search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வாரியம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
    • ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

    புதுடெல்லி:

    ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது.

    ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது. கட்டணம் எதுவும் திருப்பி தரப்படாது. பண்டிகை மற்றும் விடுமுறை கால சிறப்பு ரெயில்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
    • மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

    ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • அக்னி வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ரெயில்வே வேலைவாய்ப்பில் வயது சலுகை வழங்கவும் ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும்.

    மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டும், அதற்கடுத்த பேட்ச் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டும் வயது தளர்வு அளிக்கப்படும். உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்தது.

    • சென்னை- திருச்செந்தூர் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    • மத்திய இணை மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, வரும் 4ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    • பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    சென்னை:

    நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரெயில் போக்குவரத்து வசதிக்காக 'கரீப் ரத்' என்னும் 'ஏழைகள் ரதம்' ரெயில் கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பல்வேறு வழித்தடங்களில் 48 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இந்த ரெயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைக்கப்பட்டது.

    தற்போது சென்னை சென்ட்ரல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் வழித்தடத்தில் வாராந்திர ரெயில் உள்பட நாடு முழுவதும் 26 ஜோடி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் குறைந்த கட்டணத்தில் ஏ.சி. வசதி இருக்கும்.

    இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ்களில் இனிமேல் ஆர்.ஏ.சி. வசதியை ரத்து செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது பயணிகளுக்கு பெர்த் (படுக்கை வசதி) மட்டுமே ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில் பயணிகள் ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ரகுநாதன் கூறுகையில், 'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆர்.ஏ.சி. டிக்கெட் மட்டுமின்றி பக்கவாட்டில் உள்ள நடுப்பகுதிகளையும் அகற்ற வேண்டும். சேர்-கார் வசதியுடன் கூடிய மேலும் இதுபோன்ற ரெயில்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.

    இந்த ரெயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மட்டுமே நிற்கின்றன. மேலும் அவற்றின் பயண நேரம் மற்ற அதிவிரைவு ரெயில்களை விட குறைவாக உள்ளது.

    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வழங்கப்படும் அதே முன்னுரிமை இந்த ரெயில்களுக்கும் வழங்கப்படுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பயணிகளுக்கு பெட்ஷீட்களோ, உணவுகளோ வழங்கப்படவில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.
    • இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    சென்னை:

    ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பிளாட்பாரக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது.

    இந்த உயர்வினை கைவிட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.

    இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    ரெயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே வாரியம் குறைத்தது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது.

    இதன்மூலம் பெர்த்துகளின் எண்ணிக்கை 936-ல் இருந்து 780 ஆக குறைந்தது. பெர்த்துகள் குறைக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் சீட் கிடைக்காமல் அவதிக்கு ஆளானார்கள்.

    இதற்கான கண்டனத்தை ரெயில் பயணிகள் பதிவு செய்து வந்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது.

    இதற்கு பதிலாக அதே ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தற்போது ரெயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

    இதற்கு காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

    உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூ. 225. இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூ. 650 ஆகும். இது 3 மடங்கு அதிகமாகும்.

    இந்த முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, சில ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

    ரெயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரெயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ×