என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசங்கர் மாஸ்டருக்கு பிரபல நடிகர் உதவி செய்து இருக்கிறார்.
    இந்திய சினிமா உலகில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக திகழ்பவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. 

    இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. 

    தனுஷ்
    தனுஷ்

    இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருந்தார். 

    ஏற்கனவே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    திருப்பாச்சி, திருப்பதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, தமிழக முதல்வருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

    குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளும் மேலும் தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பாலியல் பலாத்காரமும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    பேரரசு

    இதற்கொரு தீர்வு கிடைக்காத என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அதிகரித்திருக்கும் வேளையில் ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

    முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பலாத்காரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது. பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதல்வர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098 அனைத்து பெண்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்

    1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும்.. நன்றி முதல்வரே! விட்ராதீங்க முதல்வரே!!’

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    கனமழையால் தன் வீட்டிற்கு முன் தேங்கி இருக்கும் தண்ணீரில் நடிகர் மன்சூரலிகான், பாட்டுபாடி படகு ஓட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூரலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூரலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    மன்சூரலிகான்

    கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி இருக்கிறார். மேலும், மழை நிலைமையை பாடி, மகிழ்ந்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார் மன்சூரலிகான்.


    பல போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
    ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

    சிம்பு - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
    சிம்பு - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

    இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
    வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 25ம் தேதி வெளியானது. படம் பார்த்த பலரும் சிம்புவுக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    வெங்கட் பிரபு
    வெங்கட் பிரபுவின் பதிவு

    இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைத்தளத்தில், “மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
    கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, சிங்கம் புலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்த சசிகுமார், சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறார். இவருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. தனது கனவு ப்ராஜக்ட்டாக நினைத்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். 

    இன்னொரு புறம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமணமா, ப்ராஜக்டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இறுதியில் சசிகுமார் எடுத்த முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.

    யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

    மொத்தத்தில் ‘ராஜவம்சம்’ குடும்பங்களின் கொண்டாட்டம். 
    பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மட்டி படத்தின் முன்னோட்டம்.
    பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கும் படம் 'மட்டி' (Muddy). இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன், திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

    'கே ஜி.எப்' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன்' புகழ் ஆர்.பி.பாலா  இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.

    மட்டி படத்தின் போஸ்டர்

    யுவன் கிருஷ்ணா, ரிதன், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    கமல்

    இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    ஸ்ரீ கண்டன் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் வனம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.

    ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார். அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது. இறுதியில் மர்ம மரணங்களுக்கான காரணங்களை வெற்றி கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.

    புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.

    விமர்சனம்

    வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது.

    ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது. 

    மொத்தத்தில் ‘வனம்’ திகில் குறைவு.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாராட்டி இருக்கிறார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ஜெய் பீம் படத்தை பார்த்து, சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை பாராட்டி இருக்கிறார். முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என்.எப்.டி.சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. 

    சூர்யா

    அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

    சூர்யா
    சூர்யாவை வாழ்த்தும் நல்லக்கண்ணு

    படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை பதிவு செய்தார்.
    பட விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ராதாரவி, இப்பதான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க என்று கூறியிருக்கிறார்.
    திரைப்பட விமர்சகர் மாறன் இயக்கியிருக்கும் படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ராதா ரவி பேசும்போது, இந்தப்படத்தில் நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா என்று முதலில் யோசித்தேன். படத்தில் சிஎம்-ஆ நடித்திருக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும்.. 

    படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனால் இந்த நேரத்தில் இந்தப்படம் வெளியாகும் போது யார் என்ன விதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியவில்லை. இந்தப்படம் வெளியானதும் இதற்கு விவாத மேடை நடத்துகிறதுக்குத் தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. 

    ராதாரவி

    இந்தக்காலத்தில் கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது என்று பேசினார்.
    ருத்ரன் இயக்கத்தில், பாரதி கிருஷ்ணகுமார், கராத்தே வெங்கடேஷ், ஷர்னிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரூபாய் 2000 படத்தின் விமர்சனம்.
    விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதால், அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுக்கிறார்.

    ஏ.டி.எம்.மிஷினில் இருந்து பேனாவினால் எழுதப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று மருந்து கடைக்காரர் கூறி, மருந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அய்யநாதனிடம் வேறு பணம் இல்லை. 2000 ரூபாயை மாற்ற முடியாத நிலையில், மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துபோகிறது.

    விமர்சனம்

    குழந்தையை இழந்த அய்யநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். இறுதியில் அய்யநாதனின் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. 

    நாம் அன்றாடம் கைகளில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன, அது நமக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கின்றன என்பதையெல்லாம் தன் திரைக்கதை மூலம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ருத்ரன். நல்ல கதைக்களத்தோடு இறங்கியிருக்கும் இயக்குனர் ருத்ரன் கவனிக்க வைக்கிறார். 

    விமர்சனம்

    பாரதி கிருஷ்ணகுமார் நிஜமாக வழக்குரைஞராக வந்து நீதிமன்றத்தில் வாதிடுவது கம்பீரம். பணத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறும் காட்சி புதிது. 

    அரசு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் கச்சிதமான தேர்வு. விவசாயியாக அய்யநாதன், வழக்கறிஞர் அஜிதாவாக ஷர்னிகா உள்படம் பலரும் தேர்ந்த திரைக்கலைஞராக நடித்திருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருப்பதால், அவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தால் படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இடைவேளைக்குப்பின், வேகம் குறைகிறது. குறைகளை தாண்டி, அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    இனியவன் இசையையும் பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    மொத்தத்தில் ‘ரூபாய் 2000’ புது நோட்டு.
    ×