என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ்.
    • இவர் இயக்கத்தில் “ரங்கோலி” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் "ரங்கோலி". இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரங்கோலி

    ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் "ரங்கோலி" திரைப்படம் உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


    ரங்கோலி பட போஸ்டர் வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

    இதனை திரைப்பிரபலங்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, அதர்வா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சதீஷ், வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


    ரஜினிகாந்த் - பிரதீப் ரங்கநாதன்

    இந்நிலையில், 'லவ் டுடே' படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  'லவ் டுடே' படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எதையும் மறக்க முடியாது சார்." என்று பதிவிட்டுள்ளார்.



    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இதானி.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் சித்தி இதானி.


     சித்தி இதானி

    இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் சித்தி இதானி நடித்து வருவதாக கூறப்படுகிறது.


    சித்தி இதானி

    இந்நிலையில், இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் 2 அடி முதல் 3 அடிவரை சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    சந்தோஷ் நாராயணன்

    இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் வீட்டின் முன் 2 அடி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா" எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.



    • அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.
    • இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்துள்ளார். இதில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் உள்ளனர். இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


    அசோக் செல்வன்

    இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசியதாவது, " ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.


    அசோக் செல்வன்

    'நித்தம் ஒரு வானம்' படம் மூன்று கதாபாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன். கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.


    அசோக் செல்வன்

    எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது. அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்" என்று பேசினார்.

    • என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
    • அண்மையில் இவர் வீட்டில் கொள்ளை நடைபெற்றது.

    என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். அண்மையில் இவரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


    பார்வதி நாயர்

    ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.


    பார்வதி நாயர்

    இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சில ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டுள்ளது.

    • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.


    ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.


    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

    இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்ததால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையில் என்னை தார்ஷா குப்தா சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா, "சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.


    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தாவின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சதீஷின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பொது இடங்களில் இதுபோன்ற கோமாளித்தனமான கருத்துகள் சொல்வதால் பெண்கள் அசிங்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் உணருவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • நடிகர் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதல் செய்து வருவதாக செய்திகள் பரவி வந்தன.
    • சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர்.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    அதன்படி வருகிற நவம்பர் 28- ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' திரைப்படம் அண்மையில் வெளியானது.
    • நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இரவின் நிழல்

    'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். ஆனால் வெளியாகவில்லை. இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி" என்று பதிவிட்டிருந்தார்.


    இரவின் நிழல் போஸ்டர்

    இந்நிலையில் 'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்! ப்ளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார்.
    • இப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.


    சர்தார்

    இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சர்தார்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஆஹா ஓடிடி தளம் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
    • இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கலகத் தலைவன்

    இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.


    கலகத் தலைவன்

    இந்நிலையில், இப்படத்தில் உள்ள 'நீளாதோ' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரியன் வரிகளில் மது ஐயர் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    நிவின் பாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகர் நிவின் பாலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    ×