என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    நிவின் பாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகர் நிவின் பாலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பிரபாஸ்.
    • இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் ரசிகர் பட்டாளம் விரியத் தொடங்கியது. தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பிரபாஸ்

    இந்நிலையில், நடிகர் பிரபாஸ் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் 20 இயர்ஸ் ஆப் பிரபாஸ் (#20YearsofPrabhas) என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
    • இந்த படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.


    ஏஜென்ட் கண்ணாயிரம்

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


    ஏஜென்ட் கண்ணாயிரம்

    இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பிரபல டிடக்டிவாக மாற சந்தானம் முயற்சித்து வருவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘லவ் டுடே’.
    • இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


    லவ் டுடே

    இதையடுத்து 'லவ் டுடே' பட நடிகை ரவீனா ரவி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'லவ் டுடே' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணினால் நன்றாக இருக்கும் என்று பிரதீப் என்னிடம் கேட்டுக் கொண்டார். நம்புங்க நம்பி பண்ணுங்க அப்படினு சொன்னார். நான் என்கிட்ட மட்டும் தான் இப்படி சொன்னார் என்று நினைத்தேன்.


    ரவீனா ரவி

    ஆனால், அவரோட பர்சனல் வாழ்க்கையில் எல்லாரிடம் இவ்வாறு சொல்லியிருக்கார். இந்த படத்தில் எல்லாவற்றையும் காட்டியிருந்தார். யோகி பாபு சாருடனான என்னுடைய காட்சிகள் மக்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்று நினைத்தேன் அது மாதிரி தான் நடந்தது. மனச பாத்து லவ் பண்றவங்களும் இருக்காங்க சில பேருக்கு புரியும் தோற்றம் சில காலம் தான் இருக்கும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கபோவது கிடையாது" என்று பல விஷயங்கள் பற்றி கூறினார்.




    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.
    • இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.


      டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜா

    இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிக்பாஸ் 6-வது சீசன் 33 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று வெளியான புரோமோவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 33-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் இந்த வார போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத ஒரு நபரை தேர்வு செய்ய சொல்லி பிக்பாஸ் விக்ரமனிடம் கூறுகிறார். இதற்கு ஜனனி என்று விக்ரமன் சொல்லவே அமுதவாணன் வாதிடுகிறார். இதனால் கடுப்பான ஜனனி, அமுதவாணனை நீங்கள் எல்லாத்தும் இப்படி தான் பிரச்சினை பண்றீங்க என்று கதறி அழுகிறார். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இந்த சர்ச்சை குறித்து மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

     

    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தா

     

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

     

    இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், என்னிடம் தர்ஷா குப்தா என்னைப் பாருங்க சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. இதனால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையிலும் என்னை அவங்க சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார்.

    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தா

     

    இந்நிலையில் சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

    தர்ஷா குப்தாவும் சதீஷும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வது பலரையும் முணுமுணுக்க செய்துள்ளது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது.


    வாரிசு

    விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    • சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் இதில் தனியார் ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


    சீனுராமசாமி

    அண்மையில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து மாங்காட்டில் தனியார் நிறுவன ஊழியர் இதே போல் தவறி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு தொடர் விபத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    சீனுராமசாமி

    அதில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். முழு நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நந்தம்பாக்கத்தில் சினிமா துணை நடிகர் மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன், ரூ.2 லட்சத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • வீட்டில் வேலை செய்த காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12-வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). சினிமா துணை நடிகரான இவர், எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய மனைவி ராஜி (48). இவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காவலாளியாக இருந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவருடைய மனைவி ராஜி, தனியாக இருந்தபோது மர்மநபர்கள் 3 பேர் வீடு புகுந்து ராஜியை கட்டிப்போட்டு, பீரோவில் வைத்து இருந்த 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    ஆர்.கே

    ஆர்.கே

     

    பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த ராதாகிருஷ்ணன், தனது மனைவி கட்டிப்போடப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி ரமேஷ், வீட்டில் இ்ல்லை. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆர்.கே

    ஆர்.கே

     

    அதில் அவரது வீட்டின் காவலாளி ரமேஷ் உள்பட 3 பேர் வீட்டுக்குள் புகுந்து, பின்னர் நகை, பணத்துடன் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே ரமேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவலாளி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.
    • இந்த படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கட்டா குஸ்தி' திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

     

    ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா

    ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா

    இந்நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி உள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×