என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.


    இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    லவ்வர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லவ்வர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'வெலகாத' பாடல் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். 'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • 'வட்டார வழக்கு' திரைப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வட்டார வழக்கு' . மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். 'வட்டார வழக்கு' திரைப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை வெங்கட்ராஜன் செய்திருக்கிறார்.இந்த படத்தில் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை காட்டும் வெளிப்படுத்தும் வகையில், இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ரவீனா ரவி பேசியதாவது, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று பேசினார்.


    நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேசியதாவது, இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது.  இயக்குனர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.


    இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் என்றார்.

    • இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    தூத்துக்குடியில் ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுவதால் ரஜினி அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • நடிகர் விஷால் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.


    இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இளம் பெண்ணுடன் விஷால்

    இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது பட புரொமோஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.


    இந்நிலையில், 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் கதாநாயகன் சதீஷ் இயக்குனரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு வாட்ச் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் கட்சியினர் பிலிம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.


    வியூகம் போஸ்டர்

    இதுகுறித்து தெலுங்கானா திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறுகையில் சினிமாவை பொழுதுப்போக்காக பார்க்க வேண்டும். சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கி அனுமதி அளித்த பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.


    • நடிகர் முத்துக்காளை பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'பேய் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருந்தார்.

    ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்த இவர் சில படங்களி ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

    கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'பொன்மனம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும், 'இரண்டு பேரும் செத்து செத்து விளையாடலாம்' போன்ற காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த முத்துக்காளை கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'பேய் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருந்தார்.


    58 வயதான நடிகர் முத்துக்காளை தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.

    இந்நிலையில், நடிகர் முத்துக்காளை தனது படிப்பு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால், படிக்க வேண்டிய வயதில் படித்துவிடுங்கள். இந்த கல்வி உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள் தலைமுறையை காப்பாற்றும்.


    நான் குடிபோதையில் இருந்து மீண்டு வரும்போது எனக்கு தெளிவான ஒரு பார்வை இருந்தது. நான் இளமையில் எதை இழந்தேனோ அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் படிக்கும் போது என்னை பலரும் கிண்டல் செய்தார்கள். இந்த வயதில் இவர் படித்து என்ன செய்யபோகிறார் என்று சொன்னார்கள். ஆனால், எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து நான் படித்தேன்" என்று கூறினார்.


    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.



    இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், 'தளபதி 68' படத்திற்கு 'கோட்' (Goat) என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'தளபதி 68' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு 'தளபதி 68' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு டைட்டில் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
    • இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.


    இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.


    இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.


    இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.


    இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

    • சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • ’அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'அனிமல்' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் தொடர்ந்து வசூலில் முன்னேறி வருகிறது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.295.7 கோடியை வசூல் செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வசூல் ரேஸில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


    இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சலார்' திரைப்படம் இவ்வளவு ஒரு பிரமாண்ட அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    ×