search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீரை சம்பா சாகுபடிக்கு திறந்தால் போதும் - டெல்டா விவசாயிகள் கருத்து
    X

    மேட்டூர் அணை நீரை சம்பா சாகுபடிக்கு திறந்தால் போதும் - டெல்டா விவசாயிகள் கருத்து

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால் தற்போது வரும் தண்ணீரை சேமித்து வைத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என டெல்டா விவசாயிகள் தெரிவித்தனர். #Metturdam #sambacultivation
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவது டெல்டா மாவட்டங்கள் ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி ஆகிய 3 போக சாகுபடி நடைபெறும்.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் சம்பா சாகுபடி மட்டுமே அதிக ஏக்கரில் நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடி குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர்திறக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் 50 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தற்போது காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காவிரி ஆணையம் முழுமையாக செயல்பட தொடங்காத நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது.

    பம்புசெட் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி அணை கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று இரவு கபினி அணை தண்ணீர் மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கபினி அணை நீர் அதிக அளவில் வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜீலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    இதுதொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமி மலை விமலநாதன்:-

    மேட்டூர் அணையில் 80 அடியை தண்ணீர் தொட்டால் மட்டுமே திறக்க வேண்டும். தற்போது 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க முடியாது. 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

    ஏற்கனவே ஆறுகளில் மணல் அள்ளி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் வந்து சேர்ந்து அங்கேயே தேங்கி நிற்பதால் பாசன வாய்கால்களுக்கும், தலைப்பு வாய்கால்களுக்கும் தண்ணீர் வராது. மேலும் தண்ணீர் வீணாகி கடலில் சேர்ந்து விடும்.

    எனவே தண்ணீர் திறப்பை அதிகப்படுத்தி 23 ஆயிரம் கன அடியாக அதிகப்படுத்த வேண்டும். தற்போது கர்நாடகாவில் இருந்து வருவது நமக்காக திறந்து விடக் கூடிய தண்ணீர் இல்லை. அங்கு அதிகளவில் மழை பெய்து உபரி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.



    இதை வைத்து கொண்டு தற்போது குறுவைக்கு மேட்டூர் அணை தண்ணீரை திறக்க முடியாது. எனவே தற்போது வரும் தண்ணீரை சேமித்து வைத்து சம்பாவிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    விவசாயிகள் சங்க கூட்டு இயக்க துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன்:-

    மேட்டூரில் இனி தண்ணீர் திறந்தால் குறுவைக்கு நாற்று நட முடியாது. கடந்த 3 வருடங்களாக தாமதமாக தண்ணீர் திறப்பதால் கடை மடைக்கு தண்ணீர் போகவில்லை. இந்த வருடமும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதால் சுமார் 26 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும்.

    தற்போதைய மழையினால் பம்பு செட் விவசாயிகளுக்கு தான் சவுகரியமாக உள்ளது. ஆகவே தற்போது வருகின்ற உபரி நீரை வைத்து கொண்டு மேட்டூர் அணையை திறக்க கூடாது.

    காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:-

    மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தவே இல்லை. மத்திய அரசு தற்காலிகமாக ஆணையத்திற்கு ஒரு தலைவரை நியமித்து விட்டு ஒதுங்கி நிற்கிறது.

    கர்நாடகாவில் 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். இதில் 5 பேரை மத்திய அரசும் மீதம் உள்ள 4 பேர் அந்தந்த மாநிலத்தில் இருந்தும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் தற்போது மேலாண்மை ஆணையத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மேட்டூர் அணை நீரை குறுவை சாகுபடிக்கு திறக்கக்கூடாது.

    மேலாண்மை ஆணையத்திற்கான பணிகள் உடனே தொடங்கப்பட வேண்டும். மேலும் தற்போது திறந்து விடப்படும் உபரி நீர் மட்டும் போதாது. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீரை சேமித்து வைத்தால் அடுத்த சம்பாவிற்காவது தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Metturdam #sambacultivation

    Next Story
    ×