என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தவெக நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
    • காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

    சம்பவம் நடந்தபோது சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கமளித்திருந்தார்.

    ஆனால், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், சிபிஐ தனது விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது ஆயுதப்படை டிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது.

    • ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது.
    • இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்

    ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில் "One Battle After Another" படம் அதிக விருதுகளை தட்டிச்சென்றது. "Adolescence" தொலைக்காட்சி பிரிவில் நான்கு விருதுகளை வென்றது, மேலும் "Hamnet" மற்றும் "Sinners" ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன.  Hamnet சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது. Sinners சிறந்த வசூல் சாதனையில் விருதுபெற்றது. சிறந்த அனிமேஷன் பிரிவில் KPop Demon Hunters விருதை வென்றது. சிறந்த இயக்குநர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றறார். இந்த விருதுவிழாவில் இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார். 

    • தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
    • தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.

    2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

    இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
    • வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் நல்லாம் பகுதியை சேர்ந்தவர் சஜீந்திர பாபு (வயது50). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    அவர் பணியாற்றிய பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 4-ந்தேதி பிறந்த நாள் வந்துள்ளது. அந்த மாணவிக்கு ஆசிரியர் சஜீந்திர பாபு பள்ளியில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும் பிறந்தநாள் பரிசை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், அதனை வாங்க தனது வீட்டுக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.

    அவரது அழைப்பு "அன்பின் அழைப்பு" என நினைத்து ஆசிரியருடன் அவரது வீட்டுக்கு 9-ம் வகுப்பு மாணவி சென்றார். தனது இரு சக்கர வாகனத்திலேயே மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    வீட்டுக்குள் சென்றதும் படுக்கை அறைக்குள் வரச் செய்து மாணவியிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து விட்டார்.

    பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தை அந்த மாணவி உடனடியாக யாரிடமும் கூறவில்லை. சில நாட்களுக்கு பிறகு தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். அவர் அதுபற்றி மாணவியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் சஜீந்திரபாபு மீது புகார் செய்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியரை கைது செய்தனர். ஆசிரியர் சஜீந்திரபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.

    மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார்
    • அடுத்தாண்டு கோடை விடுமுறையில் மூன்வாக் படம் வெளியாகவுள்ளது.

    சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.

    'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

    இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மூன்வாக் படத்தின் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் நாளை (ஜனவரி 13) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களின் முதல் 1 நிமிட இடம்பெற்ற மினி கேசட் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 'மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
    • கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

    திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.

    தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.

    இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.

    இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.

    அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.

    இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இம்மாத இறுதிக்குள் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்" என்று வாக்குறுதிஅளித்தார்.

    இதனை கேட்டதும் தூய்மைப் பணியாளர்கள்குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியுள்ளது.

    • திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அவ்வாறே தொடரும்
    • கூட்டணி இல்லாமல் போட்டி என விஜய் கூறியிருந்தார்

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அவ்வாறே தொடரும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    மறுபுறம் அதிமுக தரப்பு பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. இதனிடையே கூட்டணி இல்லாமல் போட்டி எனக்கூறி கட்சித் தொடங்கிய விஜய் தரப்பும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் சிபிஐ விசாரணை, ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் இழுபறி போன்றவை அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்காக விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் நேர்காணலின்போது, 

    "அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வரவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது, மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்; அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்."  என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகமா இருக்குமோ என பலரும் யூகித்து வருகின்றனர்.

    • மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
    • தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் என்று அண்ணாமலையை ராஜ் தாக்கரே விமர்சித்தார்

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உகுட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக ராஜ் தாக்கரே தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    • விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைகோள் உதவும்.
    • ஸ்பெயின் ஸ்டாா்ட்அப் நிறுவனம் உருவாக்கிய ‘கிட்’ எனப்ப டும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் பயணமாக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டை ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் 16 செயற்கைகோளுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

    பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இ.ஓ.எஸ்.-என்.1 (அன்விஷா) எனும் அதி நவீன செயற்கைகோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்துள்ளது.

    இந்தச் செயற்கைகோளுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 15 சிறிய வணிகரீதியான செயற்கைகோளுடன் 44.4 மீட்டர் உயரம் உள்ள பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

    முதன்மைச் செயற்கை கோளான இ.ஓ.எஸ்.-என். 1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கான சேவைகளை அது வழங்கும். மேலும் விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைகோள் உதவும்.

    மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்டு எனும் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்தது. இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக் கோளில் மீண்டும் எரி பொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

    இதைத் தவிர, ஸ்பெயின் ஸ்டாா்ட்அப் நிறுவனம் உருவாக்கிய 'கிட்' எனப்ப டும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது.

    17 நிமிட பயணத்திற்கு பிறகு இந்த செயற்கை கோள்களை சுமார் 511 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சூரியஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    4-வது நிலையில் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஆனால் 3-வது நிலையின் போது கோளாறு ஏற்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகியது. தனது இலக்கை அடைய முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இன்று பி.எஸ்.எல்.வி. சி-62/ இ.ஓ.எஸ். - என். 1 திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளோம். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2 திட எரிபொருள் நிலைகள் மற்றும் 2 திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட 4 நிலை ராக்கெட் ஆகும்.

    3-வது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்த படியே இருந்தது. 3-வது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளைக் கண்டோம். இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. இலக்கை அடைய முடியவில்லை. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம். விரைவில் இது குறித்து விவாதிப்போம் என்றார்.

    பி.எஸ்.எல்.வி. பயணத்தில் ஏற்பட்ட 2-வது சிக்கல் இதுவாகும். இந்த ஆண்டின் முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது.

    • 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதன்முறையாக இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான ராஜ்கோட்டில் அவர் அணியுடன் இணைவார்.

    ×