என் மலர்tooltip icon

    வழிபாடு

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-3 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி நண்பகல் 1.45 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.13 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சனிபகவானுக்கு அலங்காரம்

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நயினார் கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் உற்சவம் ஆரம்பம். இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-நன்மை

    துலாம்- வரவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-களிப்பு

    மீனம்-உவகை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    ரிஷபம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மனக்கசப்பு தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    மிதுனம்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் உண்டு.

    கடகம்

    கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    சிம்மம்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    கன்னி

    ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகனப் பழுது செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    துலாம்

    வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்ட முன்வருவர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சிகம்

    தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    தனுசு

    கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லை உண்டு. பயணத்தை மாற்றியமைக்க நேரிடும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    மகரம்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருந்து விலக நேரிடும்.

    மீனம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் அதிக சம்பளம் தருவதாக அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    • ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது.
    • அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    சாத்தூர்:

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதம் முழுவதும் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

     

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழுவாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி கையில் வேப்பிலையுடன் ஆடிக் கொண்டு கோவிலிலை வலம் வந்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி அம்மனை வணங்கினர்.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், கழிவறை குளியலறை வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சார்பில் பரம்பரை அறங்காவலர் குமு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’
    • அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.

    அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும்.

    வீடு, மனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமே 'வாஸ்து' என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான்கு வகையான வாஸ்து உள்ளது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பூமி வாஸ்து

    நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது 'பூமி வாஸ்து.' மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.

    வீட்டு வாஸ்து

    வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும். மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா?, மருத்துவமனையா?, வணிக வளாகமா?, பள்ளி- கல்லூரியா?, ஓட்டலா?, உணவகமா?, தங்கும் விடுதியா?, தொழிற்சாலையா?, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா?, வாடிக்கையாளர் சேவை மையமா?, பொதுத்துறை நிறுவனமா?, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா? என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும்.

    முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

    இருக்கை வாஸ்து

    வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது 'இருக்கை வாஸ்து.' ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுப்படுத்தும்.

    வாகன வாஸ்து

    இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-2 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.11 மணி வரை பிறகு நவமி.

    நட்சத்திரம் : அசுவினி நள்ளிரவு 1.52 மணி வரை பிறகு பரணி.

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கவனம்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-புகழ்

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-கண்ணியம்

    கும்பம்-கடமை

    மீனம்-இன்சொல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    ரிஷபம்

    சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

    மிதுனம்

    பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    சிம்மம்

    வழக்குகள் சாதகமாகும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் உருவான தொல்லை அகலும்.

    கன்னி

    விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.

    துலாம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். வரவு திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.. கல்யாண முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    பயணம் பலன் தரும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.

    தனுசு

    அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். பழைய வாகனத்தைப் புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    வரவைவிட செலவு கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வேலையை நம்பி பழைய வேலையை விட வேண்டாம்.

    கும்பம்

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    மீனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    • கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
    • ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும் ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச் சிறப்பு பெற்றது தான். ஏனென்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாத முதல் வெள்ளியில் அம்பிகையை எவ்வாறு வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வாசல் தெளித்து மாக்கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்தபின், எல்லா சாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.

    கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், நீர் நிரம்பிய கலசத்தை பூஜை அறையின் மத்தியில் மனைக்கோலம் போட்டு அதன் நடுவே வைக்க வேண்டும். அந்த கலச நீரில் அன்னையானவள் அம்பிகை எழுந்தருள வேண்டும் எல்லா வளங்களையும் வழங்க வேண்டும் என மனதுருகி வேண்டிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் தீபாராதனை காட்டி, சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக படைக்க வேண்டும். முடிந்தால் ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    கணவருக்கு தொழிலில் மேன்மை ஏற்படுவதற்கு ஆடி வெள்ளியன்று மாலைப் பொழுதில், ஆதிபராசக்தி, புவனேஷ்வரி, அம்பிகை, அகிலாண்டேஷ்வரி என உங்கள் மனம் விரும்பும் எந்த அம்பிகையாக இருந்தாலும் சரி , பூச்சரங்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். தொழில் மேன்மை மட்டுமின்றி மாங்கல்ய பாக்யமும் தழைக்கும். கூடுதலாக குத்துவிளக்கு பூஜை செய்தால், அதாவது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், பழம்,தேங்காய் முதலானவற்றை கொடுக்கலாம். இப்படி செய்தால் எல்லா நன்மைகளும் உங்கள் வீடு தேடி வரும் என்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.

    ஆடி வெள்ளி நாளான நாளை ராகுநேரம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 09.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம் .

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மிதுனம்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கடகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சொத்து வாங்கும் சூழ்நிலைக்கு கேட்ட உதவி கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

    கன்னி

    வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் கிடைக்கலாம்.

    துலாம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    மகரம்

    விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    கும்பம்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகும். தனவரவு உண்டு. தாழ்வு மனப்பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.

    மீனம்

    காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும். தொழில் மாற்ற சிந்தனை உருவாகும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-1 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி இரவு 6.33 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : ரேவதி காலை 3.29 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உதவி

    கடகம்-நன்மை

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாராட்டு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்சொல்

    தனுசு- நற்செயல்

    மகரம்-புகழ்

    கும்பம்-பெருமை

    மீனம்-கவனம்

    • குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
    • ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.

    நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.

    ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

    இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.

    • ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×