என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஷகீரா.
    • இவர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

    பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). கொலம்பியன் பாடகரான இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆல்பத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷகீரா.


    2010-ஆம் ஆண்டு உலக கோப்பை கால் பந்து போட்டியில் இவர் பாடிய 'ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா' பாடல் உலகம் முழுவதும் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. கிராமி விருதுகள், இசை விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.


    ஷகிராவின் சிலை

    இந்நிலையில், பாடகி ஷகீராவிற்கு அவரது சொந்த ஊரான கொலம்பியாவில் உள்ள பரன்குவிலரஸில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கலைஞர் யினோ மார்க்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த சிலை கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஹிப்ஸ் டோண்ட் லை' (Hips don't lie) என்ற ஆல்பத்தில் ஷகிராவின் தனித்துவமான நடன அசைவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை ஷகீராவின் தந்தை, தாய் மற்றும் பரன்குவிலரஸ் மேயர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஷகீரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
    • இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதன் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வந்தது.


    இந்நிலையில், 'பையா' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'பையா' திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    • நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும், அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதிக்கிறார். அதாவது, டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐ.எஸ்.பி.எல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.


    2024-ஆம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.


    இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    • நடிகர் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.


    இதனிடையே சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்காக சம்பளமே வாங்கவில்லை என செய்தி பரவி வந்த நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், "சம்பளம் வேண்டுமா? படம் ரிலீஸ் ஆகணுமா? என்பது தான் கேள்வியாக இருந்தது. இது ஒரு கனவு. இப்படி ஒரு படம் நம்முடைய ஊரில் நம்மால் பண்ண முடியும். அதுவும் இந்த பட்ஜெட்டில் செய்ய முடியும் என்று தான் ஆரம்பித்தோம்.


    நான் இந்த படம் ஆரம்பிக்கும்போது பான் இந்தியா படம் என்கிற வார்த்தையே கிடையாது. அப்போதைக்கு பாகுபலி முதல் பாகம் மட்டும் தான் ரிலீஸாகி இருந்தது. அதன் பின்னர் தான் பாகுபலி 2, கேஜிஎப் போன்ற படங்கள் வந்தது. தமிழில் ஏன் இப்படி ஒரு படம் பண்ண முடியாது என தொடங்கினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள் இருந்தது. இந்த கனவு நினைவாக என்னுடைய சம்பளத்தை தருவதே ஒரே வழியாக இருந்தது. அதனால் படத்தை முடித்து ரிலீஸ் செய்தாலே போதும் என்பதற்காக எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்" என்று பேசினார்.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை 1’.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.


    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்த நிலையில் 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் "லைம்லைட்" பிரிவில் திரையிட தேர்வாகி இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 25-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • இவர் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வரவேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.


    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ல் 'ஆன்மிக அரசியல்' செய்வேன் என பேசியிருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார்.


    இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது கணவர் அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்" என கூறினார்.


    • மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
    • விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்

    கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.

    இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


    கதை சுருக்கம்:

    சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.

    விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்'என்ற குறிப்புடன் தொடங்கும் இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.
    • சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை நடைபெறுகிறது.

    பொதுவாக சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.

    இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாடகி மஹதி பேசியதாவது, பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது என்று பேசினார்.

    இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது, ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று பேசினார்.

    ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

    • இயக்குனர் ஏ.எல்.விஜய் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


    இயக்குனர் ஏ.எல்.விஜய் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் படப்பிடிப்பு தளம் பார்ப்பதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், இயக்குனர் விஜயின் காரை உரசி, மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அந்த இளைஞர், இயக்குனர் விஜய் மற்றும் உதவி இயக்குனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இயக்குனர் விஜய்யின் மேலாளர் மணிவர்மா புகார் அளித்தார். தேனாம்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.


    இந்நிலையில், இப்படம் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "வாடிவாசல் படத்தின் இசை எல்லாம் ரெடியாகிவிட்டது. வெற்றிமாறன் அவரின் பட பணிகளை முடித்த பின் வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கும். உங்களை போன்று நானும் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

    • நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.


    இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    லவ்வர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லவ்வர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'வெலகாத' பாடல் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். 'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×