search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
    X

    தசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை

    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.

    வேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.

    சமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.

    ‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.
    வலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, சிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்?

    வேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

    விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.

    சிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.

    Next Story
    ×