என் மலர்
வழிபாடு
- குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
- இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.
இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இதன்மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.
நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபட்டு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.
சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குலதெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபட்டுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும்.
இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபட்டு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக் காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.
- மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
- பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது.
பித்ரு தோஷம் என்றால் என்ன?
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந் தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டி ருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம்அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னி யோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத்திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.
தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சுப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது வருவது ஏன்?
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அவற்றைச் செய்யத் தவறினால் வருவதுதான் பித்ருதோஷம்.
- அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நரகத்தில் பல பாவம் செய்த பாவிகள் அல்லல் பட்டுக்கொண்டிருந்தானர்.
- நரகத்தையும் கூட சொர்க்கமாக மாற்றும் சிறந்த பொருள் `திருநீறு’
ஒருமுறை துர்வாச முனிவர் காலை வேளையில் சிவபெருமானை வழிபட்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு பித்ருலோகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படி, அவர் செல்லும் வழியில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றை தன் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்தார். அங்கு பார்த்தவுடன்தான் தெரிந்தது அது கிணறு அல்ல, நரகம் என்று. அந்த நரகத்தில் பல பாவம் செய்த பாவிகள் அல்லல் பட்டுக்கொண்டிருந்தானர்.
அவர்களை விஷம் நிறைந்த பாம்பு, பல்லி, அரணை, தேளை போன்ற கொடிய உயிரினங்கள் துன்புறுத்திக்கொண்டிருந்தன. அந்த கிணற்றைப் பார்த்துவிட்டு முனிவர் சென்றுவிட்டார். அவர் பார்த்துவிட்டுச் சென்றவுடனேயே அங்கிருந்த பாவிகள், துன்பத்தில் இருந்து நீங்கி இன்புற்றனர். கொடிய விலங்குகள் அனைத்தும் பூ மாலைகளாகவும், அமிலமழை, ஆனந்த மழையாகவும் நரகம் சொர்க்கமாகவும் மாறின.
இதைக்கண்ட நரகத்தின் காவலர்களாகிய கின்னரர்கள் அஞ்சி, வியப்படைந்து தமது மன்னனாகிய எமனிடம் சென்று முறையிட்டனர். எமன் எதுவும் அறியாமல் தேவர்களின் தலைவனாகிய இந்திரனிடம் சென்று முறையிட்டார். இந்திரனுக்கும் தெரியாமல் சிவபெருமானிடம் சென்று, நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். அப்போது, சிவபெருமான் சற்றே புன்னகைசெய்து, ''துர்வாச முனிவர், நரகத்தைப் பார்த்த மாத்திரத்தில் சொர்க்கமாக மாறவில்லை, அவர் நெற்றியில் சாத்திர முறைப்படி நிறைய திருநீறு பூசியிருந்தார்.
அவர் நரகத்தை எட்டிப் பார்க்கும்போது அவருடைய நெற்றியில் இருந்து திருநீற்றின் சிலதுகள்கள் உதிர்ந்து, அந்தக் கொடிய நரகத்தில் விழுந்தன. உடனே, அந்த நரகம் சொர்க்கமாக மாறியது'' என்றார். ஆகவே, நரகத்தையும் கூடச் சொர்க்கமாக மாற்றும் சிறந்த பொருள் "திருநீறு'' என்பதை உணர்ந்து நெற்றி நிறைய நீறு பூச வேண்டும். இந்த நிகழ்வு பாவிகளைப் புண்ணியர்களாய் மாற்றும் தன்மை வாய்ந்தது திருநீறு என்பதை வாமதேவ முனிவர் கூறும்,
திருநீற்றின் தன்மை
ஓதற்கு எளிதோ பொல்லா உருவெடுத்து உலகில் தீராப்
பேதுறும் உணர்வின் பாவப் பிணியரே யேனும் தொட்ட
போதிலே புனிதராகிப் பொன்னுலகு அடைவாரன்றே''
– என்ற பாடலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் ஹம்ச வாகனத்திலும், சூரிய பிரபையிலும் பவனி.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 22 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நண்பகல் 1.20 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: கேட்டை நாளை விடியற்காலை 4.17 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி. களக்காடு சத்திவாகீசுவரர் தெப்போற்சவம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-ஆதரவு
கடகம்-ஆரோக்கியம்
சிம்மம்-ஆக்கம்
கன்னி-நிம்மதி
துலாம்- உவகை
விருச்சிகம்-பயணம்
தனுசு- உற்சாகம்
மகரம்-கனிவு
கும்பம்-பாராட்டு
மீனம்-கண்டிப்பு
- மூலப்பட்டறை அருகே மாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
- அம்மனின் கண்கள் மூடி திறந்தது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ரோட்டில் எல்லை மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.
சாலையோரம் கோவில் அமைந்துள்ளதால் எல்லை தெய்வமாக நினைத்து மக்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அந்த அம்மனின் கண்கள் மூடி திறந்தது.
இதைக்கண்டு அந்த சிறுமி பக்தியில் உறைந்தார். இதை பற்றி அந்த சிறுமி அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அம்மா, தாயே, மாரியம்மா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இது பற்றி தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் சிறுமிகள் என கூட்டம், கூட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிய தொடங்கினர்.
நேரம், செல்ல, செல்ல மக்களின் கூட்டம் கோவி லில் அதிகளவில் குவிந்த னர். நள்ளிரவு 12 மணி வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து பக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.
- பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
- அமாவாசை விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.
அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த கதை வருமாறு:-
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.
ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.
மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...
தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
- முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
- தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் தொடங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வு இந்த ஆண்டு வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிகழ உள்ளது. அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? பித்ருக்கள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அன்று அவர்களை வழிபட்டு அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.
முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போட்டுக்கொள்வார்கள். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணிய தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசை அன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசை அன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச்சாப்பிடும். அதனால் அமாவாசை அன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி. ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி. நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசை அன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டும்.
- கயா சென்று பிண்டம் போட்டு வந்தால்தான் ஆத்மா சொர்க்கம் செல்லும்.
- அவர்களுக்கு சொர்க்கத்தில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர் களுக்கு சிரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் அங்குதான் பிரம்மாவும் விஷ்ணுவும், பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது .
அந்தக் கதை என்ன?
முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று.
அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரம்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது, பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதன்படி பிரம்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரம்மா பித்ரு யாகத்தை துவங்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அழைத்து அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர்.
பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான்.
ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதித்ததினாலும் அவனுக்கு நல்ல பலன் கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு சிரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? என்று இந்திரனிடம் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை.
அவனுடைய பித்ருக்களுக்குக்கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால் தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு சிரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்ட ராமசுவாமி சிறப்பு திருமஞ்சனம்.
- திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 21 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி நண்பகல் 1.36 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: அனுஷம் நாளை விடியற்காலை 4.18 மணி வரை. பிறகு கேட்டை.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராமசுவாமி சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உண்மை
மிதுனம்-நற்செயல்
கடகம்-பிரீதி
சிம்மம்-தனம்
கன்னி-சுபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-சலனம்
தனுசு- நற்செயல்
மகரம்-அமைதி
கும்பம்-ஆதரவு
மீனம்-லாபம்
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அஜித், மணியம் செந்தில்குமார் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.






