என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
    • ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்

    பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார். 

    இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார்.  கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார். 

    ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது; 

    "டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார். 

    • பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான்.
    • பெண்கள் Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது

    தடுப்பூசிகளால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதாகக்கூறி சர்ச்சையில் சிக்கிய Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அடுத்ததாக இளைஞர்கள் தங்களது 20 வயதுக்குள்ளாகவே திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இணைய தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு நேர்மாறாக பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை விட Career மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ராம்சரண் மனைவி உபசனா தெரிவித்துள்ளார்.

    ஐஐடி ஹைதராபாத்தில் தான் உரையாற்றிய உபசனா, "அண்மையில் பங்கேற்ற ஐஐடி ஹைதராபாத் நிகழ்வில் எத்தனை பேருக்கு திருமணம் வேண்டும் என கேட்டேன். மாணவிகளை விட மாணவர்களே அதிகம் கை உயர்த்தினர். ஆண்களை காட்டிலும் பெண்களே Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது

    பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான். ஏனென்றால், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற விரும்புகிறீர்கள், எப்போது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். அதனால் தான் இன்று, நான் என் சொந்தக் காலில் நிற்கிறேன், நான் எனக்காகவே சம்பாதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை உபசனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு உபசனா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் & உங்கள் மரியாதைக்குரிய பதில்களுக்கு நன்றி.

    ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா?

    சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வரை அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா?

    ஒரு பெண் தனது சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் எப்போது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வு செய்வது தவறா?

    திருமணத்தைப் பற்றி அல்லது சீக்கிரம் குழந்தைகளைப் பெறுவதை மட்டும் யோசிப்பதை விட, ஒரு பெண் தனது இலக்குகளை நிர்ணயித்து, தனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவது தவறா?

    நான் 27 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன், அதை நான் என் சொந்த விருப்பத்தில் முடிவு எடுத்தேன். 29 வயதில், தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கருமுட்டைகளை சேமித்து வைக்க முடிவு செய்தேன். 36 வயதில் எனது முதல் குழந்தையை பெற்றெடுத்தேன். இப்போது 39 வயதில் இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    எனக்கு, திருமணம் மற்றும் Career ஆகிய இரண்டும் எனக்கு முதன்மையானவை. அவை நிறைவான வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால் நான் அதற்கான காலக்கெடுவை தீர்மானிக்கிறேன்! அது privilege அல்ல, அது என் உரிமை!" என்று தெரிவித்துள்ளார்.

    2011 இல், உபாசனாவும் ராம் சரணும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர், மேலும் அவர்கள் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் முதல் குழந்தை, கிளின் காரா, 2023 இல் பிறந்தார். மேலும் உபாசனா தற்போது இரட்டை குழந்தைகளை எதிர்பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த சீசனை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
    • மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம் நாளை முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை எந்தெந்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    டீசல்

    அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கி, ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள படம் டீசல். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. பலதரப்பு மக்களையும் கவர்ந்த 'பைசன்' உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

    தி ஃபேமிலி மேன் சீசன் 3

    தி ஃபேமிலி மேன் வெப் தொடரின் சீசன் 3 நாளை முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசன் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த சீசனில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிஃப் ஹாம்ஷி, ஆஷ்லேஷா தாக்கூர், ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் வேதாந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த சீசனை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

    தி பெங்கால் ஃபைல்ஸ்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இப்படம் 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த இந்து இனப்படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம் நாளை முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    உசிரு

    குறிப்பிட்ட தேதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படத்தில் போலீஸ்காரராக உள்ள திலக் சேகரின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு இந்த வழக்கு தனிப்பட்ட விஷயமாக மாறுகிறது. இதனால் ஆபத்தில் இருந்து மனைவியை எப்படி காப்பாறுகிறார் என்பதை திரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் திலக் சேகர் போலீஸ்காரராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திலக் சேகரின் மனைவியாக பிரியா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் காணலாம். 

    • வசூலில் சாதனை படைத்த ‘ஷோலே’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.
    • படத்தில் ஜோடியாக நடித்த தர்மேந்திரா - ஹேமா மாலினி , அமிதாப் - ஜெயா ஆகியோர் திருமணம் செய்து நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறினர்.

    இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் இன்றளவும் பலரால் நினைவு கூறப்படுவது 'ஷோலே'. 1975-ல் வெளிவந்த இப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், ஹேமமாலினி, ஜெயாபச்சன், அம்ஜத்கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

    கொள்ளையர்கள் அட்டகாசம் தலைவிரித்தாடும் ஊரில் இருந்து மக்களை காப்பற்ற திருடர்களான தர்மேந்திரா மற்றும் அமிதாப்பை சஞ்சீவ்குமார் அழைத்து வர, அவர்கள் ஊரோடு ஒன்றி கொள்ளையர்களை ஒழிக்கப்பாடுபடுவதே படத்தின் கதைக்களம்.

    இந்த படத்தில் ஜோடியாக நடித்த தர்மேந்திரா - ஹேமா மாலினி , அமிதாப் - ஜெயா ஆகியோர் திருமணம் செய்து நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறினர்.

    அந்தக் காலக்கட்டத்தில் வசூலில் சாதனை படைத்த 'ஷோலே' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் 12-ந்தேதி 4K மற்றும் டால்பி 5.1 ஒலியில் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி வெளியாக உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். 



    • இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
    • படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

    விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.

    நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.

    இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.



    இரு தினங்களுக்கு முன்பு 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். அதில் பேசிய நடிகர்கள் பழைய நினைவுகளை கூறி விழாவை கலகலப்பாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மாஸ்க் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் தற்போது 4வது பாடலான "வெற்றி வீரனே" பாடல் வெளியாகியுள்ளது.

    இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக "அமரன்" திரையிட முடிவு

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.

    கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.

    இதைதொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.

    இதுகுறித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிர்காரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கோவாவில் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "AI" குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

    இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்," இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று..

    AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்றார்.

    • தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
    • பிரதீப் ரங்கநாதனிடமிருந்து மற்றொரு இளமை, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து தானே இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் பெறும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து பிரதீப் ரங்கநாதனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து 'டிராகன்', 'டியூட்' படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

    சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

    இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதீப் ரங்கநாதனிடமிருந்து மற்றொரு இளமை, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

    இயக்குனர் நரேஷ் தன்னை சிலகா என்று அழைக்கிறார் என் திவ்யபாரதி குற்றச்சாட்டு.

    ஜி.வி.பிரகாஷுடன் 2021-ம் ஆண்டு வெளியான 'பேச்சிலர்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான "GOAT"-ல் நடித்தபோது தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    GOAT படப்பிடிப்பின்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகரான சுடிகாலி சுதீர் தடையிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

    இந்த விவகாரம் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக நடிகை திவ்யபாரதி வலைத்தள பக்கத்தில் இயக்குநர் நரேஷ் பதிவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்," இயக்குனர் நரேஷ் தன்னை சிலகா என்று அழைக்கிறார். சிலகா என்றால் பறவை என்று பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது தனக்கு நகைச்சுவையாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திவ்யபாரதியின் இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அவர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், "நரேஷினது இந்த செயல் ஒரு ஒற்றை சம்பவம் அல்ல. இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதே பாணியில் தான் நடந்து கொண்டார். 

    மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்தார். ஆனாலும், அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த சுடிகாலி சுதீர் அமைதியாக இருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது.

    தமிழ் சினிமாவில் ஒரே குழு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் பலமுறை மோதல்கள் இல்லாமல் பணியாற்றியுள்ளேன். இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டார். அவர் அதை பகிரங்கப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது" என்றார்.

    இந்நிலையில், திவ்யபாரதியின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் நரேஷ் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
    • ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனது திரைப்பயணத்தின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.  

    Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.

    'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'மூன்வாக்'. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

    ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்

    படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் 'STORM Anthem' பாடலுக்கான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது. Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.

    ஜென்டில்மேன், காதலன், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×