என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். #LKG #RJBalaji
    பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இளைஞர்கள் கவரும்படியாக உருவாக்கியிருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் தயாரிப்பு தரப்பு சிறப்பு பரிசு அளித்துள்ளது.



    இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். #LKG #RJBalaji #PriyaAnand #Prabhu

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூனில் துவங்கும் நிலையில், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj
    வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.

    இதுதவிர துரை செந்தில்குமார், ராம்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தள்ளிப்போய் வரும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    பேட்ட படத்தை தவிர்த்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அனைத்து படங்களுக்கும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அதேபோல் தனுஷின் கொடி, வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. #Dhanush #KarthikSubbaraj #SanthoshNarayanan

    செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஜெய், சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `காக்கி' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaaki #VijayAntony
    `திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்', `தமிழரசன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்த நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு `காக்கி' என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே `காக்கி' டா வாசகம் இடம்பெற்றிருக்கிறது.



    இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜெய், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்குகிறது. 

    `திமிரு புடிச்சவன்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக முதல்முறையாக சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kaaki #VijayAntony #Jai #Sathyaraj

    வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யலாம் என்று கூறினார். #VijaySethupathi #VandalurZoo
    சென்னையை அடுத்த வண்டலூர் வனஉயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் கடந்த 2010-ம் ஆண்டு பொதுமக்களும் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பூங்காவில் பல்வேறு விலங்குகளை தத்தெடுத்து அதற்கு உண்டான செலவின தொகையை வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு நேரில் வந்தார். பின்னர் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

    இதனையடுத்து பூங்காவில் உள்ள ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார். தத்து எடுக்கப்பட்ட இந்த 2 வங்கப்புலிகளுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.



    இதனையடுத்து விஜய் சேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது வண்டலூர் பூங்காவுக்கு வந்து விலங்குகளை பார்த்தேன்.

    அப்போது பூங்காவில் விலங்குகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் இப்போது 2 ஆயிரத்து 500 விலங்குகள் இருப்பதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். பூங்காவில் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி வாகனங்கள், பேட்டரி சைக்கிள்கள் போன்றவை இங்கு உள்ளது. ஒரு காட்டுக்குள் வந்து சென்ற அனுபவம் இந்த பூங்காவுக்கு வந்தால் கிடைக்கிறது.

    இந்த பூங்காவில் விலங்குகளை பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்து இங்கு உள்ள விலங்குகளை பார்த்தால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை நேரடியாக இணையதளம் மூலம் அனைவரும் காண முடியும், பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறு தொகையை கொடுத்து விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #VijaySethupathi #VandalurZoo #ArignarAnnaZoologicalPark

    பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
    பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''

    சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.

    "இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.

    இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.

    வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.

    இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.

    ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

    அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்

    கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.

    இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.

    நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.

    அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.

    பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.

    சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.

    இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.

    இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.

    நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்

    முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.

    இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?

    இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.
    இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய கனவு பற்றி பதிவிட்ட கருத்துக்கு ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். #VigneshShivan #Nayanthara
    2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ஆஸ்கர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    அவர் குறிப்பிடும்போது, ‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் கனவு பலிக்க ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் ஆஸ்கர் வேண்டுமென்றால் நீங்கள் ஆலிவுட் படம் இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
    அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை இணைந்து நடிக்க இருக்கிறார். #Dhanush
    ‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

    கொடி படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடித்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார். 



    இதற்குமுன் தனுஷ் - சினேகா இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைய இருக்கிறார் சினேகா.
    சமீபத்தில் வெளியான ‘தாதா 87’ படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். #DhaDha87 #SriPallavi
    கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.

    பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.

    இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.



    "தாதா 87" படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்று வருகிறது.
    பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல் ஆகிய படங்களில் நடித்த லைலா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். #Laila
    தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    இவருக்கு மெக்தின் என்ற தொழில் அதிபருடன் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் லைலா ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் கண்டநாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் சந்தித்து பேசினர்.



    அப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து இருந்தார். எனவே அந்த படத்தில் லைலா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு முன்னதாகவே ‘ஆலீஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மணிசந்துரு டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமான ரைசா நடிக்கிறார். 
    ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க சம்பளத்துக்கு பதில் பங்களா பெற்றதாக வந்த செய்திக்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். #JayamRavi
    ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

    இந்த படங்களை முடித்து விட்டு ஸ்க்ரீன் சீன் மீடியா பட நிறுவனம் தயாரிக்கும் 3 புதிய படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனை அந்த பட நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இந்த 3 படங்களுக்கும் சம்பளத்துக்கு பதிலாக ஜெயம் ரவிக்கு தயாரிப்பு தரப்பில் சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு பக்கத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பங்களாவை எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது.



    முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் ஜெயம் ரவிக்கு பங்களாவா? என்று வலைத்தளங்களில் பலரும் வியந்து பேசினார்கள். ஆனால் இந்த தகவலை ஜெயம் ரவி மறுத்துள்ளார். போயஸ்கார்டனில் வீடு பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் முன் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2 நாட்களாக பரவி வந்த வதந்திக்கு ஜெயம் ரவி இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. 



    தற்போது இவர்களோடு நடிகர் சௌந்தரராஜாவும் இணைந்திருக்கிறார். பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என்று சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிப்பது குறித்து, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

    ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Soundararaja
    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.

    அவர் கூறினார்:-

    "ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து

    கொள்வார்.மதுரைக் கச்சேரி என்றால் கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.

    மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

    அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.

    முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.

    "மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.

    இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.

    எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம்.

    "ஆமாம்'' என்பார்கள்.

    உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.

    உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள்.

    நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.

    இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும்.

    "சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம்.

    "அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.

    "அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!

    வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளிïர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள்.

    "ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும்.

    சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள்.

    அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.

    இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.

    "பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல்.

    கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன்.

    பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.

    "ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன்.

    பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம்.

    "அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.

    பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார்.

    "வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம்.

    ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.

    உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார்.

    அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார்.

    அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.

    ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.

    ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான்.

    பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார்.

    பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும்.

    கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.

    ×