என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி இந்த தொழில்நுட்பத்தை காவல் துறை பயன்படுத்த கூடாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    அமேசான் நிறுவனம், முக அங்கீகார தொழில்நுட்பத்தை மென்பொருள் வடிவத்தில் அறிமுகம் செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம், இன ரீதியில் பாரபட்சமாக செயல்படுவதற்கு வழி வகுத்து விடும் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    குறிப்பாக, இந்த முக அங்கீகார தொழில்நுட்பமானது, வெள்ளை இன மக்களின் முகங்களை விட கருப்பு இன மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் முகங்களை தவறாக அடையாளம் காண வாய்ப்பு உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்து வந்தன.

    இந்த நிலையில் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி வெள்ளை இன போலீஸ் பிடியில் சிக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்கா முழுவதும் பெரும் கலவரத்துக்கு வழிவகுத்தது.

    எனவே அமேசான், தனது முக அங்கீகார தொழில் நுட்ப மென்பொருளை போலீசார் ஒரு வருடம் பயன்படுத்துவதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.

    அமேசான்

    இதுபற்றி அமேசான் குறிப்பிடுகையில், “முக அங்கீகார தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டை நிர்வகிப்பதற்கு அரசாங்கங்கள் வலுவான விதிமுறைகளை வகுத்து அளிக்க வேண்டும் என்று நாங்கள் வாதிட்டு வந்தோம். சமீபத்திய நாட்களில் இந்த சவாலை ஏற்பதற்கு நாடாளுமன்றம் தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே ஒரு வருட தடைக்காலம், பொருத்தமான விதிகளை அமல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு போதுமான அவகாசத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். தேவைப்பட்டால் இதில் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்” என தெரிவித்து இருக்கிறது.

    அமேசானின் மென்பொருள், ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு படத்தை மிக விரைவாக ஒப்பிட்டு பார்க்க உதவும். உதாரணமாக, ஒரு அதிகாரியின் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை, ஆயிரக்கணக்கான புகைப்படங்களை வைத்திருக்கக்கூடிய போலீஸ் தரவு தளங்களில் வைத்திருக்கும் ‘மக்‌ஷாட்’களுடன் பொருத்திப்பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வார தொடக்கத்தில் ஐ.பி.எம். நிறுவனமும், தனது முக அங்கீகார மென்பொருளை வெகுஜன கண்காணிப்பு அல்லது இன சுய விவரத்துக்காக வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அமேசான் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது முக அங்கீகார தொழில்நுட்பத்தை காவல் துறையினர் பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வுக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்சமயம் இந்த நிகழ்வுக்கான அட்டவணையை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.

    அட்டவணை விவரங்களின் படி டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கி, பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் யூனியன் டைமிங் மற்றும் இதைத் தொடர்ந்து ஐஒஎஸ், ஐபேட் ஒஎஸ், மேக்ஒஎஸ், டிவிஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகள் பற்றிய விவரங்களுடன் டெவலப்பர்கள் ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்களுடன் கலந்துரையாட முடியும்.

    ஆப்பிள்

    கீநோட் உரை ஜூன் 22 ஆம் தேதி காலை 10 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க்கில் இருந்து ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டெவலப்பர் ஆப், ஆப்பிள் டெவலப்பர் வலைதளம், ஆப்பிள் டிவி ஆப் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றில் நேரலை செய்யப்படுகிறது.

    இதுதவிர சீனாவில் டென்சென்ட், IQIYI, பிலிபிலி மற்றும் யோகியூ உள்ளிட்ட தளங்களில் நேரலை செய்யப்படுகிறது. ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 22 இல் துவங்கி ஜூன் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  

    2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு பற்றிய இதர விவரங்கள் ஜூன் 22 ஆம் தேதிக்குள் ஆப்பிள் டெவலப்பர் செயலியில் தெரிவிக்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
    இந்தியாவில் டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன.



    ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ போன்ற நிறுவனங்கள் நாட்டில் டிரோன் விமானங்களை கொண்டு பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய இயக்குனரகம் நாட்டில் இயங்கி வரும் பத்து நிறுவனங்களுக்கு டிரோன்களை சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மேலும் அதிகப்படுத்த உதவும்.

    ஸ்விக்கி

    அமேசான் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற சோதனையை அமெரிக்காவில் ஏற்கனவே செய்து வருகிறது. புதிய நடவடிக்கை காரணமாக வான்வளி ஆய்வு துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    'டிரோன் மூலம் டெல்வரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் புதிய முடிவை வரவேற்கிறோம். வான்வெளியில் உணவு டெலிவரி செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்,' என ஜொமாட்டோ நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

    டிரோன் டெலிவரிக்கு சோதனை செய்யும் அனுமதியுடன், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் கான்செப்ட் விவரங்களை செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்க மத்திய  விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    அமேசான் நிறுவனம் முதலீடு செய்வதாக வெளியான செய்திகளுக்கு பாரதி ஏர்டெல் விளக்கம் அளித்துள்ளது.



    அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல்களுக்கு பாரதி ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நேற்று வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்றும், இதுவரை அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமேசான்

    இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் இறுதியாகும் பட்சத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை அமேசான் வாங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவன பங்குகள் ஆறு சதவீதம் வரை உயர்ந்தது.

    எனினும், இதுபோன்ற செய்திகள் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இது நிறுவனத்தின் நன்மதிப்பை பாதிக்கும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் விற்பனையகங்களில் இருந்து ஐபோன்களை திருடியவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை கலந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



    அமெரிக்காவில் கடும் போராட்டங்களுக்கு இடையே ஆப்பிள் விற்பனை மையங்களில் இருந்து திருடப்பட்ட ஐபோன் மாடல்களை டிராக் செய்ய துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விற்பனையகங்களில் திருடப்பட்ட ஐபோன் மாடல்களின் புகைப்படங்களை பலர்  ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    தயவு செய்து ஆப்பிள் வால்நட் ஸ்டிரீட் வந்துவிடுங்கள். இந்த சாதனங்கள் டிராக் செய்யப்பட்டு அவை செயலிழக்க செய்யப்படுகின்றன. இத்துடன் உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்.

    வழக்கமாக  ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து திருடப்படும் ஐபோன்களை ஆப்பிள் ஸ்டோர் வெளியில் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஐபோன்களில் பிரத்யேக டிராக்கிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மென்பொருள் கொண்டு திருடப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் டிராக் செய்துவிடும்.

    திருடப்பட்ட ஐபோன்

    ஆப்பிள் விற்பனை மையங்கள் மார்ச் மாத மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. எனினும், கடந்த வாரம் அமெரிக்கா முழுக்க 100 விற்பனை மையங்களை ஆப்பிள் திறப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஐபோன்கள் திருடப்பட்டன.

    போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தை தொடர்ந்து ஐபோன்கள் திருடப்பட்டன. ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராக அமெரிக்கா முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்பிள் ஸ்டோர்கள் மட்டுமின்றி போர்ட்லாந்து மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுக்க பல்வேறு விலை உயர்ந்த கடைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
    பயனர் விவரங்களை சட்டவிரோதமாக கையாண்டதாக கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



    உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    உலகளவில் புகழ்பெற்ற தேடுப்பொறி சேவையாக கூகுள் இருக்கிறது. இந்த தளத்தில் ‘இன்காக்னிட்டோ மோட்’ என்ற அம்சத்தில், ஒருவர் எதையாவது தேடும்போது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த ‘இன்காக்னிட்டோ மோட்’ அம்சத்தில் பயனாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில் தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதும் அதில் பதிவாகாது. அந்த நம்பிக்கையை மீறும் வகையில் இப்போது அது கண்காணிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கோப்புப்படம்

    இது தொடர்பாக கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37,500 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கலிபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில், கூகுள் கணினி அல்லது செல்போனை கொண்டுள்ள ஒவ்வொருவரிடம் இருந்து ரகசிய மற்றும் அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியாது என கூறி உள்ளது.

    மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல் தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தடுத்து, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன அல்லது ஆதாயத்துக்காக சுரண்டப்படுகின்றன என்பதை அறிந்து கவலைப்படுகிறார்கள் என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

    சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஒருவருட வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 365 விலையில் பிரீபெயிட் சலுகையினை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 365 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த பலன்களுக்கான வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

    முன்னதாக ரூ. 2399 விலையில் பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகையை சட்டீஸ்கர் வட்டாரத்தில் அறிவித்தது. எனினும், இந்த சலுகை டேட்டா இன்றி 600 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும்.

    கோப்புப்படம்

    புதிய ரூ. 365 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதனை கடந்ததும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோன்று அதிவேக டேட்டா பலன்களும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்படும். இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த சலுகையின் பலன்கள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்களை தொடர்ந்து பயன்படுத்த பயனர்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
    கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சில நாட்களில் பத்து லட்சத்துக்கும் அதிக டவுன்லோட்களை கடந்த இந்திய செயலி விவரங்களை பார்ப்போம்.



    ஆண்ட்ராய்டு மொபைல்போன்களில் உள்ள சீன செயலிகளை கண்டறிந்து அன்-இன்ஸ்டால் செய்யும் ரிமூவ் சைனா ஆப்ஸ் (Remove China Apps) எனும் செயலி இந்தியாவில் பிரபலமாகி உள்ளது. தற்சமயம் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச செயலிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்தியாவில் மே 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ரிமூவ் சைனா ஆப்ஸ் எனும் செயலி இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியது மற்றும் இந்தியா-சீன எல்லை விவகாரங்களில் சீனா மீது அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து சீன பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    செயலியின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த செயலி சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயலிகளை கண்டறிந்து விடுகிறது. பின் பயனர் விரும்பும் பட்சத்தில் தேவையற்ற செயலிகளை ரிமூவ் சைனா ஆப்ஸ் செயலியில் இருந்தபடியே அவற்றை அன்-இன்ஸ்டால் செய்ய முடியும். தற்சமயம் இந்த செயலிக்கு பயனர்கள் 4.8 நட்சத்திர குறியீடுகளை வழங்கியுள்ளனர்.

    இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை மட்டுமே கண்டறிகிறது. அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை இந்த செயலி கண்டறிவதில்லை.

    ரிமூவ் சைனா ஆப்ஸ் செயலியை ஜெய்ப்பூரை சேர்ந்த ஒன்டச் ஆப்லேப்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான வலைதளம் மே 8 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை பலருக்கு ஏற்பட்டு இருப்பதன் காரணமாகவே இதனை பலர் டவுன்லோட் செய்து வருகின்றனர்.
    ஆப்பிள் நிறுவன சேவை ஒன்றில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு அந்நிறுவனம் பல லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அறிவித்து இருக்கிறது.



    ஆப்பிள் நிறுவனத்தின் "சைன்-இன் வித் ஆப்பிள்" எனும் சேவையில் ஜீரோ-டே எனும் பிழையை தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சமீபத்தில் கண்டறிந்து தெரிவித்தார். பாதுகாப்பு பிழையை கண்டறிந்து தெரிவித்த பொறியாளருக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய பாதுகாப்பு பிழை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டிருக்காத ஆப்பிள் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை பாதிக்கிறது. ஹேக்கர்களின் முயற்சியில் இந்த பிழை மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள பயனர் அக்கவுண்ட் விவரங்களை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்.

    சைன் இன் வித் ஆப்பிள்

    பவுக் ஜெயின் என்ற மென்பொறியாளர் ஆப்பிள் சேவையில் இருந்த பிழையை கண்டறிந்தார். மேலும் இந்த பிழை காரணமாக எந்த அக்கவுண்ட் விவரங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சைன் இன் வித் ஆப்பிள் சேவை ஆத் 2.0 போன்றே இயங்குவதாக அவர் தெரிவித்தார்.

    ஹேக்கர்கள் ஆப்பிள் சர்வெர்களால் உருவாக்கப்பட்ட ரகசிய குறியீடுகளை எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும், மற்ற பயனர்களின் ஆப் அக்கவுண்ட் விவரங்களை இயக்கி விட முடியும். ஆப்பிள் நிறுவன மின்னஞ்சல் முகவரி கொண்டு குறியீடுகளை ஹேக்கர்கள் கோரினாலும், ஆப்பிள் அதனை பொது தளத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தது என ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

    இவ்வாறு செய்யும் போது எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும் ஆப் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் நிலவியதாக அவர் தெரிவித்தார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய சந்தையில் செல்போன் விற்பனை 15 சதவீதம் சரிந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.



    கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. செல்போன் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 15 சதவீதம் செல்போன் விற்பனை சரிந்திருப்பதாக தெரிந்துள்ளது. மக்களிடம் பணம் புழங்குவது மிகவும் குறைந்துவிட்டதால் புதிய போன்களை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் பயன்பாடு - கோப்புப்படம்

    மேலும் சமீபத்தில் செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. செல்போன் விற்பனை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. சில மாதங்கள் கழித்தே செல்போன் விற்பனை அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.

    முன்னதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. பல்வேறு நிறுவன மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஸ்மார்ட்போன்கள் விலையை அதிகரித்து இருக்கிறது.
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்ய புதிய கூகுள் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய வழிமுறையினை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதை கொண்டு மக்கள் பொது வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை மீறுகிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    கூகுள் நிறுவனத்தின் புதிய அம்சம் சோடார் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேமராக்களில் ஒன்றிணைந்து இயங்குகிறது. இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது வட்டத்தில் நிறுத்துகிறது.

    சோடார்

    போக்கிமான் கோ போன்ற கேமினை போன்றே புதிய அம்சமும் இயங்குகிறது. சமூக இடைவெளிக்கென பரிந்துரைக்கப்பட்ட அளவினை இது ஸ்மார்ட்போனின் திரையில் காண்பிக்கிறது. தெருக்களில் நடந்து செல்லும் போது, ஸ்மார்ட்போனை முன்புறம் காண்பிக்க வேண்டும்.

    ஸ்மார்ட்போனினை நடுவில் வைத்துக் கொண்டு நடக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். இவ்வாறு பொதுவெளியில் செல்லும் போது சமூக இடைவெளியினை மிக துல்லியமாக கடைப்பிடிக்க முடியும்.

    சோடார் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் குரோம் பிரவுசர்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் சீராக இயங்க ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி இருக்க வேண்டும். இதற்கென வெப் எக்ஸ்ஆர் எனும் தொழில்நுட்பத்தை கொண்டு 2 மீட்டர் சமூக இடைவெளியை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.



    வாட்ஸ்அப் தொழில்நுட்ப குழு என கூறிக் கொண்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் புதுவித மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த மோசடியில் வாட்ஸ்அப் சார்பில் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை வழங்குமாறு கேட்கிறது. பயனர்களை நம்பவைக்கும் விதமாக இந்த அக்கவுண்ட் ப்ரோபைல் புகைப்படத்தில் வாட்ஸ்அப் லோகோ பயன்படுத்துகிறது.

    வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் WABetaInfo, வாட்ஸ்அப் பெயரில் உலா வரும் புதிய மோசடி பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    கோப்புப்படம்

    எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது. மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தின் மூலமாகவே முக்கிய விவரங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    வெரிஃபிகேஷன் கோட் கொண்டு வேறொரு புதிய சாதனத்தில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டினை ஆக்டிவேட் செய்ய முடியும். வாட்ஸ்அப் ப்ரோஃபைல் படம் இருப்பதால், விவரம் அறியாத பலர் இந்த மோசடியில் ஏமாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களுக்கு செயலி மூலம் குறுந்தகவல் அனுப்பாது. ஒருவேளை அனுப்பும் பட்சத்தில் பச்சை நிற வெரிஃபைடு சின்னம் தெரியும். மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒருபோதும் பயனர் விவரங்களை வழங்க கோரி அதன் பயனர்களிடம் கேட்காது.
    ×