என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பெண்களின் மாங்கல்யம் நிலைக்க கடைபிடிக்கப்படும் வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டித்தால் பலன் கிடைக்குமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாம். திருமகளை ஆஷாடம் என்கிற ஆடி மாதத்திலும், பாத்ரபதம் என்கிற ஆவணி மாதத்திலும், வளர்பிறை வெள்ளியன்று விரதமிருந்து பூஜிக்கலாம். இந்த நியதியை தென்னாட்டவர் பலரும் குடும்பப் பாரம்பரிய வழக்கமாகவே செய்து வருகின்றனர்.

    தற்சமயம் நாம் பல நாடுகளிலும் நகரங்களிலும் கூடி வாழ்வதாலும் ஆண், பெண் இருவருக்குமே பணிகள் அதிகமாகி விட்டதாலும் வீடுகளிலோ ஆலயங்களிலோ ஒன்றுகூடி ஒன்றாகவே சிலர் நிகழ்த்தி வருகின்றனர். சூரியன் மலை வாயில் இறங்கும் நேரம் அதாவது, சந்தியா காலம் என்கிற மாலை நேரத்தில் பூஜை செய்வது மிகவும் உயர்வை கொடுக்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுவார்கள். தொடர்ந்து 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

    மகிஷன் என்ற அசுரன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய பிரம்மன், மகிஷன் முன்பாக போய் நின்றார். பிரம்மனைக் கண்டதும் மகிஷன் மனம் மகிழ்ந்தான். தனக்கு அழிவில்லா வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் அசுரன் கேட்டான்.

    ‘பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேள்’ என்றார் பிரம்மன்.

    இதையடுத்து, ‘எனக்கு அழிவு வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான்.

    பிரம்மதேவரும் அப்படியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர் களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான்.

    மகிஷனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு.

    தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10-ம் நாளில் மகிஷாசூரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    கொடியவனான மகிஷாசூரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசூரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடிவருகிறோம். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.

    வேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.

    சமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.

    ‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.
    வலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, சிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்?

    வேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

    விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.

    சிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள்.
    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழா வுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, ‘இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்’ என்றனர்.
    அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    காப்பு கட்டி வேடம் அணிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்பு கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் அணிவோர் அடைய முடியும்.

    * வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக்கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்கவேண்டும்.

    * வேடம்அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.

    * காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டாம்

    விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிசாசூரசம்காரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும்.
    முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் விரதம் இருந்து வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதத்தில் நமக்கு வந்து சேருகின்றது.
    ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல, உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அப்படிப்பட்ட முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதத்தில் நமக்கு வந்து சேருகின்றது.

    மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக, வள்ளல் முருகனை விரதமிருந்து வழிபட வேண்டிய திருநாள் ‘கந்தசஷ்டி’ விழாவாகும்.

    முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அதுவும் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டியை ‘கந்த சஷ்டி’ என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி ‘கந்தசஷ்டி’ ஆகும். முரு கனுக்குரிய திதி, விரதங்களில் முக்கியமானது இது.

    ‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப் பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. திருமண வீடுகளில் பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருப்பர்.

    ஆனால் அதன் உண்மையான விளக்கம், ‘சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும்’ என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வார்கள்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி. உண்மையாக நாம் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

    கந்த சஷ்டி விழா காலத்தில் ஆறுநாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2018) செவ்வாய்க்கிழமை வருகின்றது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் வருவது சிறப்பு வாய்ந்தது. அன்றையதினம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகப்பெருமானை வழிபட்டு, இனிப்பு பொருள் உண்டு விரதத்தை பூர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றைய தினம் திருச்செந்தூரில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை வழிபடச் செல்கின்றனர். ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம், தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’ என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க, திருவருள் கைகூட, குரு பீடமாக அமைந்த திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வப்படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

    புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளும் பெற்று, செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    ‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப் படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலன் எனப்படும் பிரம்மாவைக் குறிக்கும்.

    கந்தன்பேரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்
    கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!
    செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!
    தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

    என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

    மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துகளை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும்.

    ‘நாளென் செயும் வினைதான் என்செயும்
    எனை நாடிவந்த கோளென் செயும்
    கொடுங்கூற்றென் செயும்
    குமரேசர் இரு தாளும் சிலம்பும்
    சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
    எனக்கு முன்வந்து தோன்றிடினே!

    என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மரூபிணி ராதா. அதனாலேயே அவள் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார், அந்தப் பரந்தாமன்.
    இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான ‘காதல்’ பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, ராசலீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த ராதாவின் பக்தி அளவிடற்கரியது. அவளே கண்ணனின் மனதைக் கொள்ளை கொண்டவள்.

    பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மரூபிணி ராதா. அதனாலேயே அவள் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார், அந்தப் பரந்தாமன். கண்ணனைப் போலவே ராதா பிறந்ததும் அஷ்டமியில்தான். இந்த நன்னாள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ராதா பிறந்த ‘பர்சானா’ என்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கோகுலத்தில் யாதவ குல அரசன் வருஷபானு ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகிய தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். ஆர்வத்துடன் அதனை அள்ளி எடுத்து, இல்லம் சென்று தன் மனைவி கீர்த்திதாவிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையின் கண்கள் பார்க்கும் தன்மையற்று இருந்ததை அறிந்த தம்பதியர் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

    தன் தோழியின் குழந்தையைக் காண நந்தகோபனுடனும், கண்ணனுடனும் வந்த யசோதா குழந்தைக்கு கண்பார்வை இல்லாததை அறிந்தாள். அச்சமயம் அன்னையின் கையிலிருந்து துள்ளி எட்டிப் பார்த்த கண்ணனைக் கண்டதும் ராதாவின் கண்கள் பளிச்சென்று திறந்து கொண்டதாம்.

    கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதா, கண்களைத் திறந்தது கண்ணனைப் பார்த்த பின்புதானாம். கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதாவின் அன்பு மட்டுமே கண்ணனைக் கட்டிப்போட்டது.

    கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதாவுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார். உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா. பரமாத்மா கண்ணன். ஜீவாத்மா ராதா. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷ்ண பிரேமை.

    கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப் பாடி கூடி மகிழ்ந்த ராதா, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம். தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் ‘பிரஹ்லாத சமிதை’யில் கூறுகிறார். 
    நவராத்திரி ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி - சிவன்

    கவுமாரி - குமரன் (முருகன்)

    வைஷ்ணவி - விஷ்ணு

    வராஹி - ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி - நரசிம்மர்

    இந்திராணி - இந்திரன்

    இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்கும்.
    திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷத்தால் நிறைய பேரின் திருமணம் தாமதம் ஆகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்கு ஜாதக பொருத்தங்களைப் பார்க்கத் தொடங்கும் போது முதலில் ஆயுள் பலத்தைக் கண்டறிய வேண்டும். பிறகு பெண், பிள்ளை இருவருடைய தசாபுத்தி அந்தர காலங்களைப் பார்க்க வேண்டும்.

    இருவருக்கும் திருமண பாக்கியம் வந்திருக்கிறதா? களத்திர தோஷம் உண்டா? மாங்கல்ய தீர்க்கும் இருக்கிறதா? என்பன போன்ற முக்கியமான அம்சங்களைப் பார்க்க வேண்டும். பிறகு பொருத்தங்கள் பார்க்கும்போது பெண் அல்லது பிள்ளை ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். குறிப்பாகச் செவ்வாய் தோஷத்தை அறிவது அவசியமாகும். பெண் அல்லது பிள்ளையின் ஜாதகத்தில் லக்கனத்திறகு 2, 4, 7, 8, 12 ஆகிய இல்லங்களில் செவ்வாய் தங்கினால் தோஷமாகக் கருதப்படுகிறது.

    அடுத்து சந்திரன் தங்கிய ராசிக்கு 2, 4, 7, 8, 12 இல்லங்களில் செவ்வாய் நின்றாலும் தோஷமாகும்.

    மூன்றாவதாக சுக்கிரன் நின்ற ராசிக்கு 2, 4, 7, 8, 12 ராசிகளில் செவ்வாய் தங்கினாலும் தோஷமடைகிறார்.

    ஆனால் 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் தங்கினால் மாத்திரம் தோஷமடைந்து விட்டதாகக் கூற இயலாது.

    ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில் செவ்வாய் தங்கினால் அதுதோஷமாகாது. அதேபோல மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றாலும் தோஷம் இல்லை.

    கடக ராசியில் செவ்வாய் தங்கி நீச்சமடைந்தாலும் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை. செவ்வாய் தோஷ அமைப்பில் இடம் பெற்றுள்ள போது அந்த கிரகத்தை குரு, சனி, ராகு, கேது பார்த்தாலும் அல்லது அந்த கிரகங்களும் சேர்ந்து தங்கினாலும் செவ்வாய் தோஷம் பரிகாரமடைந்து விடுகிறது.

    அங்காரக தோஷம் உண்டாகும் வண்ணம் ஜாதகத்தில் அமைந்து அது கடகம் அல்லது சிம்ம ராசியானாலோ, லக்கனமானாலோ அதை செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத முடியாது. கடகம், சிம்மம் லக்கனமாக அல்லது சந்திரா லக்கனமாக உள்ள ஜாதகரைச் செவ்வாய் தோஷமுடையவராகக் கூறுவதற்கில்லை.
    செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்கு பரிகாரமாகவும் சாந்தி செய்வது போன்றும் சிலவற்றை செய்வதன் மூலம் திருமணம் கைகூடும். சுபம் நடைபெறும்.

    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவந்த வஸ்திரம் உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு வஸ்திரம், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
    நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.

    நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

    முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

    நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

    நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

    அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு. 
    முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விநாயகர், முழு முதற்கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாறு வருமாறு:-

    ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்த போது, அங்கு விநாயகர் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்தான். விநாயகர் குதித்துத் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கி கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. விநாயகரை பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்த சிரிப்பு விநாயகருக்கு கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே ‘நீ தேய்ந்து மறையக்கபடவாய் என்று சந்திரனைச் சபித்து விட்டார்.

    சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்தார்கள். தன் தவறுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக் கொண்டார்.

    ‘பாலசந்திரன்’ என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெல்ல வளரும்படியான (வளர்பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.

    ‘சங்கடஹர’ என்றால், ‘சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் அன்றைய தினம் இருக்கும் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

    சங்கடஹர சதுர்த்தி மாதம் தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பவுர்ணமிக்கு பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும், சந்தோஷம் பெருகும்.
    மகாளய அமாவாசையான இன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும்.
    மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

    அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும்.

    இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.

    பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன.

    பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம். ‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக்களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.
    மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட விரத வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.
    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும்.

    ‘கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பவர் என்பதே இத்திரு நாமத்திற்குப் பொருள். அனைத்து பறவைகளும் சிறகுகளைக் கொண்டே பறக்கின்றன. ஆனால் அவற்றிற்கு இப்பெயர் ஏற்படாமல் போக, கருடனுக்கு மட்டும் அமையக் காரணம், இவரே சிறகுகளைக் கொண்டு நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருக்கிறார்.

    பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே ‘கருடபஞ்சமி’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி கர்நாடகாவில் பெண்களால் விரதம் இருந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்திய ரக்சாபந்தன் போல தன் சகோதரர்களின் நலன் வேண்டிச் செய்கின்ற பண்டிகை கருடபஞ்சமி.

    கருடன் என்று போற்றப்படும் பறவையை ராஜபட்சி- பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை.

    நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.

    ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

    ஸ்ரீ கருட வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் அவரின் திதி, நட்சத்திரத்தில் கொண்டாடலாம். மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.

    மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் கருட வழிபாட்டை செய்து அவரின் அருளாசியால் சகல நன்மைகளையும் பெறலாம். கருட பகவானுக்கு பிடித்தமான அபிஷேக ஆராதனைகள், பலகார பட்சணங்கள் போன்றவற்றைச் சிறப்பாக சமர்பித்து அவரது அருளைப் பெறலாம்.

    நாம் வெளியில் செல்லும் போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும். கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும்.

    கருடன் இரையைத் கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கிறோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.

    ஒவ்வொரு ஸ்ரீ விஷ்ணு கோவில்களிலும் மதில் சுவற்றின் நான்கு மூலைகளிலும் இந்த கருடாழ்வார், தனது இறக்கைகளை விரித்துக் கொண்டும், ஒரு காலை முன்வைத்து புறப்படும் நிலையில் தயாராகவும் இருக்கின்றார். இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் நமக்காகத்தான்.

    நமக்கு ஏதேனும் இடர் ஏற்படும்போது, அதனை நீக்குவதற்கு ஸ்ரீ கருடாழ்வார் புறப்பட்ட நிலையில் தயாராக உள்ளார் என்ற எண்ணமும் நம் மனதில் ஓட வேண்டும்.

    ×