search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை-வரத்து அதிகரிப்பால்  தக்காளி-வெங்காயம் விலை சரிவு
    X

    கோப்புபடம். 

    மழை-வரத்து அதிகரிப்பால் தக்காளி-வெங்காயம் விலை சரிவு

    • தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
    • பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் கொள்முதல் செய்து லாரிகள் வாயிலாக கொண்டு செல்கின்றனர்.

    உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ. 450 வரை விற்ற நிலையில், தற்போது ரூ. 100 முதல் 120 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

    தக்காளி சாகுபடிக்கு,நாற்று, உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பெரும்பாலான செடிகள் மற்றும் காய்கள் அழுகி, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.தற்போது வியாபாரிகள் வருகை இல்லாததால் விலையும் குறைந்துள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், சந்தைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மழை, அழுகல் காரணமாக தூரமாக உள்ள மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்தது என்றனர்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்று வந்தது.பருவமழை காரணமாக, பயிர் பாதித்ததோடு, அறுவடை செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் விவசாயிகள் அறுவடை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.மழை பாதிப்பு காரணமாக, அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, உடனடியாக விற்று விடவும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதோடு, விற்பனையும் பெருமளவு குறைந்துள்ளதால் வெங்காயம் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.தற்போது முதல் தர வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் இரண்டாம் தர வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு திடீரென விலை சரிவை சந்தித்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இதுவரை பெய்த மழையை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, உளுந்து, கொள்ளு, தட்டை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

    அவை இனிவரும் நாட்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் தக்காளி, வெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்கள் பெரும்பகுதி அழுகிவிடும். குறைவான அளவே அவை சந்தைக்கு வரும். செடி வகைகளான கத்தரி, மிளகாய் உள்ளிட்டவற்றில் பூக்கள் உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் குறையும். எனவே காய்கறிகளின் விலை கடுமையாக உயரும்.

    உற்பத்தி வீழ்ச்சி அடைவதால் விவசாயிகளும் பயனடைய முடியாது. நுகர்வோருக்கும் அது சுமையாக மாறும். மழை அதிகரிக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது பல்லாண்டு பயிரான தென்னை விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும்.ஐப்பசியில் துவங்கி கார்த்திகை மாதத்தில் மழை ஓய்வு பெறும். கார்த்திகை பட்டத்தில் வெங்காயம், நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தற்போது இருந்தே நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தண்ணீர் வசதியுள்ள நிலங்களில் விவசாயிகள் கொள்ளு, தட்டை, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். கால்நடைகள் மேய்ச்சலுக்கு போக மீதம் உள்ளவற்றை அப்படியே மடக்கி உழுவதன் மூலம் அதிக அளவில் நிலத்துக்கு தேவையான சத்துக்களை, நிலத்தில் நிலை நிறுத்த முடியும்.இதனால்ரசாயன உர பயன்பாடு கணிசமாக குறையும். விளைச்சலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை பொழியும் போது, அதன் துவக்கத்தில் இடர்பாடுகளை சந்தித்தாலும், அது ஒரு வரமாக அமையும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×