search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை விலை சரிவு: கோழிப்பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.5 கோடி இழப்பு
    X

    முட்டை விலை சரிவு: கோழிப்பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.5 கோடி இழப்பு

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×