என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • புஷ்பா-2 படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா திரைப்படம் திரைக்கு வருகிறது.

    நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

    நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை 660 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.220 கோடிக்கும் வட இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கும் கர்நாடகாவில் ரூ.30 கோடிக்கும் கேரளாவில் ரூ.20 கோடிக்கும் வெளிநாடுகளில் 140 கோடிக்கும் புஷ்பா படத்தின் திரையரங்க உரிமை விற்பனையாகியுள்ளது.

    புஷ்பா 2 படத்தின் சாட்லைட் உரிமை ரூ.85 கோடிக்கும் இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.275 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
    • கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO அண்மையில் வெளியானது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

    கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த பாடலில் கவர்ச்சியான உடையில் திஷா பதானி நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என சென்சார் போர்டு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
    • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.

    அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

    மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் டங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

    இதனால், டங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.

    அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.

    அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, "எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.

    பபிதா போகத் காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 55 கிலோ எடைப் பிரிவில் 2010-ல் வெள்ளியும் 2014ல் தங்கமும் வென்றுள்ளார். இவரது அக்கா கீதா போகத்திற்கு பிறகு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன்.
    • இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இன்னொரு புறம் சினிமாவைத் தாண்டி சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

    தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம்.

    எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்'' என்றார்.

    • தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • தன்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார்.

    புஷ்பா படத்தில் நடித்து பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

    அல்லு அர்ஜுன் கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் நந்தியாலா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கிஷோர் ரெட்டியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.

    அல்லு அர்ஜுன் வந்துள்ள தகவல் அறிந்து வீட்டின் வெளியே பெருங்கூட்டம் கூடியது. இதனால் தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தன்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார். மனுவில், 'எனக்கு பல வருடங்கள் நெருக்கமான நண்பராக இருக்கும் கிஷோர் நந்தியாலா தொகுதியில் போட்டியிட்டதால் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றேன்.

    நான் வந்து இருப்பதை அறிந்து ரசிகர்கள் திரண்டு விட்டனர். அப்போது எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. எனவே தேர்தல் விதியை நான் மீறியதாக சொல்வது சரியல்ல. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன்.
    • நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன்.

    தமிழில் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யாமேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில், "நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன்.

     

    நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன். அதுமாதிரி படங்களில் நடிக்க பிடிக்காது.

    நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். அந்த படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமோ என்றும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பேன். எல்லோரும் கடைபிடிக்கும் வழியிலேயே நானும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம்.
    • கே.ஜி.எஃப் 2 திரைப்படமும் மிகப் பெரிய ஹிட்டாகியது.

    2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது. திரைப்படம் உலகம் முழுவது பேசப்பட்டது. கன்னட திரையுலகில் இப்படி ஒரு படைப்பா என உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பெருமை கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு உள்ளது. இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 திரைப்படமும் மிகப் பெரிய ஹிட்டாகியது.

    நடிகர் யாஷ் இப்படங்களில் வெற்றிக்கு பிறகு டாக்சிக் மற்றும் ராமயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தை குறித்து தகவல் கூறியுள்ளார் " கே.ஜி.எஃப் 3 திரைப்படம் கண்டிப்பாக எடுப்போம். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணா திரைப்படங்களில் கவன செலுத்தி வருகிறேன். கேஜிஎஃப் 3 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சரியான நேரம் வரும்பொழுது மிக பிரம்மாண்டமாக எடுப்போம்" என கூறினார்.

    இக்கேள்வியை இந்திய கிரிக்கெட் முன்னணி வீரரான சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
    • வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.

    இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

     

    டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.

    இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.

    • சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொள்ளும் போது சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார் அதில் அவர் ' மக்கள் கொடுக்குற இந்த அளவுக்கடங்காத அன்புக்கு நான் என்ன திருப்பி தரப்போறேன்னு தெரியல. என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட உழைப்பு கொடுப்பேன். இந்த 49 வயதுலயும் கங்குவா திரைப்படத்துல 6 பேக் வச்சு நடிச்சு இருக்கேன். நான் முன்னாடி சொன்ன மாதிரிதான் கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை. அத கண்டிப்பா மக்களுக்கு பிடிக்கும். மற்ற மொழிகளுல தெலுங்கு-ல பாகுபலி, RRR இந்திக்கு கல்கி திரைப்படங்கள் இருக்கு தமிழுக்கு கங்குவா திரைப்படம் அந்த மாதிரி அமையும். கங்குவா திரைப்படத்துல இருக்குற ஒரு உலகத்த இதுவரை தமிழ் சினிமால யாருமே கொண்டு வரல. இந்தப்படம் கண்டிப்பா ஒரு முன்னுதாரணமாகவும். ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமையும்" என கூறியுள்ளார்.

    இந்த காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் மற்றும் மலையாள சினிமா திரையுலகில் மிகவும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராவார் வித்யாசாகர்.
    • 1989 ஆம் ஆண்டு வெளியான பூ மனம் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

    தமிழ் மற்றும் மலையாள சினிமா திரையுலகில் மிகவும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராவார் வித்யாசாகர். இவரை அன்போடு அனைவரும் மெலடி கிங் என அழைப்பர்.

    1989 ஆம் ஆண்டு வெளியான பூ மனம் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இதுவரை 225 மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இவர் மிகப்பெரியளவில் ஹிட்டான தமிழ் திரைப்படங்களான ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி,கில்லி, மொழி, குருவி என பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    மலையாள திரையுலகில் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் இசையமைப்பில் வெளியான நிறம், தேவதூதன், தோஸ்த், மீச மாதவன், முல்லா போன்ற மலையாள திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.

    வித்யாசாகர் தற்பொழுது முதல்முதலாக அஷ்ட ஐயப்ப அவதாரம் என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை இசையமைத்துள்ளார். இது முழுவதும் ஐயப்பனை பற்றி பாடும் மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    இதுக்குறித்து தற்பொழுது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பம் விரைவில் சரிகமா சவுத் சிவோஷனல் சேனலில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார்.

    2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். இப்பாடல் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

    திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார்.
    • கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

    அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத்.

    அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.

    அடுத்ததாக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்த வீடியோ மிகவும் நகைச்சுவை பாணியில் அமைந்துள்ளது. ராஜு , இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிடம் பாட்டு நல்லா வந்துரும்ல என கேட்கப்படும் வீடியோவில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×