என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ஜி. சிவா நடித்து இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'.
    • இப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'. ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

    இந்த திரைப்படம் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்து, தயாராகி இருக்கும் வணிக ரீதியான படைப்பு என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளது. கின்னஸ் சாதனையை ஏற்று அறிவிக்கும் குழுவினரும் இது தொடர்பான சாதகமான பதிலை படக்குழுவினருக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்படம் கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.


    இது தொடர்பாக ஜி. சிவாவிடம் பேசினோம். அதில் ஒரே ஒரு நபர் மட்டும் நடிக்கணும் என்ற ஐடியா எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பினேன்.

    இந்தத் திரைப்படத்தை எத்தனை நாளில்... எந்தெந்த லொக்கேஷனில் படமாக்கினீர்கள்?

    20 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்.

    படத்தில் பாடல் காட்சிகள் இருக்கின்றனவா?

    இருக்கிறது. காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

    ஒரே ஒரு நடிகர் நடிக்கும் படத்தை கமர்சியலாக எப்படி எடுத்துள்ளீர்கள்?

    ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம்பெற வைத்திருக்கிறோம். அது மட்டுமின்றி சமீப காலமாக நடந்த குற்றங்களை மையப்படுத்தியே திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சி இயக்குனரும் கடும் சவாலாக இருந்திருக்குமே... அதைப்பற்றி..?

    சண்டைக் காட்சிகளில் என்னை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சண்டை காட்சிகளில் எதிரியுடனான சண்டையின் போது நம்பகத்தன்மைக்காக எதிராளியின் முகத்தை காட்டாமல், காலணி மட்டும் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். ஆனாலும் சண்டைக் காட்சியை படமாக்குவது ஒளிப்பதிவாளருக்கும், சண்டை பயிற்சி இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.


    படத்தின் பெயரை 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' என எதற்காக வைத்தீர்கள்?

    படத்தின் தலைப்பு பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இது கமர்சியலான படம் என்பதற்காகவும் இந்த பெயரை சூட்டினோம்.

    தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இந்த திரைப்படத்தில் என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்? நீங்கள் நினைத்தது போல் காட்சியை சுதந்திரமாக படமாக்க முடிந்ததா? அல்லது சிலவற்றை தவற விட்டுட்டோமே..! என்ற எண்ணம் ஏற்பட்டதா?

    அனைத்து இயக்குனர்களுக்கும் எப்போதுமே இதை செய்திருக்கலாமோ... அதை செய்திருக்கலாமோ... என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது. ஆனால் அதையும் மீறி படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து, எல்லாவற்றையும் தடுத்துவிடும். இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து கமர்சியல் அம்சங்களையும் இடம்பெற வைத்திருக்கிறோம்.

    ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா படத்தின் அடுத்த பாகம் எப்போது...?

    இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. இது தமிழ் சினிமாவில் புது முயற்சி. இதுபோன்று நிறைய வித்தியாசமான படங்களை இயக்க விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம். விரைவில் சாதகமான பதில் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


    'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' எனும் திரைப்படத்தை ஜி சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை சந்துரு கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜே. பி. அரவிந்த் மேற்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சாய் பாபா பிக்சர்ஸ் வழங்குகிறது.

    ஒரே ஒரு நடிகர் நடிப்பில் கமர்சியலாக உருவாகி இருக்கும் படம் என்பதால் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ராகவேந்திரா.
    • இவருக்கும் ஸ்பந்தனாவுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.


    'மாஸ் லீடன்', 'ஜானி', 'லால்குடி டேஸ்' போன்ற கன்னடப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் ராகவேந்திரா. இவரது மனைவி ஸ்பந்தனா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஜய் ராகவேந்திரா- ஸ்பந்தனா தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார்.


    ஸ்பந்தனா குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பந்தனாவின் உடல் நாளை பெங்களூர் கொண்டுவரப்படும் என்றும் அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


    ஸ்பந்தனா ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் பி.கே. சிவராமின் மகளாவார். இவர் 'அபூர்வா' என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'.
    • இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மொட்டை தலையுடன் ஷாருக்கான் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.


    • ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினியின் ரசிகன் என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'இது ஜெயிலர் வாரம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் 'முதல்ல ரஜினி ரசிகன்.. அப்பறம்தான் எல்லாமே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    குஷி போஸ்டர்

    இந்நிலையில், 'குஷி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தமன்னாவை பார்க்க பாய்ந்த ரசிகர்

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது திடீரென ரசிகர் ஒருவர் தமன்னாவை நெருங்கினார். உடனே உடனிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரைத் தடுத்த நிறுத்தினர். அப்போது தமன்னா தனது பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • அதர்வா- மணிகண்டன் இணைந்து நடிக்கும் வெப்தொடர் 'மத்தகம்'.
    • இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    மத்தகம் போஸ்டர்

    இந்நிலையில், 'மத்தகம்' வெப்தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் வருகிற 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • நடிகை சோனம் கபூர் 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார்.
    • திருமணத்திற்கு பின்னரும் சோனம் கபூர் சில படங்களில் நடித்து வந்தார்.

    பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் கடந்த 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் 'சாவரியா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான அவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார்.



    பின்னர் இந்த ஜோடி லண்டனில் செட்டிலாகினர். திருமணத்திற்கு பின்னரும் சோனம் கபூர் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தாலும் அவர்களுக்கு டெல்லியில் ரூ.173 கோடியில் பிரம்மாண்ட மாளிகை இருப்பது தெரிய வந்துள்ளது.


    பிருத்திவிராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த மாளிகையானது 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. சோனம் கபூர் தம்பதி இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் டெல்லியில் உள்ள இந்த வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்களாம். இதற்காக இந்த மாளிகையில் பல்வேறு ஆடம்பர வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மாளிகையின் உட்புறத்தில் ஸ்டைலான மார்பிள் தரை, நேர்த்தியான மர தளவாடங்களால் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் என மாளிகை அதிநவீன வசதிகளுடன் ஜொலிக்கிறது. இந்த மாளிகையில் கூடைப் பந்து மைதானமும் உள்ளது.

    • கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • இவருக்கு புகழஞ்சலி செலுத்தி வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.



    இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் புகழஞ்சலி செலுத்தி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம், இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர், நெருப்பை அரிப்பதில்லை கரையான்" என்று தெரிவித்துள்ளார்.



    மேலும், மற்றொரு பதிவில், "கலைஞர் நினைவிடம்

    இந்த இடத்தில்

    மட்டும்தானா நினைவு?

    இதய வெளிகளில்

    காற்று வெளிகளில்

    தமிழ் ஒலிகளில்

    தமிழ்நாட்டுத் தடங்களில்

    எங்கெங்கும்

    உங்கள் நினைவுதான்

    வணங்குகிறோம் உங்களை

    வாழ்த்துங்கள் எங்களை" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது.
    • பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    மாவீரன் போஸ்டர்

    இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • நடிகை சிந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடிதெரு' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவர் நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.


    சிந்து

    நடிகை சிந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து புற்று நோயின் தீவிரம் அதிகமானதால் அவரது ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இதனால் அவரால் 10 முதல் 20 நிமிடங்கள் வரைகூட தொடர்ந்து உட்கார முடியாத நிலை ஏற்பட்டு இரவு நேரத்தில் படுக்க முடியாதவாறு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பல நேர்காணல்களில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×