search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வரத்து மேலும் குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக சரிவு- விவசாயிகள் கவலை
    X

    நீர்வரத்து மேலும் குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக சரிவு- விவசாயிகள் கவலை

    • 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.

    சேலம்:

    கேரள மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது மைசூர் சிமோகா, காசன், பெல்லாரி, பீதர் உட்பட காவிரி நீர் படிப்பு பகுதியில் கனமழை பெய்யும்.

    இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கவில்லை.

    எதிர்பார்த்த மழை ஏமாற்றியதால் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 77.76 அடி நீர்மட்டம் உள்ளது.

    நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசன கால்வாய்களில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து 760 கனஅடியாகவும், வெளியேற்றம் 308 கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 106.61 அடியாக இருந்தது.

    அதேபோல், 65 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது 31.62 அடி நீர்மட்டம் உள்ளது. 1,886 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த மழையால் 3-வது வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    நடப்பாண்டில் தற்போது அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தரவேண்டிய ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

    ஏற்கனவே மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பில் கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக நேற்று 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரம் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவாக உள்ளது. அணை நீர்மட்டம் 92.40 அடியாக சரிந்துள்ளது. இதே அளவு மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் விடும் பட்சத்தில் ஒரு வாரத்தில் 70 அடியாக நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.

    காவிரியில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறந்து விடுவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் மழையை நம்பியும், மேட்டூர் அணை நீரை நம்பியும் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்து அளவு பெய்யவில்லை. ஆனால் ஜூலை முதல் வாரத்துக்கு பின் எதிர்பாராத அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி நடைபெறுகிறது.

    மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். அதன் பின்னர் அதே பரப்பளவில் தாளடி சாகுபடி நடைபெறும். இந்த சாகுபடிகள் ஜூன் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.

    நடப்பாண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 76 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார்.

    வேளாண்துறை அமைச்சரும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி நடைபெறும் என பெருமிதத்துடன் கூறிய நிலையில், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் அடைந்தாலும் ஆறுகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. பல வாய்க்கால்களை தாண்டி தண்ணீர் எட்டி பார்க்காததால் வயல்களில் விதை நெல் காயும் நிலைய ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 15 நாளாகியும் தண்ணீர் கிடைக்காதால் விவசாயிகள் சில இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×