என் மலர்
நீங்கள் தேடியது "சம்பா சாகுபடி"
- சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
- கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05 செலுத்தி பயிர் காப்பீடு செய்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந் தேதி ஆகும். தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நலன் கருதி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும். இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, இதுவரையிலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரினை உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
- புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
- 90 அடி உயரமுள்ள அணையில் தற்போதைய நிலவரப்படி 71.10 அடி நீா் இருப்பு உள்ளது.
உடுமலை:
திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும்போதெல்லாம் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
குறிப்பாக திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது, இந்நிலையில் அதே பகுதிகளுக்கு தற்போது கால அளவு நீட்டிக்கப்பட்டு அணையில் இருந்து நேற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களை சோ்ந்த அலங்கியம் முதல் கரூா் வரையில் உள்ள 10 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக ஆற்றின் மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. நேற்று 8 ந் தேதி முதல் 28 ந் தேதி வரை 20 நாட்களுக்கு உரிய கால இடைவெளிவிட்டு 691 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும்.
இதுபோக திருப்பூா் மாவட்டத்தில் 25, 250 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.இதன் மூலம் 532 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் 47,117 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் என்றனா்.
90 அடி உயரமுள்ள அணையில் தற்போதைய நிலவரப்படி 71.10 அடி நீா் இருப்பு உள்ளது. 4, 035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2, 476.26 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
அணைக்கு 117 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து உடுமலை பகுதியில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
சேலம்:
கேரள மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது மைசூர் சிமோகா, காசன், பெல்லாரி, பீதர் உட்பட காவிரி நீர் படிப்பு பகுதியில் கனமழை பெய்யும்.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கவில்லை.
எதிர்பார்த்த மழை ஏமாற்றியதால் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 77.76 அடி நீர்மட்டம் உள்ளது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசன கால்வாய்களில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து 760 கனஅடியாகவும், வெளியேற்றம் 308 கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 106.61 அடியாக இருந்தது.
அதேபோல், 65 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது 31.62 அடி நீர்மட்டம் உள்ளது. 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த மழையால் 3-வது வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் தற்போது அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தரவேண்டிய ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பில் கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக நேற்று 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவாக உள்ளது. அணை நீர்மட்டம் 92.40 அடியாக சரிந்துள்ளது. இதே அளவு மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் விடும் பட்சத்தில் ஒரு வாரத்தில் 70 அடியாக நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
காவிரியில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறந்து விடுவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் மழையை நம்பியும், மேட்டூர் அணை நீரை நம்பியும் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்து அளவு பெய்யவில்லை. ஆனால் ஜூலை முதல் வாரத்துக்கு பின் எதிர்பாராத அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி நடைபெறுகிறது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். அதன் பின்னர் அதே பரப்பளவில் தாளடி சாகுபடி நடைபெறும். இந்த சாகுபடிகள் ஜூன் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
நடப்பாண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 76 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார்.
வேளாண்துறை அமைச்சரும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி நடைபெறும் என பெருமிதத்துடன் கூறிய நிலையில், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் அடைந்தாலும் ஆறுகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. பல வாய்க்கால்களை தாண்டி தண்ணீர் எட்டி பார்க்காததால் வயல்களில் விதை நெல் காயும் நிலைய ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 15 நாளாகியும் தண்ணீர் கிடைக்காதால் விவசாயிகள் சில இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- இயற்கை இடர்பாடுகளால் ஏழு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மகசூல் இழப்பு.
- தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 இலட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது.
மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும் ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.
- சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி விட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், அணை நிரம்பும் வகையில் காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
கர்நாடக அணைகளில் இருந்து கடந்த ஜூலை 16-ஆம் நாள் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் பின், அடுத்த இரு வாரங்களில் அணை நிரம்பும் சூழல் உருவாகும்; அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாமல் தவித்த காவிரி பாசன மாவட்ட உழவர்கள், சம்பா சாகுபடியை தொடங்குவது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேட்டூர் அணை அடுத்த ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், அதை பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் குறைந்தது 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் வேளான் துறை அலுவலகங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ போதிய அளவில் இருப்பு இல்லை. காவிரி பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாததால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதற்கும் வாய்ப்பில்லை. அதனால், தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.
இவை அனைத்துக்கும் மேலாக சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கடந்த ஆண்டு சம்பா, குறுவை ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி தோல்வியடைந்ததால், பெரும்பான்மையான உழவர்களிடம் பணம் இல்லை. இதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
- பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது :
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர்பரப்பளவில் சம்பா சாகுபடிப் பரப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
பொதுப் பரிந்துரையாக மத்தியகால மற்றும் நீண்டகாலப் நெற்பயிர் களுக்குத் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60, 20, 20 கிலோ தேவைப்படும். இச்சத்துக்கள் குறைவின்றிக் கிடைப்பதற்கு யூரியா 53 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடலாம். அல்லது 20:20:0:13 என்ற காம்ப்ளக்ஸ் உரம் 120 கிலோ அளவிலும் பொட்டாஷ் உரத்தினை 21 கிலோ அளவிலும் அடியுரமாக இடலாம்.
இதனால் நெற்பயிர் நன்கு செழிப்பாக வளர்வதால் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து மேலுரமாக யூரியா இடும்பொழுது ஒரு ஏக்கருக்கு 26 கிலோ என்ற அளவில் மேலுரமாக 3 முறை இட வேண்டும். காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்துவதனால் உரம் வீணாவது தடுக்கப்படுவதோடு பயிருக்குத் தேவையான உரங்கள் மண்ணில் தேவையான அளவு கிடைப்பதனால் பூச்சி, நோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறைகின்றது. பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தழை, மணி, சாம்பல் சத்துக்களை உரப் பரிந்துரையின்படி இடுவதால் உரச் செலவு குறைவதோடு, பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைந்து அதிக மகசூல் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாவதால், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினைக் கடைப்பிடித்துப் பயனடைந்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
- திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
- நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்
திருச்சி:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை,
மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.
திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவது டெல்டா மாவட்டங்கள் ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி ஆகிய 3 போக சாகுபடி நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் சம்பா சாகுபடி மட்டுமே அதிக ஏக்கரில் நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடி குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர்திறக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் 50 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தற்போது காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காவிரி ஆணையம் முழுமையாக செயல்பட தொடங்காத நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது.
பம்புசெட் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி அணை கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இன்று இரவு கபினி அணை தண்ணீர் மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கபினி அணை நீர் அதிக அளவில் வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜீலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமி மலை விமலநாதன்:-
மேட்டூர் அணையில் 80 அடியை தண்ணீர் தொட்டால் மட்டுமே திறக்க வேண்டும். தற்போது 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க முடியாது. 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஏற்கனவே ஆறுகளில் மணல் அள்ளி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் வந்து சேர்ந்து அங்கேயே தேங்கி நிற்பதால் பாசன வாய்கால்களுக்கும், தலைப்பு வாய்கால்களுக்கும் தண்ணீர் வராது. மேலும் தண்ணீர் வீணாகி கடலில் சேர்ந்து விடும்.

இதை வைத்து கொண்டு தற்போது குறுவைக்கு மேட்டூர் அணை தண்ணீரை திறக்க முடியாது. எனவே தற்போது வரும் தண்ணீரை சேமித்து வைத்து சம்பாவிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
விவசாயிகள் சங்க கூட்டு இயக்க துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன்:-
மேட்டூரில் இனி தண்ணீர் திறந்தால் குறுவைக்கு நாற்று நட முடியாது. கடந்த 3 வருடங்களாக தாமதமாக தண்ணீர் திறப்பதால் கடை மடைக்கு தண்ணீர் போகவில்லை. இந்த வருடமும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதால் சுமார் 26 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும்.
தற்போதைய மழையினால் பம்பு செட் விவசாயிகளுக்கு தான் சவுகரியமாக உள்ளது. ஆகவே தற்போது வருகின்ற உபரி நீரை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க கூடாது.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:-
மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தவே இல்லை. மத்திய அரசு தற்காலிகமாக ஆணையத்திற்கு ஒரு தலைவரை நியமித்து விட்டு ஒதுங்கி நிற்கிறது.
கர்நாடகாவில் 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். இதில் 5 பேரை மத்திய அரசும் மீதம் உள்ள 4 பேர் அந்தந்த மாநிலத்தில் இருந்தும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் தற்போது மேலாண்மை ஆணையத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மேட்டூர் அணை நீரை குறுவை சாகுபடிக்கு திறக்கக்கூடாது.
மேலாண்மை ஆணையத்திற்கான பணிகள் உடனே தொடங்கப்பட வேண்டும். மேலும் தற்போது திறந்து விடப்படும் உபரி நீர் மட்டும் போதாது. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீரை சேமித்து வைத்தால் அடுத்த சம்பாவிற்காவது தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Metturdam #sambacultivation






