என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
    மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும், வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

    அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

    மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.

    இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4-வது நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான ‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’ நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.

    விழாவின் 4-வது நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான ‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’ நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. அதாவது, வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்மணிகளை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது. சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து விடுமே என்று வேதனையுடன் வேதபட்டர் வந்து பார்த்தார். அப்போது நெல்மணிகளை ஈசன் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இதுவே ‘திருநெல்வேலி’ என பெயர் வரக்காரணம் என்றும் கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில், நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக சுவாமி சன்னதி அருகே ஒரு பெரிய தட்டில் நெல்மணிகள் வைக்கப்பட்டு இருந்தன. மழை பெய்ததை நினைவூட்டும் வகையில் கோவில் ஊழியர்கள் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தெளித்து மழைநீர் போல் தண்ணீர் அந்த பகுதியில் தேங்கி நின்றது. ஆனால் அந்த நெல் வைத்திருந்த தட்டு அருகில் மட்டும் தண்ணீர் இல்லை. அந்த நெல் மணிகளை திரளான பக்தர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சாமியை வழிபட்டனர்.
    வைகுண்ட ஏகாதசி திதியை ஒட்டி எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    இந்துகளின் முக்கிய விரதவழிபாட்டில் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி. தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி வெகுவிமர்சியாக கொண்டாடபட்டு வருகிறது.

    சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரி நாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    பின்னர் கோவிலின் வடபுறம் அமைந்துள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாகசுவாமி பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், 2வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், மகேந்திரபுரி எஸ்.சி.சி.பி. காலனியில் உள்ள வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் சீனிவாசப்பெருமாள் கோவில், சின்னதிருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

    வைகுண்ட ஏகாதசி திதியை ஒட்டி எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய நிகழ்வில், கோ பூஜை, சுவாமி அழைப்பு மற்றும் பல்வேறு யாக வேள்விகளை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம பெருமாள் பரமபத வாயில் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பக்தர்கள் கோவிந்தா...... கோவிந்தா....... என்று கோசம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரமபத வாயில் மேல் பகுதியில் அமைந்துள்ள பல்லி உருவத்தை வணங்கிய பக்தர்கள் பரமபத வாயில் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், வெள்ளைக்காரடு திம்மராய பெருமாள் திருகோவில், பூலாம்பட்டி அடுத்த கூடல் மலைமீது அமைந்துள்ள மாட்டுப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில் கோட்டையில் அமைந்துள்ளது. மன்னர்கள் காலத்தில் இந்த திருக்கோவில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்பு புஷ்ப பல்லக்கில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் தீபாராதனைய்ம் நடந்தது. பின்னர் அதிகாலை 5.20 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். பின்பு சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மார்கழி உற்சவமானது கடந்த 3-ந் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அன்று முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் பகல்பத்து உற்சவம் நேற்று நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமான நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரியபெருமாள் பின்பு ஆண்டாள்- ரெங்கமன்னார் வந்தனர். இதில் கோவில் பட்டாசாரியார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளியே நின்றிருந்து ஆண்டாள் -ரெங்கமன்னாரை தரிசித்தனர். 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். .

    இதையும் படிக்கலாம்....தைதிருநாள் நாளை மாலை பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?
    திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருப்பாவை தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருப்பாவை தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடந்தது.

    இதையடுத்து வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காலை 9 மணிக்கு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம் தோமாலை உற்சவம் மற்றும் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

    சொர்க்கவாசல் திறப்புயொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன. இதேபோல் கோவில் நுழைவாயில், கொடிமரம், கோவில் பிரகாரம் முழுவதும் பல்வேறு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பதியில் நேற்று 25,524 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,052 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.1.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    தைத்திருநாள் வழக்கமாக 1-ந்தேதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது.
    வேலூர் :

    ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தை கணிதர் சுந்தரராஜன் ஐயர் கணித்துள்ளார். அவர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ள தகவல் படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.

    இந்த பிலவ ஆண்டு தைத்திருநாளில் பொங்கல் வைக்கும் நேரம் குறித்து அவர் கணித்துள்ளார். தைத்திருநாள் வழக்கமாக 1-ந்தேதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது.

    வாக்கிய ரீதியாக அகஸ் கணக்கை வைத்துதான் இது கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 60 நாழிகை இரவு பகலாக 30 நாழிகையாக பிரிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு நாழிகையாகவும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒரு நாழிகையாகவும் உள்ளது.

    அதன்படி சூரிய பகவான் தை 1-ந்தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    அப்போதுதான் மகா சங்கராந்தி புரு‌ஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது.

    இந்த ஆண்டு தை 1-ந் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

    காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் உத்தராயண புண்ணிய கால தர்ப்பணம் செய்யும் நேரமாகும். வழக்கமாக தட்சிணாயன காலத்தை விட உத்ராயண காலத்தில் நோய்கள் பரவும் காலமாகும்.

    இந்த ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் தை 1-ந்தேதி அன்று மாலையில் அதாவது பின்னோக்கி பிறப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.

    வி‌ஷக்காய்ச்சல், புதுமையான வியாதிகள், புதிய வைரஸ் உருவாகும். மேலும் பொருளாதார நெருக்கடியும் பணவீக்கமும் ஏற்படும்.

    செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் .உணவு பொருட்கள் காய்கறி விலை உச்சத்தை தொடும்.

    இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி
    வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.
    கயிலாயத்தை ஆண்ட சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.
    உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத் தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன.

    எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

    மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதம் இருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும்.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நராராயணப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
    திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா பகல்பந்து உற்சவத்துடன் தொடங்கியது. அன்று ஆண்டாள் சன்னதி முன்பு பெருமாள் எழுந்தருளினார். காப்பு கட்டப்பட்டு பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

    இதை தொடர்ந்து காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளி, ஆழ்வார்களுக்கு மரியாதையும், மங்களசாசனமும் நடந்தது.

    10-ம் திருநாளன்று மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னைமர வீதி புறப்பாடு நடைபெற்றது. நேற்றுடன் பகல் பத்து நிறைவடைந்தது.

    இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித்தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பின்னர் இரவு 6 மணிக்கு பெருமாள் ராஜாங்க அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    வழக்கமாக இந்த கோவிலில் இரவு 11 மணிக்கு மேல் தான் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் இன்று இரவு 8 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வந்து நம்மாழ்வார்க்கும், பக்தர்களுக்கும் அருள்பாலிப்பார். தொடர்ந்து ஏகாதசி மண்டபம் சென்று பக்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னைமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து அம்பாள் சன்னதியில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவியாருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு இரவுப்பத்து உற்சவம் தொடங்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் முருகனின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் பூஜை செய்யப்பட்ட சேவல், மயில், வேல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகைகொடி ஏற்பட்டப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8 மணி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். வருகிற 17-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார். இதையடுத்து சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து 18-ந் தேதி அதிகாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு மேல் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறும். இதில், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். தேரை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆதிவாசிகள் வடம் பிடித்து இழுக்கின்றனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக கோவிலை சுற்றி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    19-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 20-ந் தேதி மகா தரிசனம் மற்றும் மாலை 4 மணிக்கு கொடி இறக்குதல் நடக்கிறது. 21-ந் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    சரவணம்பட்டியில் சிரவணமாபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூசி தேரோட்டத்தையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் மற்றும் உற்சவ மூர்த்தியான வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச விரதம் இருக்க கூடிய பக்தர்கள் காப்பும், மாலையும் அணிந்து கொண்டனர்.
    நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட திருநாட்கள் தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும், தைப்பூசம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

    ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி தைப்பூசத் திருவிழா வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்தாண்டு மாலையணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் நேற்றும், நேற்று முன்தினமும் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். இதனால் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டம் நிரம்பியது. பக்தர்கள் வந்த வாகனங்களால் நேற்று நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது.
    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். தர்கா நிர்வாகம் சார்பில் 45 பேர் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சந்தனக்கூடு ஊர்வலத்தின்போது 8 மின் அலங்கார ஊர்திகள் வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்தனக்கூடு மட்டும் நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சொர்க்கவாசல் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    ×