என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்க இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யும் பிரீமியம் இருசக்கர வாகனங்களான போர்சா 750, எக்ஸ்-ஏடிவி போன்ற மாடல்களில் ரோட்சின்க் எனும் பெயரில் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. தற்போது ஹோண்டா விண்ணப்பித்து இருக்கும் டிரேட்மார்க் விவரங்களின் படி இதே அம்சம் இந்திய மாடல்களிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஹோண்டா ஆக்டிவா 125, கிரேசியா மற்றும் ஹார்னெட் 2.0 போன்ற மாடல்களில் இந்த வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்திலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் ரோட்சின்க் பெயரில் டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருக்கிறது.

இந்த டிரேட்மார்க் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில், இந்த தொழில்நுட்பத்தை தனது வாகனங்களில் பொருத்தும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிது. சமீப ஆண்டுகளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சாதாரண ஒன்றாகிவிட்ட நிலையில், ஹோண்டா இதனை வழங்க முடிவு செய்திருக்கலாம்.
இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா இதனை வழங்கும் பட்சத்தில் சந்தையில் போட்டியை கடுமையாக்கலாம்.
தமிழகத்தில் இயங்கி வந்த ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி ஆலையை மூடுவதாக அறிவித்து இருக்கின்றன.
முன்னதாக கொரோனா தொற்று மற்றும் கடும் ஊரடங்கு காரணமாக பணி செய்ய இயலாது என ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிசான் உற்பத்தி ஆலை சென்னை அருகில் அமைந்துள்ளது.

இந்த ஆலை பணிகள் மே 30 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கி இருப்பதால், அடுத்த வாரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூடப்பட்டு இருக்கும் ஆலையில் இந்நிறுவனங்களின் பிளாக்ஷிப் மாடல்களான நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் எஸ்யுவி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அந்த பெருமையை நிச்சயம் பெரும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை ரோட்ஸ்டர் மாடலை மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2022 துவக்கத்திலோ இந்த மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. ரோட்ஸ்டர் மாடலில் ஸ்பேக்ஸ் எக்ஸ் பேக்கேஜ் பொருத்தப்பட்டால் இது சாத்தியமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரோட்ஸ்டர் மாடலில் குளிர்ந்த ஏர் திரஸ்டர்கள், காரின் லைசன்ஸ் பிளேட் பின்புறம் கம்ப்ரெஸ் செய்யப்பட்ட ஏர் டேன்க் மற்றும் திரஸ்டர்கள் இருக்கும். இவை காரை மிக அதிக வேகத்தில் இயக்கும் திறனை வழங்கும். ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் இன்றி ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், `ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் திரஸ்டர் பேக்கஜ் பாதுகாப்பானது, ஆனால் மிகவும் உறுதியானது,' என தெரிவித்தார்.
சென்னையில் இயங்கி வரும் உற்பத்தி ஆலை பணிகளை நிறுத்தும் நிலைக்கு ஹூண்டாய் தள்ளப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை ஆலை பணிகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி இருக்கிறது. கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஹூண்டாய் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மற்றும் தமிழகத்தில் அமலாகி இருக்கும் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. கடந்த வாரம் தமிழகத்தில் ஊரடங்கை ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அரசு உத்தரவிட்டது.

ஊரடங்கு காலக்கட்டத்திலும் தொடர்ந்து செயல்பட ஆட்டோமொபைல் உள்பட சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலை புரிந்து கொண்டு ஹூண்டாய் நிர்வாகம், ஆலை பணிகளை மே 25 ஆம் தேதி துவங்கி மே 29 ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்துள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குட்ஸ் ரைஸ் எலக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.
லெபனான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் குட்ஸ் ரைஸ் (Quds Rise) என அழைக்கப்படுகிறது. இதனை எலெக்ட்ரா எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது.
எலெக்ட்ரா குட்ஸ் ரைஸ் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை 30 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,83,176 ஆகும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450-க்கும் அதிக கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இந்த எலெக்ட்ரிக் காரை மொகமது அறிமுகம் செய்தார். மேலும் இது லெபனானில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் என்றும் அவர் தெரிவித்தார். குட்ஸ் ரைஸ் என்பது அரபி வார்த்தை ஆகும். இதற்கான அர்த்தம் ஜெருசலேம் ஆகும். குட்ஸ் அரைஸ் மாடலில் 50 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
இது 160 ஹெச்பி திறன் கொண்டது. இதன் கிரில் பகுதியில் பெரிய தங்க நிறத்தாலான அல்-அக்சா மசூதியின் லோகோ உள்ளது. 18 இன்ச் வீல்களை கொண்டிருக்கும் குட்ஸ் ரைஸ் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் எட்டிவிடும்.
வால்வோ நிறுவனத்தின் XC40 மாடல் இந்திய சந்தையில் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 எஸ்யுவி மாடலுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இறுக்கிறது. இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக XC40 இருக்கிறது. 5-இருக்கைகள் கொண்ட XC40 எஸ்யுவி மாடலின் துவக்க விலை ரூ. 41.25 லட்சம் ஆகும்.

தற்போது வால்வோ XC40 மாடலுக்கு ரூ. 3.26 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விலை ரூ. 37.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. இந்தியாவில் XC40 மாடல் T4 R டிசைன் கொண்டிருக்கிறது.
வால்வோ XC40 மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
டிரையம்ப் நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் 1200 மெக்-குயின் எடிஷன் மோட்டார்சைக்கிளை வெளியிட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த ஒரு ஆண்டாக விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் டிரையம்ப் TR6 மோட்டார்சைக்கிளின் மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிரையம்ப் TR6 மாடலை மெக்-குயின் தி கிரேட் எஸ்கேப் எனும் திரைப்படத்தில் பயன்படுத்தினார். இவர் மோட்டார்சைக்கிள் சாகசம் செய்து புகழ் பெற்றவர்.

ஸ்கிராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷனில் புதிய நிறம், பல்வேறு கஸ்டம் அக்சஸரீக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் பியூவல் டேன்க் மீது ஸ்டீவ் மெக்-குயின் கிராபிக் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் என்ஜின் ப்ரொடெக்ஷன் டிரெசர் பார்கள் உள்ளன.
2021 ஸ்கிராம்ப்ளர் 1200 மாடலில் 1200சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 13.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி இருக்கிறார்.
கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. மறுபக்கம் மனித நேயமும் ஓங்கி ஒலிக்கிறது. தொற்றை எதிர்கொள்ள பல நிறுவனங்கள், பிரபலங்கள் உள்பட பலதரப்பட்டோர் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த 51 வயதான பிரேமசந்திரன் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உதவி வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவர் இதுவரை தொற்று அறிகுறிகள் இருந்த சுமார் 500-க்கும் அதிகமானோரை தனது மினி ஆம்புலன்சில் அழைத்து சென்று இருக்கிறார்.

ஒவ்வொரு முறை மருத்துமனைக்கு செல்லும் போது, ஆட்டோவை முழுமையாக சுத்தப்படுத்திய பின்னரே அடுத்த பயணத்திற்கு பிரேமசந்திரன் தயாராகிறார். இவரது ஆட்டோ மூன்று புறங்களிலும் பிளெக்சி-கிளாஸ் தடுப்புகளை கொண்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இவருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
`வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தொற்று அறிகுறிகள் இருந்தது. அவரை மருத்துவமனை கொண்டு சென்றதும், எனக்கு பலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைப்புகளை மேற்கொள்ள துவங்கினர். இந்த பயணங்கள் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது,' என அவர் தெரிவித்தார்.
ஐஸ் கட்டி மீது அதிவேகமாக சென்ற கார் என்ற பெருமையை லம்போர்கினி உருஸ் மாடல் படைத்துள்ளது.
ஐஸ் மீது அதிவேகமாக சென்ற கார் எனும் பெருமையை லம்போர்கினி உருஸ் பெற்றது. ரஷ்யாவில் உள்ள பைகல் எனும் ஏரியில் மார்ச் மாதம் நடைபெற்ற டேஸ் ஆப் ஸ்பீடு நிகழ்வில் இந்த சாதனையை லம்போர்கினியின் சூப்பர் எஸ்யுவி படைத்தது.
மணிக்கு 298 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற சீறி பாய்ந்த லம்போர்கினி உருஸ் மாடலை ரஷ்யாவை சேர்ந்த கார் பந்தைய வீரர் ஆண்ட்ரே லியோன்ட்யெவ் ஓட்டினார். இவர் ஏற்கனவே 18 முறை டேஸ் ஆப் ஸ்பீடு நிகழ்வில் சாதனை படைத்து இருக்கிறார். இந்த சாதனையை ரஷ்ய ஆட்டோமொபைல் பெடரேஷன் அங்கீகரித்து இருக்கிறது.

உறைந்த ஏரியின் மீது கார் ஓட்டுவது மிகவும் சவாலான காரியம் ஆகும். மேலும் இதை ஓட்டும் போது ஏரியில் மூழ்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. ஏதேனும் சிறு தவறு நடந்தாலும், கற்பனை செய்ய முடியாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
லம்போர்கினி உருஸ் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளிலும், 200 கிலோமீட்டர் வேகத்தை 12.8 நொடிகளிலும் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 650 பிஹெச்பி திறன் கொண்ட 4.0 ட்வின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய மேபக் மாடலை தனது வலைதளத்தில் சத்தமின்றி அறிமுகம் செய்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை மேபக் எஸ் கிளாஸ் எஸ்680 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் அந்நிறுவன வலைதளத்தில் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடல் வி8 வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்680 வி12 மாடல் டூ-டோன் பெயின்ட் மற்றும் குரோம் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மல்டி-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மேபக் மாடல் 6.0 லிட்டர், ட்வின்-டர்போ வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 612 பிஹெச்பி பவர், 1000 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
முதல் முறையாக வி12 என்ஜின் கொண்ட மேபக் மாடலில் 4மேடிக் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் மாடல் மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட கோடியக் 7 சீட்டர் எஸ்யுவி மாடலினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரின் அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. மேம்பட்ட ஸ்கோடா கோடியக் மாடல் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெளியாக இருக்கிறது. இத்துடன் விஆர்எஸ் வேரியண்டும் அறிமுகமாக இருக்கிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் 2021 ஸ்கோடா கோடியக் மாடல் ஐந்து வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் துவக்க விலை 27,650 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 28.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 41,720 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 43.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் சக்திவாய்ந்த விஆர்எஸ் வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பேஸ் வேரியண்டில் புல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்கள், எல்இடி ரியர் லைட்கள், டைனமிக் இன்டிகேட்டர், எக்ஸ்டென்டெட் ரியர் ஸ்பாயிலர், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் நின்ஜா ZX 4R மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கவாசகி நிறுவனம் நின்ஜா ZX 4R பெயரில் புதிய 400சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய 4 சிலிண்டர் ஸ்போர்ட்பைக் கவாசகி நின்ஜா ZX 25R மாடலை சார்ந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ZX 25R மாடல் கடந்த ஆண்டு நியூசிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய சந்தைக்கென கவாசகி சற்றே பெரிய 400சிசி மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதே தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கவாசகி விண்ணப்பித்து இருக்கும் காப்புரிமமை விவரங்கள் அமைந்துள்ளன. காப்புரிமை வரைபடங்களின்படி இந்த மாடல் தோற்றத்தில் ZX 25R போன்றே காட்சியளிக்கிறது.






