என் மலர்tooltip icon

    தரவரிசை

    கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டாம் ஹிட்டில்டன், மார்க் ரஃபலோ ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தோர் : ரக்னராக் படத்தின் விமர்சனம்
    தோரின் உலகமான ஆஸ்கார்டில் தன்னுடைய அப்பா உருவத்தில் இருக்கும் லோகி சந்திக்கிறார். இவன் தந்தை இல்லை என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து தன் அப்பாவை தேடி உலகிற்கு வருகிறார். அங்கு, தன்னுடன் வந்த லோகி, தன்னுடைய சகோதரர் என்பது அப்பா மூலம் தெரிந்துக் கொள்கிறார். இந்நிலையில், தோரின் அப்பா இறக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தோரின் சகோதரி ஹெலா, தோரின் ஆயுதமான சுத்தியலை சாதரணமாக உடைத்தெரிந்து, ஆஸ்கார்டை தன் வசப்படுத்தி, தோரையும், லோகியையும் வேற்று கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார்.

    வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டை எப்படி மீட்டெடுக்கிறான் என்பதே தோர் : ரக்னராக் படத்தின் கதை.

    மார்வெல்லின் சூப்பர் ஹீரோ பட வரிசையில், இப்படமும் அமைந்திருக்கிறது. மல்ட்டி ஹீரோக்களை வைத்து அவர்களுக்குள்ளே அவர்களை கலாய்த்து மிகவும் சுவாரஸ்யமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தைகா வைடிடி. ஹீரோக்களை வைத்து மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பல பிரம்மாண்டமான காட்சிகள் கண்களுக்கும் விருந்தாகவும், ரசிக்கும் படியாகவும் அமைத்திருக்கிறார்.

    தோராக நடித்திருக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், லோகியாக நடித்திருக்கும் டாம் ஹிட்டில்டன், ஹல்க்காக நடித்திருக்கும் மார்க் ரஃபலோ ஆகியோர் நடிப்பில் ஒருத்தருக்கொருவர் குறைந்தவர் இல்லை என்று போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சகோதரியான ஹெலா கதாபாத்திரத்தில் வரும் கேட் பிளாங்கெட் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.

    குட்டிக்குட்டியாக பல கதைகள் இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. ஒவ்வொன்றிலும் ரசித்து சிரிக்க அத்தனை காட்சிகள், வசனங்கள். கொஞ்சம் கதை, நிறைய காமெடி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கல் மனிதன் கார்க் அடிக்கும் ஒன் லைனர்கள் சிறப்பு.

    ஜாவியரின் ஒளிப்பதிவு திரையை விட்டு கண்களை விலக மறுக்கிறது. அந்தளவிற்கு திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் மதர்ஸ்பாவின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தோர் : ரக்னராக்’ மிரட்டல்.
    எம்.பிரதாப் முரளி இயக்கத்தில் நாசர், மகேந்திரன், தீரஜ், தனு ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் திட்டிவாசல் படத்தின் விமர்சனம்.
    மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த ஊர் கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்த கிராமத்தை தன்வசப்படுத்த அமைச்சர் ஒருவர் திட்டமிடுகிறார்.

    அதற்காக காவல்துறை, வனத்துறை, அரசியல் என அனைத்தையும் பயன்படுத்தி அந்த ஊர் மக்களை வெளியேற்ற நினைக்கிறார். ஆனால் ஊர் மக்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஊர்த்தலைவரான நாசர் கொல்லப்படுகிறார்.



    மேலும் அந்த கிராமத்து இளைஞர்களான நாயகர்கள் மகேந்திரன், வினோத் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்து, நக்சலைட் என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் மகேந்திரனின் காதலியான தனு ஷெட்டி பலாத்காரம் செய்யப்படுறார்.

    இவ்வாறாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தனது கிராமத்தையும், ஊர் மக்களையும் தனு ஷெட்டி காப்பாற்ற போராடுகிறார். கடைசியில் அவர்களது மலை கிராமம் மீட்கப்பட்டதா? சிறையில் அடைக்கப்பட்ட ஊர் மக்கள், இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்களா? அமைச்சர்களை பழிவாங்கினாரா? அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஊர்த் தலைவராக வரும் நாசர் தனது அனுபவ நடிப்பை வெளியிப்படுத்தி இருக்கிறார். ஒரு மலைவாழ் கிராமத் தலைவராக அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மகேந்திரன், வினோத் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கின்றனர். தனு ஷெட்டியின் கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. இதுதவிர ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.  

    மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் பற்றிய யதார்த்தமான சூழலை கருவாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரதாப் முரளி. மக்களிடம் உள்ள பிரச்சினைகளும், போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.



    ஜி.ஸ்ரீநிவாசனின் ஒளிப்பதிவில் மலைவாழ் பிரதேசத்தை வளமாக காட்டியிருக்கிறது. ஜெர்மன் விஜய், ஹரிஷ், சதீஷ் இசையில் பின்னணி இசை சிறப்பு. பாடல்கள் கேட்கும் ரகம்.

    மொத்தத்தில் `திட்டிவாசல்' இயற்கைக்கான போராட்டம்.
    பசங்க படத்தில் நடித்த கிஷோர் மற்றும் மேகனா நடிப்பில் அய்யனார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உறுதிகொள்’ படத்தின் விமர்சனம்...
    12ம் வகுப்பு படிக்கும் கிஷோர் படிப்பில் மிகவும் மக்காக இருக்கிறார். இருப்பினும், சேட்டை செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால், அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடிக்கடி அடிவாங்குகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவியான ஹீரோயின் மேகனாவை காதலிக்கிறார்.

    12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காதல் கைகூடும் என்பதால் கிஷோர், பொது தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறார். இதனால், அவரது அப்பா வீட்டை விட்டு துரத்த, பசங்களுடன் சேர்ந்து குடிப்பது, கோலி விளையாடுவது என்று ஊர் சுற்றி வருகிறார். ஒரு அடிதடி வழக்கில் சிறைக்கும் சென்று வருகிறார்.

    இதற்கிடையே, கிஷோரின் காதலி மேகனா, மற்றும் சகோதரி உள்ளிட்ட மூன்று பெண்கள் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை தேடிச் செல்லும் கிஷோருக்கு நடக்கும் பல சம்பவங்களால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.

    அப்படி அங்கு என்ன நடந்தது? காணாமல் போன பெண்களின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பள்ளி மாணவராக நடித்துள்ள கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக நடித்துள்ள குண்டு தம்பியும் நடிப்பில் அசத்தியிருப்பதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கதாநாயகியாக வரும் மேகனா, இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும், காளி வெங்கட் வரும் அனைத்து காட்சிகளும் சிரிப்பால் திரையரங்கமே அதிர்கிறது.

    படிக்கும் வயதில் படிக்கவில்லை என்றால், வாழ்க்கை எப்படி மாறும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். மேலும், சுற்றுலா தளங்களில் உள்ள மறைவான பகுதிகளில், தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதோடு, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் சொல்லியிருக்கிறார். பள்ளி பருவத்தில் காதலிப்பது என்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், அதை இயக்குனர் காமெடியாக கையாண்டது சிறப்பு. திரைக்கதையின் முதல் பாதியில் ஓரளவிற்கு ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாம்பாதி சற்று தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் செஞ்சி கோட்டையையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். ஜுட் வினிகரின் இசை கதைக்கு ஏற்ப உள்ளது.

    மொத்தத்தில் ‘உறுதிகொள்’ மனதில் உறுதி வேண்டும்.
    மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவள்' படத்தின் விமர்சனம்.
    சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா திருமணமாகி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைப்பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். டாக்டரான சித்தார்த் மூளை சம்பந்தப்பட்ட சிகிச்சை செய்வதில் சிறந்தவர். இவ்வாறாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகில் மூடப்பட்டு கிடக்கும் வீட்டிற்கு அதுல் குல்கர்ணி தனது குடும்பத்துடன் குடிபெயர்கிறார்.

    இதையடுத்து இரு வீட்டாரும் அவ்வப்போது சந்தித்து பேசுகின்றனர். மேலும் விருந்தும் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வாறாக இருக்கும் போது போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் அதுல் குல்கர்ணியின் மூத்த மகளான அனிஷா விக்டருக்கு சித்தார்த் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.



    ஒரு நாள் விருந்து முடித்த பிறகு போதையில் அனிஷா அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதிக்கிறார். அனிஷாவை சித்தார்த்த காப்பாற்றுகிறார். இதையடுத்து மனதளவில் அனிஷா பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி அனிஷாவை தனது நண்பரும், மனநல மருத்துவருமான சுரேஷிடம் அழைத்துச் செல்கின்றனர். அதே நேரத்தில் அவர்களது வீட்டில் சில அமானுஷ்கள் நிகழ்வது போன்ற அனுபவமும் ஏற்படுவதை உணர்கின்றனர்.

    அதனை உறுதிப்படுத்த பாதிரியாரான பிரகாஷ் பேலவாடி அவர்களது வீட்டிற்கு வருகிறார். அதேபோல் அவினாஷ் ரகுதேவனும் அவர்களது வீட்டில் ஏதேனும் அமானுஷ்யங்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

    இறுதியில் அவர்களது வீட்டில் அமானுஷ்யங்கள் ஏதும் இருந்ததா? அனிஷா விக்டர் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? அவள் யார்? அவளுக்கு என்ன நடந்தது? அவள் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வித்தியாசமான கதைக்களத்தில் சித்தார்த்தின் நடிப்பும் புதுமையாக ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு டாக்டர், கணவன் என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தற்கு ஏற்றவாறு சிறப்பாகவே நடித்திருக்கிறார். பொதுவாகவே ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுப்பார் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    அதுல் கல்கர்னி, சுரேஷ், பிரகாஷ் பேலவாடி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அனிஷா விக்டரின் கதாபாத்திரம் தொடக்கம் முதல் கடைசி வரை படத்தை முன்னெடுத்து செல்கிறது. அத்துடன் ஒரு த்ரில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அவினாஷ் ரகுதேவன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.



    ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையே படத்திற்கு வலுவை கூட்டியிருக்கிறது. படத்தில் வரும் த்ரில் காட்சிகள், அமானுஷ்யமா? அல்லது கதாபாத்திரத்தின் கற்பனையா என்று எதிர்பார்ப்பை தூண்டுவதுடன், விறுவிறுப்பையும் கூட்டுகிறது. முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாகத்தில் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. படத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏ சான்றிதழுக்கு ஏற்றவாறு திகில் காட்சிகளும், அவ்வப்போது வரும் முத்தக்காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைகிறது.

    கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்திற்கு வலுவை கூட்டியிருக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும் திகிலை உண்டுபண்ணும்படியாக இருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் `அவள்' திகிலூட்டுகிறாள்.
    கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, பேபி சாரா, ஆகியோர் நடிப்பில் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விழித்திரு’ படத்தின் விமர்சனம்....
    நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.

    திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.

    இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.

    மறுபக்கம், தன் குழந்தையுடன் கண் தெரியாமல் வாழ்ந்து வரும் வெங்கட் பிரபு, தான் வளர்த்த நாய் குட்டி காணாமல் போக, அதை தேடி வருகிறார்.

    அதுபோல், பணத்தால் எல்லாத்தையும் வாங்க முடியும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ராகுல் பாஸ்கரன், பணத்தை வைத்து ஒரு பெண்ணை அடைய நினைக்கிறார்.

    இந்த நான்கு கதைகளும் ஒரு சந்திப்பில் இணைகிறது. இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

    திருடனாக வரும் விதார்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பர்ஸை பறிக்கொடுத்து பிரச்சனையில் சிக்கும் கிருஷ்ணாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கண் தெரியாமல் யதார்த்தமாக நடித்து மனதில் பதிகிறார் வெங்கட் பிரபு. வசதி படைத்தவராக நடித்திருக்கும் ராகுல் பாஸ்கரன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.

    திருடியாக வரும் தன்ஷிகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

    சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘விழித்திரு’ சுவாரஸ்யம்.
    ஜெரார்ட் பட்லர் நடிப்பில் டீன் டெவ்லின் இயக்கத்தில் உலகமெங்கும் வெளியாகி இருக்கும் ‘ஜியோ ஸ்டோர்ம்’ படத்தின் விமர்சனம்...
    உலகில் இயற்கை சீற்றத்தால் பல பேரழிவுகள் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து டச்பாய் என்ற செயற்கை கோள் ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த செயற்கோளை ஜெரார்ட் பட்லர் தலைமையில் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் இயற்கை சீற்றங்கள் தடுக்கப்படுகிறது.

    இதன்பிறகு இந்த டீமில் இருந்து சில காரணங்களால், ஜெரார்ட் பட்லர் வெளியேறுகிறார். பின்னர் சில நாட்களில் ஒரு பாலைவனத்தில் பனி சூழ்ந்து, மக்கள் அனைவரும் உறைந்து போகிறார்கள். அதுபோல், மற்றொரு இடத்தில் எரிமலை வெடித்து ஊருக்குள் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால், மீண்டும் தனது பழைய பணிக்கு திரும்புகிறார் ஜெரார்ட் பட்லர். செயற்கை கோளில் ஏதோ கோளாறு ஏற்பட்டதால் இதுபோன்று பாதிப்புகள் எற்படுகிறது என்பதை கண்டறியும் ஜெரார்ட் பட்லர், இதை சரி செய்யும் முயற்சியில் இறங்குகிறார்.  ஆனால், ஜெரார்ட்டுக்கு பல தடைகள் வருகிறது. யாரோ சட்ட விரோதமாக செயற்கை கோளை தவறாக உபயோகப்படுகிறார்கள் என்பதை உணர்கிறார்.

    இறுதியில், செயற்கை கோளை தவறாக உபயோகப்படுத்துபவர்களை ஜெரார்ட் பட்லர் கண்டுபிடித்தாரா? உலக அழிவில் இருந்து தடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் கதாநாயகன் ஜெரார்ட் பட்லர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயற்கை சீற்றத்தில் இருந்து உலகை காப்பாற்ற நினைக்கும் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவருக்கு தம்பியாக வரும் ஜிம் ஸ்டர்கஸ், ஜெரார்ட் பட்லரின் முயற்சிக்கு பக்க பலமாக இருந்து உதவி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    செயற்கை கோளால் இயற்கை சீற்றத்தில் இருந்து உலகை காப்பாற்ற முடியும் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் டீன் டெவ்லின், செயற்கை கோளை ஜெரார்ட் பட்லர் சரிசெய்யும் காட்சி அசர வைக்கிறது. பல காட்சிகள் ரசிக்க வைக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார்.

    ராபர்டோ ஸ்கேஃபரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. லோர்ன் பால்பெவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜியோ ஸ்டோர்ம்’  - அசுரவேக புயல்.
    பரத், ருஹானி ஷர்மா, அங்கனா ராய் நடிப்பில் ரவி பார்கவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் விமர்சனம்...
    நாயகன் பரத் ஊரில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்கிறார். இதே கல்லூரியில் படித்து வரும் நாயகி ருஹானி ஷர்மா சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஏழைகளுக்கு இரத்ததானம் செய்வது, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இரத்ததானம் செய்ய வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    பரத்துக்கும், ருஹானி ஷர்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு குழந்தைக்கு பரத்தின் ரத்தம் தேவைப்படுகிறது. ருஹானி கேட்கும் போது மறுக்கும் பரத், பின்னர் குழந்தைக்கு ரத்தம் கொடுத்து விடுகிறார். பரத் மீது கோபம் இருந்தாலும், அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார்.

    பரத்தோ ருஹானியின் காதலை ஏற்காமல் இருக்கிறார். பரத்தை பொருத்தவரை காதல் என்பது திருமணத்திற்கு முன்பு எல்லா விஷயங்களும் நடக்க வேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கிறார். ஆனால், ருஹானி திருமணத்திற்குப் பிறகுதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    ஒரு கட்டத்தில் ருஹானியின் காதலை பரத் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், திருமணத்திற்கு முன்பே ருஹானியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால், இருவருக்குள் மோதல் ஏற்பட்டு பிரிகிறார்கள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பரத், சாதுவாகவும், ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வழக்கமான அவரது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ருஹானி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வரும் அங்கனா ராய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

    தற்போதுள்ள இளைஞர்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் ஏன்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரவி பார்கவன். முழுக்க முழுக்க கல்லூரியிலேயே படத்தை எடுத்திருக்கிறார். உண்மையான காதலுக்கும், பொய்யான காதலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது என்ற கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதையை போதிய சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார். பரத்தை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் என்பதாலும், அவர்களின் டப்பிங் சரியாக எடுபடாததாலும், படத்தை ரசிக்க முடியவில்லை.

    அன்பு ராஜேஷ், கே.விஜய் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். முனீர் மாலிக்கின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ மக்கு.
    சரண் கே. அத்வய்தன் இயக்கத்தில் கிஷோர் குமார் - யாக்னா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் களத்தூர் கிராமம் படத்தின் விமர்சனம்.
    தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது களத்தூர் கிராமம். திருட்டுத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராமத்தின் தலைவராக கிஷோர் வருகிறார். களத்தூர் கிராமம் வழியாக செல்லும் வண்டிகளை மடக்கி அவர்களிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் அந்த ஊர் மக்கள். ஊருக்கு வெளியே ஒரு காவல் நிலையம் இருந்தும் ஊருக்குள் போலீஸ் செல்லக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாடும் இருக்கிறது.

    இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் கிஷோர் ஊரில் உள்ள 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிடுகிறார். இந்த சம்பவம் குறித்து நீதிபதி அஜய் ரத்னம் விசாரிக்கிறார். இதுகுறித்து ஊர் மக்கள் ஒவ்வொருவரிடமாக விசாரிக்கும் போது அந்த ஊரில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதில் கிஷோருக்கும் அவரது நெருங்கிய நண்பரான தருண் சதாரியாவுக்கும் இடையே ஏற்படும் மோதல் ஏற்படுகிறது. அதில் தருண் சதாரியா இறந்து விடுகிறார். இதையடுத்து கிஷோர் மற்றும் அவரது மனைவியான நாயகி யாக்னா ஷெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.



    சிறையிலேயே அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை தருண் சதாரியாவின் பெற்றோர்களிடம் வளர்கிறான். அவர்கள் சிறுவயதில் இருந்தே அந்த குழந்தையிடம் கிஷோரை கொல்ல வேண்டும் என்ற நஞ்சை விதைக்கிறார்கள். அதாவது தனது மகனை கொன்றதற்கு பழிவாங்க கிஷோரின் மகனையே கிஷோருக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல் கிஷோரின் மகனும் தாய், தந்தையை கொல்ல துடிக்கிறான். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் கிஷோரை கொல்ல முயற்சிக்கிறார்.

    இறுதியில், மகனே தந்தையை கொன்றானா? அல்லது உண்மையை அறிந்து தனது பெற்றோருடன் சேர்ந்தானா? போலீசார் கிஷோரை என்கவுண்டர் செய்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கிராமத்து தலைவராக வரும் கிஷோர் கதாபாத்திரம் படத்தை முன்னெடுத்து செல்கிறது. படம் முழுக்க தனது நடிப்பால் கிஷோர்  ஆதிக்கம் செலுத்தி நடித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. கிஷோருக்கு மனைவியாக நடித்திருக்கும் யாக்னா ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜய் ரத்னம் அலட்டல் இல்லாமல் நீதிபதிக்கு உண்டான தோற்றத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கிஷோருக்கு ஈடுகொடுக்கும்படியாக தருண் சதாரியா தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

    திருட்டுத் தொழிலை பிழைப்பாக கொண்ட கிராமத்தை கொண்டு பொட்டல்காடு போன்ற இடத்தில் படத்தை எடுத்திருப்பது சிறப்பு. மேலும் படம் முழுக்க ஒரு வறட்சிப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டிருப்பது படத்தின் கதையோடு ஒன்றியிருக்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பின்றி மெதுவாக செல்வதால் படம் ரசித்து பார்க்கும்படியாக இல்லை. ஆவணப்படத்தை பார்த்தது போன்ற அனுபவமும் ஏற்படுகிறது.



    படம் பொறுமையாக சென்றாலும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்தை மென்மையாக கொண்டு செல்வதால் படத்தின் போக்கு ஏற்படியாக இருக்கிறது. புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `களத்தூர் கிராமம்' வறட்சியை ரசிக்கலாம்.

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ராம் சரண் - நேகா சர்மா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற சிறுத்தை வேட்டை படத்தின் விமர்சனம்.
    ராம் சரண் சிறுவனாக இருக்கும் போது அவரது தந்தையை ரவுடி கும்பல் அவரது கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்து விடுகின்றனர். அதே நேரத்தில் ராம் சரணின் அம்மா தலையில் பலத்த காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ராம் சரணிடம் அவனது அம்மாவின் சிகிச்சைக்கு பணம் தருவதாக ஒருவர் கூறுகிறார்.

    ராம் சரண் ஒரு கொலை குற்றத்தை ஏற்று சிறைக்கு சென்றால் அவரது அம்மா உயிரை காப்பாற்றுவதாக கூற கொலை குற்றத்தை ஏற்றுக் கொண்டு ராம் சரண் ஜெயிலுக்கு செல்கிறார். 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ராம் வெளியில் வந்த பின்னர் அவரது தாய் இறந்து விட்டதாக தகவல் கிடைக்க தனது மாமாவை பார்க்க தாய்லாந்து செல்கிறார்.



    பின்னர் பாங்காக்கில் ஒரு டிராவல் ஏஜென்சியில் அவருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு பிரபல தொழிலதிபரான பிரகாஷ்ராஜின் மகளான நாயகி நேகா சர்மாவை பாதுகாக்கும் பொறுப்பு ராம் சரணுக்கு வருகிறது. நேகாவை பார்த்த உடனே ராம் சரணுக்கு அவள் மீது காதல் வந்துவிடுகிறது.

    அவளுக்கு பாதுகாப்பாக செல்லும் போது நேகா தற்பெருமையாக நடிந்து கொள்வதும், பிடிவாதம் பிடிப்பதும் ராம் சரணுக்கு அவள் மீது ஒருவித எரிச்சலை உண்டாக்குகிறது. இந்நிலையில், ராம்சரணின் தந்தையை கொன்றவர்கள் தாய்லாந்தில் இருப்பதும் அவருக்கு தெரிய வர அவர்களை ராம் சரண் பழிவாங்கினாரா? அவர்கள் ராம் சரணின் தந்தையை ஏன் கொன்றார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? நேகா சர்மாவுக்கு ராம் சரண் மீது காதல் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ராம் சரணின் முதல் படம் என்றாலும் தனது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல், ரொமேன்ஸ், ஆக்‌ஷன் என ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார். அடங்காத பெண்ணாக நேகா நர்மா சிறப்பாகவே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.

    பூரி ஜெகன்நாத்தின் மற்ற படங்கள் போல இந்த படத்தில் ஒரு வலுவான அடித்தளம் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. படத்தின் திரைக்கதையும் மெதுவாகவே செல்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குலைத்திருக்கிறது. மற்றபடி படம் ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும்படி இருக்கிறது.

    மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவே இருக்கிறது. ஷியாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `சிறுத்தை வேட்டை' வேகமில்லை.

    ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா, விவேக் பிரசன்னா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘மேயாத மான்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் வைபவ் தன் தங்கை இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இழந்த இவர், தங்கை மீது அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். மேலும் மேயாத மான் என்ற மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நாயகி பிரியாவை மூன்று வருடங்களாக ஒருதலையாக காதலித்து வருகிறார்.

    தான் காதலிப்பதை, பிரியாவிடம் சொல்லாமலே இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் பிரியாவிற்கு, வேறொருவருடன் நிச்சயமாகிறது. இதையறிந்த வைபவ் தற்கொலை முயற்சிக்கு செய்கிறார். இதனை தடுக்கும் முயற்சியாக வைபவின் நண்பர் விவேக் பிரசன்னா, பிரியாவிடம் சென்று வைபவின் காதலை சொல்கிறார். மேலும் நீ வெறுக்கும் அளவிற்கு பேசினால், அவன் தற்கொலை முயற்சியில் இருந்து மனதை மாற்றிக் கொள்வான் என்று கூறி பேச வைக்கிறார். அதன்பின் வைபவ் தன்னை எப்படியெல்லாம் காதலித்தார் என்பதை பிரியா தெரிந்துக் கொள்கிறார்.

    இதனால், தன்னுடைய திருமணத்தை தள்ளி வைக்கிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. பின்னர், ஒரு பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இறுதியில் இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் வைபவ், லோக்கல் ஏரியாவில் வாழ்ந்துக் கொண்டு எல்லாத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவராக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், நட்புக்காக எதையும் செய்யக்கூடிய கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க அழகு பதுமையாக வந்து செல்கிறார்.

    வைபவ்விற்கு தங்கையாக நடித்திருக்கும் இந்துஜா, துணிச்சலான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். யதார்த்தமாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். வைபவ்விற்கு பிறகு படத்தில் அதிகமாக கவர்வது அவரது நண்பராக வரும் விவேக் பிரசன்னா. படம் முழுக்க ஹீரோ கூடவே வந்து, நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    ஒரு குறும்படத்தை முழு படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். இதனால் படத்தின் திரைக்கதையில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சி இல்லாதது போல் இருக்கிறது. ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை சோர்வடைய விடாமல் காப்பாற்றி இருக்கிறது. படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.

    சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதிப் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் படத்தில் நிறைய பாடல்கள். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கி இருக்கிறார்கள். இது எந்தளவிற்கு கவர்ந்திருக்கிறது என்று ரசிகர்களுக்குத்தான் தெரியும். விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மேயாத மான்’ மேயவில்லை.
    அட்லி இயக்கத்தில் விஜய், நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் விமர்சனம்
    படம் ஆரம்பத்தில் மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள், சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடிபவர்களை போலீஸ் அதிகாரி சத்யராஜ் தலைமையிலான தனிப்படை தேடுகிறது. இந்த தேடுதலில் விஜய்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்படுகிறார்.

    சத்யராஜின் விசாரணையில் விஜயிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. விஜய் மருத்துவத்துறையில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.

    படத்தில் விஜய் தந்தை, இரு மகன்கள் என மொத்தம மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மகன் வேடங்களில் டாக்டர், மேஜிக் மேன் என இரண்டு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். இதில் டாக்டர் விஜய், மக்களுக்கு சேவை செய்வது, அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் அர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து கவர்ந்துள்ளார்.

    மேஜிக்மேனாக வரும் விஜய், அவருக்கே உரிய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். தந்தை விஜயின் கதாபாத்திரம் மாஸாகவும், கிளாஸாகவும் உள்ளது. படத்தில் விஐய், நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் மருத்துவம் பற்றி இப்படத்தில் விஜய் அதிகம் பேசியுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிளரவைக்கிறது.

    தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வந்து, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமந்தா. விஜய் யார் என்று தெரியாமல் பேசுவது, தெரிந்தவுடன் பம்புவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். தலைமை மருத்துவருக்கு உதவியாளராக வருகிறார் காஜல் அகர்வால். கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார் காஜல். தந்தை விஜய்க்கு மனைவியாக வரும் நித்யா மேனன், நடிப்பில் மிளிர்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே மெருகேற்றியிருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. வெள்ளை தாடியுடன் வரும் இவருடைய கெட்-அப் அப்லாஸ் அள்ளுகிறது. குறிப்பாக இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அவர் மருத்துவ துறையில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்ந்துவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

    வடிவேலுக்கு இந்த படம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. இவருடைய காமெடி மட்டுமல்லாமல், குணசித்திர கதாபாத்திரத்திலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் காளிவெங்கட். போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், அம்மாவாக வரும் கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையை செய்தாலும், அவர்களுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

    ‘தெறி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. மருத்துவத்துறை பற்றி நிறைய படங்கள் வந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபாட்டு இயக்கி இருக்கிறார் அட்லி. மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. சமூக அக்கறையுடன் பல காட்சிகளை வைத்திருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த பாடல்களை திரையில் பார்க்கும் போது கண்களுக்கு மிகவும் விருந்து படைத்திருக்கிறது. பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் யதார்த்தம் மீறாமல் இருப்பது சிறப்பு. விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரால் தான் படம் பிரம்மாண்டமாக தெரிகிறது.

    மொத்தத்தில் ‘மெர்சல்’ மிரட்டல்.
    சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சென்னையில் ஒருநாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘சென்னையில் ஒருநாள் 2’ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனம்...
    சென்னையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், கோயம்புத்தூரில் ஜூலியின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதையறிந்த சிட்டி கமிஷனர் நெப்போலியன், இதை விசாரிக்க சொல்லி சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார். சரத்குமாரும் இந்த கேசை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

    இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. மேலும், சரத்குமாருக்கு தான் வளர்த்து வரும் மூன்று 3 பிள்ளைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் வருகிறது.

    இறுதியில், இதன் பின்னணியில் இருப்பவர்களை சரத்குமார் கண்டுபிடித்தாரா? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் சரத்குமார். தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து அசத்திருக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பது என்பது சரத்குமாருக்கு கைவந்த கலை. மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்திருக்கிறார், சரத்குமார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நெப்போலியனின் நடிப்பு சிறப்பு.

    கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சுஹாசினி, தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். சரத்குமாருக்கு டிரைவராக வரும் முனிஸ்காந்த் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    சென்னையில் ஒரு நாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர்.. சுவாரஸ்யமான கதை என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு சற்று குறைவாகவே உள்ளது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

    அதிக காட்சிகள் இருட்டிலேயே படமாக்கி இருப்பதால் விஜய் தீபக்கின் ஒளிப்பதிவை அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘சென்னையில் ஒருநாள் 2’ சுவாரஸ்யம் குறைவு.
    ×