search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் வெள்ளம்"

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #MKStalin
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

    உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
    கேரள மாநிலத்துக்கு 2-ம் கட்டமாக ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    வேலூர்:

    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். வீடுகளை இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு சிறிது, சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதி ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், சேலைகள், வேட்டிகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. பருப்பு, மளிகை சாமான்கள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள் உள்ளிட்டவை மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி ஒன்றில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு அனுப்பப்பட்டது. வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் சச்சிதானந்தம் லாரியை அனுப்பி வைத்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் கேரள சென்றுள்ளனர். #keralafloods
    கோவை:

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளான ஆலுவா, பத்தனம்திட்டா, வைக்கம், துரவூர், செர்தலா, பரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈஷா தன்னார்வலர்கள் உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி உள்ளனர். அந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், கோவையில் செயல்பட்டு வந்த 3 ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் தற்போது கேரளாவில் உள்ளன. அந்த வாகனத்துடன் ஈஷா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர்.

    தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்களாக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் இணைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து இன்று புறப்பட்டு கேரளாவுக்கு சென்றனர். அவர்கள் ஏற்கனவே உள்ள குழுவினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட உள்ளனர். #keralafloods
    கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கலெக்டர் லதா கூறியுள்ளார். #keralafloods
    சிவகங்கை:

    கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வசதியாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கொடையாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், போர்வை, ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமையில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார். #keralafloods
    சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவியின் மனித நேயத்தை பாராட்டி அவருக்கு சைக்கிள் நிறுவனம் ஒன்று புது சைக்கிளை பரிசாக வழங்கியது.
    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம்(வயது48). கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை இழந்து தவித்து உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்த சஜீரா பாத்திமா தான் சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுக்க உண்டியலை திறந்தார். அதில் ரூ. 600 சேர்ந்திருந்தது.

    உடனே அவர் பெற்றோரின் அனுமதியுடன் ரூ.600ஐ கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது. இதனை அறிந்த நாகர்கோவிலை சேர்ந்த தனியார் சைக்கிள் நிறுவனம் ஒன்று மாணவியின் மனித நேயத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கியது.

    இதுகுறித்து மாணவி சஜீரா பாத்திமா(12) கூறுகையில், சிறு வயதில் இருந்தே சைக்கிள் வாங்க ஆசையாக இருந்தது. அதற்காக பெற்றோர் உறவினர்கள் தரும் காசுகளை சேமித்து வந்தேன்.

    இந்த வேளையில் கேரளாவில் வெள்ளப்பெருக்கால் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த உதவியை செய்ய பெற்றோரிடம் கூறினேன். மேலும் நான் சேமித்த ரூ.600ஐ வெள்ள நிவாரண நிதியாக அளித்தேன். இதனை எனது தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து ஒரு சைக்கிள் நிறுவனம் நான் படித்த பள்ளியில் வந்து சைக்கிளை பரிசாக வழங்கினர் என்றார். #tamilnews
    திருவனந்தபுரத்தில் மழை வெள்ளத்தில் நீந்தி சென்ற வாலிபர் மணமகளை கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத மழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தித்து வரும் சோகங்கள், சோதனைகள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

    இந்த வெள்ளம் காரணமாக கேரளாவில் நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் தடைபட்டு உள்ளது. தற்போது வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளதை தொடர்ந்து திருமணங்களும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

    உறவினர்களை அழைத்து மிகவும் மகிழ்ச்சியாக நடத்த வேண்டிய இந்த சுப நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையிலும், போராட்டத்திற்கு மத்தியிலும் நடைபெற்று வருகிறது.

    எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைன் என்பவருக்கும் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த கீது என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். இருவீட்டாரும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டனர்.

    இந்த நிலையில் எர்ணாகுளம் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்ததால் மணமகன் வீட்டார் நெடுமங்காடுக்கு செல்ல முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

    நேற்று எர்ணாகுளம் பகுதியில் சற்று மழை வெள்ளம் வடிந்தது. இதை தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டுக்கு புறப்பட்டனர். பல இடங்களில் வெள்ளத்தை நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு நெடுமங்காடு சென்ற அவர்கள் நேற்று காலை திருமணத்தை நடத்தினார்கள். மிக குறைந்த அளவிலான உறவினர்களே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

     பாலக்காடு முகாமில் திருமணம் செய்த ஜோடி.

    பாலக்காடு பகுதியை சேர்ந்த சந்திரமோகன்- அனிலாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வெள்ள பாதிப்பு காரணமாக இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் பாலக்காடு வெள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்தனர். திருமணம் தடைப்பட்ட வருத்தத்தில் 2 குடும்பத்தினரும் இருந் தனர். உறவினர்கள் அறிவுரைப்படி நேற்று சந்திர மோகன்-அனிலா திருமணம் அவர்கள் தங்கியிருந்த முகாமிலேயே எளிமையாக நடைபெற்றது.  #KeralaRain #KeralaFloods
    கேரளாவில் தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #ChengannurMLA #SajiCherian
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் உணவு பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், சுத்தமான குடிநீர் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள்.

    ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர், குட்டநாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, அனதோடு, கொச்சு பம்பா அணைக்கட்டுகள் திடீர் என்று திறக்கப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    கெங்கனூரில் ஏற்கனவே 50 பேர் பலியாகிவிட்டார்கள். தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கனூர் பகுதியில் மிகவும் காலதாமதமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது. இதை துரிதப்படுத்தாவிட்டால் நிறையபேர் உயிரிழக்க நேரிடும். உணவு பொருள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். கூடுதலாக உணவுபொருள் அனுப்ப வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தயவு செய்து இங்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வையுங்கள்

    இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #ChengannurMLA #SajiCherian
    கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 3-வது நாளாக ரெயில் சேவை முடங்கியுள்ளது. #KeralaRain #KeralaFloods
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பாலக்காடு, திருவனந்தபுரம் டிவிசன்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 3-வது நாளாக ரெயில் சேவை முடங்கியுள்ளது.



    விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் (எண் 18567) கோவை-கொல்லம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று கொல்லம்-விசாகப்பட்டினம் இடையே மட்டும் இயக்கப்படுகிறது. பாலக்காடு-எர்ணாகுளம்- பாலக்காடு பயணிகள் ரெயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மங்களூர்-கோவை பயணிகள் ரெயில் கோழிக்கோடு மற்றும் கோவை இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சண்டிகர்-கொச்சுவேலி கேரல் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஷோரனூர்-நிலம்பூர் இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லக் கூடிய (எண்.16859) எக்ஸ்பிரஸ் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது. பனாஸ்வாடி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் நேற்று ஈரோட்டில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி-மங்களூர் எக்ஸ்பிரஸ் சேலத்துடன் சேவை நிறுத்தப்பட்டது. சேலம்- மங்களூர் இடையே சேவை ரத்து செய்யப்பட் டுள்ளது. அந்த ரெயில் இன்று சேலம்-புதுச்சேரி இடையே மட்டும் இயக்கப்படுகிறது.

    காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது. பாலக்காடு-எர்ணாகுளம் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல ஐதராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், சேலம்- திருவனந்தபுரம் இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் இன்று சேலத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்லும். கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி ஐலேண்ட எக்ஸ்பிரஸ் பாலக்காடு-கன்னியாகுமரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் இன்று பாலக்காடு-கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையே இயக் கப்படுகிறது. கன்னியாகுமரி- பாலக்காடு இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    கோவை- கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. #KeralaRain #KeralaFloods

    கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம், கடற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் தெற்கு உள்மாவட்டங்களிலும் தெலுங்கானா கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில்  பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதேபோல் பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. #KeralaFloods #KeralaRain
    ×