search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும்
    X

    அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும்

    • பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை.
    • வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக வாரம்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலமும், வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது.

    சீசன் காலங்களில் ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் வரையில் பருத்தியும், ரூ.75 லட்சம் வரையில் மஞ்சளும் விற்பனையாகின்றன.

    இதில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது பருத்தி மற்றும் மஞ்சளை கொண்டு வருகின்றனர். ஏல நாட்களில் காலை முதல் இரவு வரை விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில் இங்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்க போதிய வசதிகள் இல்லை. இது தவிர போதுமான கழிப்பறைகளும் இல்லை. பருத்தி மற்றும் மஞ்சளை பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    போதிய இட வசதி உள்ள நிலையில், வளாகப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக கழிப்பறைகள், ஓய்வறைகள் மற்றும் சிமெண்ட் தரை தளம், மழை மற்றும் வெயிலில் விளை பொருட்கள் பாதிக்காமல் இருக்க நிழற்கூடம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து, பருத்தி விவசாயிகள் கூறுகையில் அரூரில் பருத்தி ஏலத்திற்காக இரு சீசன்களிலும் காலை 10 மணி முதலே விவசாயிகள் சங்க வளாகத்திற்கு மூட்டைகளோடு வருகின்றனர்.

    வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது. இது போன்ற சமயங்களில் சுமார் 700 முதல் 800 விவசாயிகள் வரை வளாகப் பகுதிகளில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    ஆனால், ஓய்வெடுக்க இடமோ, போதுமான கழிப்பறைகளோ இல்லாததால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர மேற்கூரை போதுமானதாக இல்லாததால் மழையில் விளை பொருட்கள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    Next Story
    ×