search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈசன்"

    • பாடகி பவதாரிணி சமீபத்தில் காலமானார்.
    • 'புயலில் ஒரு தோணி’ திரைப்படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. சமீபத்தில் அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.

    'புயலில் ஒரு தோணி' படத்தின் இயக்குனர் ஈசன் பேசியதாவது, பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.


    நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

    இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னனி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.



    படம் வெளிவருவதற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியலவும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம் என்று கூறினார்.

    • திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

    2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

    3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

    4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

    5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

    6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

    7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.

    இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

    8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

    9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

    12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

    13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

    14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

    15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.

    அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

    16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.

    17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.

    பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

    18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.

    19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.

    20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.

    இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

    21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.

    22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

    24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

    25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

    தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

    26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.

    27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

    28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

    29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

    30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.

    • வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
    • தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன.

    சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார்.

    இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.

    திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.

    அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் "தானம் கொடுக்காதே" என்று கூறுகிறார்.

    வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, "நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்" என்று கூறி கெண்டியிலிருந்து

    நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.

    வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார்.

    அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

    தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது.

    பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு திருமால் "இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள்.

    அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

    நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்" என்று கூறினார்.

    பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார்.

    இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

    வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான்,

    முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார்.

    "உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது" எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க

    அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

    ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

    இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

    சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு.

    எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி 'வெள்ளீசுவரர்' என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம்.

    அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு.

    அதையொட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் 'பார்கவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் "மீண்டும் தவம் செய்வாய்.

    காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்" என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.

    சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார்.

    மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார்.

    இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து,

    வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள்.

    வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

    • பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
    • தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.

    19.01.2000 அன்று மகாசம்ப்ரோஷனம் நடந்தேறியது.

    அருள்மிகு வைகுண்டநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கும் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.

    பெருமாளின் கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பு.

    மேலும் மற்றொரு கையில் கணையாழி (மோதிரம்) காணப்படுகிறது.

    அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு சீதனமாக கணையாழியைக் கொண்டு வந்ததாக 'கர்ண பரம்பரை' வரலாறு கூறுகிறது.

    பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.

    அருகிலேயே ஸ்ரீமார்க்கண்டேய மாமுனியும் காட்சி தருகிறார்.

    கருடாழ்வார் அபூர்வ அமைப்புகளுடன் காட்சி தருகிறார்.

    தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    ஸ்ரீ அனுமனுக்கு தனிச் சந்நிதியும், கனகவல்லித் தயாருக்கு தனிச்சந்நிதியும், ஸ்ரீஆண்டாளுக்கு தனிச்சந்நிதியும் பிரகாரத்துக்குள் அமைந்துள்ளன.

    திருக்கோயிலின் நுழைவு வாயிலின் யாழிகள் இருபுறமும் அழகிய தோற்றத்துடன் அமைந்து காணப்படுகின்றன.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் 'வைகானச' ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இத்திருக்கோயிலில் 3 கால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.
    • மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.

    சிவ மூலிகைகளின் சிகரம்-வில்வம்

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.

    சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது.

    வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த 'பஞ்ச தருக்கள்' என்ற சிறப்பைப் பெற்றது.

    பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள்.

    இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு.

    வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள்.

    மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

    வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன் இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள்.

    வில்வ மரங்கள் கிளை, கிளையாக இடையிடையே முட்களுடன் காணப்படும். இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர். எனவேதான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள்.

    ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வில்வ தளம் என்பது லட்சம் சொர்ண பூக்களுக்கு சமமானது.

    சிவனுக்கு வில்வ இலைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் சிலர் வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை செய்வார்கள். அத்தகையவர்களுக்கு சிவபெருமானின் அருள் மிக, மிக எளிதாக கிடைக்கும்.

    அதாவது வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன.

    சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது.

    வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார். எனவேதான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது.

    வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது. ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும்.

    இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர். எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள்.

    வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் 'சிவமூலிகைகளின் சிகரம்' என்றழைக்கப்படுகிறது.

    மூன்று இலைகளைக் கொண்ட வில்வ தளத்தை சிலர் தனி தனியாக கிள்ளி பிரித்து விடுவ துண்டு. அப்படி செய்யக்கூடாது. மூன்று இலை கொண்ட வில்வ தளத்தை அப்படியே அர்ச்சனை மற்றும் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

    அப்படி வில்வதளத்தை பயன்படுத்தினால்தான், அதில் சேமிக்கப்படும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கும். இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா?

    ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

    பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள்.

    அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும். பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும்போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள்.

    வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை. அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் பல கதைகள் உள்ளன.

    ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்ற வேடனை புலி துரத்தியது. வில்வ மரத்தின் மீது ஏறியவேடன் தூக்கம் வராமல் இருக்க, இலைகளை பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். அது மரத்தடியில் இருந்த லிங்கம் மீது விழுந்தது.

    விடிந்த பிறகுதான் அவனுக்கு தான் ஏறியது வில்வ மரம் என்று தெரிந்தது. அன்றைய இரவு சிவராத்திரியாகவும் இருந்தது. வேடன் தன்னை அறியாமல் லிங்கம் மீது வில்வ தளங்களை போட்ட காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது.

    மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வம் சார்த்தி, சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம்.

    ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்று உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற தலம் வில்வராண்யம் என்று சிறப்புப் பெற்றது.

    இத்தகைய சிறப்புடைய வில்வ மரம் திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்பட 30 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தல விருட்சமாக உள்ளது. வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.

    வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.

    வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும். வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும்.

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு. எனவே வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது. தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும்.

    கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது.

    இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது.

    வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம்.

    வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.

    • கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
    • இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும். இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.

    கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது. வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது. அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.

    இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள். வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம். உட்புறம் வலப்பக்கம் குளம்.

    உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம். இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

    விநாயகரை தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.

    பிரகாரச்சுவரில் திருவாசக பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

    வலம் முடித்து துவார பாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.

    அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன. பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்ல¬ப விநாயகரைத் தரிசிக்கலாம்.

    ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்து காணலாம். நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

    சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர். கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது. இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

    இங்குள்ள கூத்தப்பிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

    மார்கழி திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

    அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாக சென்று தரிசிக்க வேண்டும்.

    அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

    மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம். அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதை தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.

    கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.

    இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் `ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.

    நடராஜர் கோயிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம். வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.

    இந்த சகஸ்ரலிங்கக் கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோயிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும். அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும். இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள், பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.

    • ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள்.
    • சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.

    நிரஞ்சனா சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர்.

    இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் – சொர்க்கம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.

    ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும். அதனால்தான் சொல்வார்கள், "சோறு கண்ட இடம் சொர்கம்" என்று. அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்." அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும், சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று, சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற்றிடுவோம்.

    "வேண்டத்தக்கது அறிவோய் நீ

    வேண்ட முழுதும் தருவோய் நீ

    வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ

    வேண்டி என்னைப் பணிகொண்டாய்

    வேண்டி நீயாது அருள் செய்தாய் யானும்

    அதுவே வேண்டின் அல்லால் வேண்டும்

    பரிசொன்று உண்டென்னில்

    அதுவும் உன்தன் விருப்பன்றே"

    • கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது.
    • கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அது வெறும் மண் மேடுதான். ஏன் அதை லிங்கத்துமேடு என்று அழைக்க வேண்டும். சில நூறு வருடங்களுக்கு முன்பு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். அதிலிருந்து அந்த இடத்தை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனாலேயே 1990 வரை அப்படியே அழைத்துக் கொண்டிருந்தனர். வைரத்தை எப்படி மூடி வைத்தாலும் ஏதேனும் ஒரு கீற்று சட்டென்று வெளியேறி பிரகாசித்துவிடும். அதுபோல கிருஷ்ணமூர்த்தி எனும் பக்தர் மூலம் ஈசன் தன்னிருப்பை வெளிப்படுத்தினார். ஒருநாள் பதுவஞ்சேரியின் வயல் வெளிகளுக்கு மத்தியிலுள்ள மண் மேட்டின் அருகே உட்கார்ந்திருந்தார்.

    வெளியே வெயில் கொதித்துக் கொண்டிருந்தாலும் மனதை எண்ணங்கள் அலைக்கழித்தாலும் ஏதோ ஒரு சக்தி உள்ளத்து தணலை குளிர்வித்தபடி இருந்தது. ஏதோவொரு நிம்மதியற்ற நிலை மனதில் இருந்தாலும் கடலலையின் சாரல் முகத்தை தழுவுவதுபோல நெஞ்சத்து துயரத்தை துடைத்து விட்டபடி இருந்தது.

    'இது மண் மேடா. இல்லையே. வேறெதுவோ உள்ளுக்குள்ளிருந்து என்னை அணைந்து கொள்கிறதே. சூழ்ந்து கொள்கிறதே. இறுக்கப் பிடித்து அமர வைக்கிறதே. இத்தனை சுகமாக நான் இருந்ததில்லையே' என்று என்றும் இல்லாது அந்த மேட்டை மிக மென்மையாக வருடினார். இத்தனை வருடங்களாகப் பார்த்த மேடு அன்று மட்டும் ஏனோ வினோதமாக தோற்றமளித்தது.

    மண்ணை அகற்றித்தான் பார்ப்போமே எனும் எண்ணம் அதிவேகமாக வந்தது. ஏதோ உத்தரவிட்டது போன்று மண்ணை அகற்றத் தொடங்கினார். கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பம் வெளிப்படுவதுபோல முதலில் வட்டமான கல் தெரிந்தது. ஆஹா.... என்று மகிழ்ச்சியோடு இன்னும் ஜாக்கிரதையாக மண்ணை களைய பாணம் தெரிந்தது. சூழ்ந்திருந்த மண்ணை முழுவதுமாக ஒதுக்க சிவலிங்கம் பளீரென்று வெளிப்பட்டது. மகிழ்ச்சியில் துள்ளினார். 'கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...' என்று ஆனந்தமானார். கண்ணில் நீர் வழிந்தது. ஊருக்குள் ஓடி எல்லோரிடமும் சொல்ல வேண்டுமென்று ஆவலானார். மண் மேட்டின் ஒரு பகுதியை சரி செய்துவிட்டோமே அப்படியே நிறுத்த வேண்டாம் என்று மற்றொரு பகுதியிலிருந்த மண்ணையும் வாரிக் கொட்டினார்.

    அள்ளும்போது ஈசனின் அருள் அதற்குள்ளும் சுரப்பது தெரிந்தது. முதலில் பாணம் போல தெரிந்தது. 'ஆஹா... ஆஹா...' என்று அரற்றினார். இன்னொரு சிவலிங்கமா என்று ஆனந்த அதிரல் உடலை சிலிர்க்கடித்தது. இரண்டு சிவலிங்கத்திற்கு மத்தியிலும் நின்று கைகூப்பி, நெடு மரம் போன்று சடாரென்று விழுந்தார். அதற்குள் ஊருக்குள் செய்தி பரவியது. முதல் சிவலிங்கம் தோன்றும்போதே மக்கள் சூழ்ந்து நின்று உதவினர். இரண்டாவதாக இன்னொரு லிங்கம் பொங்கி இருப்பதைப் பார்த்து ஊரே ஸ்தம்பித்து நின்றது. மாலைச் சூரியன் பிரிய மனமில்லாது விடைபெற்றான்.

    காற்றில் ஈரப்பதம் ஏறியது. கீழ்வானம் கறுக்க மெல்லியதாய்ச் சாரல் பூமியை நனைத்தது. பெருமழையாக கொட்டித் தீர்த்தது. இரண்டு சிவலிங்கத்தின் அருகிலும் நெய் தீபங்கள் ஏற்றினர். பச்சைக் குழந்தையை பார்ப்பது போல உற்று உற்றுப் பார்த்து பரவசப்பட்டனர். ஈசனின் மேனியில் முத்துக்கள்போல நீர் கோர்த்துக் கொண்டது. பாணத்திலிருந்து இறங்கி ஆவுடையாரின் மீது வடிந்தது. சுற்றி நின்றவர்களின் நெஞ்சத்தில் நிம்மதி பரவியது. தொல்பொருள்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வந்து ஆராய்ந்தார். லிங்கத்திற்கு பக்கவாட்டில் இன்னும் கொஞ்சம் அகலமாக தோண்டப்பட்டது. கோயிலின் கடக்கால் தெரிந்தது. தேனுபுரீஸ்வரர் ஆலயக் கல்வெட்டில் இக்கோயிலைப் பற்றிய விவரங்களை கண்டுபிடித்தனர்.

    இத்தலத்திற்கு புஞ்சேரி அகரம் அல்லது அரசநாராயண சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சோழர்கள் காலத்திய கோயிலாகும். ஈசனுக்கு கைலாசநாத நாயனார், திரு அகஸ்தீஸ்வர நாயனார் என்றும் திருப்பெயர்கள் இடப்பட்டிருந்தன. ஒருவாறாக இதற்கொரு கோயில் கட்ட வேண்டுமென்றும் தனித்தனியாக எல்லா சந்நதிகளோடும் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். சுயம்பு மூர்த்தியாக அமைந்திருந்த கைலாசநாதரை மூலவராக வைத்தும் அருகேயே அகஸ்தீஸ்வரரையும் ஸ்தாபித்தனர். கிழக்கு நோக்கிய நிலையில் ஈசன் அருள்பாலிக்கிறார். கைலாசநாதருக்கு அருகேயே அம்பாள் ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தனர். அதற்குப் பிறகு திரிபுரசுந்தரி எனும் திருப்பெயரில் அம்பாள் சிலையை நிறுவினார்கள். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். படிப்படியாக கோயில் வளரத் தொடங்கியது.

    கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அஷ்டமி அன்று பைரவருக்கும் பௌர்ணமியன்று அம்பாள் மற்றும் சிவனுக்கும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. நவகிரக சந்நதியும் தனியே அமைந்துள்ளன. வயல்வெளிகளுக்கு மத்தியில் அழகும் நேர்த்தியும் மிக்கதாக இக்கோயில் விளங்குகிறது. தென்றல் தாலாட்டும் புறநகர பூமி. சென்னை மாநகரத்தின் நெரிசல்களும் துரிதங்களின் சாயல்களும் இல்லாத அழகிய கிராமம். கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது. ரிஷிகள் புற்றுக்குள் தவமிருப்பதுபோல இத்தல ஈசனும் தனக்குள் தானே ஆத்ம தியானத்திலேயே கிடந்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    தானே தியானத்தின் இலக்காக இருந்து கொண்டு எதற்கு இவ்வாறு மறைத்துக் கொண்டு வெளிப்பட வேண்டுமென்கிற வியப்பும் பெருகுகிறது. தோன்றுவதும் மறைவதும் மறைப்பதை மீண்டும் வெளிப்படுத்துவதும் என்று சகலமும் ஈசனின் திருவிளையாடல்களே என்பதையே இத்தலம் உணர்த்துகிறது. அடுத்து என்ன செய்வது..? வழி தெரியாமல் தவிக்கிறேன். பிரச்னைகள் பல்வேறு ரூபத்தில் என்னை துரத்துகிறது என்று கலங்கி நின்றவரை கைலாசநாதர் கைதூக்கி விடுகிறார். ஒன்றா... இரண்டா... ஓராயிரம் பிரச்னைகள் கூட இருக்கட்டுமே கண நேரத்தில் சுண்டி எறிந்து விடுகிறார். இது வெறும் நம்பிக்கை இல்லை. பல பக்தர்களின் அனுபவம். எனவே, சென்று தரிசியுங்கள்.

    அருகேயே ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள சப்தமாதர்கள் கோயிலையும் கோணாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். சிவாலயத்திற்கு இணையான பழமை கோணாட்சி அம்மன் கோயிலுக்கும் உண்டு. இரு கோயில்களின் தொடர்புக்கு: 9789972277, 7299113196. சென்னை - தாம்பரத்திலிருந்து சேலையூர் - கேம்ப்ரோடு வழியாக அகரம்தென் ஊருக்குச் செல்லும் வழியிலேயே, அருகிலேயே பதுவஞ்சேரி அமைந்துள்ளது.

    • தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
    • தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    கேதார்நாத் கோவில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    கோயிலின் முக்கியத்துவம்

    இக்கோவில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக்கோவில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.

    தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு / இமயமலை சுனாமி 11.06.2013ல் இப்பகுதியில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த கனமழையினால் உண்டான மழை நீர் வெள்ளப் பெருக்கினால் கேதார்நாத் கோவில் தவிர சுற்றுப்புறப்பகுதிகள் கடுஞ்சேதம் அடைந்தது. இக்கோவில் மதிற்சுவர்கள், ஆதிசங்கரர் சமாதி மற்றும் கோவில் கடைவீதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மழை வெள்ளப் பெருக்கினால் குறைந்தது ஐந்தாயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு இனி கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி எனும் நான்கு புனித தலங்களுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தராகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடுஞ்சேதத்திற்கு காரணம் கேதார்நாத் கோவில் மூன்று புறங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டது. அதில் ஒரு மலையில் முகட்டை மூடியிருந்த மிகப்பெரிய பனிகட்டி, கேதார்நாத் கோயிலுக்கு மேற்புறத்தில் இருந்த நீர் தேக்கப் பகுதியில் விழுந்து, அதனால் நீர்தேக்க அணை உடைந்து கடுமையான மழை வெள்ளத்த்துடன், அணைக்கட்டு நீரும் சேர்ந்து கேதார்நாத் பகுதிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

    கோயிலின் வரலாறு

    இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக்கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.

    "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.

    ×