என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவில் இந்திர விமானத்தில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் என தலபுராணம் கூறுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகிறார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 3-ம் நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 7 மணியளவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர். பின்னர் மாலை 6.15 மணியளவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்பாக, ஸ்ரீவெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
    பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித்தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து தனக்கு சாகாவரம் வேண்டும் என கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை சிறையிலடைத்தனர்.

    மிஞ்சிய தேவர்கள், இந்த துன்பத்தில் இருந்து எங்களை காக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் ஓடினர். அவர் சிவனிடம் முறையிட்டார். சிவன் தனது நெற்றி கண்ணை திறந்தார். அதிலிருந்து  அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அது ஆறு நெருப்பு பந்துகளாக மாறின.     சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெற்றன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர்.

    அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்க கார்த்திகை பெண்கள் வந்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினார்கள். ஓடும் போது பார்வதி தேவியின் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழுந்தன. அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார்.

    ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்த்து  நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.

    சிவன் அருளால் அவர்களுக்கு வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான்.

    சிவன் அவர்களிடம், மக்களே! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழ்ந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நிகழ, நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம் என்றார்.

    பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச்சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்தனர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது ஆறு குழந்தைகள் ஒரு குழந்தையாக மாறியது. அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் சிவன், இந்தப் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள்.

    உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். முருகனிடம் அவர் உருவான காரணத்தை கூறிய சிவனார்,லட்சக்கணக்கான படை வீரர்கள் உனக்கு உண்டு. இவர்களுக்கு சேனாதிபதியாக வீரபாகு  தலைமை தாங்குவான் என்றார். அப்போது பார்வதிதேவி தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கினாள். அந்த சக்தியே வெயில் உகந்த அம்மனாக திகழ்கின்றாள். முருகனுக்கு சக்திதேவி தான் வேல் கொடுத்தாள். அதன் காரணமாக வேலை ஈந்த அம்மன் என்ற சொல்லே வேலீந்த அம்மன் என்றாகி வெயிலுகந்த அம்மனாக மாறியதாக கூறப்படுகிறது.

    இந்தக்கோயில் திருச்செந்தூரில் முருகன் கோயில் அருகே உள்ளது.  திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்பாக, ஸ்ரீவெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப்பெருமான் சூட்சும உருவில் அம்பாள் திருக்கோயிலுக்கு வந்து, தனது அன்னைக்கு தன் கைகளாலே பூஜை செய்து அருளாசி பெற்று வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்வதாக ஐதீகம். தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்மனுக்கு பாரம்பரியமாக ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.

    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரகுணபாண்டியன் என்னும் மன்னன் குழந்தை பாக்கியம் இல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோயில் வந்து கந்தசஷ்டி விரதம் இருந்தான். அதன் பயனாக மன்னனின் மனைவி கருவுற்றாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும், உடல் மனித உருவிலும் இருந்தது. அதை கண்டு மன்னன் பெரிதும் கவலையுற்றான்.

    மன்னனின் கனவில் காட்சி கொடுத்த முருகப்பெருமான், ஊரின் வடக்கே வீற்றிருக்கும் என் அன்னையிடம் சென்று வேண்டினால் உன் குறை தீரும் என்று கூறியதைக் கேட்டு, மன்னன் இவ்விடம் வந்து கடும் விரதம் மேற்கொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்தான். இரக்கமே உருவான அன்னை வெயிலுகந்தம்மன் ஆடி செவ்வாய்க்கிழமை அன்று என் எதிரே இருக்கும் கடலில் இறங்கி உன் குழந்தையோடு தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள் என்று அருள்வாக்கு தந்தாள். அன்னை கூறியபடியே மன்னன் தனது குதிரை முகம் கொண்ட குழந்தையோடு கடலில் இறங்கினான்.

    அதுவரை ராட்சத அலைகளால் ஆர்ப்பரித்து கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் குதிரைமுகம் மாறி, அழகான பெண் குழந்தை முகமாக உருமாறியது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் அந்த இடம் வதனாரம்ப தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. குழந்தையின் அழகான முகத்தைக்கண்டு ஆனந்தம் கொண்ட மன்னன் குழந்தையோடு அன்னையை தரிசிக்கச் சென்றபோது அன்னையின் முகம் குதிரை முகமாக மாறி இருந்தது. அதைக்கண்டு மன்னன் அதிர்ச்சியுற்றான்.

    மன்னன் அன்னையிடம் காரணம் வேண்டியபோது என்னிடம் வந்து ‘‘அம்மா என்று யார் என்ன கேட்டாலும் என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்களின்படி, நீ அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உன் கர்மபலன்கள் தீர்ந்ததும். நான் ஏற்றுக்கொண்ட குதிரை முகம் மாறிவிடும்’’ என்று அன்னை அபயம் அளித்தாள்.

    கோயிலின்றி வராந்தாவில் இருந்தால் வேல் ஈந்த அம்மன், வெயிலுகந்த அம்மன் என அழைக்கப்பட்டாள். அன்னையின் கருணையை எண்ணி வியந்த மன்னன் அன்னைக்கு கோயில் கட்டி சிறப்பித்தான். இன்றும் இக்கோயிலில் கொடிமரத்தின் அருகே பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். இன்றும் ஆடிச்செவ்வாய் அன்று அதிகாலையில் பெண்கள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி கால்களில் நலுங்கு மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை கொண்டு அன்னையை வணங்கினால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    மேலும் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை பேறு பெறுவார்கள் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் அதிக அளவில் இங்கு வந்து அன்னையை தரிசிக்கிறார்கள்.  பன்னீர்மரம் ஸ்தலவிருட்சம், ஆவணி மற்றும் மாசித்திருவிழாவில் பத்தாம்நாள் அன்று அன்னைக்கு கடலில் எழுந்தருளி தன் புதல்வனான சண்முகருக்கு அருளாசி வழங்குகிறாள். அதன் பின்பே  சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் தொடங்கும்.
    பொங்கல் வழிபாடு நடைபெறும் 17- ந் தேதியன்று சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களின் குத்தியோட்டம், அம்மன் ஊர்வலம் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும்.
    திருவனந்தபுரம் அருகில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.

    இந்த கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா நேற்று (புதன்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தல் சடங்குடன் தொடங்கியது.

    பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 17-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டைப்போல், கோவில் வளாகத்தை சுற்றி 200 பக்தர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற பக்தர்கள் அவரவர் வீட்டின் முற்றங்களில் பொங்கலிட தடையில்லை. அன்றைய தினம் காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கும். மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் நடைபெறும்.

    11-ந் தேதி காலை 8.30 மணிக்கு குத்தியோட்ட விரதம் தொடங்குகிறது.. விழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.05 மணிக்கு தீபாராதனை 6.40 மணிக்கு உஷபூஜை, 6.50 மணிக்கு உஷ ஸ்ரீபலி, 7 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 உச்ச ஸ்ரீபலி, 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை, 9.30 மணிக்கு அத்தாள ஸ்ரீபலி, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, அதன்பிறகு நடை அடைக்கப்படும்.

    பொங்கல் வழிபாடு நடைபெறும் 17- ந் தேதியன்று சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களின் குத்தியோட்டம், அம்மன் ஊர்வலம் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். மறுநாள் இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

    விழாவையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவையொட்டி வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை எந்த வித குறைபாடுகளும் இன்றி செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    மாசித்திருவிழாவை பொறுத்தவரை சாதி, மத பேதமின்றி நடத்தப்படும் திருவிழாவாக இருக்கிறது. இந்த திருவிழாவை மத நல்லிணக்க திருவிழா என்று கூறுவதில் மிகையில்லை.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் காலத்து படை வீரர்கள் மாரியம்மனை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். மலைக்கோட்டைக்கு அருகில் மாரியம்மன் கோவில் அமையப் பெற்றதால் காலப்போக்கில் கோட்டை மாரியம்மன் என்ற பெயர் விளங்கியதாக கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த திருவிழாவில் பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், அம்மனின் ஊஞ்சல் மற்றும் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) பூக்குழி இறங்குதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், கொடியிறக்கம் நடைபெறுகிறது. அதன் பின்னர் அம்மனின் ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவம் நடைபெற்று மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. பொதுவாக கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அக்னிச்சட்டி உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் கேட்டவருக்கு கேட்ட வரங்கள் தரும் கோட்டை மாரியம்மனாக இங்கு அம்மன் அருள்பாலித்து வருகிறார். மாசித்திருவிழாவை பொறுத்தவரை சாதி, மத பேதமின்றி நடத்தப்படும் திருவிழாவாக இருக்கிறது. இந்த திருவிழாவை மத நல்லிணக்க திருவிழா என்று கூறுவதில் மிகையில்லை.
    தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.
    நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர்கள்தான் நம் அம்மாக்கள். காளிகாம்பாளும் அப்படித்தான். உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும்.. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் காளிகாம்பாள்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.

    தை வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.

    தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.

    தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அதில் அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ‘லலிதா சகஸ்ர நாமம்’ பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.
    அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது.
    திருமலையில் அனுமன் பிறந்த இடமாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலைப் பகுதியைச் சுற்றி புனித தலமாக மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஆகாச கங்கை பகுதியில் 16-ந்தேதி நடக்கிறது.

    முன்னேற்பாடுப் பணியை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது ஜவகர்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலையில் ஆகாச கங்கைக்கு அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலை ஆஞ்சநேயர் பிறந்த இடமாக புராணம் மற்றும் அறிவியல் சான்றுகளுடன் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது. நிகழ்ச்சியின்போது அனுமன் பிறப்பு குறித்த புத்தகமும் வெளியிடப்படுகிறது.

    காணிக்கையாளர்கள் உதவியோடு அஞ்சனாதேவி, பால ஆஞ்சநேயர் கோவில்கள், முக மண்டபம், கோபுரங்கள், கோ-கர்பம் அணை அருகில் அமைக்கப்படும். புகழ்பெற்ற கலை இயக்குனர் ஒருவரின் வடிவமைப்பில் கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் 1.5 ஏக்கர் நிலத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பாக அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தியான மண்டபம், தோட்டம் அமைக்கப்படும். பூமி பூஜை போட்டதும் அங்குப் பணிகள் விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
    ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    19-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
    பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில் குடமுழுக்கு 43 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது.
    பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் கிராமத்தில் காருடைய அய்யனார்- வீரனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் வரலாறு சிறப்பு மிக்கதாகும். ஸ்ரீரங்கத்திலிருந்து இருவர் தெற்குத் திசை நோக்கி தலையில் காருடைய அய்யனார்- வீரனார் பரிவார தெய்வங்கள் அடங்கிய பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தனர்.

    ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வனத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது பெட்டியை தூக்கி வந்தவர் மற்றவரிடம் இந்த பெட்டியை கீழே இறக்கி வைக்கக் கூடாது. அருகில் உள்ள குளத்துக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றார். ஆனால் பெட்டியை நீண்ட நேரமாக தலையில் வைத்துக் கொண்டு இருந்தவர் பெட்டியின் கணம் அழுத்தவே கீழே வைத்துவிட்டார். குளத்துக்கு சென்றவர் திரும்பி வந்து பெட்டி கீழே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். பெட்டியை இருவரும் தூக்க முயன்றபோது பெட்டியை அசைக்க முடியவில்லை. அந்த வனத்திலேயே சாமி சிலைகளை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த ேகாவிலில் கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காலை விநாயகர் வழிபாடும் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 7-ந்தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. 8-ந்தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பூஜையை தொடங்கி வைத்தார்.

    9-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று (10-ந்தேதி) 5-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. நாளை காலை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம்கால யாக பூஜையும் 8.30மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மகா குடமுழுக்கும் காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீ.பாரதிதாசன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆலத்தூர் கிராம மக்கள் மற்றும் வெளிநாடுவாழ் மக்கள் செய்து வருகின்றனர்.
    கும்பகோணத்தில் உள்ள 3 வைணவ கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி வரை விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் வீதிஉலா நடக்கிறது.
    கும்பகோணம் நகரில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த 5 வைணவ கோவில்கள் உள்ளன. இந்த வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்கும் சக்கரபாணி கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று காலை கொடிமரம் அருகே சக்கரபாணி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 18-ந்தேதி வரை விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் வீதிஉலா நடக்கிறது.

    வருகிற 17-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாசிமகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சக்கரபாணி தேரில் எழுந்தருளி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    கும்பகோணம் ராஜகோபாலசாமி கோவிலில் ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருள நேற்று காலை மாசிமக விழா கொடியேற்றம் நடந்தது.

    ஆதிவராக பெருமாள் கோவில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளினார். தொடர்ந்து காலை கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதன் பின்னர் தங்கரத புறப்பாடு நடந்தது.
    பழனி முருகன் கோவிலில், தை மாத கார்த்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், காலை 8 மணிக்கு சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடந்தது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.தை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 70 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்து கொண்டனர். பின்னர் 9 மணிக்கு ராக்கால பூஜையில் சுவாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு 5 தீர்த்தங்கள் உள்ளது. இதில் முதாலாவது மணிமுக்தாறு ஆகும். இது சிவனால் உருவாக்கப்பட்டது. அடுத்ததாக, பிரம்மா பழமலைநாதரை வழிபடுவதற்காக முன் செய்ய வேண்டிய நீராடலுக்கு உருவாக்கிய தீர்த்தமே அக்னி தீர்த்தமாகும். இது கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    அடுத்ததாக சக்கர தீர்த்தம். இது திருமால் தன் சக்கரத்தால் உருவாக்கியதால் சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள நந்தவனத்தில் அமைந்து இருக்கிறது. இதில் திருமாலும், லட்சுமியும் நீராடி பழமலை நாதரை வழிபட்டனர்.

    பெரிய நாயகி கோவிலின் முன்பு குபேர தீர்த்தம் அமைந்துள்ளது. குபேரன் உருவாக்கியதால் இது இப்பெயர் பெற்றது. இது தற்போது கிணறு வடிவில் உள்ளது. வன்னியடி பிரகாரத்தின் தென்கிழக்கு பகுதியில் கிணறு வடிவில் நித்தியானந்த கூபம் என்கிற தீர்த்தம் உள்ளது. இது பிரம்மனால் படைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. நித்தியானந்தம் என்றால் வீடுபேறு என பொருளாகும். இந்த தீர்த்தம் தான் கோவிலின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    ×