search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள்
    X

    யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள்

    • தர்ப்பணம் என்பது முன்னோர்களை திருப்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி.
    • முன்னோர்களை நினைத்து கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும். நம் குலம் நன்றாக விளங்கவும் வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் (மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    பித்ரு வர்க்கம் அப்பா வழி (வர்க்கம்):-

    1) பிதா- தகப்பனார்,

    2) பிதா மகர் - பாட்டனார் (தகப்பனாரின் அப்பா),

    3) பிரபிதா மகர் - பாட்டனாருக்கு அப்பா,

    4) மாதா - அம்மா,

    5) பிதா மகி - பாட்டி (தகப்பனாருக்கு அம்மா),

    6) பிரபிதா மகி - தாத்தாவுக்கு அம்மா.

    அம்மா வழி (வர்க்கம்):-

    1) மாதா மகர் - அம்மாவின் அப்பா (தாத்தா),

    2) மாது: பிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு அப்பா,

    3) மாது: பிரபிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு பாட்டனார்,

    4) மாதா மகி - பாட்டி (அம்மாவின் அம்மா),

    5) மாது: பிதாமகி - தாய் பாட்டனாருக்கு தாயார்,

    6) மாது: பிரபிதா மகி - அம்மாவின் பாட்டனாருக்கு பாட்டி.

    இந்த 12 பேரும் இல்லாமல் இருந்தால், அந்த 12 பேருக்கும் எள்ளு - தண்ணீர் கொடுக்க வேண்டும். இவர்கள் யாராவது ஒருவர் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு பதிலாக முன்னோர் ஒருவர் பெயரைச் சேர்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஏழு தலைமுறை

    தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் கட்டாயம் தில தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்கான கடமைகளை நாம் மறந்தால் பிதுர் சாபங்கள் வந்துசேரும். வம்சவிருத்தி உண்டாகாது. நாம் நம் ஏழு தலைமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

    நாம் - முதல் தலைமுறை

    தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

    பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

    பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

    ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

    சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

    பரன் + பரை - ஏழாம் தலைமுறை.

    Next Story
    ×