search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்கம்"

    • ராமநாதபுரத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.
    • சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கமும், சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், மேளாளர் கண்ணன், பொது மேலாளர் போஸ் உள்ளிட்டோரிடம் கூட்டுறவு சங்கங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் சிறந்த நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடையத்தை அச்சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் செயலாளர் முகமது யூசுப் பெற்றுக்கொண்டனர்.

    • நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது.
    • கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகு முறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

    தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
    • நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்கங்களுக்கு பயன்படாத உபகரணங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், திட்டம் கைவிடும் வரை அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என 60 சங்கங்களும், 145 பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இணைப்பதிவாளரிடம் மனு
    • விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று நிர்வாகிகள் இணைப்பதிவாளர் சிவகாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ்பொருட்கள் வாங்குவதை வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிடில் வரும் அக்டோபர் 3-ந் தேதி வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்து பணியாளர்களும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அப்போது செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை.
    • வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக வாரம்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலமும், வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது.

    சீசன் காலங்களில் ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் வரையில் பருத்தியும், ரூ.75 லட்சம் வரையில் மஞ்சளும் விற்பனையாகின்றன.

    இதில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது பருத்தி மற்றும் மஞ்சளை கொண்டு வருகின்றனர். ஏல நாட்களில் காலை முதல் இரவு வரை விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில் இங்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்க போதிய வசதிகள் இல்லை. இது தவிர போதுமான கழிப்பறைகளும் இல்லை. பருத்தி மற்றும் மஞ்சளை பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    போதிய இட வசதி உள்ள நிலையில், வளாகப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக கழிப்பறைகள், ஓய்வறைகள் மற்றும் சிமெண்ட் தரை தளம், மழை மற்றும் வெயிலில் விளை பொருட்கள் பாதிக்காமல் இருக்க நிழற்கூடம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து, பருத்தி விவசாயிகள் கூறுகையில் அரூரில் பருத்தி ஏலத்திற்காக இரு சீசன்களிலும் காலை 10 மணி முதலே விவசாயிகள் சங்க வளாகத்திற்கு மூட்டைகளோடு வருகின்றனர்.

    வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது. இது போன்ற சமயங்களில் சுமார் 700 முதல் 800 விவசாயிகள் வரை வளாகப் பகுதிகளில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    ஆனால், ஓய்வெடுக்க இடமோ, போதுமான கழிப்பறைகளோ இல்லாததால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர மேற்கூரை போதுமானதாக இல்லாததால் மழையில் விளை பொருட்கள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    • 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அர்த்தனாரீஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படும் அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் இருந்து 31-12-2013-க்கு முன்னர் கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியதில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு அர–சாணை எண் 40 வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சி நாள் 16-3-2015 படி தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை பெற்று பயனடையலாம்.இந்த தள்ளுபடி சலுகை அரசாணை எண் 31 வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சி 3-3-2023-ன் படி 6 மாதங்கள் அதாவது 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 31-12-2013-க்கு முன் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் இருந்து கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தி செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை மட்–டும் செலுத்தி தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசைத்தறிகூடம், கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
    • வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பணிக்கம்பட்டி கிராமத்தில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அந்த பகுதி மக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம், கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள், உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.எனவே எங்கள் பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் மேளா நாளை முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
    • கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.300 கோடி பயிர்க்கடனும், ரூ.200 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 40 ஆயிரத்து 180 விவசாயிகளுக்கு ரூ.248.16 கோடி பயிர்க்கடனும், 6 ஆயிரத்து 153 விவசாயிகளுக்கு ரூ.88.75 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 6.2.2023 முதல் 10.2.2023 வரை சிறப்பு கடன் மேளாக்கள் நடத்தப்பட உள்ளது.

    பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கு பருத்தி ரூ.22 ஆயிரத்து 50, மிளகாய் ரூ.27ஆயிரத்து 950, தென்னை ரூ.22 ஆயிரம், வாழை ரூ.40 ஆயிரத்து 550, மக்காச்சோளம் ரூ.18 ஆயிரத்து 850, நிலக்கடலை ரூ.21 ஆயிரத்து700 என்ற அளவில் வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்படும். விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடை களின் பராமரிப்புக்காக மாடு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 என்ற அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    அனைத்து விவசாயி களும் இந்த சிறப்பு கடன் மேளாவில் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்புக் கடன் பெற்றுப் பயனடையலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    பரமக்குடி வட்டாரம் 88703 52220, போகலூர் வட்டாரம் 75503 43249, கமுதி வட்டாரம் 77081 85419, கடலாடி வட்டாரம் 94435 76159, நயினார்கோவில் வட்டாரம் 90951 14291,முதுகுளத்தூர் வட்டாரம் 94872 13528, ராமநாதபுரம் வட்டாரம் 99522 06840, மண்டபம் வட்டாரம் 94430 65821, திருப்புல்லாணி வட்டாரம் 83001 71459, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் 88386 68780, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சரக துணைப்பதிவாளர் 73387 21602.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
    • விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர்.

    திருவள்ளூர்:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் 198 விற்பனையாளர்கள் பணியிடங்கள் மற்றும் 39 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

    இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு தொடங்கியது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பத்தவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை திருவள்ளூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் குவிந்தனர்.

    விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள்.

    வருகின்ற 29ஆம் தேதி வரை இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி தெரிவித்தார்.

    • 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.
    • உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    T.1349 மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 30.9.1957ல் பதிவு செய்யப்பட்டு 4050 உறுப்பினர்களுடன் ரூ.40.91 லட்சம் பங்கு மூலதனத்துடன் சிறப்பாக செயல்படும் சங்கம் ஆனது 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஏற்றி வருவதுடன் உறுப்பினர்களுக்கு 25 ஆண்டுகளாக தொடர்ந்து 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது.

    இதனை அடுத்து நடைபெற்ற 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசின் தலைமை கொரடா மூலம் பரிசு பெறப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தின் அனைத்து கணக்கீடுகளும் கணினி மூலம் செயல்படுவது டன் வழங்கப்படும் ரசீதுகள் அனைத்தும் கணிணி வழியில் வழங்கப்பட்டு வருகிறது.

    உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 598. 29 லட்சம் வைப்புகள் பெறப்பட்டும் 835 புள்ளி 15 லட்சம் கடன் வழங்கப்பட்டது..வாடிக்கையாளரகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்கின்ற சங்கம் அரசின் சிறப்பு திட்டங்களான கூட்டுறவு ஆங்கில மருந்தகம், பொது சேவை மையம் அக்ரோ சர்வீஸ் சென்டர் மற்றும் பல சேவை மையத்தின் மூலம் கதிர் அறுவடை இயந்திரம், டிராக்டர், டிப்பர் மற்றும் கல்டிவேட்டர் மூலம் குறைந்த செலவில் சேவை செய்ய வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இந்த சங்கம் மதுக்கூர் சங்க தலைவர் தண்டாயுதபாணி தலைமையிலும், செயலாளர் வீரகுமார் செயல்பாட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    • கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    ×