரம்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இறைவனின் பெயரும் ‘ஜம்புகேஸ்வரர்’ என்றானது. யானை வழிபட்ட காரணத்தால், ‘திருவானைக்காவல்’ என்றும் பெயர் பெற்றது.

    * இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவியின் திருநாமம், ‘அகிலாண்டேஸ்வரி’ என்பதாகும். இந்தக் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அம்மனின் சன்னிதியானது, ‘தண்டநாத பீடம்’ என்னும் ‘வராஹி பீடமாக’ விளங்குகிறது. ஆதிசங்கரர் இத்தல அம்மனுக்கு, சிவ சக்கரம், ஸ்ரீசக்கரம் என்னும் இரண்டு தாடங்கங்களை காதில் குண்டலங்களாக பிரதிஷ்டை செய்துள்ளார்.

    * சிவபெருமானின் கட்டளைப்படி, அம்பாள் பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாள். கடும் தவத்தின் மூலமாக மீண்டும் கயிலாயம் செல்லும் வகையில் ஈசனை நினைத்து வழிபாடுகள் செய்து வந்தாள், அம்பாள். இதற்காக காவிரி நீரில், லிங்கம் செய்து வழிபட்டாள். அந்த லிங்கத்தில் சிவபெருமான் எழுந்தருளி, அம்பிகைக்கு அருளாசி வழங்கினார். அம்பிகையால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் உள்ள தலம் என்பதால், இது பஞ்ச பூதத் தலங்களில் ‘நீர்த் தலம்’ ஆனது.

    * இத்தலத்தில் தவமிருந்த ஜம்பு முனிவருக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்ததோடு, நாவல் பழத்தை பிரசாதமாக வழங்கினார். இறைவனின் அருளால் கிடைத்த பழத்தை ஆவலோடு உண்டபோது, அதன் விதையையும் சேர்த்து விழுங்கிவிட்டார். அது வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலே மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ‘ஜம்பு’ என்றும் பெயர் உண்டு. இந்த மரத்தின் கீழ்தான், அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் அமைந்திருந்தது.

    * இந்த ஆலயத்தில் உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே, இத்தல இறைவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னிதிக்குச் செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னிதிக்கு திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
    நாராயணா கோவிலில் ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    பெங்களூரில் இருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, மேல்கோட்டை. இது ஒரு அழகிய மலை நகரம் ஆகும். இங்கு கோவில்கள், மடங்கள், சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செலுவராய சாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் காணாமல் போன சிலையை வைணவ பக்தர் ராமானுஜர் கண்டுபிடித்து, மீண்டும் அதை கோவிலுக்கு கொண்டு வந்து நிறுவியதாக புராதன வரலாறு சொல்லப்படுகிறது.

    இதனால் அங்குள்ள நாராயணா கோவிலில் விஷ்ணுவுடன் ராமானுஜருக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, மைசூர் மன்னர் கோவிலுக்கு வழங்கிய வைர கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடத்தப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல், மேல்கோட்டையில் மலை மீது பிரசித்தி பெற்ற யோக நரசிம்மசாமி கோவிலும் அமைந்திருக்கிறது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் அமைந்துள்ளது, மேல்கோட்டை. இது மைசூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
    நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் ஆகிய பஞ்ச பூதங்களைப் போல, ஐந்தாக அமைந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    இந்து சமய ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, ‘ஐந்து’ (பஞ்ச) என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் ஆகிய பஞ்ச பூதங்களைப் போல, ஐந்தாக அமைந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    பஞ்ச குமாரர்கள்

    * விநாயகர்
    * முருகர்
    * வீரபத்திரர்
    * பைரவர்
    * சாஸ்தா

    பஞ்சபுராணம்

    * தேவாரம்
    * திருவாசகம்
    * திருவிசைப்பா
    * திருப்பல்லாண்டு
    * திருத்தொண்டர் புராணம்

    பஞ்ச பட்ஷிகள்

    * வல்லூறு
    * ஆந்தை
    * காகம்
    * கோழி
    * மயில்

    பஞ்ச கங்கைகள்

    * ரத்தின கங்கை
    * தேவகங்கை
    * கயிலாய கங்கை
    * உத்திரகங்கை
    * பிரம்ம கங்கை

    பஞ்சாங்கம்

    * திதி
    * வாரம்
    * நட்சத்திரம்
    * யோகம்
    * கரணம்

    பஞ்ச ரிஷிகள்

    * அகத்தியர்
    * புலஸ்தியர்
    * துர்வாசர்
    * ததீசி
    * வசிஷ்டர்

    பஞ்ச உற்சவம்

    * நித்ய உற்சவம்
    * வார உற்சவம்
    * பட்ச உற்சவம்
    * மாதாந்திர உற்சவம்
    * வருடாந்திர உற்சவம்

    பஞ்ச நந்திகள்

    * போக நந்தி
    * வேத நந்தி
    * ஆத்மா நந்தி
    * மகா நந்தி
    * தர்ம நந்தி

    பஞ்ச மூர்த்திகள்

    * விநாயகர்
    * முருகர்
    * சிவன்
    * அம்பாள்
    * விஷ்ணு

    பஞ்ச பல்லவம்

    * அரசு
    * அத்தி
    * வில்வம்
    * மா
    * நெல்லி

    பஞ்ச இலைகள்

    * வில்வம்
    * நொச்சி
    * விளா
    * துளசி
    * கிளுகை

    பஞ்ச ஈஸ்வரர்கள்

    * பிரம்மா
    * விஷ்ணு
    * ருத்ரன்
    * மகேஸ்வரன்
    * சதாசிவன்

    பஞ்ச கன்னியர்கள்

    * அகலிகை
    * திரவுபதி
    * சீதை
    * மண்டோதரி
    * தாரை

    பஞ்ச ஹோமங்கள்

    * கணபதி ஹோமம்
    * சண்டி ஹோமம்
    * நவக்கிரக ஹோமம்
    * மகா சுதர்சன ஹோமம்
    * ருத்ர ஏகாதச ஹோமம்

    பஞ்ச சுத்திகள்

    * ஆத்ம சுத்தி
    * ஸ்தான சுத்தி
    * திரவிய சுத்தி
    * மந்த்ர சுத்தி
    * லிங்க சுத்தி

    பஞ்சாபிஷேகம்

    * வில்வ இலை கலந்த நீர்
    * ரத்தினங்கள் போடப்பட்ட நீர்
    * பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர்
    * கிராம்பு, கொரோசனம் கலந்த நீர்
    * விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் கலந்த நீர்

    பஞ்ச கோசம்

    * அன்னமய கோசம்
    * பிராணமய கோசம்
    * ஆனந்தமய கோசம்
    * மனோமய கோசம்
    * விஞ்ஞானமய கோசம்

    பஞ்ச காவ்யம்

    * பசுவின் பால்
    * தயிர்
    * நெய்
    * கோமியம்
    * சாணம்
    ஒருவரது வாழ்க்கையில் குருவானவர், உபதேசம் மட்டுமே அளிக்க முடியும். ஆன்மிக சாதனையை, தனிப்பட்ட மனிதன்தான் செய்து உயர்வடைய வேண்டும்.
    மரணப் படுக்கையில் இருந்த குருவின் அருகில் அமர்ந்து, தன்னுடைய நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான், சீடன். அவனது கவலை படர்ந்த முகத்தைப் பார்த்ததும், “ஏன் இப்படி கவலையாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.

    அதற்கு அந்த சீடன், “குருவே.. இதுநாள் வரை நீங்கள் கூறியபடியே என்னுடைய வாழ்க்கையை அமைத்து வந்தேன். ஜெபம், தியானம் என்று தொடர்ந்து வந்தேன். இருந்தாலும் நான் ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடையும் காலம் எது என்பது எனக்கு தெரியவில்லை. அந்த நிலையை அடையும் முன்பாகவே என்னை விட்டு நீங்களும் செல்லப்போகிறீர்களே.. இனி நான் எனது ஆன்மிக பயிற்சியை எப்படி தொடர்வது?, உங்கள் காலத்திற்குப் பிறகு, என்னுடைய சந்தேகங்களை யாரிடம் கேட்பது?. அந்த வருத்தம்தான் என்னை அதிக துயரத்தில் ஆழ்த்துகிறது” என்றான்.

    அவனிடம் குரு, “கவலைப்படாதே.. என்னுடைய படுக்கையின் அருகில் இருக்கும் பெட்டியை எடுத்துக்கொள். அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன். அது அனைத்து விஷயங்களையும் உனக்கு போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் போது மட்டும், அந்தப் பெட்டியைத் திறந்து பார். உனக்கு என்னுடைய ஆசி எப்போதும் இருக்கும்” என்று வாழ்த்தி விட்டு இறந்து போனார்.

    நாட்கள் சென்றன...

    சீடனுக்கு தன்னுடைய ஆன்மிக சாதனையில், பலன் கிடைப்பதாக தெரியவில்லை. தியானம், ஜெபத்தை விட்டு விட்டு போய்விடலாமா? என்று கூட நினைத்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு, மரணப் படுக்கையில் குரு சொன்னது நினைவுக்கு வந்தது. உடனடியாக குரு தனக்கு அளித்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அதன்பிறகான நாளில் அவனுக்கு ஆன்மிகம் கைவரப் பெற்றது. அவன் ஆன்மிகத்தின் உயர்ந்த நிலையை எட்டினான்.

    இன்னும் சில நாட்கள் சென்றன.. அவன் தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் பரப்பினான். அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மக்கள் பலரும் கலவரம் செய்தனர். மக்களுக்கு தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைக்க வழி தெரியாமல் திணறினான். அந்த நேரத்திலும் அவன் தன்னுடைய குரு கொடுத்த பெட்டியை மீண்டும் திறந்து பார்த்தான். அதன்பின் சில காலத்திலேயே மக்கள், அந்த சீடனுடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இப்படியே தனக்கு சிக்கல்கள் உருவாகும் வேளையில் எல்லாம் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து, குருவின் உபதேசத்தின் படி நடந்து வெற்றி பெற்றான்.

    இப்போது அந்த சீடனின் இறுதி காலம் நெருங்கி விட்டது. அந்த சீடனுக்கும் ஒரு சீடன் இருந்தான். அவனிடம் அந்தப் பெட்டியை அளித்து, “என் பிரியத்திற்குரிய சீடனே.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திறந்து பார். எனது உபதேசம் உனக்கு கிடைக்கும்” என்று கூறி விட்டு, அவனும் மரணித்துப் போனான்.

    அவனது மரத்திற்குப்பின்னர், அவனது சீடனுக்கும் ஆன்மிக சாதனையில் தொய்வு நிலை ஏற்பட்டது. உடனடியாக அவன் தன்னுடைய குரு அளித்த பெட்டியை திறந்து பார்த்தான். அதில் ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. ‘இன்னொரு முறை முயற்சி செய்’ என்ற அந்த வாசகத்தின் படி, தன்னுடைய முயற்சியை தொடர்ந்தவனுக்கு ஞானம் கைவரப்பெற்றது.

    ஒருவரது வாழ்க்கையில் குருவானவர், உபதேசம் மட்டுமே அளிக்க முடியும். ஆன்மிக சாதனையை, தனிப்பட்ட மனிதன்தான் செய்து உயர்வடைய வேண்டும்.
    திருப்பதியில் சாதாரண நாட்களில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.
    திருப்பதி :

    திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர்கள் ஆண்டுதோறும் நியமிக்க படுவார்கள். இந்தாண்டு அறங்காவலர் குழு தலைவராக ஒய்.எஸ்.சுப்பா ரெட்டி மற்றும் 35 அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவஸ்தானத்திற்கு தேவையான முடிவுகள் அறிவிப்பார்கள்.

    இந்த ஆண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) அறங்காவலர் குழு கடைசி கூட்டம் அன்னமய்யா பவனில் நடைபெறுகிறது. அப்போது தேவஸ்தானத்தின் செயல்பாடுகள், வருவாய் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.

    திருப்பதியில் சாதாரண நாட்களில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாபரவல் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

    தற்போது ஆந்திராவில் தொற்று பரவல் குறைந்து வருவதால் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது மற்றும் இலவச தரிசனம் டிக்கெட் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திராவில் முழுமையாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட உடன் கூடுதலாக ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான தேவஸ்தான குழு பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை ஆந்திர அரசு தேர்வு செய்கிறது.
    விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.
    ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார். அப்படி இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.

    “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.

    “பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதைகள் இறை வார்த்தைகளைக் கேட்டும், மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.

    நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும், சில சமயம் 60 மடங்கும், சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.

    இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.
    மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.
    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.

    பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

    மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

    பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

    பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

    சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

    சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.
    இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது
    பெயர்: திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்
    மூலவர்: வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)
    உற்சவர்: கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்
    தாயார்: வைகுண்டவல்லி, பூதேவி
    உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி
    தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி

    கோவில் அமைப்பு

    9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.

    உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.

    தல புராணம்

    பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

    பெயர்க் காரணம்

    உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சிறப்பு

    இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

    திருவிழாக்கள்

    இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.
    சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய்உடைத்தும் வழிபட்டனர்.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நேரத்திலும் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலையிலேயே இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்தனர் தொடர்ந்து அவர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய்உடைத்தும் வழிபட்டனர். மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் புதுமணதம்பதிகள் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில், சமயபுரம்மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். சில ஜோடிகள் ஆதிமாரியம்மன் கோவில் முன்பாக திருமணமும் செய்து கொண்டனர்.

    தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு கூட்டம் கூட்டமாகச்சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் சென்றதை பார்க்கமுடிந்தது.இது கொரோனா வைரஸ் பரவலை அதிகப்படுத்தும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.
    எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய அவருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஹிமகுந்த ம்ருணாளாபம்
    தைத்யானாம் பரமம் குரும்!
    ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
    பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

    தமிழாக்கம்

    சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
    வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
    வெள்ளிச் சுக்ர வித்தக வேந்தே
    அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே !

    தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணெய்  அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
    நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
    பூஜை: தேவி பூஜை.
    ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

    சுக்கிர காயத்ரி மந்திரம்

    அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
     
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    ஊஞ்சல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    ×