search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை சரிவு"

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    கிழங்கு ஆலைகள்

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங் கொட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    ரூ.1000 சரிவு

    கடந்த வாரம் இந்த மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் கிழங்கு

    அதுபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்ந்து டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.
    • கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது.

    உடுமலை:

    பாலியஸ்டர் பட்டு புடவைகளை பெண்கள் விரும்பி வாங்குவதால் பட்டு புடவை விற்பனை குறைந்துள்ளது என்கின்றனர் பட்டு நூல் உற்பத்தியாளர்கள்.

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் சில வாரங்களாக, பட்டுக்கூடு விலை குறைந்துள்ளது.நேற்று முதல் தரமான கூடு ஒரு கிலோ 516 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 390 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இது குறித்து பட்டு நூல் உற்பத்தியாளர் ஹரி கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டு நூல் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பட்டு நூல் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பட்டு நூல் கிலோ 4500 வரை விற்பனையானது. இப்போது கிலோ 3969 ரூபாயாக குறைந்துள்ளது.

    இதற்கு காரணம் இப்போது ஜவுளி கடைகளில் பாலியஸ்டர் பட்டு புடவைகள், 1000 ரூபாய்க்கு நல்ல கலரில் பளபளப்பாக விற்பனை செய்யப்படுகிறது. அதை பெண்கள் வாங்கி உடுத்த துவங்கி விட்டனர். அதனால் பட்டு சேலை வாங்குபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பட்டு நூல் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றார்.

    • மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
    • தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.

    விலை சரிந்தது

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.

    • 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.

    இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.

    இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
    • தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.

    சேலம்:

    சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதி காலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக் கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயி கள் விற்பனை செய்கின்ற னர். நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரி ஒரு கிலோ ரூ.40 முதல் 60, தக்காளி ரூ.80 முதல் 90, வெண்டை ரூ.28 முதல் 32, அவரை ரூ.40 முதல் 70, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.28 முதல் 32, பாகல் ரூ.50 முதல் 70, பீர்க்கன் ரூ.40 முதல் 56, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.50, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.50 முதல் 70, பெ.வெங்காயம் ரூ.25 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.70 முதல் 90, கேரட் ரூ.60 முதல் 64, பீட்ரூட் ரூ.40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 30.

    குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூர வள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.50, புதினா ரூ.30, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60 முதல் 80, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ. 30.

    வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ.32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ.40.

    • நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டு கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    நேற்று நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

    கடந்த வாரம், தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ஒன்று ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப் படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.350 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது.

    வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழிகள் விலை சரிவடைந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொடும் மற்ற நாட்களில் சராசரியாகவும் சில நாட்களில் படுவீழ்ச்சியில் பூக்களின் விலை உள்ளது.
    • இன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பூக்கள் சந்தையில் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை சற்று சரிந்து உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குண்டுமல்லி, சன்னமல்லி, காக்டா, ஜாதி மல்லி, மூக்குத்தி, அரளி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், நந்தியாவட்டம், கோழிகொண்டை, செண்டு மல்லி, சாமந்தி, உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் பூக்கள் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    பண்டிகை காலங்கள், கோவில் கும்பாபிஷேகம், அமாவாசை, பௌர்ணமி,சுப முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொடும் மற்ற நாட்களில் சராசரியாகவும் சில நாட்களில் படுவீழ்ச்சியில் பூக்களின் விலை உள்ளது.

    ஜூன் மாதத்தில் 18ஆம் தேதி வரை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் ஜூன் 19ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை முகூர்த்த தினங்கள் சுப காரியங்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிந்துள்ளது வரும் 28, 29ஆம் தேதிகளில் சுப முகூர்த்த நாள் என்பதால் அப்போது விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பூக்கள் சந்தையில் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை சற்று சரிந்து உள்ளது.

    சன்னமல்லி கிலோ 220 ரூபாய், குண்டுமல்லி கிலோ 260 ரூபாய், காக்டா கிலோ 240 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 260 ரூபாய், மூக்குத்தி பூ கிலோ 260 ரூபாய், சம்பங்கி கிலோ 25 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 60 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 60 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டது.

    • மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
    • திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.

    மதுரை

    திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.

    அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் பருத்தி பஞ்சு விலை சரிவால் கிலோ ரூ.50க்கு விற்பனை விற்பனையானது.
    • போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் கண்மாய், ஊருணி பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. திருஉத்தர கோசமங்கை, சத்திரக்குடி, பரமக்குடி, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் அதிகளவில் இந்த ஆண்டு மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடக்கிறது. போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் வெடித்த பருத்தி தரம் குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மாவட்டத்தில் போதிய மழையின்றி பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பருத்தி தரமின்றி உள்ளதுடன் பஞ்சு விலை சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.50க்கு விலை போகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் கமிஷன் மண்டியில் விற்கப் படும் பஞ்சு மொத்த வியா பாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அனுப்பி வைக்கப்படுகிறது. போதிய தண்ணீரின்றி பூக்கள் உதிர்ந்தும், காய்களின் பருமன் குறைந்தும் உள்ளது.

    இதனால் கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.47 முதல் 50-க்கு விலை போகிறது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் மகசூல் குறைந்து எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    ×