என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
    • திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, தை 24 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 11.18 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.57 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலா. வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-பரிசு

    மிதுனம்-வரவு

    கடகம்-செலவு

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-தனம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- சுபம்

    மகரம்-ஆதரவு

    கும்பம்-பயணம்

    மீனம்-பண்பு

    • ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது.
    • தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது?

    பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது இது. மாதம் தோறும் பவுர்ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன் மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க வேண்டும்.

    நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் `சத்ர' யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் (புராணங்களை யெல்லாம் சொல்பவர்) என்பவர் இந்த கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

    மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள், அன்பான மனைவி - குழந்தைகள் என எல்லாம் கொண்டவன் மன்னன் துங்கத்வஜன். கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில் வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்து களைப்பைத் தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

    மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில் இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

    பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்று தூரத்தில் இருந்த மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர் இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

    `ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?' என்று கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு, அரண்மனைக்குத் திரும்பினான். அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை, மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின் மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

    இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது. ''இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான். சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி, இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப் போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!'' என்று சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான் மன்னன்.

    மரத்தடியை அடைந்ததும், ''தெய்வமே! மன்னித்துவிடு. தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய், தாழ்வாக நினைத்தேனே! அவர்களை அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து கொண்டேன். பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண பூஜையை முறையாகச் செய்வேன்!'' என்று அழுது தொழுதான்.

    கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய நாராயண பூஜையை செய்தான். நைவேத்தியப் பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும் கொடுத்தான்.

    அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன், மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும் தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு, விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது. பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள். அதன்பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.

    • இறைவனின் குழந்தைகள் என்பதே நமக்கான அடையாளம்.
    • தன்னை அறிவதே சிறந்தது என பல தத்துவங்கள் கூறுகின்றன.

    நான் யார்? எனது அடையாளம் என்ன? என்பதை அறிந்து கொள்வதே தனி மனித வாழ்வில் மிகப் பெரும் போராட்டமாய் இருக்கிறது. தன்னை அறிவதே சிறந்தது என பல தத்துவங்கள் கூறுகின்றன. பல நேரங்களில் நாம் நம்மை அறிந்து கொள்ளாமல் இந்த உலகில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

    இந்த கேள்விக்கான பதிலை நாம் அறிந்து கொள்ள இயேசு, லூக்கா நற்செய்தி 15-வது அதிகாரத்தில் ஒரு நிகழ்வை கூறுகிறார்.

    தந்தை ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் தந்தையின் பேச்சைக்கேட்டு அவரது சொத்துக்கள் எல்லாவற்றையும், வயல்வெளி நிலங்களையும் கவனித்துக்கொண்டு வந்தான். ஆனால் இளைய மகனோ தன் தந்தையிடம் சொத்தை வாங்கிக்கொண்டு தன் நண்பர் களோடு வெளிநாட்டுக்கு சென்றான். நண்பர் களோடு மகிழ்ந்து கொண்டாடினான். எல்லாப் பணமும் செலவான பின், நண்பர்கள் எல்லோரும் அவனை தனியாக விட்டுச்சென்றனர். கையில் பணம் எதுவும் இல்லாமல் உண்பதற்கு உணவு கூட வாங்க முடியாமல் பசியால் வாடினான்.

    ஒரு கட்டத்தில் மனம் வருந்தி, `என் தந்தையின் கூலியாள்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவு இருக்க இப்படி உணவின்றி இருக்கிறேனே' என்று தனக்குள்ளேயே அழுது கொண்டு தன் தந்தையை தேடிச்சென்றான். தன் மகன் வீட்டிற்கு வருவதை அறிந்த தந்தை அவரைக்கண்டு பரிவுகொண்டு ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார் (லூக்கா 15:20).

    பின்பு தன் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக்கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். இவனது கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கால்நடையைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இறந்து போய் இருந்தான், (இப்போது) உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். (லூக்கா: 15:24)

    இதனைப் பார்த்த மூத்த மகன் தந்தையிடம், "இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று உமக்கு வேலை செய்தேன். உம் கட்டளைகளை மீறியதே இல்லை. ஆனால் நீர் எனக்கு சிறிய ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்கவில்லை. ஆனால் உம் சொத்தை விற்று அனைத்தையும் வீணாக்கிய உம் மகனுக்கு இவ்வாறு செய்கிறீரே" என்று கேட்டார். அதற்கு தந்தை, "மகனே நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாம் உன்னுடையது" என்றார்.

    இந்த கதையில் வரும் தந்தையாக இறைவன் இருக்கிறார். இரண்டு மகன்களில் நாம் யாராக இருக்கிறோம்? மூத்த மகனாக இருக்கிறோமா? அல்லது இளைய மகனாக இருக்கிறோமா?

    மூத்த மகன் தன் தந்தைக்கு அருகில் இருந்தும் தன்னை அடிமையாகக் கருதினான். இளைய மகன் தன் தந்தையை விட்டு தூரம் சென்றபோதும் தன்னை மகனாக உணர்ந்தான்.

    திருத்தூதர் பவுல் கலாத்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், `இனி நீங்கள் அடிமைகள் அல்ல, பிள்ளைகள் தான். பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும், இருக்கிறீர்கள்' என்று பதிவு செய்கிறார். (கலாத்தியர் 4:4-7)

    எனவே நாம் அடிமைகள் அல்ல இறைவனின் குழந்தைகள் என்பதே நமக்கான அடையாளம். வெற்றியிலும், தோல்வியிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நாம் இறைவனின் குழந்தைகள் என்பதை உணர்வோம்.

    என்ன நேர்ந்தாலும், யார் நம்மை வெறுத்தாலும், நான் உன் மேல் அன்பு கூர்கிறேன். என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன், மதிப்புமிக்கவன் (எசாயா:43:4) என்று கூறுகிற இறைவனை தந்தையாக ஏற்றுக்கொள்வோம்.

    ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், `நான் இறைவனின் குழந்தை' என்று சொல்லுவோம். நம் வீட்டிலும், நாம் பணிபுரியும் இடத்திலும் நம் கண்ணில்படும் படி `நான் இறைவனின் குழந்தை' என்று எழுதி வைப்போம். அதனை அடிக்கடி பார்க்கிறபோது அது நம் மனதிற்குள் பதிந்து நமது அடையாளமாக மாறி, எல்லா நேரமும் நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    இறைவன் நம்மை அவரது குழந்தையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார் . நாம் அவரை நம் தந்தையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதை நம் வாழ்வின் எல்லா தருணத்திலும் உணர்ந்து இருக்கிறோமா?

    சிந்திப்போம்! நாம் இறைவனின் குழந்தைகள் என்பதை உணருவோம்! பிறருக்கும் உணர்த்துவோம்!

    • நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது.
    • தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது.

    `நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது. ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது. உறவுமுறையினைப் பேணி, சேர்ந்து வாழ்வது ஆயுளை அதிகரிக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: தப்ரானீ) மேற்கூறப்பட்ட நபிமொழியில் முத்தான மூன்று செயல்களும், அதனால் ஏற்படும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன. அவை குறித்து காண்போம்.

    நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தைத் தடுக்கும்.

    நற்காரியங்கள் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    'எல்லா நற்செயலும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி), நூல்: புகாரி). பொருளாதார உதவி, அன்னதானம், தண்ணீர், ஆடைகள் அளிப்பது, உதவி தேடி நிற்கும் துயருற்றவருக்கு உதவிடுவது, மக்களுக்கு உபகாரம் புரிவது, பிறருக்கு நலம் நாடுவது, வறியவருக்கு உதவுவது, அனாதைகளை ஆதரிப்பது, விதவை களுக்காக பாடுபடுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, அண்டை வீட்டாரை அரவணைப்பது, இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது, விபத்து, ஆபத்து, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்வது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது என்பது போன்ற செயல்பாடுகள் நற்காரியங்கள் ஆகும்.

    இவற்றை செய்வதினால் தீய மரணம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே நற்காரியங்கள் புரிவது அவசியமாகும். நற்காரியங்களால் மட்டுமே தீய மரணங்களை தடுக்க முடியும் என்பது நபி மொழியாகும். 'நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தையும், பேராபத்துகளையும், பேரழிவு களையும் தடுக்கிறது. மேலும், இவ்வுலகில் நன்மை உடையவர்கள் மறுமையிலும் நன்மை உடையவர்களே ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: தப்ரானீ)

    ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கும்.

    `யார் தங்களின் பொருட்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:274)

    `இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்களில் ஒருவர், தம் வலக் கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு ரகசியமாகச் செய்பவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, தொழுகையை நிலைநாட்டு கிறார்களோ நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களோ அவர்கள் என்றும் அழியாத ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள்'. (திருக்குர்ஆன் 35:29)

    `நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) 'கொடுக்கலும் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை கடைப்பிடிக்கவும், நாம் அவர் களுக்கு அளித்தவற்றில் இருந்து ரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தான தர்மங்களில்) செலவு செய்யட்டும்' என்று நீர் கூறுவீராக'. (திருக்குர்ஆன் 14:31)

    உறவுகளைப் பேணி வாழ்வது ஆயுளை அதிகமாக்கும்

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி).

    `உறவு என்பது அளவிலா அருளாளன் இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்' என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற்செயலை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'உறவைப் பேணி வாழ வேண்டும்' என்று கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அன்சாரி (ரலி), நூல்: புகாரி)

    `உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)

    நபிகளார் கூறிய முத்தான இந்த மூன்று நற்செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடிப்போம். எதிர்பாராத விதமாக வரக்கூடிய தீய மரணங்களை தவிர்ப்போம். திருக்குர்ஆன் காட்டிய வழியிலும், நபிகள் நாயகம் வாழ்ந்த வழியிலும் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்பேறுகளைப்பெறுவோம்.

    • தர்ப்பணம் என்பது முன்னோர்களை திருப்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி.
    • முன்னோர்களை நினைத்து கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும். நம் குலம் நன்றாக விளங்கவும் வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் (மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    பித்ரு வர்க்கம் அப்பா வழி (வர்க்கம்):-

    1) பிதா- தகப்பனார்,

    2) பிதா மகர் - பாட்டனார் (தகப்பனாரின் அப்பா),

    3) பிரபிதா மகர் - பாட்டனாருக்கு அப்பா,

    4) மாதா - அம்மா,

    5) பிதா மகி - பாட்டி (தகப்பனாருக்கு அம்மா),

    6) பிரபிதா மகி - தாத்தாவுக்கு அம்மா.

    அம்மா வழி (வர்க்கம்):-

    1) மாதா மகர் - அம்மாவின் அப்பா (தாத்தா),

    2) மாது: பிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு அப்பா,

    3) மாது: பிரபிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு பாட்டனார்,

    4) மாதா மகி - பாட்டி (அம்மாவின் அம்மா),

    5) மாது: பிதாமகி - தாய் பாட்டனாருக்கு தாயார்,

    6) மாது: பிரபிதா மகி - அம்மாவின் பாட்டனாருக்கு பாட்டி.

    இந்த 12 பேரும் இல்லாமல் இருந்தால், அந்த 12 பேருக்கும் எள்ளு - தண்ணீர் கொடுக்க வேண்டும். இவர்கள் யாராவது ஒருவர் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு பதிலாக முன்னோர் ஒருவர் பெயரைச் சேர்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஏழு தலைமுறை

    தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் கட்டாயம் தில தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்கான கடமைகளை நாம் மறந்தால் பிதுர் சாபங்கள் வந்துசேரும். வம்சவிருத்தி உண்டாகாது. நாம் நம் ஏழு தலைமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

    நாம் - முதல் தலைமுறை

    தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

    பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

    பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

    ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

    சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

    பரன் + பரை - ஏழாம் தலைமுறை.

    • மகாவிஷ்ணு, பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார்.
    • பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம்.

    முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு, இந்த பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அப்பொழுது அவர் உடலில் இருந்து சிந்திய வியர்வைத் துளிகளே, கருப்பு எள்ளாக மாறியது. அதனால் கருப்பு எள் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியமாக கருதப்படுகிறது.

    பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம். என்றாலும், நதிக்கரை, குளக்கரை, கடற்கரைகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். குளக்கரை அல்லது நதிக்கரையில் செய்யும்பொழுது, அங்குள்ள நீரை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். கடற்கரையில் செய்யும் பொழுது மட்டும் கடலில் உள்ள உப்புநீரை எடுத்து பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கடலில் குளிக்கக்கூடாது. (ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஆலங்களுக்கு இந்த விதி பொருந்தாது). கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், முதலிலேயே தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் தான் நல்ல பலன்களைத் தரும்.

    பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு அல்லது நம் உறவினர் யாராவது இறந்த தீட்டு இருக்கும் நேரத்தில், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால் இந்த விதி சூரிய - சந்திர கிரகங்களுக்கு பொருந்தாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது சுத்தமான இடத்தில் தரையில் தர்ப்பம் வைத்து செய்வது விசேஷம்.

    இது நதிக்கைரயில், குளக்கரையில் சாத்தியம். வீடுகளில் செய்யும் பொழுது ஒரு பித்தளை அல்லது செப்பு தட்டு வைத்து, அதில் கூர்ச்சம் (தர்ப்பம்) வைத்து தர்ப்பணம் செய்வது நன்மை தரும். எவர்சில்வர் தட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்யும் போது, நமக்கு புகழும், நீண்ட ஆயுளும், பொருளாதார வளர்ச்சியும், சொர்க்கமும் உண்டாகும்.

    சத்துருக்களை வெல்வதற்கான சக்தி கிடைக்கும், நம்முடைய குலம் விருத்தி அடையும். தகப்பனார் மற்றும் தாத்தா ஆகியோர் நம்பிக்கை இல்லாமலோ, அலட்சியத்தாலோ தர்ப்பணம் செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசு (மகன்கள்), அமாவாசை தர்ப்பணத்தை செய்வதில் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் ஆரோக்கிய குறைவு காரணமாக மற்றும் வேறு அசவுகரியத்தின் காரணமாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டிருந்தால், அவர்களிடம் இருந்து தர்ப்பையை கொடுத்து - வாங்கி சங்கல்பம் செய்து மகன்கள் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

    • பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள்.
    • பித்ருக்களை நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து `உனக்கு என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டனர்.

    அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து `இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இதுபோன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, `நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்து கொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்' என்று சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், `இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?' எனக் கேட்க, `நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்' என்று கூறினார், மாவசு.

     இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவலோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, `உன் பாவங்களும், சாபங்களும் விலகியது. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய். பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய்.

    பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அமாவாசை திதியில் `நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்' என்று வரம் அளித்தனர்.

    • 7-ந்தேதி பிரதோஷம்
    • 9-ந்தேதி தை அமாவாசை

    6-ந்தேதி (செவ்வாய்)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    *கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (புதன்)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    8-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்தநாள்.

    * மாத சிவராத்திரி.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலையில் நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகனத்தில் புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு சம்புரோசனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (வெள்ளி)

    * தை அமாவாசை.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம்.

    * சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பெரிய வீதியில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (சனி)

    * திருநாங்கூர் நாராயணப்பெருமாள் கோவிலில் 11 கருட சேவை.

    * காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருநள்ளார் சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் இரவு குதிரை வாகனத்தில் பவனி.

    * திருவைகுண்டம் வைகுண்டபதியில் சுவாமிக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (திங்கள்)

    * திருமயம் ஆண்டாள், உச்சி கொண்ட கூடாரவல்லி உற்சவம்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தீர்த்தவாரி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு.
    • திருமாலை வழிபட்டால் குறையாத செல்வமும், வெற்றிகளும் தேடி வரும்.

    ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அது போல் மார்கழி - தை மாதத்தில் தேய்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு சுபலா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து திருமாலை வழிபட்டால் குறையாத செல்வ வளமும், வெற்றிகளும் தேடி வரும். முழு உபவாசம் இருந்து, அதற்குரிய முறையில் ஏகாதசி விரதம் இருந்தால் நாம் நினைக்கும் காரியங்கள் நினைத்தபடி நடக்கும்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி அன்ற அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களீன் உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்ன தானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, தை 23 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி நண்பகல் 12.36 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.51 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. களக்காடு சத்தி வாகீசுவரர் தெப்ப உற்சவம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-தேர்ச்சி

    கன்னி-உற்சாகம்

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- சாந்தம்

    மகரம்-லாபம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-ஜெயம்

    • மயான பகுதிகளில் வீடுகள் அமைப்பதை வாஸ்து ஏற்றுக்கொள்ளவில்லை.
    • நேர்மறை சக்திகளை கண்டறிய கோநிவாஸம் முறைய பயன்படுத்தி வந்துள்ளனர்.

    வீட்டு மனையின் சீரமைப்பு பற்றி வாஸ்து சாஸ்திரம் பூமி தோஷ நிவாரணம் என்ற தலைப்பில் பல்வேறு விதிகளை குறிப்பிட்டிருக்கிறது. அவற்றை பயன்படுத்தி நமது முன்னோர்கள் வீட்டு மனைகளை சீரமைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

    கணனம், ஹரணம், தாஹம், பூரணம், கவ்யம், கோநிவாஸம், விப்ரோசிஷ்டம் ஆகிய ஏழு வித விதிகளை கடைபிடித்து மனையை சீர்படுத்தினார்கள். அவை பற்றிய விவரங்கள்:

    கணனம்

    மொத்த மனை அமைப்பில் உள்ள மண்ணை குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு தோண்டி எடுத்து விட்டு, சுத்தமான புதிய மண்ணை நிரப்புவதன் மூலம் சல்லிய தோஷம் போன்ற நிலத்தடியில் உள்ள வாஸ்து பாதிப்புகள் அகற்றப்பட்டன. மயான பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் அமைப்பதை வாஸ்து ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அந்த மண்ணில் கலந்துள்ள மனித எலும்புகளின் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களால் மன உணர்வுகள் பாதிக்கப்படுவதை முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அதனால், கணனம் முறையை அனுசரித்து அந்த இடத்தில் உள்ள மண் முற்றிலும் அகற்றப்பட்டு, சுத்தமான புது மண்ணை நிரப்பி வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

    ஹரணம்

    மனையின் எல்லைகளை சரியாக கண்டறிந்து தக்க அடையாளங்களை நட்டு, அதற்கேற்ப தக்க விதத்தில் மேடு பள்ளங்கள் இல்லாமல் மனையை சமம் செய்வது ஹரணம் என்று குறிப்பிடப்பட்டது.

    தாஹம்

    வாஸ்து சாஸ்திரம் மனைப்பகுதிகளில் குறிப்பிட்ட மரங்கள் மற்றும் குறுவகை செடி, கொடிகள் ஆகியவை வளர்ந்திருப்பதை ஏற்பதில்லை. அந்த நிலையில் அவற்றை வேருடன் அகற்றி, நெருப்பை இட்டு சாம்பலாக மாற்றி அகற்றிவிட்டு மனை சீரமைப்பு பணிகள் செய்யப்படும்.

    பூரணம்

    கட்டுமான பணியிடத்தில் தோண்டப்பட்ட அஸ்திவாரம் உள்ளிட்ட இதர குழிகளை சுத்தமான மண் கொண்டு நிரப்பப்படுவது பூரணம் என்று குறிப்பிடப்பட்டது.

    கவ்யம்

    பசுவின் பால், நெய், தயிர், சாணம் மற்றும் கோமியம் ஆகிய ஐந்தும் கலக்கப்பட்ட பஞ்சகவ்ய கலவையை மனையின் எட்டு திக்குகள் மற்றும் பிரம்மஸ்தானத்திலும் தெளித்து, குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் முறை கவ்யம் என்று சொல்லப்பட்டது.

    கோநிவாசம்

    பழைய காலங்களில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள நேர்மறை சக்திகளை கண்டறிய கோநிவாஸம் என்ற முறையில் பசு மாடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதாவது, பசுமாடுகளின் நுண்ணுணர்வு காரணமாக எல்லா இடங்களிலும் அவை படுப்பதோ அல்லது நிற்பதோ இல்லை. அவை அமைதி குறைவாக நிற்கும் இடங்களில் நேர்மறை சக்திகள் போதிய அளவில் இல்லை என்ற அடிப்படையில், பசுமாடுகள் 21 நாட்கள் அமைதியாக தங்கிய இடங்கள் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அமைக்க தேர்வு செய்யப்பட்டன. சாதாரண புல், பூண்டுகள் கூட வளர்ந்திராத மனைகளில் சில வகை விதைகள் தூவப்படும். அங்கு பசுக்களை கட்டி வைத்து, மாட்டின் சாணம் காரணமாக விதைகள் வளர்வதை கவனித்தும் மனைக்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    விப்ரோசிஷ்டம்

    கட்டுமான பணி நடைபெறும் மனை அமைந்துள்ள இடத்தில் ஆன்மிக குரு, சுமங்கலிகள் உள்ளிட்ட மனை உரிமையாளரது நலனை விரும்பும் உறவினர்கள் மூலம் பூஜைகள் செய்து, நவ தானியங்கள் பரவலாக விதைக்கப்பட்டு, பசுவின் சாணம் மற்றும் கோமிய நீர் தெளிக்கப்படும். 3 வாரங்களுக்கு பிறகு அந்த விதைகள் வளர்ந்துள்ளதன் அடிப்படையில் மனையின் உயிரோட்டம் முடிவு செய்யப்படுவது விப்ரோஸிஷ்டம் ஆகும்.

    • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
    • இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இதன்மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபட்டு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குலதெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபட்டுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும்.

    இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபட்டு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக் காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    ×