என் மலர்tooltip icon

    சேலம்

    • பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சு, கண்ணாடி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குறை பிரசவமாக 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது ஒரு கிலோ 500 கிராம் மட்டுமே இருந்தது.

    இந்த குழந்தைக்கு வழக்கம் போல இன்று காலை தாய் மோனிஷா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது மூச்சுக்குழாயில் பால் ஏறியதாகவும், இதனால் விக்கல் எடுத்ததுடன் மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குழந்தை மயக்க நிலைக்கு சென்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சு-மோனிஷா தம்பதி குழந்தையை உடனடியாக மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 அணைகளில் இருந்தும் 7 ஆயிரத்து 38 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 21.04 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    நேற்று முன்தினம் கர்நாடக அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடி தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 7 ஆயிரத்து 38 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 38 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 276 கன அடியாகவும், நீர்மட்டம் 102.74 அடியாகவும் உள்ளது.

    அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 411 கன அடியாகவும், நீர்மட்டம் 75.74 அடியாகவும் உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7 ஆயிரத்து 38 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரி வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 978 கன அடியாக சரிந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 583 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலையில் 55.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.91 அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 21.04 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடியாகும்.

    அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் தற்போது தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.

    நீர் திறப்பு இதே நிலை நீடித்தால் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பருவமழை பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்டு வரையிலான ஓராண்டு காலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் , கரூர் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையங்களில் விதி மீறிய குற்ற செயல்களுக்காக 5,317 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களிடம் இருந்து விதி மீறலுக்காக ரூ. 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 4.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

    சேலம் கோட்டம் வழியாக சென்ற ரெயில்களில் கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் முறைகேடு டிக்கெட் புக்கிங் தொடர்பாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதில் 68 போலி டிக்கெட் ஏஜெண்டுகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26.51 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

    போலியாக பல ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகளை வைத்து கொண்டு பல்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்றதாக ஓராண்டில் இந்த 68 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    • இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
    • கர்ப்பிணி பவித்ரா நேற்று மண்எண்ணெய் கேனுடன் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்றார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த பஸ் பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர் மோகன்ராஜூம், பவித்ராவும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த மே மாதம் 22-ந் தேதி காஞ்சிபுரம் சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்த நிலையில் மோகன்ராஜின் சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஓமலூர் வந்த தன் கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்டு அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.

    இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி அனுப்பியதாகவும், தனது கணவரை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் கோரி சேலம் போலீஸ் சூப்பிரண்டிடம் பவித்ரா புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கர்ப்பிணி பவித்ரா நேற்று மண்எண்ணெய் கேனுடன் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்றார். தனது கணவரை சேர்த்து வைக்க கோரி வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே மோகன்ராஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். போலீசாரும் இதுகுறித்து எந்தவித விசாரணையும் நடத்தாத நிலையில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது.

    சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.

    மேம்பால நகரம்

    மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.

    ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    முள்ளுவாடி ரெயில்வே கேட்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.

    இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேம்பாலம்

    கட்டும் பணி தொடக்கம்

    இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.

    தாமதம்

    3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

    இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.

    அணை மேடு பாலம்

    இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .

    குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    நீண்ட நாள் எதிர்பார்பு

    ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

    இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகா
    • ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகா (23).

    பட்டதாரி

    ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கீர்த்திகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்த கஜேந்திரன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    2-வது திருமணம்

    இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஜேந்தி ரன் வேறு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீர்த்திகா தனது தந்தையுடன் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கீர்த்திகா மற்றும் அவரது தந்தையை கஜேந்திரன் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கீர்த்திகா தார மங்கலம் போலீஸ் நிலை யத்தில் கஜேந்திரன் மீது புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடு களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான போலீசார் செய்து வரு கிறார்கள். இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியின் தேர்வு மையத்தை மாற்றி மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி சீட்டு பெற்ற 1000 விண்ணப்ப தாரர்களும் அம்மையத்தின் எதிரில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

    எனவே மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சின்னகவுண்டா புரத்தில் உள்ள ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என சேலம் மாவட்ட போலீஸ் சூபப்பிரண்டு அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.

    • அன்னதானப்பட்டி லைன்மேடு ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்திம்
    • வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

    அன்னதானப்பட்டி

    சேலம் மாநகர காவல் துறையில், பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர காவல் வாகனங்கள் வரும் (31- ந் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அன்னதானப்பட்டி லைன்மேடு ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.

    இந்த வாகனங்களை 29- ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் முன் பணமாக ரூ.5 ஆயிரம் , 30- ந் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் செலுத்தலாம்.முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, காவல் கூடுதல் துணை ஆணையாளர், ஆயுதப்படை, சேலம் மாநகரம், அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

    • ராஜாராம் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார்.
    • வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி கந்தசாமி கோவில் அருகில் வசிப்பவர் ராஜாராம் (36). இவர் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு சென்றனர்.

    சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது மொபட்டின் சீட்டின் அடியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்து. இது குறித்து ராஜாராம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மொபட்டில் இருந்த பணத்தை திருடியது அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (21) என்பது  தெரியவந்தது.இதையடுத்து வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
    • ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளை

    சேலம்

    சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவரது மனைவி கலா (49). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கலா கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
    • வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாசிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). இவர் அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கந்தாஸ்ரமத்திலிருந்து அம்மாபேட்டை டன்லப் ஜங்ஷனில் திரும்பியபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமார் உடலை

    மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×