என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று சர்வ ஏகாதசி.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 9.24 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பரணி காலை 6.33 மணி வரை பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.51 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-போட்டி

    கன்னி-நிறைவு

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-புகழ்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பரிசு

    • இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
    • நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களை நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமையை எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற தினமாக எவரும் பார்ப்பதில்லை. உண்மையில் செவ்வாய் கிழமைக்கு எந்த ஒரு மகிமையும் இல்லையா? இதுகுறித்து நமது ஆன்மிகம் கூறுவது என்ன? செவ்வாய்க்கிழமையில் நாம் எதை எல்லாம் செய்து என்னென்ன பலன்களை அடையலாம்? இப்படி பல தகவலைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

    நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.


    முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும். அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

    கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும். ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார். அதிலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

    • 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.
    • சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந்தேதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம், 6-ந் தேதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம், 7-ந் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.

    8-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    9-ந் தேதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 10-ந் தேதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் பிரமோற்சவ விழா நாட்கள் நடைபெறும் நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-17 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 11.26 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அசுவினி காலை 7.45 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் ஸ்ரீ வரகுணமங்கை ஸ்ரீ பரமநாதன், வரகுணவல்லி சென்று தரிசித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-நிறைவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிரமம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உற்சாகம்

    மகரம்-ஓய்வு

    கும்பம்-முயற்சி

    மீனம்-புகழ்

    • ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது.
    • மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். மங்களநாதர் என்றும் இவரை அழைப்பார்கள். இந்தக் கோவிலில் எல்லாம் மங்களகரமானவையே! இறைவி 'மங்களநாயகி'. விநாயகர் 'மங்கள விநாயகர்'. விமானம் 'மங்கள விமானம்'. கோவில் 'மங்கள கோவில்'. தீர்த்தம் 'மங்கள தீர்த்தம்'.தல வரலாறு : எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள்.

    என்ன கதை அது? முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார். வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார். ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான். மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார். தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் 'பிராண நாதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி 'மங்கள நாயகி' என அழைக்கப்படுகிறார்.

    வழிபாடு : திருமங்கலக்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவனை, திருமால், பிரம்மதேவன், அகத்தியர், சூரியன், காளி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இது திருமாங்கல்ய தோஷங்களை நீக்கும் தலம். மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும். இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும்.

    கோவில் அமைப்பு : ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது. உள்ளே இரண்டு பிரகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள் தொங்குகின்றன. தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக் கரசரும் தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர். நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரி சனம் செய்து விட்டு, அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று நவக்கிரக நாயகர்களையும் ஒருமுறை தரிசித்து வரலாமே! தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-16 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.35 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.10 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரம் சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-சுபம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- அமைதி

    மகரம்-பரிசு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-இனிமை

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 15 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.46 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பாலபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருச்சேறை ஸ்ரீசாரநாதர், திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலகங்கார திருமஞ்சன சேவை. கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனிவாசனப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-பயணம்

    கடகம்- பரிவு

    சிம்மம்-பந்தம்

    கன்னி-பாசம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- ஓய்வு

    மகரம்-முயற்சி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-இன்பம்

    • துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
    • சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

    பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.

    சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    துளசியின் கதை:

    கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.

    இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்துவிட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

    சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.

    • உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
    • காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

    இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

    திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    • ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.
    • மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவைக் குறிக்கிறது.

    * ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு, வேத போதனைகளின் ஓட்டத்தை கடத்துவதை கங்கை குறிக்கிறது.

    * இறைவன் காலமற்றவன் என்பதை பிறை சந்திரன் அடையாளப்படுத்துகிறது.

    * மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவை குறிக்கிறது. அக்கண் திறந்தால் தீமை பொசுங்கிப்போகும்.

    * சிவபெருமான் வைக்கும் வாழ்க்கை தேர்வில் வெற்றிபெற்றால், அவர் உடலை ஆபரணமாக அலங்கரிக்கலாம் என்பதை பாம்பு பறைசாற்றுகிறது.

    * ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.

    * திரிசூலத்தின் மூன்று கூர்மையான பகுதிகளும், அறிவு, ஆசை, செயல்படுதல் ஆகியவற்றை குறிக்கின்றன.

    * உடுக்கையும், அதில் இருந்து புறப்படும் ஒலியும், வேதங்களையும் அவற்றின் சொற்களையும் குறிப்பிடுகின்றன.

    * ஈசன் உடுத்தியிருக்கும் புலித்தோல் ஆடையானது, அச்சமின்மையை எடுத்துரைக்கிறது.

    • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
    • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

    ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

    இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

    மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

    அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

    தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

    ×